ஆற்றல் மிக்கவர். அரும்'பெருந் தலைவர்'.
அரசிய லுலகின் அதிசய மனிதர்.
பொய்த்திற னுடையோர் பொருள்புகழ் சேர்க்கச்
செய்செய லறிந்து சீறிய பெருமகன்.
ஊருக் கொன்றென ஒருநூ றாயிரம்
பாலர் கற்கப் பள்ளிகள் கண்டவர்.
இன்மையாற் பசியா லிடர்படு சிறார்க்கு
உண்ண மதிய உணவோ டுடையும்
இளநிலைக் கல்வியும் இலவச மென்றவர்.
மேலும் கற்க மேநிலைப் பள்ளிகள்,
மேன்மை நாடுற மிகப்பல கண்டவர்.
நீர்வீ ணாகி நெடுங்கடல் சேரா(து)
ஆறெலாம் அவர் வழி அணைகள் கண்டன.
நெடுவழிப் பயணப் பாலம் சாலைகள்
நீண்டநாள் தேவைகள் நிறைவுறச் செய்தவர்.
இல்லவள், குழந்தை இவைதனை விலங்கென
வீட்டுக் கடமைகள் விட்டுத் தன்னை
நாட்டுக் கெனவே நல்கிய பெருமகன்.
நாடிது நலம்பெற நினைத்துப்
பாடவர் பட்டது பகர்வது அரிதே!
மாமதுரைக் கவிஞர் பேரவை காமராசர் நூற்றாண்டு விழாக் கவியரங்கம்(செப் 2002).
அன்பு பாலம் (ஆகஸ்ட் 2009)
2 comments:
"செய்செய லறிந்து சீரிய பெருமகன்." என்ற வரியில் "செய்செயலறிந்த" என்றோ அல்லது நிறுத்தல் குறி இல்லாமல் அடுத்த வரியுடன் தொடர்புடையதாகவோ வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை அது மிகச் சரியென்றால் என் சுட்டிக் காட்டலை நிராகரிக்கவும்.
பொய்த் திறனுடையோர் செய்யும் செயலை அறிந்து சீற்றம் கொண்ட பெருமகன் என்று பொருள் கொள்ளவேண்டும். தவறொன்றும் இல்லை.
அ.ரா
Post a Comment