Wednesday, August 23, 2017

வளரவும் வழி செய்வோம்



வாழியசெந் தமிழென்று வார்தைசொலல் எளியதுதான்
   வாழ்த்துக்கு வலியுளது வழக்கிங்கு வைக்கவில்லை.
ஆழியது சூழ்ந்துள்ள அத்தனைமண் பரப்பினிலும்
   ஆதிமுதல் பேசுமொழி ஆயிரங்கள் உளதெனினும்
ஊழிபல வானபினும் உயர்ந்தநிலை மாறாத
   ஒருமொழிநம் தமிழென்று உரைத்தநிலை இன்றில்லை.
வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்ய வேண்டுமையா.


தொல்மொழியீ தென்பதனால் தொண்டுகிழ மானதுவோ?
   தள்ளாடும் நிலையிலன்றோ தமிழினைநான் காண்கின்றேன்.
நல்லதமிழ்க் கதையெழுத, நாடகங்கள், கவிதைசெய
   நல்லதிற னுடையவர்கள் நம்மிடையே பலருண்டு.
இல்லையெனச் சொல்லவில்லை என்றாலும் இன்றுவரை
   என்தமிழில் அறிவியலை எத்தனைபேர் நூல்செய்தார்?
சொல்லாக்கம் போதாது. சொற்குவியல் பொருளோடு
   சேரட்டும் புதியனவாய். சிலரேனும் முயலட்டும்.

விருதுண்டு கவிதைக்கு வெறுங்கதைக்குப் பரிசுண்டு
   விஞ்ஞான நூலெழுதும் வீண்வேலை எதற்கென்று
கருதியிங் கறிஞரெல்லாம் கைகட்டி நிற்கின்றார்.
   கற்பனைக்கே பாராட்டு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இருமொழியிற் புலமையுளோர் இன்னொன்றில் சிறந்ததனை
   இங்குள்ளோர் அறிவதற்கும் இன்றமிழில் தரவேண்டும்.
பெருமளவில் மொழிமாற்றப் பேரறிஞர் வரவேண்டும்.
   பிறமொழியோர் நமைப்புகழும் பெருமையினைப் பெறவேண்டும்.


வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்தல் நலமென்பேன்.




பாரதி கலைக்கழகம். 29.1.2014