Friday, December 29, 2017

வாழ்க்கைச் சுவடுகள்



மறைந்து போனவை:

உலர்ந்துளதோர் தரைநடந்த உள்ளங்கால் ஈரத்தில்
மலர்ந்தசில தடங்காய்ந்து மறைந்தழிந்து போவதுபோல்
சிலநிகழ்வுக ளடையாளம் சிந்தையிலும் நில்லாமல்
இலையாகிப் போனவைகள் ஏராளம் வாழ்விலுண்டு.

உள்ளத்தில் பதிந்தவை:

இளவயதில் தந்தையுடல் ஈமத்தீ சுட்டகாட்சி
அளவற்ற அன்பினளாம் அன்னையவள் மறைந்ததுக்கம்
பளபளத்த புதுவண்டி பாதையிலே பூட்டிவைத்தும்,
களவுக்குக் கொடுத்ததிவை காலமெலாம் துன்புறுத்தும்.

பத்திரிகை அச்சேறிப் பார்த்திட்ட முதற்கவிதை,
முத்திரை பதித்தவந்த முதற்சிறப்புச் சொற்பொழிவு,
புத்தகமாய் முதல்தொகுப்பு, புகுந்தநல மணவாழ்வு,
முத்தெனவே இருமகவு மிவைமகிழ்வின் அடையாளம்.

உடலிற் காண்பவை:

மருத்துவர் சிகிச்சைக்காய் மனமொப்பி உடல்கிழித்து,
பொருத்தியபின் புண்ணுலர்ந்து பொருக்குதிர்ந்த சிலவடுக்கள்.
வருத்துமம்மை நோய்பார்த்து வாய்த்திருந்த கொப்புளங்கள்,
நிறுத்தியது சென்றுவிட்ட நீங்காத தழும்புசில,

முன்னந்தலை வழுக்கையுடன் முடிமுழுதும் நரைத்தோற்றம்,
கண்களிலோ வெள்ளெழுத்துக் கண்ணாடி அணிந்தநிலை,
முன்னர்போல் நடமாட முடியாத மூட்டுவலி,
இன்னுமுள அத்தனையும் எடுத்தியம்ப இயலாது.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, 12.8.2017.

Wednesday, November 29, 2017

வெடிகுண்டு



சாப்பிட இனிப்பு மிக
    சந்தோஷ மாயணிய,
பூப்போட்ட மேற்சட்டை
    போதா திவையென்று
கேப்புசுடத் துப்பாக்கி
    கேட்பா னெனவாங்கி
கூப்பிட் டனுப்பியதும்
    குதுகலித் தோடிவந்தான்.


வேண்டா மிவையெனக்கு
    வெடிக்கின்ற அணுகுண்டு
வேண்டுமெனக் கேட்டதுமே
    விதிர்விதித்துத் தடுமாறி
ஆண்டைந்து நிறைவதற்கே
    ஐந்தாறு மாதமுள்ள
வாண்டுதந்த அதிர்ச்சியிலே
    வாயடைத்துப் போனேன் நான்

பாரதி கலைக்கழகம், அழ. வள்ளியப்பா  நினைவுக் கவியரங்கம். வம்பர் 2014

Monday, November 27, 2017

நயமாய் உரைத்தலே நன்று



எதெதையோ பேச
எதிரிருப்போர் நொந்து
விதியென்றே கேட்டிருக்க
வேண்டாம்.
- எதையும்
சுயமாய் முயன்று
சுவைகொஞ்சம் சேர்த்து
நயமாய் உரைத்தலே
நன்று.


நம் உரத்த சிந்தனை, டிசம்பர் 2012

Wednesday, September 27, 2017

இன்றைய நாள் உன் கையில்



காலம் வருமெனக் காத்திருந்து- ஓடும்
கைகளின் ரேகையைப் பார்த்திருந்தால்
கால னழைத்திடு நாளதன்முன்- நீ
கண்டிடல் வெற்றியை சாத்தியமோ?


