Wednesday, November 29, 2017

வெடிகுண்டு



சாப்பிட இனிப்பு மிக
    சந்தோஷ மாயணிய,
பூப்போட்ட மேற்சட்டை
    போதா திவையென்று
கேப்புசுடத் துப்பாக்கி
    கேட்பா னெனவாங்கி
கூப்பிட் டனுப்பியதும்
    குதுகலித் தோடிவந்தான்.


வேண்டா மிவையெனக்கு
    வெடிக்கின்ற அணுகுண்டு
வேண்டுமெனக் கேட்டதுமே
    விதிர்விதித்துத் தடுமாறி
ஆண்டைந்து நிறைவதற்கே
    ஐந்தாறு மாதமுள்ள
வாண்டுதந்த அதிர்ச்சியிலே
    வாயடைத்துப் போனேன் நான்

பாரதி கலைக்கழகம், அழ. வள்ளியப்பா  நினைவுக் கவியரங்கம். நவம்பர் 2014

Monday, November 27, 2017

நயமாய் உரைத்தலே நன்று



எதெதையோ பேச
எதிரிருப்போர் நொந்து
விதியென்றே கேட்டிருக்க
வேண்டாம்.
- எதையும்
சுயமாய் முயன்று
சுவைகொஞ்சம் சேர்த்து
நயமாய் உரைத்தலே
நன்று.


நம் உரத்த சிந்தனை, டிசம்பர் 2012