கட்புல னாகாக் கானின் மறைவிடம்
உட்புகு புலியை ஓசையின் வழியே,
வெறுந்திசை அம்பை விடுத்து வீழ்த்திடும்
திறனுடை வீரன் தயரதன். ஒருநாள்
அந்தக முதியவர் அடைதுயர் பொறாது,
தந்தையின் தாகம் தணித்திட முனைந்து,
மலைவழிச் சுனைநீர் மானின மருந்த,
சிலநொடி தயங்கிச் சேந்தினன் மைந்தன்.
குடவாய் நுழைந்த குடிநீ ரோசை
இடர்வரக் கூவி இரைந்தழைத் ததுவோ?
களிரின் பிளிறலாய்க் கருதிய வேந்தன்
ஒலியின் திசையில் ஒருசர மெய்தனன்.
வேதியன் மகனும் விழ்ந்துடன் இறந்தனன்.
ஆதியின் கணக்கை அறிந்தவர் உளரோ?
"மகனைப் பிரிந்துநான் மனத்துய ரடைந்ததின்
நிகரொரு துயரம் நினக்கும் வருமென",
'துணிவொடு மரசனைத் தூற்றி விடுத்த
முனிவரின் சாபம் முற்றவும் நிகழுமேல்,
வேண்டும் மகவென விரத மிருந்ததும்
ஆண்டு பலவாய் ஆயிரம் நோற்றதும்
பிறவும் வீணிலை. மகவென ஒன்று
பிறந்தபின் தானே பிரிவது நிகழும்?'
பாபம் செய்ததிற் பதறிய மனது
சாபமே வரமெனிற் சரியென் றேற்றது.
பின்னரந் நிகழ்வினைப் பேசிடுங் கம்பன்,
கண்ணிலா வேதியன், கைப்பொரு ளென்னவே
பெற்ற மைந்தனை யிழந்தங்(கு)
உற்ற துயரினை உவமையாக் கினனே!
"கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்
கடுந்துயரால் காலவேலான்." - கம்பன்
பாரதி கலைக்கழகக் கம்பன் விழா (17.7.2011)
No comments:
Post a Comment