பின்னொரு நாளினில் நன்மையுண்டு-என்றே
பேசிடும் சோசியம் விட்டுவிடு
இன்றைய நாளுந்தன் கையிலுண்டு- நீ
இன்றே செயல்பட முந்திவிடு.


தூங்கி யெழுந்திடத் தாமதமாகிடில்- வானில்
தோன்றும் விடிவெள்ளி என்னசெய்யும்?
ஏங்கி அழுவதை விட்டுவிட்டு- நீ
எழுந்து நடந்திடு வெற்றிகிட்டும்.

Thursday, September 21, 2017

வாழ்வதற்கே வந்தோம்


உற்றதொரு தோல்வி
உடனே மறந்தொழிய
வெற்றியென முன் நினைத்த வேறொன்றைப்
-பற்றிக்கொள்
தாழ்வுதரு துன்பத்
தடைவிலக்கு.
தாரணியில்
வாழ்வதற்கே வந்தோம்நாம்
வாழ்.

Wednesday, August 23, 2017

வளரவும் வழி செய்வோம்



வாழியசெந் தமிழென்று வார்தைசொலல் எளியதுதான்
   வாழ்த்துக்கு வலியுளது வழக்கிங்கு வைக்கவில்லை.
ஆழியது சூழ்ந்துள்ள அத்தனைமண் பரப்பினிலும்
   ஆதிமுதல் பேசுமொழி ஆயிரங்கள் உளதெனினும்
ஊழிபல வானபினும் உயர்ந்தநிலை மாறாத
   ஒருமொழிநம் தமிழென்று உரைத்தநிலை இன்றில்லை.
வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்ய வேண்டுமையா.


தொல்மொழியீ தென்பதனால் தொண்டுகிழ மானதுவோ?
   தள்ளாடும் நிலையிலன்றோ தமிழினைநான் காண்கின்றேன்.
நல்லதமிழ்க் கதையெழுத, நாடகங்கள், கவிதைசெய
   நல்லதிற னுடையவர்கள் நம்மிடையே பலருண்டு.
இல்லையெனச் சொல்லவில்லை என்றாலும் இன்றுவரை
   என்தமிழில் அறிவியலை எத்தனைபேர் நூல்செய்தார்?
சொல்லாக்கம் போதாது. சொற்குவியல் பொருளோடு
   சேரட்டும் புதியனவாய். சிலரேனும் முயலட்டும்.

விருதுண்டு கவிதைக்கு வெறுங்கதைக்குப் பரிசுண்டு
   விஞ்ஞான நூலெழுதும் வீண்வேலை எதற்கென்று
கருதியிங் கறிஞரெல்லாம் கைகட்டி நிற்கின்றார்.
   கற்பனைக்கே பாராட்டு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இருமொழியிற் புலமையுளோர் இன்னொன்றில் சிறந்ததனை
   இங்குள்ளோர் அறிவதற்கும் இன்றமிழில் தரவேண்டும்.
பெருமளவில் மொழிமாற்றப் பேரறிஞர் வரவேண்டும்.
   பிறமொழியோர் நமைப்புகழும் பெருமையினைப் பெறவேண்டும்.


வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்தல் நலமென்பேன்.




பாரதி கலைக்கழகம். 29.1.2014

Wednesday, June 28, 2017

உறவுக்குள் ஒற்றுமையைக் காண்



நிறைகளையே தேடிமுன்
நெஞ்சில் பதிந்த
குறைமறந்து நேசிக்கக் கற்று
- முறையாய்ப்
பிறரை நடத்திப்
பெரியோரைப் பேணி
உறவுக்குள் ஒற்றுமையைக் காண்.


ஈற்றடிக்கு எழுதியது. வெண்பா விருந்து- 7. உரத்த சிந்தனை ஜனவரி 2013. 

