Thursday, April 28, 2016

மூன்றெழுத்து மந்திரம்- அம்மா



தனைப்போலே இன்னொருத்தி இல்லை யாகத்
   தனித்துவத்தோ டிம்மண்ணில் வந்து தோன்றி
மனைவாழ்வில் உற்றதுயர் பலவுந் தாங்கி
   மாதரசி என்றபெயர் நிறுத்திப் போனாள்.
நினைவெல்லாம் தானேயாய் வீற்றி ருந்து
   நிதமுமெனை வழிகாட்டி நடத்துந் தெய்வம்
எனைப்பெற்றாள் திருப்பெயரை என்று மோதி
   எஞ்சியநாள் ஆயுளைநான் கழித்து வாழ்வேன்.


எட்டியெனை நில்லென்று சொன்ன தில்லை
   எப்படிநான் அவளன்பை மொழியக் கூடும்?
பட்டினியாய்த் தான்கிடந்த நாளில் கூட,
   பசித்திருக்கும் படியென்னை விட்ட தில்லை.
மட்டில்லா மகிழ்சியுடன் எனைப் புரந்த
   மாதவளோ தெய்வமென வாகிப் போனாள்.
விட்டுவிடா தவள்பெயரை நினைவில் வைத்து
   வீழ்கின்ற நாள்வரையில் போற்றி செய்வேன்.


எந்தவொரு துயர்வரினும் கலங்கி டாதே
   என்தாயின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு
மந்திரமாய் அவள்பெயரின் மூன்றெ ழுத்தை
   மனதிற்குள் உச்சரித்து வேண்டி நிற்பேன்.
வந்ததுயர் சுவடின்றி நீங்கிப் போகும்.
   வார்த்தைகளிற் சொல்லுதற்கே இயல வில்லை.
அந்தமென வாழ்வில்வரும் நாள்வ ரைக்கும்
   அவள்பாதம் துணையெனவே வாழ்ந்தி ருப்பேன்.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம். வாணுவம் பேட்டை. சென்னை. 9.4.2016

Saturday, March 26, 2016

வெற்றி வசப்படும்



விண்ணில் செயற்கைக் கோள்செலுத்தி - அதை
    விரலால் இயக்கி வென்றோமால்
மண்ணில் இமயச் சிகரமெலாம்  - இனி
    மனிதர் இலக்காய் நின்றிடுமோ?

உயரம் எதுவும் பெரிதில்லை - நீ
    ஒவ்வொரு படியாய் மேலேறு
பெயரும் புகழும் உனைத்தேடி - நிச்சயம்
    பின்னால் வரும்நீ முன்னேறு.

அமையும் இதுவெனும் நம்பிக்கை - அது
     அடையும் இலக்கை எளிதாக்கும்.
சுமையாய் இதுவரை எண்ணியதை - இலை
     சுலபந் தானெனத் தெளிவாக்கும்.

உன்னால் முடியும் எனநம்பு - அது
     ஒவ்வொரு முறையும் நிசமாகும்.
முன்னால் முயன்றது நிறைவாயின்
     முடிவில் வெற்றியுன் வசமாகும்.  


பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு. கவிஞாயிறு தாராபாரதி விழா, வாழ்க வளமுடன் சிற்றரங்கம்
நங்கநல்லூர். 27.2.2016

Tuesday, March 08, 2016

நாட்டு நலம் காப்போம் நயந்து


வாட்டுவிலை வாசி
 வளர்லஞ்ச ஊழலொடு
கேட்டுத் திகைக்கும்
 கொலைவெறியும்
 -  ஓட்டிடுவோம்
ஓட்டைத் தவறா(து)
உயர்குணத்தோர்க் கேயீந்து
நாட்டுநலம் காப்போம்
நயந்து.

ஓட்டு: வாக்கு.

தமிழரின் மனிதநேயம், மே 2009.  ஈற்றடிக்கு எழுதியது.

Sunday, February 28, 2016

நட்புச் சிறகுகள்



நட்பெனுஞ் சிறகு கொண்டு
   நாடெல்லாம் பறக்க லாகும்.
எட்டிட இயலா தென்று
   ஏதுமே இல்லை யாகும் !

மும்பையில் டில்லி மற்றும்
   மூலையில் முடுக்கி லெல்லாம்
நம்பியொரு வேலை சொல்லின்
   நடத்தியே முடிப்போ ருண்டு.

கையினிற் செலவு செய்யக்
   காசில்லாப் போது வந்து
பையொடு பணத்தைத் தந்து
   பார்த்துளம் மகிழ்வோ ருண்டு.

துன்பத்தில் உழலும் போது
   தோள்தந்து பாதி தீர்ப்பார்.
இன்பத்தில் பங்கு கொண்டே
   இரட்டிப்பாய் ஆக்கி வைப்பார்.

அச்சமே இல்லை. செய்ய
   அரியது மேது மில்லை.
இச்சக முழுதும்  என்போல்
   எவருளர் நண்ப ரோடு? 

Wednesday, February 17, 2016

பயனென்ன?



சாத்திரமும் சூத்திரமும்
சார்ந்தபல நூலறிவும்
பாத்திறமும் கொண்டு
பயனென்ன? - காத்திருந்து
ஏத்தபடி கேட்போர்க்
கெடுத்தியம்ப லாற்றாதார்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ!

நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009. 'பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ'!என்ற

 ஈற்றடிக்கு எழுதிய வெண்பா (2).

Monday, January 18, 2016

நல்ல பழக்கங்கள்

(சிறுவர் பாடல்)


நல்ல பழக்கம் பலவுண்டு - அதில்
    நாலைந் திங்கே சொல்லுகிறேன்.
வல்ல நீயவை கைக்கொண்டு - உன்
    வாழ்வில் நிச்சயம் வெல்லுவையே!

உண்டதன் பின்னர் நிச்சயமாய் - உடன்
    உன்கை கழுவுதல் அவசியமே.
உண்ணும் முன்னரும் கைகழுவு - அது
    ஒவ்வொரு முறையும் அவசியமே!

ஈயும் எறும்பும் மொய்க்கின்ற - எந்த
    இனிப்புப் பண்டமும் நாடாதே.
வாயில் எச்சில் வரவைக்கும் - அதை
     வாங்கித் தின்ன ஓடாதே!

பாயில் உன்னைப் படுக்கவைக்கும் - வரும்
    பலவகைச் சுரமுன்னை வாட்டிவிடும்.
நோயில் லாத வாழ்வுக்கு - வேறு
      நேரிலை என்றே காட்டிவிடும்!

காட்டு மிருகக் கதைகளெலாம் - சொல்லும்
    கருத்தை மனதில் இருத்திக்கொள்
பாட்டி கதையென இகழாதே! - அதில்
    பாடம் உண்டுனைத் திருத்திக்கொள்!

சரியாய்த் தமிழைப் பேசுதற்கு - நீ
    சிறிது முயன்றால் கற்றிடுவாய்.
பெரியோர் சொற்படி நடந்திடுவாய். -  நல்ல
    பேரும் புகழும் பெற்றிடுவாய்!

பாரதி கலைக்கழகம். அழ.வள்ளியப்பா பாடலரங்கம். லக்குமிஅம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. குரோம்பேட்டை. 28.11.2015.

Thursday, October 29, 2015

எம் இளையோர் எழச்செய்தாய்


விண்ணேகு செயற்கைக்கோள் செலுத்துகின்ற வாகனங்கள்
எந்நாடும் கொளநினைக்கும் ஏவுகணைச் சாதனங்கள்
முன்னேறு விஞ்ஞான முயற்சிகளில் முதலிடமென்(று)
என் நாடு வளர்வதெலாம் உன்னாலே ஆனதையா!

ஏவுகணை விஞ்ஞானம் எங்களுக்கும் வேண்டுமென
தேவருனைக் கேட்டனரோ? தேர்ந்தங்கு சென்றனையோ!
ஆவலுடன் வல்லரசாய் ஆகும்நாள் பார்த்திருக்க
போவதற்கிவ் அவசரமேன் புண்ணியனே கட்டுரையே!

பன்னாட்டுக் கருத்தரங்கம் பலகண்ட பெருமகன் நீ!
என் நாட்டுத் தலைமகனாய் எங்கெங்கு சென்றாலும்
தென் நாட்டுத் தமிழ்முப்பால் தனிச்சிறப்பை எடுத்தியம்ப
உன்னாற்றான் முடிந்ததையா! இனிசெய்வார்  யாருளரோ?

கனவென்றால் உறங்குகையில் கண்பதல்ல. நினைத்தவைகள்
நனவாகும் நிலைகாணும்  நாள்வரையி லொருநாளும்
உனதுள்ளம் உறங்காது. ஓயாது செயலாற்றும்
எனுமுன்றன் உரையாலே எம்மிளையோர் எழச்செய்தாய்!

செய்தித்தாள் வீடுகளில் சேர்த்துவந்த நாள்தொடங்கி
எய்தியநின் புகழெல்லாம் எடுத்தியம்ப லாற்றாமல்
செய்தித்தாள் திணறியதே! செய்தியென வாயினையே!
எய்தபுகழ் நிலைநிறுத்தி எங்குற்றாய் இயம்பாயோ?


நம் உரத்தசிந்தனை. அப்துல் கலாம் நினைவு மலர். செப். 2015.

Wednesday, October 28, 2015

மாமன்

அன்னையவள் பிறந்ததான அருங்கோயிற் கருவறையில்
      அவளுக்குச் சோதரனாய்த் தோன்றினான்
பின்னொருநாள் மருகன் நான் பிறந்தபினர் மாமனெனும்
      பெருமையினைப் பெற்றவனாய் மாறினான்.
பொன்னணிகள் சீர்வரிசை புத்தாடை யவைபலவும்
      போதுமெனு மளவவனும் செய்து,தான்
துன்பமென வரும்போது துவளாமல் முன்வந்து
      தோள்தந்து உதவியெனைத் தாங்கினான்.

பாரதத்துச் சகுனிபோல பாகவதக் கம்சன்போல
      பாரினிலே மாமன்சில ருண்டுதான்.
நீரவரை மாமனென்று நினைத்தன்பு செய்வதற்கு
      நீதியொன்று மில்லையென்று சொல்லுவேன்!
பேரளவே உறவாகிப் பெற்றவளின் உடன்பிறந்து
      பேசமட்டும் மாமனென்றாற் போதுமா?
ஓரளவு கூடவன்போ டுறவாடு நெஞ்சமிலார்
      உண்மையிலே மாமனெனற் கூடுமோ?

இந்தியத்தாய் நாட்டிலுள்ள இளஞ்சிரார்க ளனைவருக்கும்
     எள்ளளவும் பந்தமற்ற போதிலும்
முந்தையநாள் பாரதத்தின் முதுதலைவர் நேருஎந்த
     முறையினிலே மாமனென்று ஆனவர்?
சொந்தமெனில் உடைமையெனச் சொல்லுகின்ற பொருளுண்டு
     சுகமுண்டு மகிழ்வுண்டு என்பரே!
விந்தையிது அன்பாலே விளைகின்ற உறவன்றி
     வேறேதும் இலையென்று சொல்வனே!

Thursday, October 01, 2015

காணிற் குவளை...


(தரவு கொச்சகக் கலிப்பா)

தண்ணீரி லேநின்று தழைத்துவளர் தாவரத்தின்
விண்பார்த்தே இதழ்விரித்து விளங்குகின்ற குவளைநிறம்
கண்பார்த்துக் களிக்கின்ற கருநீலம் அதைப்பெண்ணின்
கண்நேராய் உவமித்துக் கவிசெய்வர் புலவோர்கள்.

தெள்ளுதமிழ் நூல்களிலே தெவிட்டாத தொன்றான
வள்ளுவரின் முப்பால்நூல் வழங்குகின்ற காட்சியிது.
விள்ளரிய தலைமகளின் விழியழகைக் காணாதே
கள்ளொழுகு குவளைமலர் களிமிகுந்து நிற்கிறதாம்!

கண்ணில்லாக் குவளையது காணாது தானதனை
எண்ணித்தான் 'காணி'லெனும் எச்சத்தை இட்டுவைத்தார்.
கண்ணிருந்தவ் விழியழகைக் காணுமெனில் நாணுற்று
முன்னிருந்த படியன்றி முகங்கவிழு மென்றாரோ?

தண்ணீரில் நிற்பதொன்று தலைகவிழ்ந்தால் நாணத்தில்
தண்ணீரைத் தான் நோக்கும் தரைமண்ணை நோக்கிடுமோ?
வண்ணமலர் மணவோட்டம் வாய்மொழிதல் இயலாதால்
எண்ணமது என்னவென்று எண்ணியதில் தேர்ந்ததிது.

நீரிதனிற் பிறந்தேனே! நேர்ந்ததிது வினைப்பயனே!
பேரழகுக் கண்ணுடையாள் பிறந்ததுஅந் நிலமென்று
கார்நிறத்த பூ,நீரைக் காணவுமே தோன்றாது
போர்மனத்த தாகியதால் பொருமி'நிலம் பார்க்கு'மென்றார்!


காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.        (குறள்)

பாரதி கலைக்கழகம். 20-6-2015. பேரா.நாகநந்தி நினைவு, திருக்குறள் விழா

Sunday, August 16, 2015

நீலச் சிற்றாடைக்கு நேர்.

(கட்டளைக் கலித்துறை)


பின்னர் வரவிடை பெற்றுட னவ்வை பிரிபவளை
இன்னுஞ் சிலநாள் இருத்திடப் பாரியங் கெண்ணியதால்
பொன்னும் மணியும் பரிசெனத் தந்தவை பாதையிலே
தன்னாள் சிலர்வழி, தான்பறி செய்தது தக்கதொன்றே!

கோலிதைக் கொள்ளெனக் கொடுத்தே அவ்வை களமளக்கும்
வேலையைச் செய்வதை வேண்டிய காரிபின் வேறோருதன்
வேலையிற் சென்று விடைதா மதித்ததில் வென்றதவள்
மேலுள வன்பின் மிகையால் அரியது மேன்மையதே!

தோரணை மிக்க தொருவருக் கோரிடந் தேடியன்று
சேரன் விருந்தினிற் சேர்ந்துண வுட்கொளச் சென்றமர்ந்தார்
ஆருளர் வேறே அழைக்கவென் றவ்வையை வாருமென்ற
ஓருளம் போலுள தேதுள? அன்பில் உயர்ந்ததுவே?

ஏல மணமுள இன்னடி சில்விருந் துண்டபினர்
கோலவம் மங்கைய ரங்கவை சங்கவை கொண்டளித்த
நீலநல் லாடை நிகருள மூன்றை நெகிழ்வுடனே
ஞால மறிந்திட நாலடி அவ்வை நவின்றனளே!


பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி யன்றீந்த களைக்கோலும் - சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.     - ஔவையார் 

(தமிழ் நாவலர் சரிதை.)


பாரதி கலைக்கழகம். ஔவையார்  விழா. ஏப். 2015.

        

Wednesday, July 22, 2015

பத்ரிநாத் யாத்திரை வழித்தலப் பாடல்கள்


மதுரா (வடமதுரை)

மாயவனின் கோயில் மதுரா நகர்தேடிப்
போயங்கு சேவித்த பேறுடையேன் - ஆயனவன்
ஆவினத்தின் பின்போன அன்புடையன் என்போன்ற
பாவிக் கருளுவனோ பார்த்து?

கோவர்த்தனம்





அன்று மழைமறைத் தாயரெலாங் காப்பதற்குக்
குன்றுக் குடைபிடித்த கோவிந்தன் - இன்றுமுன்
இன்னல் மலைகரைய இன்னருள் மாரிபெய்வன்
என்ன பயம் நெஞ்சே இயம்பு?







பிருந்தாவனம்

வேதத் தமிழொலிக்கும் வில்லிபுத்துர்ச் சேவையது
கோதை அரங்கனுடன் கூடக் கருடனென
காதம் பலகடந்து கண்டபிருந் தாவனத்தில்
பாதம் பதித்த பயன்.






தேவப்ரயாகை (கண்டங் கடிநகர்)





பொங்கு புனலோடி, பூமி வளங்கொழிக்கும்
கங்கைக் கரையிலங்கு கண்டங் கடிநகரில்
தங்கி அருள்புரியும் தாமரையாள் கேள்வன்
எங்களிறை என்றே இரு.









பத்ரிநாத்






வாவென் றழைத்தது வும்வழிமண் மூடியதும்
ஆவ திதுவென் றறியுமுனர் - போவதற்கு
வேறுவழி காட்டியதும் வேறெவரா லாம்பதரி
நாரணனின் சேவடியே நாடு.

Tuesday, June 30, 2015

சிறியன சிந்தியாதான்


மன்னனின் மௌலி விட்டு மரவுரி தரித்து ராமன்
பின்னவன் அன்னை சொல்லே பெரிதெனக் கானம் புக்கான்
பெண்ணொடு பொருதல் தனது போரறம் ஏற்கா தேனும்
தன்னுடைக் குருவின் வாக்கால் தாடகை வீழச் செய்தான்.

தந்தைதாய் பேணல் விட்டு, தாரமும் விட்டுக் கானம்
எந்தைதாய் ராம னென்றே இலக்குவன் பின்னே போனான்.
நிந்தனை தாயைப் புரிதல் நேரிதாய்ப் பரதன் தேர்ந்தான்
முந்தைய விழும மாற்றம் மூளுசூழ் நிலையா லாகும்.

துணையென ராம னோடு தோழமை கொண்டு தம்பி
இணையிலா வலிய னுன்னை எதிர்த்திடத் துணிந்தான் என்ற
மனைவியைப் 'பிழைத்தாய்' என்று முனிந்துபின் வாலி சொல்வான்
'நினைத்தது தவற றத்தின் நாயகன் ராம னாவான்'

உறுபகை யொன்று மின்றி உயரறம் காக்கும் வீரன்
இருவராய்ப் பொருதும் போதில் இடையினில் வாரா னென்ற
உறுதியைக் குலைத்து மார்பை, உடலது மண்ணில் சாய,
ஒருசரம் துளைத்த போதில் உண்மையை நேரில் கண்டான்.

பாரியைப் பிரிந்து நிற்கும் பதைப்பினில் செய்து விட்ட
காரியம் மாறிற் றோ?நீ கொண்டதோர் பகையு முண்டோ?
சூரியன்  மரபுக் கொன்றும் சுடர்மதி மறுவே போல
ஆரியன் பிறந்து மண்ணில் ஆக்கினை. சொல்வ தென்ன?

வாய்மையும் மரபும் காத்த வள்ளலின் மைந்த னோநீ?
தூயவன் பரதன் முன்னர் தோன்றிய பெருமை எங்கே?
தீயவை அரக்கர் செய்ய,  தேர்ந்தொரு குரக்கு வேந்தை
மாய்வுறச் செய்யு மாறு மனுநெறி கூறிற் றாமோ?

இன்னவும் பிறவு மாக எழுப்பிய கேள்விக் கெல்லாம்
சொன்னவை பதில்க ளாகச் சிற்சில உண்டென் றாலும்,
முன்னராய் வந்து நின்று முடித்ததாய்க் கதையி லில்லை.
பின்னவன் வந்து (அ)தற்குப் பிறிதொரு விளக்கம் தந்தான்.

நன்றிது தீது வென்னும் நல்லறி வுடைய னென்றும்,
நின்றநன் நீதி யாவும் நேரிது உணர்ந்தா னென்றும்,
பின்னுமே மனுசெய் நெறிகள் புக்கபுத் தேளி ரென்றும்
சொன்னவன் ராமன். வாலி சிறந்தவன் ஐய மில்லை.

ஒன்றினில் ஒன்று மிக்க உயரற வரிசை தன்னில்
இன்னுமொன் றில்லை யென்னும் எல்லையை எட்டும் போதில்
உன்னதம் என்று நின்ற உயரிய விழும மெல்லாம்
சின்னவை யென்றே யாகிச் சிந்தனை விட்டு நீங்கும்.

சீர்மிகு ராம நாமம் சிந்தையில் தைக்கு மாறு
கூர்மிகு வாளி யொன்றால் கொண்டநல் ஞானத் தாலும்,
கார்முகில் கமலம் பூத்துக் கையினில் வரிவில் ஏந்தி,
'பார்'என வந்து நின்ற பரம்பொருள் கண்ட தாலும்

அறிவொளி கிடைத்த காலை அவியுறு மனத்த னானான்.
நெறியினில் நின்று சேரும் நீள்விசும் பருளப் பெற்றான்.
விரிகதை செய்த கம்பன் விருதெனும் புகழுஞ் சேர
சிறியன சிந்தி யாத சீர்மைய னாகி நின்றான்.

பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பு. நங்கநல்லூர். கம்பன் விழா.
24.3.2015.
 

Saturday, June 27, 2015

எழுவாய்


ஒற்றைப் புள்ளிச் சிறுகுறியால்
ஒருபெரு வரியே முடிந்துவிடும்.
முற்றுப் பெற்றது இலையாக - அதில்
மேலும் புள்ளிகள் இடவேண்டும்.

கரங்க ளிரண்டு சிறகுண்டு
கடின உழைப்பின் துணையோடே
உரங்கொள் மனதும் உளதானால் - நிச்சயம்
உயரப் பறப்பது எளிதாகும்.

தடைபல வந்து தடுத்தாலும்
தளரா மனதொடு முயலுகையில்
இடர்கள் வந்தவை இலையாகும் -நம்
இலக்கைச் சேர்வதும் எளிதாகும்.

புழுவாய் மண்ணில் உழன்றபடி
பொழுதைப் போக்கும் நினைவாலே
எழுவாய் எனுமுரை மதியாதார் - மண்ணில்
இருப்பதி லேதும் பயனிலையே!


தாராபாரதி பிறந்த நாள் நினைவு. பாரதி-பாரதி தாசன் கவிதை அமைப்பு. நங்கை நல்லூர். 26.2.2015

Thursday, May 28, 2015

நன்மைகள் நிலைக்கட்டும்


கால மெனுமவன் கண்களில் விண்ணிடைக்
காலை யுதயத்தைக் காட்டுகிறான் - பின்பு
ஞால முழுதையும் நள்ளிருள் உள்தள்ளி
நம்மிரு கண்களைக் கட்டுகிறான்.

போற்ற வளர்செடிப் பூவகை யாவையும்
பூமியில் நாளொன்றில் வாடிவிடும் - இங்கு
நேற்றுப் புதிதென நாமுண்டு மீந்ததின்
நாமம் பழையதாய் ஆகிவிடும்.

புத்தம் புதியதைப் போட்டு நடந்திடில்
பாதையிற் சேறுள்ள தொட்டிவிடும் - என்று
பித்த நிலையினிற் பாதுகை கைக்கொண்டு
பாரில் நடப்பவர் யாருமுண்டோ?

நாளை யொருதினம் நிச்சயமாய் வரும்
நன்மை வருமென யாரறிவார்? - என்றே
வேளை வருமென வீற்றிருந் தாரிங்கு
வேறு பயனொன்று கண்டதுண்டோ?

மாற்ற மெனுமது மண்ணின் இயல்பெனில்
மாறிப் பழையதாய் ஆகிலுமென்? - இன்னும்
ஏற்ற முறநன்மை எய்தி நிலைகொள்ள
என்றும் முயன்றதில் வென்றிடுவோம்.

Monday, April 20, 2015

மண்ணுக்கு வந்த மதி


அலைகடலின் கரைக்காற்றை அனுப வித்தே
... அருகமர்ந்த கோவலனைப் பாட வேண்ட
தலைமகளின் முகவழகுக் குவமை யாகத்
... தண்மதியைத் திருத்தியதோர் வடிவங் காட்டி,
கலைநங்கை மாதவியின் கையாழ் வாங்கிக்
... கவிபாடி இசைமழையைப் பொழியச் செய்தான்.
நிலைவரியாய் அமைந்ததது. நெஞ்சை யள்ளும்.
... நிகரெதுவும் இலையென்பேன் நீரும் ஏற்பீர்!

விழியிரண்டும் கயலென்றே யாகித் துள்ள
... விளங்குமிரு புருவங்கள் வில்லாய் மின்ன
பொழிமழைநீர் சூல்கொண்ட மேகம் போலப்
... பொலிவுமிகு கருமையினிற் குழலைத் தீட்டி
விழிகவரக் காமனவன் செயல்க ளெல்லாம்
... விடுதலிலை யெனமுழுதும் எழுதித் தீர்த்த
எழிலொழுகு திங்க(ள்)முகம் காணீர்! என்றே
... இளங்கோதன் தலைமகனைப் பாடச் செய்தார்.

திங்களெனில் வானத்தில் தானே தோன்றும்?
... திரிவதுவும் வானத்தில் தானே யன்றோ?
இங்குளதோர் திமில்வாழ்நர் சிற்றூர் தேடி
... எதுபணியாய் வந்ததென்று கேட்ப மென்றே
அங்குதிரி பகையரவு ராகு கேது,
... அதைவிழுங்க வருமென்றே எண்ணி நீங்கி
தங்கியிங்கு பயமின்றி வாழ வேடம்
... தரித்தபடி வந்ததென்று விடையும் சொன்னார்.


கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்த்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே.


சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், - கானல் வரி.


பாரதி கலைக்கழகம். சிலப்பதிகார விழா.  21.9.2014

 

Wednesday, April 15, 2015

பெரிதினும் பெரிது கேள்


கற்றலில் நன்றாய்க் கேட்டலை நம்தமிழ்ச்
சொற்றொட ரொன்று சுவைபடக் கூறும்.
நூலறி மேலோர் நுண்மை விரித்துப்
பாலரு மறியப் பகர்வது கேட்டலை,
புவியுள அறிஞர் புலவோ ரெல்லாம்
செவிதரு 'கேள்விச் செல்வ'மென் றோதுவர்.
உயர்ந்ததைப் பெரிதென் றுணர்ந்தவ ரிங்கு
'உயர்ந்தவர் மேற்றே உல'கென் றுரைத்தார்.
உலகம் பெரிதெனப் பொதுவில் தொடங்கி
கவன மீர்த்துக் காண்டகு பெருமையில்
ஒன்றினி லொன்றாய் உயர்ந்தது காட்டி,
நன்றிது வென்று நாமதை யறிய
பண்டுநம் மவ்வை சொன்ன
தொண்டர்தம் பெருமை கேட்பது பெரிதே!

 

Friday, March 13, 2015

உணர்வார் இலையே!





களிகொண் டுளறுபவர் கள்ளுண்ட நிலை கண்டு
     கலங்கிநீ நின்ற தென்ன?
         கல்விதரு பள்ளிகற் கருகிலே கூடபல
             கடையின்று வந்த தென்ன?

வெளியா ரிலாதபடி விலைக்குமது அரசேற்று
     விற்பனை செய்வ தென்ன?
         உபவாச வழியெலாம் உதவாத நிலையின்று
             உருவாகிப் போன தென்ன?

எளிமையே உயர்ந்ததென ஏற்றுநீ போற்றியதை
     எவருமே ஏற்க விலையே!
          ஏழைக்கும் ராசனாய் எப்போதும் வாழ்கின்ற
             ஆசைக்கு மெல்லை யிலையே!

ஒளியாம லுண்மையினை யுரைப்பதே நலமென்ற
     உறுதியைப் போற்ற விலையே!
          உன்வாழ்வை காந்திநீ உலகுமுன் வைத்துமதை
                உணர்வாரு மொருவ ரிலையே!



கற்சிலையை வைத்தவர்கள் காசுபணம் பார்த்தவுடன்
     கைகழுவி விட்ட நிலையே!
          காகமிடு மெச்சமுன் கண்ணீராய் வீழ்வதனைக்
               கண்டுமனம் மாற விலையே!

விற்கின்ற பத்திரிகை வெளியிட்ட உன்படமும்
     வீணாகும் குப்பை நிலையே!
         வீதியிலே வடைசுற்றி விற்பதுதான் வேதனையே
                வேறுபய னாவ திலையே!

கற்றாரும் நீதந்த கைவேலை  விட்டதன்பின்
     கைராட்டை தோற்ற தையா!
         கண்கண்ட சத்தியம் காணாது போயின்று
              கபடமே வென்ற தையா!

பெற்றாளின் மேலான பெருமண்ணின் மேற்பக்தி
     பற்றாது போன தையா!
         பிறந்தநம் நாடதனின் பெருமையை யறியாத
              பேதைமை பெருகு தையா!


பாரதிகலைக் கழகம் . 13.10.2013

Friday, February 27, 2015

பாரதி ஓரு ஜீவ நதி




பாரதி என்பதோர் ஜீவநதி - அது
பாடல்க ளோடும் பேராறு.
நீரத னோட்டம் நிற்காது - இங்கு
நிலைபெற் றிருக்கும் நெடுங்காலம்.

 
உள்ளத் துள்ளது கவிதை - அதையோர்
ஊற்றென் றுரைத்தார் கவிமணியார்.
தெள்ளிய கோதா வரியாறைக் - கம்பன்
தெரிந்தே சான்றோர் கவியென்றான்.
 

சொற்றே ரோட்டும் சாரதியாய் - என்றும்
சோரா துழைத்துக் கவிசெய்ய
வற்றா ஊற்றாய்க் கவியுள்ளம் - மிக
வாய்த்தவ ரிங்கே ஏராளம்.
 

பாரதி வழியிற் கவிஞர்களாய் - இன்னும்
பலநூ றாயிரம் வருவார்கள்.
பாரதி மரபிங்கு அழியாது. - என்றும்
பாடல்க ளாறு வற்றாது.
 

பாரதி சிந்தனை. கார்த்திகை மூலம். மத்திய கைலாஷ். 27.11.2011.

கண்டேன்


கண்களாற் காண்ப தன்றிக் காதினால் மூக்கா லெல்லாம்
கண்டுளா ரெவரு முண்டோ? கம்பனேன் அநுமன் வாயால்
கண்டனன் கண்க ளாலே கற்பினுக் கணியை யென்று
விண்டனன் என்பதற்கு விடையென ஒன்று கேட்டேன்.

சீதையைத் தேடி லங்கை செல்வதின் முன்னர் நன்கு
மாதவள் தோற்றந் தன்னை மனதினிற் கொள்ள வேண்டி
காதினாற் கேட்ட தன்றிக் கண்களால் கண்ட தில்லை.
ஆதலால் இடரொன் றங்கே  அநுமனே நேரக் கண்டான்.
(மண்டோதரியைச் சீதையென்று நினைத்து மயங்கியது.)

வலியதன் துணையை விட்டு வனத்திடைப் பிரிய நேர்ந்து
மெலிந்துவெந் துயரில் வாடி மேனியிற் செழுமை மாறி
நலிந்துள நிலையி லந்த நங்கையின் தோற்றம் வேறாய்,
பொலிந்திரு கண்கள் மட்டும் பொருந்திடத் திருவைக் கண்டான்.
(அவள் கண்களைக் கொண்டே அவளைக் கண்டது.)

'கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
தென்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
அன்டர் நாயக! இனிதுறத்தி, ஐயமும்
பண்டுள துயரு' மென்றநுமன் பன்னுவான். - கம்பன்

பாரதி கலைக்கழகம். கம்பர் விழா. 13.7.2014

Sunday, February 08, 2015

சீரைத் தேடின் நூலைத் தேடு.


புதியதொரு வலிமையுடன் மீண்டு வந்து
    பொலிவசந்தப் ரியனாரின் வாசல் மேடை.
மதிவானில் தவழவரும் மாலை. கவிதை
    மாக்கோலம் போடவரும் புலவோர் கோட்டம்.
கதிரொளிபோற் றமிழ்மொழியில் படைப்பின் ஆற்றல்
    கைவந்த பெருமகனார் புகழின் மிக்கார்
எதிரொலியார் தலைமையிலே அரங்கில் நிற்கும்
    எளியவனின் வணக்கங்கள் ஏற்பீர் ஐயா!

இலக்கென்ற வொன்றிங்கு இருந்தா லன்றி
   இதுவழிதான் எனக்கொள்ள ஏது மில்லை.
இலக்கியங்கள் என்றுபல இலக்கு சுட்டும்
   இனியதமிழ் நூல்முன்னோர் செய்த வெல்லாம்
உலகத்து மக்கள்வாழ் விருளைப் போக்கும்.
   ஒளிர்கின்ற தீபமென வழியைக் காட்டும்.
சிலபேர்கள் சுயலாப நோக்கம் கொண்டு
   செல்கின்ற குறுக்குவழி இருளில் ஆழ்த்தும்.

இறையுணர்வே நோக்கமெனில் மறைநூ லுண்டு.
    இவ்வுலக வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டின்
முறையான வழிகாட்டும் பொருள்நூ லுண்டு.
    முந்துதமிழ் அறிஞனென வீற்றி ருக்க
நிறைவான நூலறிவே வேண்டும் என்றால்
    நெஞ்சையள்ளும் இலக்கியங்கள் நிறைய உண்டு.
குறையறுநல் வாழ்வேதான் இலக்கென் றாலோ
    குறள்நெறிநேர் வழிகாட்டும் வேறு வேண்டாம்.


'வாசல்' கவியரங்கம். மார்ச் 2009.வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்.
 மூவரசம்பேட்டை.   

Monday, December 08, 2014

விடுதலை வேள்வியில் வீரக் கவிஞன்.



புவிபோற்றிடும் படிவாழ்ந்துள புலவோரிடை எங்கள்
கவிபாரதி புகழ்பாடிடக் களமீதினில் வந்தேன்.
அவையோரினை வரவேற்றிரு கரங்கூப்பிடு கின்றேன்.
செவிசாய்த்திடும் படிவேண்டியே சில வார்த்தைகள் சொல்வேன்.


(வேறு)
அச்சமுற்று நாடிழந்து அடிமைமோகம் நெஞ்சிலே
உச்சமாகக் கொண்டபேர்கள் வாழ்ந்தநாளில் தோன்றினான்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதுகூட
அச்சமில்லை என்றுபாடி அன்றுவீர மூட்டினான்.


(வேறு)
தந்தையும் பாட்டனும் சேர்த்துவைத்த - பல
தாவர சங்கம செல்வமெல்லாம்
சந்ததி யார்பெற உரிமையுண்டு - என்று
சட்டமு ரைப்பது கண்டிருப்பீர்!
செந்தமிழ் தனிலது 'தாய்நாடு' - செருச்
செய்து மதைப்பெற வேண்டுமென்று
'தந்தையர் நாடெ'னப் பாடிவிட்டன். உரிமை
தாக மெடுத்திடச் செய்துவிட்டான்.


(வேறு)
சூழு கடலுடை பூமி யிதிலெங்கும்
...சாதி யுயர்விலை தாழ்வுமிலை.
வாழு நெறிகளில் ஆணு மொருபெண்ணும்
...வேறிலை ஒன்றெனச் சொல்லிவைத்தான்.
வாழு மனிதர்கள் யாவ ருக்குமிங்கு
...உண்ணும் முணவிட வேண்டுமென்றான்.
பாழு முலகினில் ஏழ்மை யொழியவே
...பாடி யுயர்நிலை எய்திவிட்டான்.


தேச மடைதுயர் போக்கும் வழிதன்னைத்
...தேடித் தமிழினில் பாடியவன்.
மீசை முறுக்கொடு முண்டா சழகின்னும்
...மின்னிச் சுடர்விடும் குங்குமமும்
நேச முடன்மயிர்ப் பீலி தனிற்தொட்டு
...நெஞ்சில் வரைந்துள ஓவியமாய்
பாச மிகுகவி வாண ரிடமெல்லாம்
...பார திநிச்சயம் வாழ்ந்திருப்பான்.

திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடைபெற்ற, வானவில் பண்பாட்டு மையம் பாரதி திருவிழாவில், கவியரங்கில்  பாடியது.

Thursday, December 04, 2014

கோடை விடுமுறைத் தொடக்கம்



நோட்டுப் புத்தகம் உணவென்று
... நிறைந்து வழியத் தோள்சேர்த்து
மூட்டை தூக்கி நடக்காமல்
... மூலையில் விட்டு வைத்திடலாம்.
வீட்டுப் பாடம் பொறுப்பென்று
... வேலை எதுவும் கிடையாது.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்.
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


நாட்டுப் பாடல் பாடுதற்கும்
... 'நாளொரு நீதி' கேட்பதற்கும்
கூட்டி வெளியில் நிறுத்திவைக்கும்
... கொடுமை இனிமேல் கிடையாது.
போட்டித் தேர்வுகள் கிடையாது
... பொழுதை இனிதாய்க் கழித்திடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


பாட்டி தாத்தா பார்ப்பதற்குப்
... பயணம் ரயிலில் சென்றிடலாம்.
கேட்கக் கேட்கத் தின்பண்டம்
... கிடைக்கும் நன்றாய்த் தின்றிடலாம்.
ஓட்டி சைக்கிள் தெருவினிலே
... ஒவ்வொரு நாளும் பழகிடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.




 பாரதி கலைக் கழகம். அழ. வள்ளியப்பா நினைவரங்கம். குரோம்பேட்டை இலக்குமி அம்மாள் மேல் நிலைப் பள்ளி. 22.11.2014

Thursday, September 18, 2014

பாரதி கவிதைகளில் - மொழிவளம்



                                                         
வெல்லத் தன்னை இன்றுவரை - இங்கு
    வேறே ஒருவர் இலையாகச்
சொல்லைப் பொருளைப் புதிதாக்கி - நல்ல
    சுவையோ டுரைத்த கட்டுரைகள்
வல்ல தமிழின் வார்த்தையெலாம் - காட்டி
    வரைந்த வண்ணச் சிறுகதைகள்
தொல்லை தராத நடை,அறிவை - நன்கு
    தூண்டும் கருத்துக் குவியலவை.

எண்ணப் படியே வெண்பாவில் - வந்து
    எப்படி விழுமோ வெண்டளைகள்?
வண்ணப் பாடல்கள் சந்தங்கள் - பல
    வாய்ந்தவை சிறந்த தெங்ஙனமோ?
இன்னும் அகவல் விருத்தங்கள் - உள்ள
    ஏனைய சிந்துப் பாடல்கள்
மின்னும் தமிழின் வளங்காட்டும் - இந்த
    மேதினி என்றும் போற்றிடவே!

திருத்த சாங்கம் சாற்றுகவி - புகழ்த்
   திரௌபதி சபதக் காப்பியமும்
திருப்பு கழ்நான் மணிமாலை - கும்மி
   தீதறு தூது சீட்டுகவி
அருமை பாரத மாதாவுக் - கென
   வாக்கிய பள்ளி எழுச்சியிவை
பெருமை மிகுநம் தமிழ்மொழியில் - உள்ள
   பெருவளங் காட்டி நிற்பவையே!


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், மடிப்பாக்கம் கிளை துவக்க விழா மற்றும் மகாகவி பாரதி விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம் பட்டு. 15.12.2013

Thursday, August 28, 2014

இனி வருமோ?



நினைவுப் பேழை தனைத்திறந்து
நிதம்நிதம் தேடிப் பார்க்கின்றேன்.
நிதம்நிதம் தேடிப் பார்த்தாலும்
நினைத்தது மனதில் வரவில்லை.

நெஞ்சைக் கவர்ந்த உருவமது
நினைவை விட்டுப் போய்விடுமோ?
நினைவை விட்டுப் போகுமெனில்
நெஞ்சைக் கவர்ந்த தெனவாமோ?        (நினைவுப் பேழை...)

சின்னஞ் சிறிய குழந்தைமுகம்
சிந்திய புன்னகைப் பேரழகு
சிந்திய புன்னகை எழில்முகத்தை
எண்ணிப் பார்க்க முயல்கின்றேன்.       (நினைவுப் பேழை...)

கன்னக் குழியும் கண்ணழகும்
வண்ணக் குழைப்பில் மின்னியதே!
வண்ணக் குழைப்பில் மின்னியவக்
கண்ணன் முகத்தைக் காணேனே!          (நினைவுப் பேழை...)

உதடு குவித்துக் குழலூதும்
உன்னத ரூபம் மறந்திடுமோ?
உன்னதம் நினைவை நீங்கிவிடில்
உதறித் தேடியும் இனிவருமோ?               (நினைவுப் பேழை...)


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 24.8.2014.


Friday, May 30, 2014

கோசல நாடுடை வள்ளல்



கையினில் படைக்கல மேதுமின்றிக்
...களந்தனில் முறியப் போட்டு
மெய்யெலாம் சரம்பொதி புண்களாகி
...மிகுதியாய்க் குருதி சோர
கையறு நிலையினில், தோல்விகண்டு
...கலங்கிய நெஞ்சத் தோடு
செய்செய லறிந்திடா ராவணன்றன்
...சிரமது தாழ நின்றான்.

போரறங் கருதிய ராமனும்போர்
...புரிந்திட இன்று போய்ப்பின்
வேறருங் கலமுட னிங்குமீண்டும்
...வருகநீ நாளை யென்று
கூறின னெனுமிடம் கம்பனேனோ
...கமுகினில் வாளை தாவும்
பாரினில் வளமிகு கோசலத்தைப்
...புரந்திடும் வள்ளல் என்றான்.

வீடணன் சரணென வந்துமுன்னர்
...வீழ்ந்ததும் நல்லி லங்கை
நாடதை அவர்க்கென ஈந்ததன்பின்
...நசையுடன் இன்றே தன்னை
நாடி'யுன் சரண்'எனில் ராவணர்க்கு
...நலமுற நல்க ராமன்
நாடொடு கொடையுளம் கொண்டதன்மை
...நயத்தொடு சொன்ன தன்றோ?


ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனன் இன்றுபோய்ப் போர்க்கு
நாளைவா வெனநல்கினன் நாகிளங் கமுகின்
வாளைதா வுறுகோசல நாடுடை வள்ளல்   -கம்பன்

காளை யிராவணன் கையறவிற் காற்றாது
நாளைவா போர்க்கென்று நல்கினதன் தாளையன்றே
சார்ந்துபொறை வேண்டினனேல் தாசரதி கோசலப்பேர்
ஆர்ந்தவள நாடரக்கற் காம்     -திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம். சென்னை. 22.7.2012.

Wednesday, May 07, 2014

தமிழுக்கு அமுதென்று பேர்



வீட்டுப் பொறுப்பெனும் பாரம் - கொஞ்சம்
விட்டு நலம்பெற வேண்டி,
பாட்டு தருஞ்சுவை நாடி - தமிழ்
பாடும் கவிபலர் கூடும்
கூட்டம் நடைபெறும் மன்றில் - நானும்
கொஞ்சம் தமிழமு துண்பேன்!
வேட்டு வெடித்திடும் வீட்டில் - எனினும்
வேறொன் றதற்கிணை யாமோ?

நேற்று நடந்ததோர் மன்றின் - நிகழ்வு
நெஞ்சி லலையிடும் போது
ஆற்றல் குறைந்தது மாறி - தேவர்
அமுது பருகிய தென்ன
ஊற்றுக் கிளம்பிடும் சக்தி - மேலும்
உணர்வு முயர்வுறு மாங்கே.
ஆற்றல் மிகுந்தமிழ் அமுதே! - அதிலோர்
ஐய மிலையெனச் சொல்வேன்.

(சென்னை,வாணுவம் பேட்டை,
 திருவள்ளுவர் இலக்கியமன்றத்தில் பாடியது.)

Wednesday, April 30, 2014

அறன் வலியுறுத்தல்


(திருக்குறட் கருத்து)


பெறத்தக்க பெரும் பேற்றில் வீட்டை நல்கும்
..பெற்றியது வேண்டியோர்க்கு நீளும் செல்வத்
துறக்கத்தை ஈயுமெனில் உயிர்க்கிங் காக்கம்
..தரத்தக்க வேறுளதோ அறத்தை யன்றி?
மறத்தலினால் வருங்கேட்டைக் கூடச் சொல்லி
..மண்ணுயிர்க்கு வழிகாட்டும் முப்பால் நூலோ
அறத்தியற்கை ஆக்கத்தை ஈதற் கொண்டே
..அதைச்செல்லும் வாயெல்லாம் செய்யச் சொல்லும்.


வாக்கென்றால் ஒலிவடிவிற் செவியிற் சேரும்.
..உடலியக்கம் காட்சியெனக் கண்ணில் தோன்றும்.
தேக்குகுறை பாடுடைய நெஞ்சின் வழிதான்
..தெரிக்கின்ற சொல்லோடு செயலும் போகும்.
நோக்கமுடன் பிறரறியச் செய்து வெறும்
..நாடகமாய் ஆவதுவும் அறமென் றாமோ?
நோக்கிலற மனைத்திற்கும் வித்தாய் நிற்கும்
..நெஞ்சத்துத் தூய்மைக்கு நிகரே இல்லை.


பல்லக்கின் பாரத்தைத் தோளில் ஏற்றிப்
..பாதையிலே பக்குவமாய்க் காலை வைத்து
வெள்ளமென உடல்முழுதும் வியர்த்தே ஊற்றும்
..வெம்மையிலே தரைச்சூட்டைத் தாங்கி நால்வர்
மெள்ளநடை தடுமாற, உள்ளே யொருவர்
..மெத்தையிலே சயனித்துச் செல்லல் இங்கே
உள்ளபடி அறத்தியல்பைக் காட்டுந் தானே?
..உணர்ந்தறிய நூலெதுவும் கற்றல் வேண்டாம்.


இன்னாச்சொல் லழுக்காறோ டாசை வெகுளி
..இவைநீக்கி, இயற்றுதலே அறமென் றாகும்.
பின்னரொரு காலத்திற் செய்வோ மென்னா(து)
..எப்போது மதைவிடாது செய்வோ மானால்
பொன்றுங்கால் அழியாத துணையாய் நிற்கும்.
..பிறவற்றால் இன்பமிலை புகழு மில்லை.
இன்னுமொரு பிறவிகருத் தடையாய் நின்று
..இன்பமறாப் பெருவீட்டில் அறமே சேர்க்கும்.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 20.6.2010.

Friday, April 25, 2014

குடலுண்டு குன்றிய கூடு








சுற்றம் மறந்ததோ? சூழ்வறுமை காரணமோ?
உற்ற துணையு மொதுக்கினளோ? - வற்றிக்
குடலுண்டு குன்றியதோர் கூடானாய் கண்டு
கடவுளரும் கண்கலங்கு மாறு.

(சந்த வசந்த இணையக் குழுமத்தில் யோகியார் அவர்கள் கேட்டிருந்தபடி புகைப்படத்துக்கு எழுதிய வெண்பா.)

Friday, March 07, 2014

வேறெதுவும் காரணமோ?



தந்தைதோள் சாய்ந்தசுகம்
...தலையணையில் இல்லையென
முந்தையநாள் கற்பனையில்
...மூழ்கிய முகவழகோ?

தெரியாத மனிதரிடைத்
...தெரிந்தவளாய்த் தாயவளின்
பரிவை முகந்தன்னில்
...பார்த்துவந்த புன்னகையோ?

விரித்துக் கையசைத்து
...விதவிதமாய் முகம்மாற்றி
சிரிப்பு வரவழைத்தார்
...சிறிதளவு வென்றாரோ?

கரியநிறப் பூச்சியொன்று
...கண்ணெதிரே வந்ததுவோ?
விரிந்தவிழி வியப்புக்கு
...வேறேதும் காரணமோ?

Wednesday, January 08, 2014

செல்வம்


கோடி தொகுத்தபினும்
கொண்டின்னும் கூட்டுதற்காய்
ஓடித் திரிவருளர்.
உள்ளதன்மேல்- நாடிடுமோர்
எண்ணமிலா துன்சிந்தை
என்றும் இருந்திடுமேல்
உண்மையதே செல்வம் உணர்.

(செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.)

Friday, November 15, 2013

எண்ணிய முடிதல் வேண்டும்


தினைத்துணை இருந்த போதே
...தெருவிலே ஆடும் நாளில்
நினைத்ததைச் செய்து காட்ட
...நெஞ்சிலே ஆசை கொண்டேன்.
மனையறம் கண்டு இன்று
...மயிரெலாம் நரைத்த பின்னும்
நினைத்ததை முடித்த லாற்றேன்.
...நிகழ்வதை ஏற்கின் றேனே!

அலவுதீன் விளக்குப் போலொன்
...றகப்படக் கூடு மாயின்
சுலபமாய்த் தேய்த்துப் பூதச்
...செயலினால் முடித்துக் கொள்வேன்.
இலையது கதைதான் என்றால்
...இயலுத லாமோ? நூலோர்
பலரிது பற்றிச் சொன்ன
...பகுதிகள் தேடிப் பார்த்தேன்.

திண்ணிய ராகப் பெற்றால்
...தெளிந்தநல் லறிவி ருந்தால்
எண்ணிய முடியு மென்றார்.
...ஏற்கிறேன். சரிதான். ஆனால்
திண்ணிய நெஞ்சை எங்கே
...தேடிநான் பெறுவேன்? எங்கே
எண்ணிநான் விலைக்கு வாங்க
...அறிவது கிடைக்கக் கூடும்?

Friday, October 25, 2013

சுட்ட பழம்



நாவற் பழம்சுவைக்க
நாஊற வாங்கவிலை
ஆவலுடன் கேட்டே
அதிர்வுற்றேன். - நாவலிது
சுட்டபழம் கையைச்
சுடத்தானே செய்யுமெனக்
கட்டியவள் கேட்டாளே காண் !

பழத்தின் பெயரில் தொடங்கும் வெண்பா.
அமுதசுரபி செப்.2012. வெண்பாப் போட்டி.
3-ம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.

Thursday, October 17, 2013

ஒட்டியுறுவார் உறவு


நாற்றிசையும் கரையமைந்தே ஊரி னோரம்
...நிழல்மரங்கள் வரிசையுற நிற்க, நல்ல
நாற்றமுள வண்ணமலர்ச் செடிக ளெல்லாம்
...நாற்புறமும் இடையிடையே வளர்ந்தி ருக்கும்.
தோற்றத்தில் பொலிவுடைய குளமுண் டதனில்
...தாமரையோ டாம்பலுமே பூத்தி ருக்கும்!
காற்றினிலே விரித்திறகை, பறந்து வந்து
...கரையமரும் பறவையினம் காட்சிக் கின்பம்!


சுற்றிவரு பருவநிலை மாறி, வெய்யில்
...சுட்டெரிக்கும் கோடையிலே நீர்மை குன்றி,
அற்றநீர்க் குளக்காட்சி அழகு மாறும்.
...அகன்றுவிடும் பறவையினம் நில்லா தங்கே.
வற்றியவாய் நீர்க்கொடிகள் மலர்க ளோடு
...வாடிநிலை தாழ்ந்திடினும், தங்கி நிற்கும்.
உற்றதுயர் கண்டவுடன் விலகு வோர்கள்
...உறவினரென் றழைப்பதற்கே ஏற்றாரில்லை.


'வா'வென்றே அழைக்காமல் தாமாய் வந்து,
...வகைவகையாய் உறவுபெயர் சொல்லி, நாளும்
'தா'வென்று பொருளுளநாட் சுற்ற மாகித்
...தமைவளர்க்கும் தகைமையுளோர், அற்ற நாளில்
'போ'வென்றே யுரையாத போது விட்டுப்
...போய்விடுவர் என்பதற்குப் பொருத்த மாக
ஆயவ்வை நீர்ப்பறவை நீங்கல் சொன்ன
...அழகான உவமைக்கிங் கீடே இல்லை.


அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர். - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு.      (ஔவையார்)

பாரதி கலைக்கழகம் -ஔவை விழா. (23.2.2013)  மூதுரைப் பாடற் பொருள்.
கவி அமுதம். மே -2013. இலக்கியவேல்- ஜூலை 2014

Friday, September 27, 2013

ஏழு முதல்...


பாலனாய் ஏழினில்
பால்நிறக் கோலியொடு
பாதை யோரமே திரிந்தேன்.

பார்ப்பவர் ஏசுவது
பாராது நாள்முழுதும்
பம்பரம் சுழற்றி நின்றேன்.

பாலனெனும் நிலைமாறிப்
பதினைந்தி லேதிரைப்
படங்களை ரசித்தி ருந்தேன்.

படிப்பினைப் பசியினைப்
பாராமல் எந்நாளும்
பாடலில் லயித்தி ருந்தேன்.

காலமது இனுமோடிக்
கடந்தபின் முப்பதில்
காதலே பெரிதென் றிருந்தேன்.

கைநிறையப் பொருள்வேண்டிக்
களைப்பென்று பாராது
கடுமையாய் உழைத்தி ருந்தேன்.

கோலியொடு பம்பரம்
காதல்பொரு ளாசையெலாம்
காணாது மறைந்த தின்று.

கடவுளது சந்நிதிமுன்
கைகூப்பி நிற்கையில்
கணநேர நெகிழ்வு நன்று.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம். 15.8.2012

Monday, September 23, 2013

சித்திரை கொண்டுவரும் சீர்.



விதிதன்னை நொந்து
விலைவாசி ஏறக்
கதியின்றித் துன்பமுறும் காலம்.- புதிதாக
இத்தரையில் இப்போ(து)
எதுவானால் தானென்ன
சித்திரை கொண்டுவரும் சீர்?

 வெண்பாப் போட்டியில் 3ம் நிலையில்
 தேர்வு பெற்ற வெண்பா.  அமுதசுரபி ஏப். 2012

Wednesday, August 28, 2013

லட்டு தின்போம்


(சிறுவர் கவிதை)

மூன்று பேராய் நாமிருக்க
மொத்த லட்டு மூன்றிருக்க
மூன்றை ஆளுக் கொன்றெடுத்து
முழுது முழுதாய்த் தின்போமே!

நான்கு பேராய் நாமிருக்க
நல்ல லட்டு மூன்றிருக்க
மூன்றை நாலாய்ப் பங்குவைத்து
முக்கால் முக்கால் தின்போமே!

ஆறு பேராய் நாமிருக்க
அழகு லட்டு மூன்றிருக்க
ஆறு பேரும் பங்குவைத்தே
அரையாய் அரையாய்த் தின்போமே!

பன்னி ரண்டு பேரிருக்க
பாகு லட்டு மூன்றிருக்க
சின்ன தாக்கிக் கால்காலாய்ச்
சேர்ந்தே அதனைத் தின்போமே!

நெஞ்சில் அன்பு மிக்கோராய்
நிறைய நன்பர் வருவரேல்
கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிவைத்துக்
கூடித் தின்று மகிழ்வோமே!

பாரதி கலைக்கழகம். அழ. வள்ளியப்பா நினைவுக்
கவியரங்கம். குரோம்பேட்டை. நவ.2011.

Monday, August 26, 2013

சுதந்திரத் தேவி தாயே!


 
உண்மைகள் வாழவும்
……....உறுதுயர் ஒழியவும்
……….........உலகினில் ஒழுக்க மோங்கவும்
......உனதரும் புதல்வரில்
……......உயர்புகழ்க்  காந்திபோல்
………........உத்தமர் ஒருவர் வேண்டும்.
 

உன்னவர் நடுவிலே
………...ஊழலும் லஞ்சமும்
.................ஒழிந்திடப் பாடவேண்டும்
……..உறையிருள் மறைந்து
.............ஒளிபெறப் பாரதி
…………………ஒருவனும் இன்று வேண்டும். 
 

எண்ணிய முடிக்கவும்
...........எதிர்பகை வீழ்த்தவும்
.................இளையவர் தலைமு றைக்கு
……. ஆற்றலும் வீரமும்
.............அஞ்சாத நெஞ்சமும்
......................அமையநீ அருள வேண்டும்.

