Wednesday, October 28, 2015

மாமன்

அன்னையவள் பிறந்ததான அருங்கோயிற் கருவறையில்
      அவளுக்குச் சோதரனாய்த் தோன்றினான்
பின்னொருநாள் மருகன் நான் பிறந்தபினர் மாமனெனும்
      பெருமையினைப் பெற்றவனாய் மாறினான்.
பொன்னணிகள் சீர்வரிசை புத்தாடை யவைபலவும்
      போதுமெனு மளவவனும் செய்து,தான்
துன்பமென வரும்போது துவளாமல் முன்வந்து
      தோள்தந்து உதவியெனைத் தாங்கினான்.

பாரதத்துச் சகுனிபோல பாகவதக் கம்சன்போல
      பாரினிலே மாமன்சில ருண்டுதான்.
நீரவரை மாமனென்று நினைத்தன்பு செய்வதற்கு
      நீதியொன்று மில்லையென்று சொல்லுவேன்!
பேரளவே உறவாகிப் பெற்றவளின் உடன்பிறந்து
      பேசமட்டும் மாமனென்றாற் போதுமா?
ஓரளவு கூடவன்போ டுறவாடு நெஞ்சமிலார்
      உண்மையிலே மாமனெனற் கூடுமோ?

இந்தியத்தாய் நாட்டிலுள்ள இளஞ்சிரார்க ளனைவருக்கும்
     எள்ளளவும் பந்தமற்ற போதிலும்
முந்தையநாள் பாரதத்தின் முதுதலைவர் நேருஎந்த
     முறையினிலே மாமனென்று ஆனவர்?
சொந்தமெனில் உடைமையெனச் சொல்லுகின்ற பொருளுண்டு
     சுகமுண்டு மகிழ்வுண்டு என்பரே!
விந்தையிது அன்பாலே விளைகின்ற உறவன்றி
     வேறேதும் இலையென்று சொல்வனே!

No comments: