Monday, December 08, 2014

விடுதலை வேள்வியில் வீரக் கவிஞன்.



புவிபோற்றிடும் படிவாழ்ந்துள புலவோரிடை எங்கள்
கவிபாரதி புகழ்பாடிடக் களமீதினில் வந்தேன்.
அவையோரினை வரவேற்றிரு கரங்கூப்பிடு கின்றேன்.
செவிசாய்த்திடும் படிவேண்டியே சில வார்த்தைகள் சொல்வேன்.


(வேறு)
அச்சமுற்று நாடிழந்து அடிமைமோகம் நெஞ்சிலே
உச்சமாகக் கொண்டபேர்கள் வாழ்ந்தநாளில் தோன்றினான்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதுகூட
அச்சமில்லை என்றுபாடி அன்றுவீர மூட்டினான்.


(வேறு)
தந்தையும் பாட்டனும் சேர்த்துவைத்த - பல
தாவர சங்கம செல்வமெல்லாம்
சந்ததி யார்பெற உரிமையுண்டு - என்று
சட்டமு ரைப்பது கண்டிருப்பீர்!
செந்தமிழ் தனிலது 'தாய்நாடு' - செருச்
செய்து மதைப்பெற வேண்டுமென்று
'தந்தையர் நாடெ'னப் பாடிவிட்டன். உரிமை
தாக மெடுத்திடச் செய்துவிட்டான்.


(வேறு)
சூழு கடலுடை பூமி யிதிலெங்கும்
...சாதி யுயர்விலை தாழ்வுமிலை.
வாழு நெறிகளில் ஆணு மொருபெண்ணும்
...வேறிலை ஒன்றெனச் சொல்லிவைத்தான்.
வாழு மனிதர்கள் யாவ ருக்குமிங்கு
...உண்ணும் முணவிட வேண்டுமென்றான்.
பாழு முலகினில் ஏழ்மை யொழியவே
...பாடி யுயர்நிலை எய்திவிட்டான்.


தேச மடைதுயர் போக்கும் வழிதன்னைத்
...தேடித் தமிழினில் பாடியவன்.
மீசை முறுக்கொடு முண்டா சழகின்னும்
...மின்னிச் சுடர்விடும் குங்குமமும்
நேச முடன்மயிர்ப் பீலி தனிற்தொட்டு
...நெஞ்சில் வரைந்துள ஓவியமாய்
பாச மிகுகவி வாண ரிடமெல்லாம்
...பார திநிச்சயம் வாழ்ந்திருப்பான்.

திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடைபெற்ற, வானவில் பண்பாட்டு மையம் பாரதி திருவிழாவில், கவியரங்கில்  பாடியது.

Thursday, December 04, 2014

கோடை விடுமுறைத் தொடக்கம்



நோட்டுப் புத்தகம் உணவென்று
... நிறைந்து வழியத் தோள்சேர்த்து
மூட்டை தூக்கி நடக்காமல்
... மூலையில் விட்டு வைத்திடலாம்.
வீட்டுப் பாடம் பொறுப்பென்று
... வேலை எதுவும் கிடையாது.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்.
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


நாட்டுப் பாடல் பாடுதற்கும்
... 'நாளொரு நீதி' கேட்பதற்கும்
கூட்டி வெளியில் நிறுத்திவைக்கும்
... கொடுமை இனிமேல் கிடையாது.
போட்டித் தேர்வுகள் கிடையாது
... பொழுதை இனிதாய்க் கழித்திடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


பாட்டி தாத்தா பார்ப்பதற்குப்
... பயணம் ரயிலில் சென்றிடலாம்.
கேட்கக் கேட்கத் தின்பண்டம்
... கிடைக்கும் நன்றாய்த் தின்றிடலாம்.
ஓட்டி சைக்கிள் தெருவினிலே
... ஒவ்வொரு நாளும் பழகிடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.




 பாரதி கலைக் கழகம். அழ. வள்ளியப்பா நினைவரங்கம். குரோம்பேட்டை இலக்குமி அம்மாள் மேல் நிலைப் பள்ளி. 22.11.2014

Thursday, September 18, 2014

பாரதி கவிதைகளில் - மொழிவளம்



                                                         
வெல்லத் தன்னை இன்றுவரை - இங்கு
    வேறே ஒருவர் இலையாகச்
சொல்லைப் பொருளைப் புதிதாக்கி - நல்ல
    சுவையோ டுரைத்த கட்டுரைகள்
வல்ல தமிழின் வார்த்தையெலாம் - காட்டி
    வரைந்த வண்ணச் சிறுகதைகள்
தொல்லை தராத நடை,அறிவை - நன்கு
    தூண்டும் கருத்துக் குவியலவை.

எண்ணப் படியே வெண்பாவில் - வந்து
    எப்படி விழுமோ வெண்டளைகள்?
வண்ணப் பாடல்கள் சந்தங்கள் - பல
    வாய்ந்தவை சிறந்த தெங்ஙனமோ?
இன்னும் அகவல் விருத்தங்கள் - உள்ள
    ஏனைய சிந்துப் பாடல்கள்
மின்னும் தமிழின் வளங்காட்டும் - இந்த
    மேதினி என்றும் போற்றிடவே!

