Tuesday, January 15, 2013

பொங்குகவே பொங்கல் பொலிந்து!


ஆற்றின் வடிகாலும் ஏரும் உழவோரின்
சேற்றில் பதிகாலும் செங்கதிரும் - ஏற்றமுறத்
தங்கிநிலை பெற்றுத் தமிழர் நலஞ்சிறக்கப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

வெண்பாப் போட்டியில் தேர்வு பெற்ற வெண்பா.
அமுதசுரபி  -ஜனவரி 2013.

Wednesday, January 02, 2013

தொண்டரடிப்பொடி ஆழ்வார்


மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற
திருமாலை பாடுஞ்சீர்த் தொண்ட ரடிப்பொடியெம்
பெருமானை எப்போதும் பேசு.
(திருவரங்கப் பெருமாளரையர்.)


திருமாலின் வனமாலை அம்சம் என்ன
...திருமண்டங் குடியென்னும் சிற்றூர் தன்னில்
பெருமைமிகு மார்கழியில் கேட்டை தேயும்
...பக்ஷத்தில், சதுர்த்தசியில் பாரில் தோன்றி,
திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி யென்று
...திருவரங்கன் ஒருவனையே போற்று மாறே
இருதிவ்யப் பிரபந்தம் செய்து போந்த
...இறையடியார் தொண்டரடிப் பொடியா ரன்றோ?

துளவுநிறை தோள்தொங்கு குடலை, நல்ல
...தூய்மையான அரையாடை, மலர்கள் கொய்து
விளக்கமுறத் தெய்வத்தின் தொடைய லாக்கும்
...வித்தைகற்ற திருக்கரத்தின் விரல்கள், சிறிதும்
களவில்லா நெஞ்சத்தைக் காட்டு கின்ற
...கதிரேபோல் முகப்பொலிவு மேனி தன்னில்
பளபளக்கும் வகைசாற்று திருமண் காப்பு
...பக்தரன்பர் தாள்தூளி வடிவ மீதே!


ரதிபோலும் அழகுடையாள் தேவ தேவி
...ரதவீதி வழிநடையில் விழியால் ஈர்த்தாள்.
அதிவிரைவாய் அவரவளைக் காணா தேக
...அழகுதனை அவமதித்த தாக எண்ணி
மதிமாறி, 'அவர்நெறியை மாற்றி, என்றன்
...மடிமீது விழவைப்பேன் காண்பாய் நீ!நான்
சதிசெய்தும் வெல்வே'னென மூத்தாள் முன்செய்
...சபதத்தில் தன்வலிமை காட்ட லுற்றாள்.

பூட்டிவைத்த அழகணிகள் களைந்து விட்டுப்
...பொருளற்ற வறியளென வேட மிட்டு,
'தோட்டத்து மலர்ச்செடிகள் தழைக்கப் பேணும்
...தினப்பணியில் உதவிடுவேன் தெய்வத் தொண்டில்
நாட்டமுடன் பங்குகொண் டிங்கே தங்கி
...நீருண்டு எஞ்சியதை உண்டு வாழ்வேன்'
கேட்டபடி தரைவீழ்ந்தாள். பாதம் பற்றி.
...கிடைத்தவுடன் மகிழ்ந்துபணி தொடங்கிச் செய்தாள்.


வான்மழையைப் பெரிதென்றால் பேயென் போமே!
...வருமின்னல் மனத்திண்மை தகர்த்துப் போமோ?
வான்தோன்றும் இடிக்கந்த வலிமை யுண்டோ?
...வாழ்ந்தவழி ஒருநாளில் மாறிப் போமோ?
நான்மறையின் நெறிநின்ற பெருமை யெல்லாம்
...நலங்கெடவே அஃதழித்துச் சென்ற தந்தோ!
'நான்'வந்து நெஞ்சிருந்து வாழ்க்கை இன்பம்
...நங்கைநலந் துய்ப்பவராய் மாறிப் போனார்.

தன்சபதம் வென்றுவிட்ட தேவ தேவி
...தனம்வேண்டி அந்தணரை விரட்டி விட்டாள்.
என்செய்வேன்? என்செய்வேன்? எனத்து டித்து
...எழிலாளின் இல்வாயில் தனிற்கி டந்தார்.
'நின்னடியார் படுதுயரங் கண்டி றங்கி
...நிலைமாறச் செயவேண்டும்' என்று வேண்டித்
தன்கருணைத் திறத்தாலே திருமால் அருளைத்
...தாமரையாள் அவர்க்கங்கு பெற்றுத் தந்தாள்.