சென்னியிற் குங்குமம்
..........செவ்விதழ்ப் புன்னகை
....................சிறந்திடுங் கருணை மாதே!
……..சத்தியப் பேரொளி
.............சமத்துவ நாயகீ!
...................சுதந்திரத் தேவி தாயே!
 
'நம் உரத்தசிந்தனை' மாத இதழ். ஆக.2013

 

 

 

மாற்றிடுவோம்

(சிறுவர் கவிதை)


வீசும் கற்றில் பெருந்தூசி
வீதியில் குப்பை கூளங்கள்
நாசியில் வீசும் துர்நாற்றம்
நகரங்களிலே இன்றுண்டு.
பாசிபடரும் வகையினிலே
பலநாள் தேங்கி நீர்நின்று
மோசம் விளைக்கும் நோய்பரப்பும்
மொய்க்கும் கொசுவின் உற்பத்தி.


ஓடும் கார்கள் சாலைகளில்
ஓசை செய்கிற பேரிரைச்சல்.
நாடு முழுதும் ஆலைகளின்
நச்சுக் கழிவின் ஆபத்து.
ஓடி ஒளிய நினையாதீர்.
உலகம் முழுதும் இப்படித்தான்.
கோடிக் கணக்கில் இருக்கின்றோம்
கொஞ்சம் முயன்று மாற்றிடுவோம்.


தினமணி.- சிறுவர் மணி. 19.12.1999.

 

நீ வாழ்க!

(பின்முடுகு நேரிசை வெண்பா)


வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
முலகி னிலவு மளவு.


'தெளிதமிழ்' மாத இதழ் - ஜனவரி 2004

 

பட்டங்கள் பெற்ற பயன்


சட்டியிலே சோறாக்கச் சற்றேனும் கற்றிருந்தால்
கட்டியவ ளேனும் களிப்புறுவாள் - முட்டாளாய்,
எட்டாது வேலையெனில் ஏதேனும் வேறுண்டோ
பட்டங்கள் பெற்ற பயன்?


மின்னல் தமிழ்ப்பணி இதழ்- டிசம்பர் 2012. பரிசு பெற்றது.

Monday, July 29, 2013

பரத நம்பி



'முன்னவ னிருக்கப் பின்னோன் மணிமுடி தரித்த லாகா
தென்னுமோர் முறையுண் டெனினும் எனதுளம் வருந்தா தவனே
நின்னினும் நல்லன்' என்றும்' நிறைகுணம் கொண்டோ' னென்றும்
அன்னைகோ சலைதன் வாயால் அன்னலுக் குரைக்கக் கண்டோம்.

தாயுரை கொண்டு தாதை தனக்கென ஈந்த வாழ்வை
தீயது என்று விட்ட திறமதைக் கண்டு வேடன்
ஆயிர மிராமர் நின்கே ழாவரோ? என்று கேட்ட
வாயுரை கொண்டுங் கம்பன் வரதனைப் போற்றக் கண்டோம்.

மன்னனாய் ராமன் மீண்டு மணிமுடி சூடக்காண
எண்ணிய பரதன் நெஞ்சத் தெளிமையை அன்பைக் கண்டு
'மன்புகழ் பெருமை நுங்கள் மரபுளோர் பெருமை யெல்லாம்
உன்புக ழாயிற்' றென்றே உரைத்தது முண்மை தானே?

தந்தையின் வாக்கைக் காக்கத் தாங்கரு கானம் புக்கோன்
முந்தையன் சேவைக் கென்றே முயன்றுபின் சென்ற தம்பி
சிந்தையில் ராமன் நிற்கச் சேவடி சிரமேற் கொண்டு
வந்தனை செய்தவ் விருவர் வழியினைப் பரதன் வென்றான்.


'ஒழுக்க நெறிநிலை உலகினர்க் குணர்த்த
தந்தையர் தமக்கு மைந்தர்செய் பணிமுதல்
பொதுவற மெல்லாம் புரிந்தன னிராமன்.
அப்பணி தானும் அடைவு கெடாமை
ஒப்பறு திருமால் ஒருவனுக் கென்றே
சிறப்பறம் தலைக்கொடு செய்தன னிலக்குவன்.
அவ்வறந் தானும் செவ்வற மாதல்,
செங்கண்மால் உவந்த சேவடித் தொழும்பே
அல்லது தனகொன் றில்லையென் றாய்த்து
பரதந் திரநெறி பற்றினன் பரதன்'. ...... ...- திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம் - கம்பர் விழா. 9.8.2009

Friday, June 07, 2013

குறள் வானில் நிலவு


பெண்ணொருத்தி முகத்தழகுக் குவமை யாகப்
...பேரெழில்வான் முழுநிலவைச் சொல்லு தற்கு
விண்ணிலுலா வருகின்ற மீன்க ளெல்லாம்
...வீசுமொளி வெண்மதியோ டியங்கும் போது
மண்ணிலுமோர் நிலவுமுகம் நகரக் கண்டு
...மயங்கிவழி தடுமாறி நின்ற தாக
மண்ணிதனில் வானத்தைக் காட்டு கின்ற
மனங்கவரும் கவிதையினைக் குறளில் கண்டேன்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.   (குறள்)



மலரிதழ்போல் விரிந்தகன்ற விழிகள் கொண்ட
...மாதரசி அழகுமுகம் உனக்குண் டாயின்
உலவுகின்ற மேகத்தை இழுத்துப் போர்த்தி
...உன்முகத்தை மறைத்துக்கொள் ஒருபோ தும்நீ
பலர்காணும் படிவானில் திரிய வேண்டாம்
...பார்ப்பவரின் கண்படுமென் றொன்றில் கண்டேன்.
நிலவுவந்து வள்ளுவத்தில் நின்று லாவும்
...நெஞ்சுநிறை கவிவரிகட் கீடே இல்லை.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.   (குறள்)

வாசல் கவியரங்கம்  7.12.2008

Friday, March 08, 2013

மாதரைப் போற்றுகின்றேன்



விண்ணியல் தெளிந்தோ ருண்டு
...வேதியல் முதலா யுள்ள
எண்ணிலா வகையி லின்று
...இயங்கிடுந் துறைக ளூடே
பெண்ணிலா தேது முண்டோ?
...பெருமையில் மிக்கோ ராக
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


நுண்ணறி வோடு கூட
...நூல்பல கற்ற போதும்
பெண்ணறி வென்ப தென்றும்
...பேதமை மிக்க தென்று
முன்னவர் சொன்ன சொல்லை
...முழுவதும் பொய்யென் றாக்கி
மண்ணிலே வாழு கின்ற
...மாதரைப் போற்று கின்றேன்.


பெண்மையே அன்பின் தோற்றம்.
...பிறந்துள உயிர னைத்தும்
பெண்மையின் ஜீவ ஊற்று.
...பெண்மையே உலக வித்து.
பெண்மையே விளங்கு கின்ற
...பெரியதோர் சக்தி தெய்வம்.
மண்ணிலே வாழு மந்த
...மாதரைப் போற்று கின்றேன்.


பாரதி கலைக்கழகம். 21.3.2010

Sunday, March 03, 2013

கவிதை இன்பம்



நீலக் கடலதன் நீரென ஓர்கவி
...நெஞ்சில் அலைவிரிக்கும் - அதைக்
காலைக் கதிரவன் கைதொடு போதுபோற்
...கண்ணில் பளபளக்கும்.

சிந்தை கவரொரு சிட்டுக் குருவியைச்
...சித்திர மாய்வடிக்கும் - கவி
விந்தை மனம்முன்னர் வீழ்ந்து கிடந்தது
...விண்ணிற் சிறகடிக்கும்.

தீர்த்தக் கரையினில் தென்றற் சுகமொடு
...தீங்கனி உண்பதுபோல் - கவி
பார்க்கும் படியில்லாப் பாதை நடையிலும்
...பாடச் சுவைகிடைக்கும்.

பூத்த மலர்வனப் பூவின் நறுமணம்
...பாடல் நிறைத்துவிடும் - நெஞ்சில்
கோத்துத் தொடுத்திட்ட கொஞ்சு தமிழ்க்கவி
...கோலம் வரைந்துவிடும்.

சந்த மழைவந்து சற்றுப் பொழிந்திடில்
...சிந்தை மயக்கிவிடும் - கவி
தந்த பொருளதில் மின்னல் இடிவந்து
...தங்கி நிலைத்துவிடும்.

பாரதி கலைக்கழகம் - கவிமாமணி சவகர்லால் பவள விழாக் கவியரங்கம். 20.8.2011

Monday, February 25, 2013

தலைசுற்றும் விலைவாசி


அதிகரித்த பணவீக்கத் தோடு கூட
...அடுத்தடுத்துச் சரிந்துவிழும் பங்குச் சந்தை
புதியதொரு வலையூக வணிகம் மற்றும்
...பூலோகம் முழுவதையும் ஆட்டி வைக்கும்
புதிரெண்ணெய் விலையேற்றம் எல்லாம் சேர்ந்து
...பெரும்பாரம் தலைசுமந்து தாங்கிக் கொண்டு
விதிதன்னை நொந்தபடி இருத்த லின்றி
...வேறென்ன செயயியலும் நம்மா லிங்கு?


பொருளறியாச் சொற்றொடரால் நாளே டெல்லாம்
...புதுப்புதிதாய் விளக்கங்கள் எழுதி னாலும்,
ஒருவழியு மறியாம லாட்சி செய்வோர்
...விழிபிதுங்கி நிற்கின்ற நிலையைக் கண்டோம்.
வருமான மோரளவு உள்ள பேரின்
...வாழ்நிலையே மிகத்தாழ்ந்து போன தென்றால்
வருமானம் குறைந்தவர்கள் மற்று முள்ள
...வறியவர்கள் உயிர்வாழ்தல் எங்க னேயோ? 

Tuesday, January 15, 2013

பொங்குகவே பொங்கல் பொலிந்து!


ஆற்றின் வடிகாலும் ஏரும் உழவோரின்
சேற்றில் பதிகாலும் செங்கதிரும் - ஏற்றமுறத்
தங்கிநிலை பெற்றுத் தமிழர் நலஞ்சிறக்கப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

வெண்பாப் போட்டியில் தேர்வு பெற்ற வெண்பா.
அமுதசுரபி  -ஜனவரி 2013.

Wednesday, January 02, 2013

தொண்டரடிப்பொடி ஆழ்வார்


மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற
திருமாலை பாடுஞ்சீர்த் தொண்ட ரடிப்பொடியெம்
பெருமானை எப்போதும் பேசு.
(திருவரங்கப் பெருமாளரையர்.)


திருமாலின் வனமாலை அம்சம் என்ன
...திருமண்டங் குடியென்னும் சிற்றூர் தன்னில்
பெருமைமிகு மார்கழியில் கேட்டை தேயும்
...பக்ஷத்தில், சதுர்த்தசியில் பாரில் தோன்றி,
திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி யென்று
...திருவரங்கன் ஒருவனையே போற்று மாறே
இருதிவ்யப் பிரபந்தம் செய்து போந்த
...இறையடியார் தொண்டரடிப் பொடியா ரன்றோ?

துளவுநிறை தோள்தொங்கு குடலை, நல்ல
...தூய்மையான அரையாடை, மலர்கள் கொய்து
விளக்கமுறத் தெய்வத்தின் தொடைய லாக்கும்
...வித்தைகற்ற திருக்கரத்தின் விரல்கள், சிறிதும்
களவில்லா நெஞ்சத்தைக் காட்டு கின்ற
...கதிரேபோல் முகப்பொலிவு மேனி தன்னில்
பளபளக்கும் வகைசாற்று திருமண் காப்பு
...பக்தரன்பர் தாள்தூளி வடிவ மீதே!


ரதிபோலும் அழகுடையாள் தேவ தேவி
...ரதவீதி வழிநடையில் விழியால் ஈர்த்தாள்.
அதிவிரைவாய் அவரவளைக் காணா தேக
...அழகுதனை அவமதித்த தாக எண்ணி
மதிமாறி, 'அவர்நெறியை மாற்றி, என்றன்
...மடிமீது விழவைப்பேன் காண்பாய் நீ!நான்
சதிசெய்தும் வெல்வே'னென மூத்தாள் முன்செய்
...சபதத்தில் தன்வலிமை காட்ட லுற்றாள்.

பூட்டிவைத்த அழகணிகள் களைந்து விட்டுப்
...பொருளற்ற வறியளென வேட மிட்டு,
'தோட்டத்து மலர்ச்செடிகள் தழைக்கப் பேணும்
...தினப்பணியில் உதவிடுவேன் தெய்வத் தொண்டில்
நாட்டமுடன் பங்குகொண் டிங்கே தங்கி
...நீருண்டு எஞ்சியதை உண்டு வாழ்வேன்'
கேட்டபடி தரைவீழ்ந்தாள். பாதம் பற்றி.
...கிடைத்தவுடன் மகிழ்ந்துபணி தொடங்கிச் செய்தாள்.


வான்மழையைப் பெரிதென்றால் பேயென் போமே!
...வருமின்னல் மனத்திண்மை தகர்த்துப் போமோ?
வான்தோன்றும் இடிக்கந்த வலிமை யுண்டோ?
...வாழ்ந்தவழி ஒருநாளில் மாறிப் போமோ?
நான்மறையின் நெறிநின்ற பெருமை யெல்லாம்
...நலங்கெடவே அஃதழித்துச் சென்ற தந்தோ!
'நான்'வந்து நெஞ்சிருந்து வாழ்க்கை இன்பம்
...நங்கைநலந் துய்ப்பவராய் மாறிப் போனார்.

தன்சபதம் வென்றுவிட்ட தேவ தேவி
...தனம்வேண்டி அந்தணரை விரட்டி விட்டாள்.
என்செய்வேன்? என்செய்வேன்? எனத்து டித்து
...எழிலாளின் இல்வாயில் தனிற்கி டந்தார்.
'நின்னடியார் படுதுயரங் கண்டி றங்கி
...நிலைமாறச் செயவேண்டும்' என்று வேண்டித்
தன்கருணைத் திறத்தாலே திருமால் அருளைத்
...தாமரையாள் அவர்க்கங்கு பெற்றுத் தந்தாள்.


