Thursday, July 22, 2021

எப்படியும் ஆகத்தானே போகிறது?

எட்டரை யாகப் போகிற தெழுவெனத்
 தட்டி யெழுப்பிய தம்பிசொற் கேட்டு, 
உதறிப் போர்வை உடனே விலக்கிப் 
பதறி யெழுந்து பார்த்தனள் மணியை.
 அக்கா:
 “ ஆறே இன்னும் ஆகவே இலையே, 
தீராப் புளுகன், திருட்டுக் கழுதை” 
 தம்பி: 
”இதற்குப் போய்ஏன் இத்தனை கோபம்?
 இதுநீ கேள்நான் இயம்பிய துண்மை. 
ஆகத் தானே போகிற தென்றேன்? 
ஆகும் நிச்சயம். அறிவாய் நீயே!”

Tuesday, July 20, 2021

எனக்கு அது உண்டு

இருவர் நடப்ப தெளிதிலை யான 
ஒருவர் நடக்க உளவழி தன்னில் 
முதியவ ரொருவர் நடந்திடு போதில் 
புதியவ னொருவ னெதிரினில் வந்து 
பரிவொடு வழிவிடு பன்பில னாக 
அறிவிலி எவர்க்கும் வழிவிடு பழக்கம் 
தனக்கிலை யென்று தருக்கினி லுரைக்க 
எனக்கது உண்டென ஒருபுறம் விலகி 
முன்செல விட்டு மிண்டும் 
தன்வழி தொடர்ந்து தான் நடந்தாரே!