Thursday, October 29, 2009

வரலாறு பிறழாதா?

கம்பனன்று ஷூஅணிந்த காலாலே நடந்தானா?
கழுத்திறுக்கும் டைகட்டிக் காளமேகம் மகிழ்ந்தானா?
செம்பொன்செய் சிலம்பேந்திச் சீரடியாள் கண்ணகியும்
சுடிதார் உடுத்தித்தான் சூளுரைக்கச் சென்றாளா?
நம்மவர்கள் அவையெல்லாம் நாகரிக மென்றேற்று
நின்றபின்னால் வந்ததற்கு நேரான தமிழ்ச்சொல்லா?
வம்பெதற்கு நமக்கென்று வாய்மூடி இருந்தால்நம்
வளமான பண்பாட்டு வரலாறு பிறழாதா?

உலக மயமாதல் ஓயாது நிகழுகையில்
உள்ள மொழியிலெலாம் உருமாற்றம் இயல்பேதான்
வளங்கூட்டும் திசைச்சொல்லால் வளர்ச்சியுறும் தமிழென்றால்
வருகவென மாற்றத்தை வரவேற்க வேண்டுந்தான்.
உலகத்து விஞ்ஞானம் உயர்தமிழில் வேண்டுமெனில்
உளதான தமிழ்ச்சொற்கள் ஒருநாளும் போதாது.
பலபுதிய சொல்லாக்கம் பகர்தமிழில் வரவேண்டும்
பழுகுதமிழ்ப் பண்பாடும் பாராட்டப் படவேண்டும்.

பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் பாடியது(ஏப்ரல் '09).

Tuesday, October 27, 2009

மீனாக்ஷி நவமணி மாலை

1. கட்டளைக் கலித்துறை

விண்ணில் நிலவில் இருள்போக வீசும் ஒளிக்கதிரில்
மண்ணில் மலையில் கடல்நீரில் காற்றினில் மானிடரில்
சின்னப் புழுவில் எனவெங்கும் தானே செரிந்துறையும்
நின்னை அறியும் நெறிகாட்டும் மீனாக்ஷி நின்னருளே!

2. குறட்பா

அருளால் அரசாளும் அம்பாள் கருணை
பெருகியே பொங்கும் புனல்.

3. இன்னிசை வெண்பா

புனலாடல் ஓதலொடு பூசையிடல் இன்றேல்
மனதால் நினைக்க மகிழ்ந்தருளும் தாயாய்
மலைபோல் வருமெனினும் மாதவனின் தங்கை
இலையெனச் செய்வள் இடர்.

4. அறுசீர் விருத்தம்

இடரெல்லாம் நீங்க உன்றன்
இருபதம் பணிந்து நின்றேன்
சடையெனும் மகுடம் ஏறும்
சந்திரன் கங்கை யோடும்
விடையிலே அமர்ந்த தேவன்
வெற்பினன் மகிழ்ந்தே ஏற்ற
இடவுடற் பாதி சக்தி
இன்னருள் அடையப் பெற்றேன்.

5. கலி விருத்தம்

பெற்ற நம்பிற விப்பிணி நீங்கிட
உற்ற மெய்ப்பொருள் தானென வானவள்
பற்ற அங்கயற் கண்ணியின் தாளிணை
அற்று நீங்கிடும் ஆள்வினை யாவுமே.

6.அகவல்

யாவுமே தானாய் ஆகிய தோர்பொருள்
மேவு முலகினில் மிகுபுகழ் பாரத
மண்ணில் விளங்கும் மதுரைமா நகரில்
சென்னியில் பிறையைச் சூடிய சுந்தரன்
ஆலயக் கருவறை அர்ச்சையாய் நிற்கும்
கோலம் பக்தி கொண்டவர்க் கென்று
உருவொடு வந்தே உவந்து
அருகில் நின்று அருள்செயத் தானே!

7. நேரிசை வெண்பா

தானே தவமிருந்து அத்தகுதி பெற்றதுவோ
வானோரே சேரும் வழியறியார் - ஏனையர்க்கும்
மெய்வழி காட்டிடுமோ மேன்மையுறு மீனாக்ஷி
கையில் அமர்ந்த கிளி.

8. தரவு கொச்சகக் கலிப்பா

கிளியேந் தியகையும் கொவ்வை நிறவாயும்
ஒளிருந் திருமுகமும் வைரத் திருமுடியும்
மின்னேர் இடையினில் மேகலையும் தாளிணையும்
எந்நாளும் நெஞ்சில் இருத்தி வணங்குவனே.

9. எண்சீர் விருத்தம்

வணங்கமலர் கொண்டுவரு வோரும் மற்றும்
வாய்கொண்டு திருநாமம் சொல்வோ ரென்றும்
சனங்கலெலாம் உனைத்தேடி உள்ளே செல்ல
சிரித்தமுகத் தொடுவந்து கோவிற் சுற்றில்
கனகத்தா மரைக்குளத்தின் படியில் இங்கே
கவிதையிலே அழைக்கின்ற அன்பர் கூட்ட
மனக்கோயிற் குடிகொண்ட தாயே! அம்மா
மலைமகளே உன்னருளை வேண்டு கின்றேன்.

(மதுரை அருள்மிகு மீனாக்ஷி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரைக் கவியரங்கில் பாடியது. அக் - 2003)