Sunday, May 28, 2017

இல்லையென்றதே இனியது


இதுநாள் எனவே ஒருநாள் குறித்தே அதுதவறா
ததுவாய் இருந்து செயலாற் றிடுவோர் தகவுடையோர்
எதுநாள் எனவே புரியா தபடி பினரெனிலோ
அதுபின் வருநா ளெதிலா வதிலும் நடந்திடுமோ?

இன்றென வாகிய நாள்நாளை நேற்றா கிடுதலைநாம்
நன்றாய் மறுநாள் எளிதா யறிந்திடல் கூடுமன்றோ?
இன்றென நாளையும் மாறிய பின்னரும் நாளைவரும்.
என்றென யாரு மறியா தொருதின மிங்குளதோ?

ஆடுகள் வாங்கிட வேண்டிய தோர்தொகை சேர்ந்திடவே
நாடும் பழகிய நட்பினன் காரிக் குதவிடத்தான்
தேடும் பணியினை ஏற்றவ ளாக,  தெரிந்தவரில்
பாடுந் திறனுடை அவ்வை சிலரை அனுகினளே.

வாதவன் 'பின்னர்வா' வென்றபின், வத்தவன் 'நாளை'யென்றான்
யாதவன் 'யாதொன்று மில்லை'யென் றன்றே இயம்பிவிட்டான்.
வாதவன் பின்னரின், மற்றுள வத்தவன் நாளையினும்
யாதவன் இல்லையை அவ்வை இனிதென் றுரைத்தனளே!



வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும் இல்லையென்றான் - ஆதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும்
யாதவர்கோன்   இல்லை இனிது. -              (ஔவை)


பழையனூர் காரிக்கு உதவமுயன்ற தன் அனுபவத்தை, ஔவை, சேரமானிடம் சென்று சொன்னது. (தமிழ் நாவலர் சரிதை)


பாரதி கலைக் கழகம் ஔவையார் விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசன் பேட்டை.   25.2.2017



Thursday, May 11, 2017

ஒரு விருத்தச் சிலம்பு



வருங்காலன் என்றொருபொற்
  கொல்லன் வந்தே
    உரைபொய்யில் தன்குற்றம்
      மறைத்துப் போக்க,
அருந்துணையை ஆராயா
  தழித்த வேந்தன்
    அவையினிலே சிலம்புடைத்து
      நீதி கேட்ட
பெருந்துயராள் கண்ணகியின்
   வழக்கா லாங்கு
     பிழையுணர்ந்த பாண்டியனோ
       தானும் மாண்டான்.
அருங்கற்பும் ஊழ்வலியும்
   வென்று நிற்க
     அரசியலிற் பிழைக்கறமே
       கூற்றாய்க் கண்டோம்.

Tuesday, April 25, 2017

காதலே வாழ்வின் கரு


அன்புபண் பென்றும்
அறத்தைப் பயனென்றும்
முன்பே குறள்முடிவு கூறிற்று
 - அன்புதனின்
தீதில் வழிய துயிர்நிலை யென்பதனால்
காதலே வாழ்வின் கரு.


ஈற்றடிக்கு எழுதியது. தமிழரின் மனிதநேயம். பிப்ரவரி 2010

Tuesday, April 11, 2017

அமரர் நா.சீ.வரதராஜன்



சொல்லும் பொருளும் புதிதாக்கிச்
   சுவையோ டுணர்வைத் தொடுமாறு
வல்லமை மிக்க நா.சீ.வ
   வழிவழி வந்த மரபுதனில்
பல்வகை யாப்பில் மலர்ந்தவையாய்ப்
   பாடிக் குவித்தவை ஏராளம்.
நல்லோர் மனதில் தங்கி, அவை
   நினைவி லென்றும் நிலைத்திருக்கும்.



