Tuesday, June 30, 2015

சிறியன சிந்தியாதான்


மன்னனின் மௌலி விட்டு மரவுரி தரித்து ராமன்
பின்னவன் அன்னை சொல்லே பெரிதெனக் கானம் புக்கான்
பெண்ணொடு பொருதல் தனது போரறம் ஏற்கா தேனும்
தன்னுடைக் குருவின் வாக்கால் தாடகை வீழச் செய்தான்.

தந்தைதாய் பேணல் விட்டு, தாரமும் விட்டுக் கானம்
எந்தைதாய் ராம னென்றே இலக்குவன் பின்னே போனான்.
நிந்தனை தாயைப் புரிதல் நேரிதாய்ப் பரதன் தேர்ந்தான்
முந்தைய விழும மாற்றம் மூளுசூழ் நிலையா லாகும்.

துணையென ராம னோடு தோழமை கொண்டு தம்பி
இணையிலா வலிய னுன்னை எதிர்த்திடத் துணிந்தான் என்ற
மனைவியைப் 'பிழைத்தாய்' என்று முனிந்துபின் வாலி சொல்வான்
'நினைத்தது தவற றத்தின் நாயகன் ராம னாவான்'

உறுபகை யொன்று மின்றி உயரறம் காக்கும் வீரன்
இருவராய்ப் பொருதும் போதில் இடையினில் வாரா னென்ற
உறுதியைக் குலைத்து மார்பை, உடலது மண்ணில் சாய,
ஒருசரம் துளைத்த போதில் உண்மையை நேரில் கண்டான்.

பாரியைப் பிரிந்து நிற்கும் பதைப்பினில் செய்து விட்ட
காரியம் மாறிற் றோ?நீ கொண்டதோர் பகையு முண்டோ?
சூரியன்  மரபுக் கொன்றும் சுடர்மதி மறுவே போல
ஆரியன் பிறந்து மண்ணில் ஆக்கினை. சொல்வ தென்ன?

வாய்மையும் மரபும் காத்த வள்ளலின் மைந்த னோநீ?
தூயவன் பரதன் முன்னர் தோன்றிய பெருமை எங்கே?
தீயவை அரக்கர் செய்ய,  தேர்ந்தொரு குரக்கு வேந்தை
மாய்வுறச் செய்யு மாறு மனுநெறி கூறிற் றாமோ?

இன்னவும் பிறவு மாக எழுப்பிய கேள்விக் கெல்லாம்
சொன்னவை பதில்க ளாகச் சிற்சில உண்டென் றாலும்,
முன்னராய் வந்து நின்று முடித்ததாய்க் கதையி லில்லை.
பின்னவன் வந்து (அ)தற்குப் பிறிதொரு விளக்கம் தந்தான்.

நன்றிது தீது வென்னும் நல்லறி வுடைய னென்றும்,
நின்றநன் நீதி யாவும் நேரிது உணர்ந்தா னென்றும்,
பின்னுமே மனுசெய் நெறிகள் புக்கபுத் தேளி ரென்றும்
சொன்னவன் ராமன். வாலி சிறந்தவன் ஐய மில்லை.

ஒன்றினில் ஒன்று மிக்க உயரற வரிசை தன்னில்
இன்னுமொன் றில்லை யென்னும் எல்லையை எட்டும் போதில்
உன்னதம் என்று நின்ற உயரிய விழும மெல்லாம்
சின்னவை யென்றே யாகிச் சிந்தனை விட்டு நீங்கும்.

சீர்மிகு ராம நாமம் சிந்தையில் தைக்கு மாறு
கூர்மிகு வாளி யொன்றால் கொண்டநல் ஞானத் தாலும்,
கார்முகில் கமலம் பூத்துக் கையினில் வரிவில் ஏந்தி,
'பார்'என வந்து நின்ற பரம்பொருள் கண்ட தாலும்

அறிவொளி கிடைத்த காலை அவியுறு மனத்த னானான்.
நெறியினில் நின்று சேரும் நீள்விசும் பருளப் பெற்றான்.
விரிகதை செய்த கம்பன் விருதெனும் புகழுஞ் சேர
சிறியன சிந்தி யாத சீர்மைய னாகி நின்றான்.

பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பு. நங்கநல்லூர். கம்பன் விழா.
24.3.2015.
 

Saturday, June 27, 2015

எழுவாய்


ஒற்றைப் புள்ளிச் சிறுகுறியால்
ஒருபெரு வரியே முடிந்துவிடும்.
முற்றுப் பெற்றது இலையாக - அதில்
மேலும் புள்ளிகள் இடவேண்டும்.

கரங்க ளிரண்டு சிறகுண்டு
கடின உழைப்பின் துணையோடே
உரங்கொள் மனதும் உளதானால் - நிச்சயம்
உயரப் பறப்பது எளிதாகும்.

தடைபல வந்து தடுத்தாலும்
தளரா மனதொடு முயலுகையில்
இடர்கள் வந்தவை இலையாகும் -நம்
இலக்கைச் சேர்வதும் எளிதாகும்.

புழுவாய் மண்ணில் உழன்றபடி
பொழுதைப் போக்கும் நினைவாலே
எழுவாய் எனுமுரை மதியாதார் - மண்ணில்
இருப்பதி லேதும் பயனிலையே!


தாராபாரதி பிறந்த நாள் நினைவு. பாரதி-பாரதி தாசன் கவிதை அமைப்பு. நங்கை நல்லூர். 26.2.2015