Monday, January 26, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு

பாரிதனைப் படைத்ததுநற் பரம்பொருளின் விளையாட்டு
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.

தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்

எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.

தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்

வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!

(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)

புதிய பட்டாசுகள்

இன்சாட் விட்டது அதிர்வேட்டு - அது
இல்லை யென்றானது புஸ்வானம்.
மின்வெட் டென்பது சரக்கட்டு - விலை
மேலே போகும் ராக்கெட்டு.

மின்னல் போலே ஒளிசிதறி - பின்
மேகம் போலதிற் புகை மூடும்
அன்னவை அரசியல் முழக்கங்கள் - அவை
அழகாய் எரியும் மத்தாப்பு.

ஆனை வெடியெனச் சொல்லுதற்கும் - ஒரு
ஆசிய விளையாட் டுண்டிங்கு.
போன வருடம் இல்லாத - பல
புதுவெடி கண்டோம் போதுமடா.

(முல்லைச்சரம். ஜனவரி 1983)

Sunday, January 25, 2009

முழு நிலவு

அதியுணவு கொண்டதனால் அவதி யுற்று
அன்றொருநாள் மேன்மாடத் தமர்ந்தி ருந்தேன்.
அதிகாலை செய்வதற்கு வேலை யுண்டு
அசதியினில் வுடல்சாய்த்தேன் உறக்கம் கொள்ள.
அதியழகி மதியரசி ஆடு கின்ற
அரங்கமென விண்வெளியை ஆக்கி வைத்து,
பதியிதனைப் பார்க்கிறவர் கூட மாக்கிப்
பார்த்திட்டேன் மனத்திரையில் நாட்டியத்தை.

ஆடிநின்ற அவள்தலையில் அணிந்திருந்த
அழகான மல்லிகைப்பூச் சரமும் ஆடி
மேடையிலே விரித்துவைத்த நீலப் பட்டில்
மின்னுகின்ற வெண்பூக்கள் வுதிர்த்த காட்சி
ஒடுகின்ற நதிநீரில் துரும்பு போல
ஒருநொடியில் மறைந்துவிடும் காட்சியாகி,
கோடிக்கைச் சூரியனால் கலைந்து போக
கோபத்தில் விழித்தபோது காலை நேரம்.

மண்ணரங்கில் நாட்டியங்கள் முடிந்த பின்பு
மனிவிளக்குத் தோரணங்கள் யாவும் நீங்கி
எண்ணிறந்த இனியகாட்சி இல்லை யாகி
ஏளனத்து வெற்றிடமாய் மாறிப் போகும்.
விண்ணரங்கில் மதியரசி ஆட்டம் கூட
விலக்கில்லை இதற்கென்றால் என்ன செய்ய?
கண்ணிரண்டும் திங்களொன்று காத்திருந்து
காட்சியிதை மறுபடியும் காண வேண்டும்.

(அமுதசுரபி. டிசம்பர் 1980)

காலைப் பொழுது

இளம்பரிதி முளைத்தெழவும்
இருளகன்று ஓடிவிடும். - குப்பைச்
சேவலது கூவலோடு
செகத்தினிலே நாள் பிறக்கும்.

வாசலிலே தூசகலும்;
வாளிமழை நீர்பொழியும்; - பெண்கள்
விரல்வழிவெண் பொடிவழிய
வீதியிலே பூமலரும்.

தினத்தாள் பறந்துவரும்;
தெருவோரம் மலம்சேரும். - நடுவீதிப்
பால்வண்டி ஒலிகேட்கப்
பாத்திரங்கள் காத்திருக்கும்.

ஆற்றின் கரைநிறையும்;
அழுக்காடை பாட்டிசைக்கும்; - பலரும்
தலையமிழ்த்தி நீராடத்
தண்ணீரே தாளமிடும்.

இல்லாளின் முனுமுனுப்பின்,
இனியமகன் தேவைகளின் - பின்னே
நாள்முழுதும் செய்வதற்கு
நம்கடமை காத்திருக்கும்.

(ஜன்னல். நவம்பர் 1977.)

Friday, January 23, 2009

புதிய சுவர்











கொச்சைத்தமிழ் மொழிதனிலே விளம்ப ரங்கள்
கொலைசெய்யும் தரந்தாழ்ந்து தமிழ்தான் சாகும்.
'இச்சுவரில் ஒட்டாதீர் நோட்டீஸ்' ஸென்று
எச்சரிக்கை செய்திருக்கும் அதையும் மீறி
மிச்சயிடம் எதுவுமின்றி ஏணி யேறி
மேற்சுவரில் ஒட்டிவிடும் காகி தங்கள்
பச்சைசிவப் பென்றுபல நிறமுங் காட்டிப்
பரிதாப மாய்க்கிழிந்து பாதி தொங்கும்.

தாடிமயிர் வளர்வதற்குத் தைலம்; மேலும்
தலைமயிரின் நரை மறைக்கச் சாயம்; மற்றும்
கோடிவகைக் கட்சிகளின் மீட்டிங்; நாளும்
கொள்கைகளை விளக்குகின்ற கூட்ட நோட்டீஸ்;
பீடிபொடி சோப்வகைகள் பெயர்கள்; நாட்டில்
பகுத்தறிவுப் பெரியவர்கள் வுதிர்த்த சொற்கள்
வேடிக்கை இவையெல்லாம் இல்லை இங்கே
விரைந்திதனைக் காண்பதற்கு வாரீ ரின்றே!

(முல்லைச்சரம். பிப் 1975)

எங்கள் கிராமம்

ஓலையில் வேய்ந்த குடிசையுண்டு நல்ல 
ஓடையுண்டு சிறு சோலையுண்டு - அதி 
காலையிலும் கூடக் காதவழி செல்லக் 
காளைகள் பூட்டிய வண்டியுண்டு. 

 மாட்டிய கழுத்து மணியொலிக்க - 
நல்ல மாடுகள் வண்டியை இழுத்து வர
 ஓட்டி வருகிற சாரதி செய்கிற 
ஓரொரு சீழ்கை ஒலி கேட்கும். 

 வீடுகள் முன்னர் நீர் தெளித்து - நல்ல
 வெள்ளைப் பொடி வைத்துக் கோடிழுத்து
 பாடிய வாயுடன் பற்பல பென்டிர்கள் 
பக்குவமாய் இடும் கோலமுண்டு. 

கூடிய நெற்பயிர் தோள்சு மந்து - அவர் 
கொண்டு வந்து நல்ல பொங்கல் வைத்து 
தேடி வருகிற விருந்தினர் யாவரும் 
தினறும் வகையினில் உண்ண வைப்பார் 

 ஆலயக் கோபுரம் அருகிற் சிறுகுளம் 
அரசம ரத்தடிப் பிள்ளை யாரும் 
 மாலையில் ஓர்முறை யாவது வாவென 
மக்களை யழைக்கும் பூவ னமும் 

 வருகின்ற தென்றலின் இனிமையுடன் - அங்கு 
வளர்கின்ற தென்னையின் இள நீரும் 
தருகின்ற சுவையினிற் கால மெல்லாம் - அங்கு
 தனியாய்க் கழித்திடத் தோன்று மம்மா.

 (முல்லைச்சரம். நவம்பர் 1974)

மலர்ச் சிரிப்பு

என்னிடத்தே பொய்வேண்டாம்
எழில்சேர் மல்லிகையே
உன்னிதழிற் புன்னகையேன்
ஒளியா துரைப்பாயே!

அரைநாளில் வதங்கிவாடி
அழியப்போம் உன்னைப்போய்
தரைமாதர் தலயேற்றித்
தாங்குவதை நினைத்தாயோ?

தத்துவங்கள் அறியாய்நீ
தருமதுவை வுண்டிங்கு
சுத்துகின்ற சுரும்புகளின்
சுவைப்பேச்சுக் கேட்டனையோ?

தென்றலது தூண்டுதலால்
தெளிவாகப் பதில்மறுக்கும்
உன்றனது தலையசைப்பால்
உணர்த்துவது தானென்ன?

(அமுதசுரபி தீபாவளி மலர் 1973)

Friday, January 16, 2009

விநாயகர் துதி

வெற்றிபெறப் பெற்றோரை வேலன் வருமுன்னம்
சுற்றியபொற் பாதம் சுகந்தருமே - பற்றியவர்
வுற்ற துயர்போகும் வூழ்வினையும் போயொழியும்
கற்பக மூர்த்தியே காப்பு.

Thursday, January 01, 2009

தமிழ்த் தாய் அருள்வேட்டல்


நின்றன் கருணை நினைந்துருகிப் பாமலரால்
என்றும் துதிக்கும் எனக்கருள்வாய் - இன்றமிழே!
சொன்னயமும் சந்தச் சுவையழகும் சொட்டிடநீ
என்றுமென் பாட்டில் இரு.