ஆலயத்தின் அரும்பொருளில் அற்றை நாளில்
...அதிகவிலை யுடையதொரு ஸ்வர்ன வட்டில்
'காலைமுறை முடிந்தவுடன் காண வில்லை'
...கடுகளவும் தேடாத இடமே இல்லை'
ஓலமிட்ட படியோடி மன்னர் முன்னர்
...உரைத்திட்ட அர்ச்சகர்க்கு, பணிப்பெண் அன்று
'காலையிலே வட்டிலொன்று தேவ தேவி
...கணிகையவள் வீட்டினிலே கண்டேன் என்றாள்.

திருவரங்கன் உடைமை யொன்றைத்
...திருடமனம் வருமா என்ன?
ஒருதனியாய்த் தேவ தேவி
...உட்புகுந்து திருடப் போமோ?
பெருநிதியம் உடைய ளன்றோ?
...பின்னெதற்குத் திருட வேண்டும்?
வரும்படியாய் ஆணை யிட்டு
...விவரங்கள் கூறக் கேட்டான்.


'அந்தணரின் சீடரெனத் தன்னைச் சொல்லி
...அறிமுகத்தைச் செய்துகொண்டு வட்டில் ஒன்றைத்
தந்துபோன சிறுவனைநான் அறியேன் ஆகத்
...தவறேதும் இதிலென்மேல் இல்லை' யென்றாள்.
நந்தவன விப்பிரரை அணுகிக் கேட்க,
...'நானறியேன் திருக்கோவில் வட்டில் பற்றி
எந்தவொரு சிறுவனுமென் சீடன் இல்லை.
...எடுத்தெவர்க்கும் நான்வழங்க வில்லை என்றார்.

'குற்றத்தைப் புரிந்ததுநான்! வட்டில்
...கணிகைக்குக் கொண்டு தந்தேன்.
உற்றவரின் சீடன் நான் என்றே
...உரைத்ததுவும் நான்தான் ஐயா!
மற்றிதனை விப்பிரரின் செயலாய்
...மனங்கொளநீ வேண்டா' மென்று
கொற்றவனின் கணவுவந்து தோன்றிக்
...கூறியதோர் தெய்வ ரூபம்.


செப்பிய தெய்வ வாக்கைச் செவியுறக் கேட்ட வேந்தன்
'தப்பெதும் நிகழு முன்னர் தவிர்த்தனை கருணா மூர்த்தி!
அப்பனே! அரங்கனே! நின்றன் அருட்திறம் வியந்தே னென்றான்.
விப்பிர நாரா யணரை விழுந்தடி வணங்கி நின்றான்.

'ஒப்பிலா அர்ச்சை நீங்கி உவப்புடன் நீயே இந்த
விப்பிரன் அடியன் என்றா வேசியின் இல்லம் புக்காய்!
மப்பினில் மாதவள் கண்கள் மயக்கினில் வீழ்ந்தி ருந்து
தப்பினேன் அரங்கா உன்றன் தாள்களே சரணம்' என்றார்.

அச்சுதா என்னும் நாமம் அன்றாடம் ஓது கின்ற
இச்சுவை ஒன்றே போதும் இந்திர லோக மாளும்
அச்சுவை வேண்டே னென்றே அரங்கனை விளித்துச் சொல்லி
இச்சையால் துளவத் தொண்டில் இன்புற்றார் வாழி! வாழி!

கடல்நிறக் கடவுள் பாம்பில் கண்துயி லழகைக் கண்டு
உடலெனக் குருகு தென்றே உரைத்தவர் வாழி! வாழி!
சுடரொளி பரந்தே எங்கும் சூழ்ந்தது சுட்டிக் காட்டி,
கிடந்தவன் எழவே பாடிக் களித்தவர் வாழி! வாழி!


9.10.2011 ல் வில்லிவாக்கம் தேவகான இன்னிசைச் சங்கம் ஆதரவில் சௌமிய தாமோதரப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற கவியரங்கில் பாடியது

Saturday, November 24, 2012

இரக்கம் கொள்ள வேண்டாமா?

(சிறுவர் பாடல்)


கண்ணா மூச்சி ஆட்டத்தில்
காணும் இருட்டை அறிவாயா?
கண்ணைக் கட்டி விட்டாலே
கையால் தடவித் தேடுவையே.
கண்கள் இரண்டும் தெரியாமல்
கஷ்டப் படுவோர் நிலைதன்னை
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?

நொண்டி யடித்து ஆடுகையில்
நோகும் காலென அறிவாயே,
முண்டி யடித்து ஓடுதற்கு
முடியா தொருகால் ஊனத்தால்
நொண்டுஞ் சிறுவர் வாழ்நாளில்
நிலைத்த துயரம் அதுவன்றோ?
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?


பாரதி கலைக்கழகம்.  அழ.வள்ளியப்ப நினைவரங்கம். 29.11.2009

Tuesday, November 20, 2012

நெருப்புடன் ஒரு நேர்முகம்

நெருப்புடன் ஒரு நேர்முகம்
நெருப்பினை யொருநாள் நேர்முகங்காண
விருப்புட னழைத்து விடைதரக் கேட்டேன்.

1. இருமனம் இணையும் திருமண நிகழ்வில்
ஒருமுது பார்ப்பான் உரைமறை நடுவில்
சேமம் செப்பச் செய்சடங் கதனில்
ஓமத் தீயென உருக்கொடு வந்தனை.
கண்ணகி கோவலன் கைத்தலம் பற்றி
உன்னைத் தொழுதே உடன்வலம் வந்தனர்.
எண்ணிலார் காட்சியை இருந்து
கண்டவர் நோன்பினைக் கவிகளே வியப்பதேன்?

அரசவை வாழ்வும் அத்தனை இன்பமும்
துறந்தவர் வியக்கும் திருமணக் காட்சியில்,
கனலெனும் கற்பினள் அந்தண ராக்கும்
மணவினை ஓம மாகிய
அனலினை வணங்கிய தற்புதந் தானே?


2. கோவலன் பிரிந்து குலந்தரு வான்பொருள்
யாவையும் தொலைந்தே இலம்பா டடைந்ததும்,
தீதறு கண்ணகி தன்துணை பிரிய
தாதவிழ் புரிகுழல் மாதவி சேர்ந்ததும்,
அறவோர்க் களித்தலும், அந்தண ரோம்பலும்
பிறவுள மனையறப் பெருங்கட னிழந்ததும்,
மனையறம் போற்றியோர் வாழ்வில்
வினைவிளை யாடிய வேளையி னாலா?

ஆடலாற் சேர்ந்தவர் அணங்கின் யாழிசைப்
பாடலாற் பிறிந்ததும் பழவினைப் பயனே!


3. கனிகை நீங்கிக் கண்ணகி சேர்ந்து
வணிக மியற்றி வாழ நினைத்து
எய்திய மதுரை எழில்மிகு வீதியில்
செய்தொழில் மிக்க சிலம்பினை விற்கப்
பொய்த்தொழிற் கொல்லன் புரிதீ வினையால்
இலக்கண முறைமையில் இருந்தோன்
கொலைப்பட நேர்ந்தது கொடுமை யன்றோ?

ஆம்.


 4. கண்ணகி காவியத்தில் உன்பங் கென்ன?

உன்னவன் நல்லவன் என்றொலித்த செங்கதிரும்
தென்னவன் கோன்முறை தீதென்ற வாதமும்
கண்ணகி மார்பில் கனன்று பெருநகர்
உண்டதும் தீயென் றுணர்.


5. தரிக்க முடியாத துயரென வருமெனில்
எரிக்க முயல்வது இயல்பென வாமோ?

'சொல்லினாற் சுடுவேன்' என்று
..சொன்னவள் கணவன் வெற்றி
வில்லுடை யாற்றற் கிழிவு
..விளைந்திடு மென்று விட்டாள்.
எல்லையுள் நின்று சீரி
..எரிதழல் மண்டச் செய்தாள்
நல்லது செய்தா ளென்று
..நவின்றிட லாமோ? சொல்நீ!


'நெருப்பெனுங் கற்பில் மிக்க
..நெறியினில் நின்ற தெய்வத்
துருவினைப் பிழைத்த நாளில்
..ஒருதுயர் நகருற் றழிய
எரித்திடும் ஏவ லொன்றால்
.. எனக்கிங்கு வேலை யுண்டு
பிரித்துநீ சொல்வாய் உன்னால்
..பிழைப்பவ ரெவருண் டெ'ன்றேன்

'மூத்தவர் குழந்தை யாவினம்
..முப்புரி யந்தணர் பத்தினி
பார்த்து நல்லரை விட்டுநீ
..பாயு மெரியழல் பரப்'பென
தீத்திற மழித்து மாநகர்
..திருத்தி நோயினை யொழித்தனள்.
ஆத்திரத் தினாலிது வாகுமா?
..அறிவி லாருரை கேட்பயோ?

'மீண்டு மொருநாள் சந்திப்போம்
மிகுந்த பலவும் சிந்திப்போம்'
என்று கூறி நேரமாயிற்றென்று நெருப்பு விடைபெற்றது.
நன்றி கூறி நானும் நகர்ந்தேன்.

பாரதி கலைக்கழகம்.  சிலப்பதிகார விழா.
தலைமைக் கவிதை.   - மே. 2010.

Sunday, November 18, 2012

குகன் வில் வாழ்க!



அரசமுடி பொன் நகைகள் ஏது மின்றி
..அரைப்பட்டை தனிற்தொங்கு வாளு மின்றி
தரமுடைய வெண்பட்டில் சரிகை நெய்து
.. தகதகக்கும் உடையதுவும் கூட இன்றி
இரவிலொளிர் மதிமுகத்திற் சோகம் கொண்டே
.. எழிலழிந்து, துயர்தோய்ந்து, தொலைவி லாங்கே
மரவுரியில் வருபரதன் உருவங் கண்டு
..மனமிளகித் தான்வீழ்ந்த குகன்வில் வாழ்க!

மதிமயக்கம் கொள்ளவரு கோபம் தன்னில்
.. மனமறிவை வென்றுடலை இயக்கும் போதில்
எதுசரியென் றறியாமல் நாணைப் பூட்டி
..எயுமம்பு பரதன்மேற் பாயும் ஐயோ!
அதுநிகழ்தல் கூடாது. பாவம். நாமும்
.. அறக்கேட்டில் துணைசெல்ல வேண்டாம். இங்கே
இதுதருணம் எனக்கையின் நீங்கி, எய்ய
..இயலாத படிவீழ்ந்த குகன்வில் வாழ்க!

நழுவியதை மறுபடியும் கையிற் தூக்கி
..நாணேற்றக் கூடுமெனில் பயன்தா னென்ன?
முழுவதுமாய் முறையற்ற தொன்றைச் செய்ய
..முனையுமுனர் அதுதடுக்கும் வழியில், வேண்டித்
தொழுவதெனும் முடிவுடனே கையின் நீங்கித்
..திருவடியில் விழுந்ததென அறியக் கேட்டேன்.
பிழையிலதாய் பரதன் நிலை குகனும் கண்டு
..பின்னர்மனம் மாறியதாய்க் கம்பன் சொல்வான்.


வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியன்ன நகையிழந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்மிற்று நின்றொழிந்தான்.
                                                                      கம்பன். - குகப்படலம்.

Sunday, August 05, 2012

விடியல் வருமோ விரைந்து.

மண்ணைப் பிளந்து முளைத்து மரமாதல்
சின்ன விதையின் செயலன்றோ? - எண்ணி
முடியா தெனவே முயலா திருந்தால்
விடியல் வருமோ விரைந்து?


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

ஊழல் விலகுமே விட்டு

புற்று வளர்ந்து புரையோடிப் போனபினும்
கற்றோர் அமைதிக்குக் காரணமென்? - உற்றதொரு
சூழல் உளபோதே சோராது போரிட்டால்
ஊழல் விலகுமே விட்டு.

ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

கோடையிலே நல்ல குளிர்

முத்துவிளை தற்கும் முருங்கைமரம் காய்ப்பதற்கும்
ஒத்ததொரு காலமென உண்டன்றோ? - இத்தரையில்
ஓடையெலாம் வற்றி உலரும்போ தெங்குவரும்
கோடையிலே நல்ல குளிர்.


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை ஜூன் 2011.

மழலையின் சொல்லே மருந்து

அலைந்த களைப்பும் அலுவல் விளைத்த
தலைநோவும் தானே தணிந்து - இலையாம்
அழகு விழியசைய ஆசையுடன் கொஞ்சும்
மழலையின் சொல்லே மருந்து.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். நவ. 2010

பாரதி நெய்துவைத்த பா



தேசபக்தி ஊடாகத் தென்தமிழே பாவாக
ஆசுகவி யாந்தறியி லாக்கியது. - தேசுபொலி
பாரதத் தாய்பூணும் பைந்துகிலே ஆமாறு
பாரதி நெய்துவைத்த பா.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - செப். 2010

கண்ணீரால் வென்ற களம்



வெட்டுண்டா னில்லை. விழிவேலைக் கண்டன்றோ
கட்டுண்டு வீழ்ந்தான் கணவனவன். - பட்டுண்டு
பொன்னின் அணியுண்டு பூவைக்கு ஈதவள்தன்
கண்ணீரால் வென்ற களம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஆக. 2010

விழுதினால் தோன்றும் வியப்பு


பரந்த கடலும் பனிமலையும் கண்டு
விரிந்த விழிவியப்பை விஞ்சும். - பெரிது
பழுதிலாவிஞ் ஞானம் பயந்த கணினி
விழுதினால் தோன்றும் வியப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூலை 2010.

உழைப்பினால் கண்போம் உயர்வு


உண்டு முறங்கியும் வாழ்நாட் பொழுதழியின்
உண்டாகு மாமோ உயர்விங்கு? - நன்றாய்ப்
பிழைப்பொன்று மில்லாப் பெரும்பணிக ளாற்றும்
உழைப்பினால் கண்போம் உயர்வு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூன். 2010

இனிமையுடன் உண்போம் இனி


கூடியொரு நோன்பிருந்தோம் கோவிந் தனையாண்டாள்
பாடிய நன்னெறியே பற்றினோம். - தேடி
அணியணிவோம் நெய்யொழுக ஆக்கிய பாற்சோ(று)
இனிமையுடன் உண்போம் இனி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஏப். 2010

காலத்தே செய்தல் கடன்


வயதான பின்கல்வி வாய்த்தென்ன? செல்வம்
இயலாத போதீட்ட லேது? - சுயமாக
ஞாலத்து வாழ்வில் நலமுறவே நாமவற்றைக்
காலத்தே செய்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - மார்ச் 2010

சொர்க்கம் குடும்பமெனச் செப்பு


கண்டவர் விண்டுரையா, காணாதார் கற்பனையாய்
உண்டென் றுரைக்குமது உண்டாமோ? - கண்ணெதிரே
தர்க்கமிலா தேற்கும் தகவுடைய மண்ணுலகச்
சொர்க்கம் குடும்பமெனச் செப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - நவ. 2009

சோலை மலராய்ச் சிரி


என்னை நகைவேண்டின்  எங்கேநான் போவதுசொல்
உன்னிதழின் புன்னகைபோல் வேறுண்டோ? - பெண்ணேபொன்
மாலை விருப்பை மனத்தகற்றி எந்நாளும்
சோலை மலராய்ச் சிரி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - அக்.2009

கதராடை காமராசக் கோன்



தன்னலம் பாராது தாழ்நிலையில் வாழ்மக்கள்
இன்னல் களைந்த தெவரிங்கு? - அண்ணல்
அதிகாரத் தாலன்றி அன்பினால் வென்ற
கதராடை காமராசக் கோன்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். - ஆகஸ்ட் 2009

Tuesday, July 31, 2012

உழைக்கும் கரங்கள்


வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

ஆலை களில்பணி செய்திடுவோர் - பொருள்
    ஆயிரம் உண்டென வாக்குகிறார்
மேலைத் திசையுள்ள நாடுகளோ டிந்த
    மேதினி சந்தையை யாளுகிறார்.

சாலைகள் பாலங்கள் ஆலயங்கள் - எங்கும்
    சற்று மயராது கட்டுதலை
வேலை யென்றசிறு சொற்குறிக்கும் - அவர்
    மேனி வியர்வையில் நாடுயரும்.

ஓடு சாக்கடைநீர் தூரெடுத்தும் - பிறர்
    உண்டு கழித்தமலம் தாம் சுமந்தும்
ஆடி முடிந்துயிர் நீத்தவர் காட்டினில்
    அக்கினிக் கேகிடத் தோள்சுமந்தும்

வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

வாசல்: உழைப்பாளர் தினம்.   கவியரங்கம் மே 2009

Monday, July 30, 2012

வாழப் பழகுவோம் வா


இன்னிசையும் சித்திரமும் இன்னும் பிறகலையும்
எண்ணிற் பழகியதால் என்ன பயன்? - மண்ணிதனில்
ஆழவே கற்றிருந்தும் அன்பு நெறிமறந்தோம்
வாழப் பழகுவோம் வா.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். வெண்பூக்கள். ஏப்- 2009

வரிகளால் வேண்டும் வளம்


வரிப்பணத்தை வாரி வழங்கியிங்கு ஓட்டுப்
பறிக்கு மரசியல் பாழாம் - உரைப்பின்
விரிந்தநற் சாலையும் உட்கட் டமைப்பும்
வரிகளால் வேண்டும் வளம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம்-  வெண்பூக்கள். மார்ச் 2009.

சொல்லில் விளையும் சுகம்

பொருத்து மொலிபெருக்கி போதிய காற்றோட்டம்
வருத்தா இருக்கையும் வாய்ப்பின் - இருப்போர்க்கு
வெல்வகையிற் கேளாரும்வேட்ப மொழிபவரின்
சொல்லில் விளையும் சுகம்.

தமிழரின் மனிதநேயம்- வெண்பூக்கள்.
ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. டிச- 2008

Monday, July 02, 2012

சிறகை விரித்துச் சிகரம் தொடு.

மண்ணைப் பிளக்க விதைமலைத்தால் - ஒரு
      மரமாய்ப் பிறந்து வளராது.
மண்ணே அதற்குச் சிதையாகும் - அங்கு
      மரணம் ஒன்றே முடிவாகும்.

சன்னற் கம்பிக ளிடைவெளியில் - விரி
      செந்நிற வானம் தெரிகிறதே!
மின்னல் ஒருகணம் வாழ்ந்தாலும் - அதன்
      மேனி ஒளிக்கினை வேறிலையே.

தடைபல வந்துனைத் தடுத்தாலும் - உளம்
      தளரா துன்வழி சென்றிடுநீ!
தடைகளுக் கிடையில் விடையுண்டு. - இந்தத்
      தரணி யாளவும் வழியுண்டு.

மண்ணிற் சிறந்து தடம்பதித்த - உன்
     முன்னோர் பலரின் வரிசையிலே
பின்னே உனக்கொரு இடமுண்டு. - உன்
     பெயரும் சேர்ந்திட வழியுண்டு.

சிறகு விரித்து உயர எழுந்தால்   
     சிகரம் நெருங்கி விடும்.
சிந்தையி லாயிரம் துயரென வந்தவை
     சிதைந்து நொருங்கி விடும்.

Friday, June 29, 2012

நினைவு நல்லது வேண்டும்

'ஓயா தென்று மிதுதர்மம்
      எனநான் கருதும் வழிசெல்லல்,
தாயாய் விளங்கு மருட்சக்தி
      தாளில் உறைதல் இவைதவிர
நீயாய் ஒன்றும் நாடாதே
      நினது தலைவன் யான்'என்றே
பேயா யுழலும் சிறுமனதின்
      பெற்றி யடக்கிய பெருஞாநி.

அன்னையை வேண்டும் வரமொன்றில்
     எண்ணிய முடியக் கேட்கையிலே
எண்ணம் தவறாய் ஆகுமெனில்
     எத்தனை குற்றம் நேர்ந்துவிடும்?
பண்ணுவ தெல்லாம் பாவமெனப்
     பதறிக் கொஞ்சந் தயங்கியவன்
எண்ணம் நல்லது வேண்டுமென்றே
     இரண்டா மடியில் கேட்கின்றான்.

நினைவிற் கெடுதி இல்லையெனில்
     நெஞ்சுக் குறுதி அதுசேர்க்கும்.
மனிதப் பிறவி வீணின்றி
     மண்ணிது பயனுற வேண்டுமெனில்,
நினைவு நல்லது வேண்டுமென்றோர்
     நெறியில் வாழ்ந்து காட்டியவன்.
மனதிற் கருமை சேராமல்
     மாசில தாதல் உயரறமாம்.

Friday, June 08, 2012

வேறொரு கதை சொல்

(சிறுவர் பாடல்)

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

ஓட்டப் பந்தய முயல் தூங்க - அதை
....ஓடி முந்திய ஆமை கதை
கேட்டுச் சலித்துப் போயிற்று.
....கேட்க வேறொரு கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காட்டில் கிணற்று நீர்பிம்பந் - தனைக்
....கண்டு குதித்த சிங்கமது
மாட்டிக் கொண்டு வஞ்சத்தால்
....மாண்ட கதையைச் சொல்லாதே!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காக்கை பாட்டுப் பாடவிழும் - வடை
....கவ்விய நரியின் கதைவேண்டாம்.
ஆக் ஷன் ஹீரோ ரஜினிபடம்
....அன்று பார்த்தது கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

அழ. வள்ளியப்ப நினைவரங்கம். பாரதி கலைக்கழகம்.

Tuesday, June 05, 2012

இராஜ ராஜ சோழன்


ஒத்தவராய் மிக்கவராய் இன்று நாள்வரை - இங்கு
ஒருவரையும் காணாமல் உலகு போற்றவே
பத்து நூறு ஆண்டுகளின் முன்பு தோன்றினன். - இன்றும்
பாரதத்தின் வரலாற்றில் நின்று வாழ்கிறான்.

வேங்கைநாடு, கங்கபாடி, ஈழமண்டலம் - மற்றும்
விளங்குபுகழ்க் கலிங்கமோடு ரெட்ட பாடியும்
தாங்கிநின்ற மன்னர்களின் மகுடம் தேய்த்தவன். - சோழன்
தரணியெலாம் தன்புகழைப் பாட வைத்தவன்.

விண்ணுயரம் கல்லுயர்த்தி விந்தை காட்டினான் - வாழ்வில்
வீழ்ந்தவர்க்கு வேலையீந்து சோறு மூட்டினான்.
கண்கவரும் எழிலுருவில் கோவில் கட்டினான் - மண்ணில்
கயிலையாளும் ஈசனுக்குக் கவரி வீசினான்.

கலையுயரப் பிறந்தசிவ பாத சேகரன் - சிற்பக்
கலைஞனுக்காய் இலைச்சுருளின் ஓலை தாங்கினான்.
தலைவனெனும் நிலைமறந்தே ஒருவன் வாயுமிழ் - எச்சில்
தம்பலத்தை வாங்குதற்குத் தாழி ஏந்தினான்.

திருமுறையை முயன்றுகண்டு மீட்டெ டுத்தவன் - இறைவன்
திருமுன்பு பாடுமுறை நாட்டி வைத்தவன்.
பெருஉடையார் பக்தனெனப் போற்ற நின்றவன் - அதனைப்
பெருமையுடன் நான் பாடும் பாட்டில் நின்றவன்.

வரமா? சாபமா?


கட்புல னாகாக் கானின் மறைவிடம்
உட்புகு புலியை ஓசையின் வழியே,
வெறுந்திசை அம்பை விடுத்து வீழ்த்திடும்
திறனுடை வீரன் தயரதன். ஒருநாள்
அந்தக முதியவர் அடைதுயர் பொறாது,
தந்தையின் தாகம் தணித்திட முனைந்து,
மலைவழிச் சுனைநீர் மானின மருந்த,
சிலநொடி தயங்கிச் சேந்தினன் மைந்தன்.
குடவாய் நுழைந்த குடிநீ ரோசை
இடர்வரக் கூவி இரைந்தழைத் ததுவோ?
களிரின் பிளிறலாய்க் கருதிய வேந்தன்
ஒலியின் திசையில் ஒருசர மெய்தனன்.
வேதியன் மகனும் விழ்ந்துடன் இறந்தனன்.
ஆதியின் கணக்கை அறிந்தவர் உளரோ?
"மகனைப் பிரிந்துநான் மனத்துய ரடைந்ததின்
நிகரொரு துயரம் நினக்கும் வருமென",
'துணிவொடு மரசனைத் தூற்றி விடுத்த
முனிவரின் சாபம் முற்றவும் நிகழுமேல்,
வேண்டும் மகவென விரத மிருந்ததும்
ஆண்டு பலவாய் ஆயிரம் நோற்றதும்
பிறவும் வீணிலை. மகவென ஒன்று
பிறந்தபின் தானே பிரிவது நிகழும்?'
பாபம் செய்ததிற் பதறிய மனது
சாபமே வரமெனிற் சரியென் றேற்றது.
பின்னரந் நிகழ்வினைப் பேசிடுங் கம்பன்,
கண்ணிலா வேதியன், கைப்பொரு ளென்னவே
பெற்ற மைந்தனை யிழந்தங்(கு)
உற்ற துயரினை உவமையாக் கினனே!


"கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்
கடுந்துயரால் காலவேலான்."  - கம்பன்


பாரதி கலைக்கழகக் கம்பன் விழா (17.7.2011)

Monday, June 04, 2012

வேண்டும்

வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.


சின்னதாய் வீசிய காற்றில்
...சிறகது ஒடிந்ததைப் போல்
முன்னமே உடைந்து தொங்கும்
...மூடிட முடியா தான
சன்னலின் கதவுக் கீல்கள்
...சரிவரப் பொருத்த வேண்டும்.
மின்னலும் மழையும் வந்தால்
...மூடிட முடிய வேண்டும்.                             (வாரத்தில்....)


புத்தகம் படித்த வற்றைப்
...புதுவிடம் மற்றி வைத்து
எத்தனை இடர்கள்? தேடி
...எடுப்பதில் நேரம் வீணே.
அத்தனை நூலும் சேர்த்து
...அழகுற எண்க ளிட்டு'
மொத்தமாய் அடுக்கி வைத்தல்
...முக்கியம். நேரம் வேண்டும்.                        (வாரத்தில்....)


கொடுத்தகை மாற்றை வாங்கக்
...குன்றத்தூர் போக வேண்டும்.
உடுத்ததில் உதிர்ந்த பொத்தான்
...உடைகளில் தைக்க வேண்டும்.
படித்ததாள் இதழ்கள் விற்றுப்
...பணமென வாக்க வேண்டும்.
விடுமறை ஞாயி றன்றே
...விரைந்திவை செய்ய வேண்டும். 


வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.         
பாரதிபேர்க் கழகத் துக்கும்
...பாட்டொன்று எழுத வேண்டும்.
யாரிவர் என்றே கேட்டு
...யாவரும் புகழ வேண்டும்.

பாரதி கலைக்கழகம் 59ம் ஆண்டுவிழா (26.12.2010)

Sunday, June 03, 2012

கம்பன் கவியே கவி


மன்ன னுயிர்த்தே மலரு முலகென்ற
முன்னவரின் சொல்மாற்றி மன்னனுடல் - மண்ணுயிரின்
கும்பல் உரையுமொரு கூடெனவே கூறழகுக்
கம்பன் கவியே கவி.

வல்லரக்கி நெஞ்சின் வலியுருவி நல்லபொருள்
புல்லருக்குச் சொன்னதெனப் போய்ப்பின்னும் - வல்லவனின்
அம்பு மலைமரமண் என்றுருவிற் றென்றானே!
கம்பன் கவியே கவி.

ஆகுமோ? நல்லுயிர யோத்திநிற்கத் தானுடல்
ஏகிவே றோரிட மெய்ததாய்க் - கேகயம்
தம்பி பரதன் தனிச்செல வைச்சொன்ன
கம்பன் கவியே கவி.

மையோ மரகதமோ மாமுகிலோ வென்றதன்பின்
ஐயோ வெனுமெதுகை ஆழ்பொருளாய் - மெய்யாயவ்
அம்புயை கோனின் அழியா வழகுறைத்த
கம்பன் கவியே கவி.

சவியுறு தண்ணொழுக்கச் சான்றோர் தமிழின்
கவியெனக்கோ தாவரியைக் கூறும் - கவியழகின்
சம்பி ரதத்தோடு சாற்றுவதற் கீடேது?
கம்பன் கவியே கவி.

மாதெனவே கொண்ட மயக்குமுரு சூர்ப்பணகை
பாதநடை கற்பனையாய்ப் பாடியதோ? - ஏதமிலாச்
செம்பொற் சிலம்பொலியின் சந்தம் செவிகேட்கும்
கம்பன் கவியே கவி.

சித்திரத்துத் தாமரையும் சீராமன் நன்முகமும்
ஒத்ததெனச் சொன்ன உயர்பொருள்போல் - இத்தரையில்
எம்புலவர் மற்றோ ரெவரும் நவின்றதிலை
கம்பன் கவியே கவி.

சொன்ன உடல்வற்றிச் சோர்ந்திருக்கச் சீதையவள்
கண்கொண் டடையாளம் கண்டதனைக் - 'கண்டே'னென்
றெம்பெரு மானின்முன் ஏந்தல் மொழிந்தனனாம்.
கம்பன் கவியே கவி.

கார்முகிலிற் கூடக் கமலம் மலர்ந்ததெனல்
பேரறமும் கார்நிறமே போலுமெனல் - பேரறிஞர்
தம்புலமை காட்டுந் திறமன்றோ? செந்தமிழிற்
கம்பன் கவியே கவி.

நாளைவா போர்க்கென்று நல்கியதால் வள்ளலோ?நின்
தாளைநான் இன்றடைந்தேன் தஞ்சமெனில்- நாளையே
அம்பலிலாக் கோசலமே ஆகு மவர்கன்றோ?
கம்பன் கவியே கவி.

Saturday, June 02, 2012

நன்றியில் செல்வம்

தன்னையண்டி வந்த வர்க்குத் தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்று த(ன்)நுகர்வு மின்றி நாளும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தே என்னபயனு மின்றி யிந்த
மண்ணில் வாழ்ந்து மாய்கிற மனிதர் செல்வ ரல்லவே!

குறள்:
 கொடுப்பதூவும் துய்ப்பதூவு மில்லார்க் கடுக்கிய
 கோடியுண் டாயினும் இல்.

இன்மையாலே வாடு வோர்க்கிங் கில்லையென்று வைத்த செல்வம்
மண்ணுளோரில் ஒப்பி லாது மன்னுநற் குணங்க ளுள்ள
பெண்ணொருத்தி நாத னின்றிப் பேணலற்று மூப்ப தாகி
மின்னையன்று ஒத்த தான மேனிவீணாய் ஆவ தொக்கும்.

குறள்:
அற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஓடியாடி வழ்வி லென்றும் ஓய்தலின்றிச் சேர்த்த செல்வம்
கோடிகோடி யான போதும் கொஞ்சமேனும் ஈத லாற்ற
நாடிடாத பேரு டம்பு நல்குகின்ற தேது மின்றி
வாடுமாறு பூமி தாங்க வாழ்தலிங்கு வாழ்த லாமோ?

குறள்:
ஈட்டமிவறி யிசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.


இன்மையாலே வாடு வோர்க்கோ ரீதலில்லை யாத லாலும்
இன்பவாழ்வுந் தேடி யோர்க்கிங் கில்லையென்று மாவ தாலும்
எண்ணிலாத துயரு ழந்தே ஈட்டிவைத்த தான செல்வம்
நன்றியற்ற செல்வ மென்று நவின்ற துண்மை யுண்மையே!


பாரதி கலைக்கழகம்- திருக்குறள் விழா. June 2009.


Thursday, May 17, 2012

எதைச் சொல்வேன்?

என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?
மென்பஞ்சுப் பாதங்கள் தரைந டந்தால்
மிகநோகும் என்றெண்ணித் தூக்கிக் கொள்வேன்.
என்கையிற் சுமந்துகொண் டிருக்கும் போது,
ஏதேனும் பிறர்பேசக் கேட்டாற் போதும்,
தன் மழலை கேட்பதற்கென் முகந்தி ருப்பும்.
தளிர்விரல்கள் பட்டவுடன் மெய்சி லிர்க்கும்.


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?


உண்ணுதற்கே அடம்பிடித்து ஓடி யோடி,
ஊட்டுகின்ற அம்மாவை அழவே வைப்பான்.
தின்னுமொரு மிட்டாயின் இனிப்புக் காகத்
திண்ணைக்குத் தேடிவரும் சிறுகு ழந்தை,
'இன்னொன்று தா'என்று முன்னே வந்து
இதழ்விரித்த தாமரையாய்க் கையை நீட்டும்.
கண்ணெதிரே கெஞ்சுகிற காட்சி கண்டால்
கல்நெஞ்சங் கூடவங்கு கரைந்தே போகும்!


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?

Wednesday, May 16, 2012

நெருப்பிலா உறக்கம் ?

உள்ளத்தில் மதவெறித்தீ மிகவ ளர்த்தே
ஒருபாவமும் அறியாதார் உயிர்ப றித்தல்;
பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பு தற்குப்
பதிலாகப் பணிமனைக்கு அனுப்பல்; மற்றும்
வெள்ளரிக்காய் சந்தையிலே விற்றல் போலே
விலைபேசும் மணவாழ்வும் நன்றா? சொல்வீர்!
நல்லவழி சமுதாயம் செல்ல இந்த
நானிலத்தோர் உணர்வுற்றே எழுதல் வேண்டும்.

களத்தடிக்கும் நெல்மணியிற் பதர்க ளுண்டு.
காற்றினிலே தூற்றியதை விலக்கி வைப்போம்.
மிளகினிலே மிளகேபோல் மண்ணு ருண்டை
மிகச்சரியாய்க் கலந்தவற்றைப் பிரித்தல் ஆமோ?
களங்கமிகு மனதுடையோர் மருந்திற் கூடக்
கலப்படத்தைச் செய்கின்றார் அறிந்தோ மில்லை.
உளமனிதப் போலிகளின் செயலால், வாழும்
உயிரழியும் கேடுணரா துறங்க லாமோ?

நெஞ்சத்தை இரும்பென்னல் தவறே ஆகும்.
நெடுந்தீயால் அதுநீராய் இளகிப் போகும்.
நெஞ்சத்தைக் கல்லெனலும் பிழையாய் ஆகும்.
நொருங்கியது தூளாகும் உடைக்கும் போது.
பிஞ்சான பெண்குழந்தை சிவந்த வாயைப்
பிதுக்கியதன் நாவினிலே நஞ்சை வைக்கும்
நெஞ்சத்துக் குவமையென எதைநான் சொல்ல?
நெருப்பினிலே உறங்குகிறோம் எழுவ தெந்நாள்?

ஆண்டுப் பிறப்பு

ஆடிக் கழித்த ஆண்டொன்றை - மனம்
அகலத் திறந்து பார்க்கின்றேன்.
தேடிப் பொருளைச் சேர்ப்பதற்குத்
தினமும் உழைத்த கதையுண்டு.
நாடிச் செய்த செயல்களிலே - சில
நல்லவை நிகழக் கண்டதுடன்
வாடித் துயரில் சிலசமயம்
வாழ்வை வெறுத்த நிலையுண்டு.


மண்ணில் ஒருவர் நிலைக்காக - இங்கு
மாறா தோடும் காலகதி
விண்ணிற் கதிரோன் தேரோட்டம்
விதித்த வழியில் விரைந்தேக,
பன்னிரு திங்கள் கழிந்துவிடில் - பாரில்
புதிதாய் ஆண்டு பிறந்துவிடும்.
எண்ணம் மட்டும் ஏதேதோ
எதிர்பார்ப் போடு வரவேற்கும்.


ஆண்டு பிறக்கும் போதெல்லாம் -அதை
அழகுத் தமிழில் வரவேற்று
ஈண்டு கவிஞர் பலர்கூடி
எழுதிக் குவிப்பது ஏராளம்.
மாண்டு போகும் வழித்தடத்தில் - ஒரு
மைல்கல் தன்னைக் கடந்துள்ளோம்.
ஆண்டுப் பிறப்பில் வேறொன்றும்
அதிசய மில்லை என்பேன் நான்.

Friday, May 04, 2012

ஏழையா? பணக்காரனா?


தன்னையண்டி வந்த வர்க்குத்
தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்றே
தான் நுகர்த லில்லை யாயும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தும்
ஏதுமற்ற ஏழை யாக
மண்ணிலிங்கு வாழ்ந்து சாகும்
மாணிடர்க்கு என்ன பேரோ?

(குறள் வழிச் சிந்தனை)

Monday, August 01, 2011

பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ



கற்ற பொருளனைத்தும் காமுற்றார் கேட்டறிய
உற்ற வகையுரைக்க வொண்ணாதார் - கற்றையாய்ப்
பாத்திரத்தில் மேடையில் பார்வைக்கு வைத்திருக்கும்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009.

நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!


பிஞ்சுக் கரங்கொண்டு பின்னொளித்த வெண்ணையுடன்
அஞ்சி அழுங்கண்ணா! அன்னைமுன் - கெஞ்சுகிற
கொஞ்சும் விழியழகைக் கொண்டு மயக்கியென்
நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
- தமிழரின் மனித நேயம்- ஜுலை 2009

Tuesday, August 31, 2010

கம்பன் கவியழகு

செப்பிடு மென்மொழி சிந்திம யக்கிடு சுந்தரச் சொல்லழகும்
சொற்றொடர் யாவினும் சிந்தை கவர்ந்திடச் செய்யணி சேரழகும்
ஒப்புள தாவென ஓர்ந்து மொழிக்கடல் ஊடெவர் தேடிடினும்
இப்புவி மீதினில் இல்லையெ னத்தகும் இன்பொருள் தன்னழகும்
பற்பம மர்ந்தருள் பாரதி யாடிடப் பாடிய தோவெனவப்
பாதஜ திக்கிசை பக்குவ மாய்விழும் பாநடை நல்லழகும்
அற்புத மாய்ச்செறி காவிய மாக்கிடும் ஆற்றலிற் கம்பகவி!
இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிரே!


(எம்பார் அருளிய 'எம்பெருமானார் வடிவழகு' பாசுரத்தை அடியொற்றியது.)

சென்னை பாரதி கலைக்கழகக் கவியரங்கில் பாடியது.

Friday, July 09, 2010

கர்ம வீரர் காமராசர்

ஆற்றல் மிக்கவர். அரும்'பெருந் தலைவர்'.
அரசிய லுலகின் அதிசய மனிதர்.
பொய்த்திற னுடையோர் பொருள்புகழ் சேர்க்கச்
செய்செய லறிந்து சீறிய பெருமகன்.
ஊருக் கொன்றென ஒருநூ றாயிரம்
பாலர் கற்கப் பள்ளிகள் கண்டவர்.
இன்மையாற் பசியா லிடர்படு சிறார்க்கு
உண்ண மதிய உணவோ டுடையும்
இளநிலைக் கல்வியும் இலவச மென்றவர்.
மேலும் கற்க மேநிலைப் பள்ளிகள்,
மேன்மை நாடுற மிகப்பல கண்டவர்.
நீர்வீ ணாகி நெடுங்கடல் சேரா(து)
ஆறெலாம் அவர் வழி அணைகள் கண்டன.
நெடுவழிப் பயணப் பாலம் சாலைகள்
நீண்டநாள் தேவைகள் நிறைவுறச் செய்தவர்.
இல்லவள், குழந்தை இவைதனை விலங்கென
வீட்டுக் கடமைகள் விட்டுத் தன்னை
நாட்டுக் கெனவே நல்கிய பெருமகன்.
நாடிது நலம்பெற நினைத்துப்
பாடவர் பட்டது பகர்வது அரிதே!

மாமதுரைக் கவிஞர் பேரவை காமராசர் நூற்றாண்டு விழாக் கவியரங்கம்(செப் 2002).
அன்பு பாலம் (ஆகஸ்ட் 2009)

Sunday, June 27, 2010

வாழ்க தமிழ் மொழி

நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.


எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்(து)
அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!

மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!

வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?

பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது (27.12.09)

Sunday, March 14, 2010

மீண்டு நீ வருகவே!

ஆற்றல் மிக்கு அருந்திற லறிவொடு
போற்றவே வளரும் புதுயுக விளைஞ!
இணைய தளவழி இன்னு லாவரக்
கணினி ஞானம் கைவரப் பெற்றனை.
நூதன மாயுள மின்னனு வழியில்
சாதனங் கைக்கொடு சாதனை புரிவை.
கற்றவை யாயிர மாயினு மதன்வழி
நிற்றல் மறந்தனை நின்னிலை என்சொல?
சாதி நூறின் ஒற்றுமை விட்டுப்
பேதம் மட்டுமே பேசித் திரிவை!
பாரினில் ஆணொடு பெண்ணொரு சமமெனப்
பாரதி பாடிய வரிமறந் தனையே!
பேசு வணிகப் பெருவிலை மணமும்
பேசநாக் கூசும் பெண்சிசுக் கொலையும்,
குண்டு வீசும் கொலைவெறி மதமும்
சண்டை சாவு சச்சர வென்றிவை
வேண்டா தவற்றை விலக்கி
மீண்டுநீ வருவை மேதினி யாளவே!

பாரதி கலைக்கழகம், கவியமுதம் 57ம் ஆண்டுமலர் 2008