திருத்த சாங்கம் சாற்றுகவி - புகழ்த்
   திரௌபதி சபதக் காப்பியமும்
திருப்பு கழ்நான் மணிமாலை - கும்மி
   தீதறு தூது சீட்டுகவி
அருமை பாரத மாதாவுக் - கென
   வாக்கிய பள்ளி எழுச்சியிவை
பெருமை மிகுநம் தமிழ்மொழியில் - உள்ள
   பெருவளங் காட்டி நிற்பவையே!


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், மடிப்பாக்கம் கிளை துவக்க விழா மற்றும் மகாகவி பாரதி விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம் பட்டு. 15.12.2013

Thursday, August 28, 2014

இனி வருமோ?



நினைவுப் பேழை தனைத்திறந்து
நிதம்நிதம் தேடிப் பார்க்கின்றேன்.
நிதம்நிதம் தேடிப் பார்த்தாலும்
நினைத்தது மனதில் வரவில்லை.

நெஞ்சைக் கவர்ந்த உருவமது
நினைவை விட்டுப் போய்விடுமோ?
நினைவை விட்டுப் போகுமெனில்
நெஞ்சைக் கவர்ந்த தெனவாமோ?        (நினைவுப் பேழை...)

சின்னஞ் சிறிய குழந்தைமுகம்
சிந்திய புன்னகைப் பேரழகு
சிந்திய புன்னகை எழில்முகத்தை
எண்ணிப் பார்க்க முயல்கின்றேன்.       (நினைவுப் பேழை...)

கன்னக் குழியும் கண்ணழகும்
வண்ணக் குழைப்பில் மின்னியதே!
வண்ணக் குழைப்பில் மின்னியவக்
கண்ணன் முகத்தைக் காணேனே!          (நினைவுப் பேழை...)

உதடு குவித்துக் குழலூதும்
உன்னத ரூபம் மறந்திடுமோ?
உன்னதம் நினைவை நீங்கிவிடில்
உதறித் தேடியும் இனிவருமோ?               (நினைவுப் பேழை...)


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 24.8.2014.


Friday, May 30, 2014

கோசல நாடுடை வள்ளல்



கையினில் படைக்கல மேதுமின்றிக்
...களந்தனில் முறியப் போட்டு
மெய்யெலாம் சரம்பொதி புண்களாகி
...மிகுதியாய்க் குருதி சோர
கையறு நிலையினில், தோல்விகண்டு
...கலங்கிய நெஞ்சத் தோடு
செய்செய லறிந்திடா ராவணன்றன்
...சிரமது தாழ நின்றான்.

போரறங் கருதிய ராமனும்போர்
...புரிந்திட இன்று போய்ப்பின்
வேறருங் கலமுட னிங்குமீண்டும்
...வருகநீ நாளை யென்று
கூறின னெனுமிடம் கம்பனேனோ
...கமுகினில் வாளை தாவும்
பாரினில் வளமிகு கோசலத்தைப்
...புரந்திடும் வள்ளல் என்றான்.

வீடணன் சரணென வந்துமுன்னர்
...வீழ்ந்ததும் நல்லி லங்கை
நாடதை அவர்க்கென ஈந்ததன்பின்
...நசையுடன் இன்றே தன்னை
நாடி'யுன் சரண்'எனில் ராவணர்க்கு
...நலமுற நல்க ராமன்
நாடொடு கொடையுளம் கொண்டதன்மை
...நயத்தொடு சொன்ன தன்றோ?


ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனன் இன்றுபோய்ப் போர்க்கு
நாளைவா வெனநல்கினன் நாகிளங் கமுகின்
வாளைதா வுறுகோசல நாடுடை வள்ளல்   -கம்பன்

காளை யிராவணன் கையறவிற் காற்றாது
நாளைவா போர்க்கென்று நல்கினதன் தாளையன்றே
சார்ந்துபொறை வேண்டினனேல் தாசரதி கோசலப்பேர்
ஆர்ந்தவள நாடரக்கற் காம்     -திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம். சென்னை. 22.7.2012.

Wednesday, May 07, 2014

தமிழுக்கு அமுதென்று பேர்



வீட்டுப் பொறுப்பெனும் பாரம் - கொஞ்சம்
விட்டு நலம்பெற வேண்டி,
பாட்டு தருஞ்சுவை நாடி - தமிழ்
பாடும் கவிபலர் கூடும்
கூட்டம் நடைபெறும் மன்றில் - நானும்
கொஞ்சம் தமிழமு துண்பேன்!
வேட்டு வெடித்திடும் வீட்டில் - எனினும்
வேறொன் றதற்கிணை யாமோ?

நேற்று நடந்ததோர் மன்றின் - நிகழ்வு
நெஞ்சி லலையிடும் போது
ஆற்றல் குறைந்தது மாறி - தேவர்
அமுது பருகிய தென்ன
ஊற்றுக் கிளம்பிடும் சக்தி - மேலும்
உணர்வு முயர்வுறு மாங்கே.
ஆற்றல் மிகுந்தமிழ் அமுதே! - அதிலோர்
ஐய மிலையெனச் சொல்வேன்.

(சென்னை,வாணுவம் பேட்டை,
 திருவள்ளுவர் இலக்கியமன்றத்தில் பாடியது.)

Wednesday, April 30, 2014

அறன் வலியுறுத்தல்


(திருக்குறட் கருத்து)


பெறத்தக்க பெரும் பேற்றில் வீட்டை நல்கும்
..பெற்றியது வேண்டியோர்க்கு நீளும் செல்வத்
துறக்கத்தை ஈயுமெனில் உயிர்க்கிங் காக்கம்
..தரத்தக்க வேறுளதோ அறத்தை யன்றி?
மறத்தலினால் வருங்கேட்டைக் கூடச் சொல்லி
..மண்ணுயிர்க்கு வழிகாட்டும் முப்பால் நூலோ
அறத்தியற்கை ஆக்கத்தை ஈதற் கொண்டே
..அதைச்செல்லும் வாயெல்லாம் செய்யச் சொல்லும்.


வாக்கென்றால் ஒலிவடிவிற் செவியிற் சேரும்.
..உடலியக்கம் காட்சியெனக் கண்ணில் தோன்றும்.
தேக்குகுறை பாடுடைய நெஞ்சின் வழிதான்
..தெரிக்கின்ற சொல்லோடு செயலும் போகும்.
நோக்கமுடன் பிறரறியச் செய்து வெறும்
..நாடகமாய் ஆவதுவும் அறமென் றாமோ?
நோக்கிலற மனைத்திற்கும் வித்தாய் நிற்கும்
..நெஞ்சத்துத் தூய்மைக்கு நிகரே இல்லை.


பல்லக்கின் பாரத்தைத் தோளில் ஏற்றிப்
..பாதையிலே பக்குவமாய்க் காலை வைத்து
வெள்ளமென உடல்முழுதும் வியர்த்தே ஊற்றும்
..வெம்மையிலே தரைச்சூட்டைத் தாங்கி நால்வர்
மெள்ளநடை தடுமாற, உள்ளே யொருவர்
..மெத்தையிலே சயனித்துச் செல்லல் இங்கே
உள்ளபடி அறத்தியல்பைக் காட்டுந் தானே?
..உணர்ந்தறிய நூலெதுவும் கற்றல் வேண்டாம்.


இன்னாச்சொல் லழுக்காறோ டாசை வெகுளி
..இவைநீக்கி, இயற்றுதலே அறமென் றாகும்.
பின்னரொரு காலத்திற் செய்வோ மென்னா(து)
..எப்போது மதைவிடாது செய்வோ மானால்
பொன்றுங்கால் அழியாத துணையாய் நிற்கும்.
..பிறவற்றால் இன்பமிலை புகழு மில்லை.
இன்னுமொரு பிறவிகருத் தடையாய் நின்று
..இன்பமறாப் பெருவீட்டில் அறமே சேர்க்கும்.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 20.6.2010.

Friday, April 25, 2014

குடலுண்டு குன்றிய கூடு








சுற்றம் மறந்ததோ? சூழ்வறுமை காரணமோ?
உற்ற துணையு மொதுக்கினளோ? - வற்றிக்
குடலுண்டு குன்றியதோர் கூடானாய் கண்டு
கடவுளரும் கண்கலங்கு மாறு.

(சந்த வசந்த இணையக் குழுமத்தில் யோகியார் அவர்கள் கேட்டிருந்தபடி புகைப்படத்துக்கு எழுதிய வெண்பா.)

Friday, March 07, 2014

வேறெதுவும் காரணமோ?



தந்தைதோள் சாய்ந்தசுகம்
...தலையணையில் இல்லையென
முந்தையநாள் கற்பனையில்
...மூழ்கிய முகவழகோ?

தெரியாத மனிதரிடைத்
...தெரிந்தவளாய்த் தாயவளின்
பரிவை முகந்தன்னில்
...பார்த்துவந்த புன்னகையோ?

விரித்துக் கையசைத்து
...விதவிதமாய் முகம்மாற்றி
சிரிப்பு வரவழைத்தார்
...சிறிதளவு வென்றாரோ?

கரியநிறப் பூச்சியொன்று
...கண்ணெதிரே வந்ததுவோ?
விரிந்தவிழி வியப்புக்கு
...வேறேதும் காரணமோ?

Wednesday, January 08, 2014

செல்வம்


கோடி தொகுத்தபினும்
கொண்டின்னும் கூட்டுதற்காய்
ஓடித் திரிவருளர்.
உள்ளதன்மேல்- நாடிடுமோர்
எண்ணமிலா துன்சிந்தை
என்றும் இருந்திடுமேல்
உண்மையதே செல்வம் உணர்.

(செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.)