Sunday, June 27, 2010

வாழ்க தமிழ் மொழி

நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.


எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்(து)
அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!

மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!

வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?

பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது (27.12.09)