உலகளவில் சிறுகதையில் உயர்ந்தவையை அளந்தறிய
   ஒருபோட்டி நடந்த தன்று.
புலமைமிகு கதைபலவும் படைத்தவரிற் சிறந்தசிலர்
   புனைந்தவைகள் தேர்வு பெற்று
பலமொழியில் எழுதியவை பரிந்துரைக்கப் படவதனில்
   பழகுதமிழ் மொழியின் நான்கில்
நலமுடைய வொருகதைநம் நா.சீ.வ உடையதெனில்
   நமக்கதுவோர் பெருமை யன்றோ?



கடுகளவே நிறைகண்டும் கடலளவு மகிழ்வுற்று
   கவிதைவரி போற்றி நிற்பார்.
அடுத்தவரி படித்திடுமுன் தடுத்தவரை மறுபடியும்
   அதனையே படிக்க வைப்பார்.
நெடுகி,அது நிறைவுறுமுன் நம்நெஞ்சம் நெகிழ்வகையில்
   நீள்கரம் குலுக்கி நின்றால்
எடுபடுமோர் கவியெழுத இப்போது முயல்வோரும்
   ஏன்கவிதை வேந்த ராகார்?


பாரதி கலைக்கழகம்.  அமரர் நா.சீ.வரதராஜன் நினைவுக் கவியரங்கம். 12.10.2008.

Friday, March 03, 2017

மங்கலப் பொருள்கள் ஐந்து -- மஞ்சள்.




சொந்தநலம் பாராமல் சோர்வினையும் கருதாமல்
இந்தநில முழுவதிலும் ஏடுகளைத் தேடியவோர்
அந்தணனின் சொந்தமென ஆனதமி ழாரணங்கே
செந்தமிழே! நின்னடிகள் சிரந்தாழ்த்தி வணங்குவனே.

ஆடையால் அணியால் கொண்ட 
   அழகினால் மட்டுந் தாமே
மேடையின் தலைவ ராகி 
   மிகுபுக ழடைந்தோ ருண்டு.   
ஓடைக்குப் பெருமை சேர்க்க
   ஓடிடும் நீரைப் போல
மேடைக்குத் தகுதி சேர்க்கும்
   மேனிலை அறிஞர் வாழி!


இங்குநான் மஞ்சள் பற்றி
   என்கவி கூற வந்தேன்.
மங்களப் பொருள்கள் பற்றி 
   மன்றினில் பாட வந்த
தங்களின் கவிதை கேட்டே
   தமிழைநான் கற்க வேண்டும்.
உங்களுக் கென்வ ணக்கம்
   உரியது ஏற்பீர்! ஐயா!


தொலைக்காட்சி நாடகங்கள்
   தொலையட்டும் என்றொதுக்கி,
      தூக்கம் விட்டு,
கலைநிகழ்ச்சி வேண்டாது
   காரியங்கள் தள்ளிவைத்துக்
      கவிய ரங்கில்
விலையில்லாத் தமிழமுது
   விருந்தென்று தேடிவந்து
      வீற்றி ருக்கும்
கலையாத கூட்டமிதைக்
   கரங்கூப்பி வணங்குகிறேன்
      கவிதை யாலே!


(வேறு)

விக்கினங்க லெதுவொன்று மேற்ப டாமல்
   வினையாற்ற வேண்டுதற்கு நாமெல் லோரும்
அக்காலப் பெரியோர்கள் காட்டிச் சென்ற
   அருமையுள சாத்திரத்து வழியில் நின்று
பக்குவமாய் மஞ்சளினைக் குழைத்துச் சேர்த்துப்
   பிடித்துவைத்த திருவுருவைப் பிள்ளை யாரை
விக்கினத்தை நீக்குகின்ற இறைவன் தன்னை
   விநாயகனை முன்வணங்கித் தொடங்கல் செய்வோம்.


கல்லினிலே மேனியுண்டு தெய்வங் கட்கு.
   காணுகின்ற திருவுருவம் செம்பி லுண்டு
பல்வகையாய் உலோகங்கள் கலந்து வார்த்த
   பலவடிவம் ஐம்பொன்னில் அதிக முண்டு.
சொல்லடுக்கிப் பாடுகின்ற புலவர் நாவில்
   சுரக்கின்ற கவிப்பொருளில் உண்டென் றாலும்
இல்லத்தில் துளிமஞ்சள் தூளில் தோன்றும்
   இறைவடிவே இணையற்ற தென்று சொல்வேன்.


மஞ்சளினைப் பயன்கொள்ளும் தகுதி பெண்கள்
   மங்களமாம் நிலைதன்னைக் காட்டு மன்றோ?
பஞ்சிலினிலே வுருவான நூலென் றாலும்
   பாவையவள் மணநாளில் கழுத்தி லேரும்
மஞ்சளிலே குளித்திட்ட சரட்டுத் தாலி
   மாங்கல்ய மாவதெதன் மகிமை யாலே?
மஞ்சளிலே செய்வதனால் அன்றி வேறு
   மங்கலமாய்க் குங்குமமும் ஆவ தேது?


கொஞ்சம்பேர் விரதங்கள் ஏற்கும் போது
   கார்நிறத்தில் உடையணிதல் உண்டு. இங்கு
கொஞ்சம்பேர் துவராடை அணிவ துண்டு.
   கொஞ்சமுமே இறையுணர்வே அற்ற பேரில்
அஞ்சுநிலை ஆயுளுக்கு வருமென் றாலும் 
   ஆளுகின்ற செல்வம்பறி போமென் றாலும்
மஞ்சளிலே துண்டணியும் மனித ருண்டு.
   மஞ்சளது மகிமைக்கு வேறு வேண்டாம்.


புத்தரிசிப் பொங்கலிடும் தைநன் நாளில்
   பானையிலே கட்டுகின்ற மஞ்சள் கொத்து,
புத்தாடை துணிமணிகள் அணியு முன்னர்
   பொடிமஞ்சள் நீரினிலே தொட்டு வைத்தல்
பத்திரிகை திருமணம்போல் நிகழ்ச்சிக் கெல்லாம்
   பசுமஞ்சள் நிறத்தாளில் அடித்தல் என்று
தத்துவங்கள் பின்புலத்தில் பலவு முண்டு.
   தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் மஞ்சள். 


அழைப்பினைப் பாருங்கள்.

(வேறு)

தெரிந்துதான் பழத்தைக் கொண்டு
   தேங்காய்க்கே அடுத்து வைத்தார்.
தரிக்கின்ற தாம்பூ லத்தைத்
    தரத்தினில் நான்காய் வைத்தார்.
அறிந்துதான் குங்கு மத்தை
   அதற்குப்பின் இட்டு வைத்தார்.
புரிந்தது மஞ்சள் என்றும்
   புனிதத்தில் முதல தென்று.


மஞ்சளே மருந்து மாகும்.
   மற்றதன் புனிதந் தன்னால்
மஞ்சளிற் கயிறு கையில்
   மந்திரக் காப்பு மாகும்.
மஞ்சளின் தூளைத் தேய்த்து
   மாதர்கள் குளித்து மேனி
விஞ்சிடும் அழகு காண
   விரும்பியே போற்று வாரே!


மஞ்சநீர் கரைத்து வந்து
   மங்களம் பாட வேண்டும்.
விஞ்சிய சிறப்பி னோடு
   விளங்கிடு பொருள்கள் ஐந்தில்
எஞ்சிய நான்கு மிங்கே
   இனிவர இடத்தை விட்டு
மஞ்சளை முடித்து வைத்து
   மன்றிடை விடைகொள் கின்றேன்.


மதுரை அண்ணா நகர், ராஜாஜி மன்றம். காந்தி ஜயந்தி விழா,  2.10.1999.