ஆலயத்தின் அரும்பொருளில் அற்றை நாளில்
...அதிகவிலை யுடையதொரு ஸ்வர்ன வட்டில்
'காலைமுறை முடிந்தவுடன் காண வில்லை'
...கடுகளவும் தேடாத இடமே இல்லை'
ஓலமிட்ட படியோடி மன்னர் முன்னர்
...உரைத்திட்ட அர்ச்சகர்க்கு, பணிப்பெண் அன்று
'காலையிலே வட்டிலொன்று தேவ தேவி
...கணிகையவள் வீட்டினிலே கண்டேன் என்றாள்.

திருவரங்கன் உடைமை யொன்றைத்
...திருடமனம் வருமா என்ன?
ஒருதனியாய்த் தேவ தேவி
...உட்புகுந்து திருடப் போமோ?
பெருநிதியம் உடைய ளன்றோ?
...பின்னெதற்குத் திருட வேண்டும்?
வரும்படியாய் ஆணை யிட்டு
...விவரங்கள் கூறக் கேட்டான்.


'அந்தணரின் சீடரெனத் தன்னைச் சொல்லி
...அறிமுகத்தைச் செய்துகொண்டு வட்டில் ஒன்றைத்
தந்துபோன சிறுவனைநான் அறியேன் ஆகத்
...தவறேதும் இதிலென்மேல் இல்லை' யென்றாள்.
நந்தவன விப்பிரரை அணுகிக் கேட்க,
...'நானறியேன் திருக்கோவில் வட்டில் பற்றி
எந்தவொரு சிறுவனுமென் சீடன் இல்லை.
...எடுத்தெவர்க்கும் நான்வழங்க வில்லை என்றார்.

'குற்றத்தைப் புரிந்ததுநான்! வட்டில்
...கணிகைக்குக் கொண்டு தந்தேன்.
உற்றவரின் சீடன் நான் என்றே
...உரைத்ததுவும் நான்தான் ஐயா!
மற்றிதனை விப்பிரரின் செயலாய்
...மனங்கொளநீ வேண்டா' மென்று
கொற்றவனின் கணவுவந்து தோன்றிக்
...கூறியதோர் தெய்வ ரூபம்.


செப்பிய தெய்வ வாக்கைச் செவியுறக் கேட்ட வேந்தன்
'தப்பெதும் நிகழு முன்னர் தவிர்த்தனை கருணா மூர்த்தி!
அப்பனே! அரங்கனே! நின்றன் அருட்திறம் வியந்தே னென்றான்.
விப்பிர நாரா யணரை விழுந்தடி வணங்கி நின்றான்.

'ஒப்பிலா அர்ச்சை நீங்கி உவப்புடன் நீயே இந்த
விப்பிரன் அடியன் என்றா வேசியின் இல்லம் புக்காய்!
மப்பினில் மாதவள் கண்கள் மயக்கினில் வீழ்ந்தி ருந்து
தப்பினேன் அரங்கா உன்றன் தாள்களே சரணம்' என்றார்.

அச்சுதா என்னும் நாமம் அன்றாடம் ஓது கின்ற
இச்சுவை ஒன்றே போதும் இந்திர லோக மாளும்
அச்சுவை வேண்டே னென்றே அரங்கனை விளித்துச் சொல்லி
இச்சையால் துளவத் தொண்டில் இன்புற்றார் வாழி! வாழி!

கடல்நிறக் கடவுள் பாம்பில் கண்துயி லழகைக் கண்டு
உடலெனக் குருகு தென்றே உரைத்தவர் வாழி! வாழி!
சுடரொளி பரந்தே எங்கும் சூழ்ந்தது சுட்டிக் காட்டி,
கிடந்தவன் எழவே பாடிக் களித்தவர் வாழி! வாழி!


9.10.2011 ல் வில்லிவாக்கம் தேவகான இன்னிசைச் சங்கம் ஆதரவில் சௌமிய தாமோதரப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற கவியரங்கில் பாடியது