Thursday, October 01, 2015

காணிற் குவளை...


(தரவு கொச்சகக் கலிப்பா)

தண்ணீரி லேநின்று தழைத்துவளர் தாவரத்தின்
விண்பார்த்தே இதழ்விரித்து விளங்குகின்ற குவளைநிறம்
கண்பார்த்துக் களிக்கின்ற கருநீலம் அதைப்பெண்ணின்
கண்நேராய் உவமித்துக் கவிசெய்வர் புலவோர்கள்.

தெள்ளுதமிழ் நூல்களிலே தெவிட்டாத தொன்றான
வள்ளுவரின் முப்பால்நூல் வழங்குகின்ற காட்சியிது.
விள்ளரிய தலைமகளின் விழியழகைக் காணாதே
கள்ளொழுகு குவளைமலர் களிமிகுந்து நிற்கிறதாம்!

கண்ணில்லாக் குவளையது காணாது தானதனை
எண்ணித்தான் 'காணி'லெனும் எச்சத்தை இட்டுவைத்தார்.
கண்ணிருந்தவ் விழியழகைக் காணுமெனில் நாணுற்று
முன்னிருந்த படியன்றி முகங்கவிழு மென்றாரோ?

தண்ணீரில் நிற்பதொன்று தலைகவிழ்ந்தால் நாணத்தில்
தண்ணீரைத் தான் நோக்கும் தரைமண்ணை நோக்கிடுமோ?
வண்ணமலர் மணவோட்டம் வாய்மொழிதல் இயலாதால்
எண்ணமது என்னவென்று எண்ணியதில் தேர்ந்ததிது.

நீரிதனிற் பிறந்தேனே! நேர்ந்ததிது வினைப்பயனே!
பேரழகுக் கண்ணுடையாள் பிறந்ததுஅந் நிலமென்று
கார்நிறத்த பூ,நீரைக் காணவுமே தோன்றாது
போர்மனத்த தாகியதால் பொருமி'நிலம் பார்க்கு'மென்றார்!


காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.        (குறள்)

பாரதி கலைக்கழகம். 20-6-2015. பேரா.நாகநந்தி நினைவு, திருக்குறள் விழா

No comments: