Monday, January 18, 2016

நல்ல பழக்கங்கள்

(சிறுவர் பாடல்)


நல்ல பழக்கம் பலவுண்டு - அதில்
    நாலைந் திங்கே சொல்லுகிறேன்.
வல்ல நீயவை கைக்கொண்டு - உன்
    வாழ்வில் நிச்சயம் வெல்லுவையே!

உண்டதன் பின்னர் நிச்சயமாய் - உடன்
    உன்கை கழுவுதல் அவசியமே.
உண்ணும் முன்னரும் கைகழுவு - அது
    ஒவ்வொரு முறையும் அவசியமே!

ஈயும் எறும்பும் மொய்க்கின்ற - எந்த
    இனிப்புப் பண்டமும் நாடாதே.
வாயில் எச்சில் வரவைக்கும் - அதை
     வாங்கித் தின்ன ஓடாதே!

பாயில் உன்னைப் படுக்கவைக்கும் - வரும்
    பலவகைச் சுரமுன்னை வாட்டிவிடும்.
நோயில் லாத வாழ்வுக்கு - வேறு
      நேரிலை என்றே காட்டிவிடும்!

காட்டு மிருகக் கதைகளெலாம் - சொல்லும்
    கருத்தை மனதில் இருத்திக்கொள்
பாட்டி கதையென இகழாதே! - அதில்
    பாடம் உண்டுனைத் திருத்திக்கொள்!

சரியாய்த் தமிழைப் பேசுதற்கு - நீ
    சிறிது முயன்றால் கற்றிடுவாய்.
பெரியோர் சொற்படி நடந்திடுவாய். -  நல்ல
    பேரும் புகழும் பெற்றிடுவாய்!

பாரதி கலைக்கழகம். அழ.வள்ளியப்பா பாடலரங்கம். லக்குமிஅம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. குரோம்பேட்டை. 28.11.2015.