Friday, June 29, 2012

நினைவு நல்லது வேண்டும்

'ஓயா தென்று மிதுதர்மம்
      எனநான் கருதும் வழிசெல்லல்,
தாயாய் விளங்கு மருட்சக்தி
      தாளில் உறைதல் இவைதவிர
நீயாய் ஒன்றும் நாடாதே
      நினது தலைவன் யான்'என்றே
பேயா யுழலும் சிறுமனதின்
      பெற்றி யடக்கிய பெருஞாநி.

அன்னையை வேண்டும் வரமொன்றில்
     எண்ணிய முடியக் கேட்கையிலே
எண்ணம் தவறாய் ஆகுமெனில்
     எத்தனை குற்றம் நேர்ந்துவிடும்?
பண்ணுவ தெல்லாம் பாவமெனப்
     பதறிக் கொஞ்சந் தயங்கியவன்
எண்ணம் நல்லது வேண்டுமென்றே
     இரண்டா மடியில் கேட்கின்றான்.

நினைவிற் கெடுதி இல்லையெனில்
     நெஞ்சுக் குறுதி அதுசேர்க்கும்.
மனிதப் பிறவி வீணின்றி
     மண்ணிது பயனுற வேண்டுமெனில்,
நினைவு நல்லது வேண்டுமென்றோர்
     நெறியில் வாழ்ந்து காட்டியவன்.
மனதிற் கருமை சேராமல்
     மாசில தாதல் உயரறமாம்.

Friday, June 08, 2012

வேறொரு கதை சொல்

(சிறுவர் பாடல்)

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

ஓட்டப் பந்தய முயல் தூங்க - அதை
....ஓடி முந்திய ஆமை கதை
கேட்டுச் சலித்துப் போயிற்று.
....கேட்க வேறொரு கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காட்டில் கிணற்று நீர்பிம்பந் - தனைக்
....கண்டு குதித்த சிங்கமது
மாட்டிக் கொண்டு வஞ்சத்தால்
....மாண்ட கதையைச் சொல்லாதே!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காக்கை பாட்டுப் பாடவிழும் - வடை
....கவ்விய நரியின் கதைவேண்டாம்.
ஆக் ஷன் ஹீரோ ரஜினிபடம்
....அன்று பார்த்தது கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

அழ. வள்ளியப்ப நினைவரங்கம். பாரதி கலைக்கழகம்.

Tuesday, June 05, 2012

இராஜ ராஜ சோழன்


ஒத்தவராய் மிக்கவராய் இன்று நாள்வரை - இங்கு
ஒருவரையும் காணாமல் உலகு போற்றவே
பத்து நூறு ஆண்டுகளின் முன்பு தோன்றினன். - இன்றும்
பாரதத்தின் வரலாற்றில் நின்று வாழ்கிறான்.

வேங்கைநாடு, கங்கபாடி, ஈழமண்டலம் - மற்றும்
விளங்குபுகழ்க் கலிங்கமோடு ரெட்ட பாடியும்
தாங்கிநின்ற மன்னர்களின் மகுடம் தேய்த்தவன். - சோழன்
தரணியெலாம் தன்புகழைப் பாட வைத்தவன்.

விண்ணுயரம் கல்லுயர்த்தி விந்தை காட்டினான் - வாழ்வில்
வீழ்ந்தவர்க்கு வேலையீந்து சோறு மூட்டினான்.
கண்கவரும் எழிலுருவில் கோவில் கட்டினான் - மண்ணில்
கயிலையாளும் ஈசனுக்குக் கவரி வீசினான்.

கலையுயரப் பிறந்தசிவ பாத சேகரன் - சிற்பக்
கலைஞனுக்காய் இலைச்சுருளின் ஓலை தாங்கினான்.
தலைவனெனும் நிலைமறந்தே ஒருவன் வாயுமிழ் - எச்சில்
தம்பலத்தை வாங்குதற்குத் தாழி ஏந்தினான்.

திருமுறையை முயன்றுகண்டு மீட்டெ டுத்தவன் - இறைவன்
திருமுன்பு பாடுமுறை நாட்டி வைத்தவன்.
பெருஉடையார் பக்தனெனப் போற்ற நின்றவன் - அதனைப்
பெருமையுடன் நான் பாடும் பாட்டில் நின்றவன்.

வரமா? சாபமா?


கட்புல னாகாக் கானின் மறைவிடம்
உட்புகு புலியை ஓசையின் வழியே,
வெறுந்திசை அம்பை விடுத்து வீழ்த்திடும்
திறனுடை வீரன் தயரதன். ஒருநாள்
அந்தக முதியவர் அடைதுயர் பொறாது,
தந்தையின் தாகம் தணித்திட முனைந்து,
மலைவழிச் சுனைநீர் மானின மருந்த,
சிலநொடி தயங்கிச் சேந்தினன் மைந்தன்.
குடவாய் நுழைந்த குடிநீ ரோசை
இடர்வரக் கூவி இரைந்தழைத் ததுவோ?
களிரின் பிளிறலாய்க் கருதிய வேந்தன்
ஒலியின் திசையில் ஒருசர மெய்தனன்.
வேதியன் மகனும் விழ்ந்துடன் இறந்தனன்.
ஆதியின் கணக்கை அறிந்தவர் உளரோ?
"மகனைப் பிரிந்துநான் மனத்துய ரடைந்ததின்
நிகரொரு துயரம் நினக்கும் வருமென",
'துணிவொடு மரசனைத் தூற்றி விடுத்த
முனிவரின் சாபம் முற்றவும் நிகழுமேல்,
வேண்டும் மகவென விரத மிருந்ததும்
ஆண்டு பலவாய் ஆயிரம் நோற்றதும்
பிறவும் வீணிலை. மகவென ஒன்று
பிறந்தபின் தானே பிரிவது நிகழும்?'
பாபம் செய்ததிற் பதறிய மனது
சாபமே வரமெனிற் சரியென் றேற்றது.
பின்னரந் நிகழ்வினைப் பேசிடுங் கம்பன்,
கண்ணிலா வேதியன், கைப்பொரு ளென்னவே
பெற்ற மைந்தனை யிழந்தங்(கு)
உற்ற துயரினை உவமையாக் கினனே!


"கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்
கடுந்துயரால் காலவேலான்."  - கம்பன்


பாரதி கலைக்கழகக் கம்பன் விழா (17.7.2011)

Monday, June 04, 2012

வேண்டும்

வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.


சின்னதாய் வீசிய காற்றில்
...சிறகது ஒடிந்ததைப் போல்
முன்னமே உடைந்து தொங்கும்
...மூடிட முடியா தான
சன்னலின் கதவுக் கீல்கள்
...சரிவரப் பொருத்த வேண்டும்.
மின்னலும் மழையும் வந்தால்
...மூடிட முடிய வேண்டும்.                             (வாரத்தில்....)


புத்தகம் படித்த வற்றைப்
...புதுவிடம் மற்றி வைத்து
எத்தனை இடர்கள்? தேடி
...எடுப்பதில் நேரம் வீணே.
அத்தனை நூலும் சேர்த்து
...அழகுற எண்க ளிட்டு'
மொத்தமாய் அடுக்கி வைத்தல்
...முக்கியம். நேரம் வேண்டும்.                        (வாரத்தில்....)


கொடுத்தகை மாற்றை வாங்கக்
...குன்றத்தூர் போக வேண்டும்.
உடுத்ததில் உதிர்ந்த பொத்தான்
...உடைகளில் தைக்க வேண்டும்.
படித்ததாள் இதழ்கள் விற்றுப்
...பணமென வாக்க வேண்டும்.
விடுமறை ஞாயி றன்றே
...விரைந்திவை செய்ய வேண்டும். 


வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.         
பாரதிபேர்க் கழகத் துக்கும்
...பாட்டொன்று எழுத வேண்டும்.
யாரிவர் என்றே கேட்டு
...யாவரும் புகழ வேண்டும்.

பாரதி கலைக்கழகம் 59ம் ஆண்டுவிழா (26.12.2010)

Sunday, June 03, 2012

கம்பன் கவியே கவி


மன்ன னுயிர்த்தே மலரு முலகென்ற
முன்னவரின் சொல்மாற்றி மன்னனுடல் - மண்ணுயிரின்
கும்பல் உரையுமொரு கூடெனவே கூறழகுக்
கம்பன் கவியே கவி.

வல்லரக்கி நெஞ்சின் வலியுருவி நல்லபொருள்
புல்லருக்குச் சொன்னதெனப் போய்ப்பின்னும் - வல்லவனின்
அம்பு மலைமரமண் என்றுருவிற் றென்றானே!
கம்பன் கவியே கவி.

ஆகுமோ? நல்லுயிர யோத்திநிற்கத் தானுடல்
ஏகிவே றோரிட மெய்ததாய்க் - கேகயம்
தம்பி பரதன் தனிச்செல வைச்சொன்ன
கம்பன் கவியே கவி.

மையோ மரகதமோ மாமுகிலோ வென்றதன்பின்
ஐயோ வெனுமெதுகை ஆழ்பொருளாய் - மெய்யாயவ்
அம்புயை கோனின் அழியா வழகுறைத்த
கம்பன் கவியே கவி.

சவியுறு தண்ணொழுக்கச் சான்றோர் தமிழின்
கவியெனக்கோ தாவரியைக் கூறும் - கவியழகின்
சம்பி ரதத்தோடு சாற்றுவதற் கீடேது?
கம்பன் கவியே கவி.

மாதெனவே கொண்ட மயக்குமுரு சூர்ப்பணகை
பாதநடை கற்பனையாய்ப் பாடியதோ? - ஏதமிலாச்
செம்பொற் சிலம்பொலியின் சந்தம் செவிகேட்கும்
கம்பன் கவியே கவி.

சித்திரத்துத் தாமரையும் சீராமன் நன்முகமும்
ஒத்ததெனச் சொன்ன உயர்பொருள்போல் - இத்தரையில்
எம்புலவர் மற்றோ ரெவரும் நவின்றதிலை
கம்பன் கவியே கவி.

சொன்ன உடல்வற்றிச் சோர்ந்திருக்கச் சீதையவள்
கண்கொண் டடையாளம் கண்டதனைக் - 'கண்டே'னென்
றெம்பெரு மானின்முன் ஏந்தல் மொழிந்தனனாம்.
கம்பன் கவியே கவி.

கார்முகிலிற் கூடக் கமலம் மலர்ந்ததெனல்
பேரறமும் கார்நிறமே போலுமெனல் - பேரறிஞர்
தம்புலமை காட்டுந் திறமன்றோ? செந்தமிழிற்
கம்பன் கவியே கவி.

நாளைவா போர்க்கென்று நல்கியதால் வள்ளலோ?நின்
தாளைநான் இன்றடைந்தேன் தஞ்சமெனில்- நாளையே
அம்பலிலாக் கோசலமே ஆகு மவர்கன்றோ?
கம்பன் கவியே கவி.

Saturday, June 02, 2012

நன்றியில் செல்வம்

தன்னையண்டி வந்த வர்க்குத் தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்று த(ன்)நுகர்வு மின்றி நாளும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தே என்னபயனு மின்றி யிந்த
மண்ணில் வாழ்ந்து மாய்கிற மனிதர் செல்வ ரல்லவே!

குறள்:
 கொடுப்பதூவும் துய்ப்பதூவு மில்லார்க் கடுக்கிய
 கோடியுண் டாயினும் இல்.

இன்மையாலே வாடு வோர்க்கிங் கில்லையென்று வைத்த செல்வம்
மண்ணுளோரில் ஒப்பி லாது மன்னுநற் குணங்க ளுள்ள
பெண்ணொருத்தி நாத னின்றிப் பேணலற்று மூப்ப தாகி
மின்னையன்று ஒத்த தான மேனிவீணாய் ஆவ தொக்கும்.

குறள்:
அற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஓடியாடி வழ்வி லென்றும் ஓய்தலின்றிச் சேர்த்த செல்வம்
கோடிகோடி யான போதும் கொஞ்சமேனும் ஈத லாற்ற
நாடிடாத பேரு டம்பு நல்குகின்ற தேது மின்றி
வாடுமாறு பூமி தாங்க வாழ்தலிங்கு வாழ்த லாமோ?

குறள்:
ஈட்டமிவறி யிசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.


இன்மையாலே வாடு வோர்க்கோ ரீதலில்லை யாத லாலும்
இன்பவாழ்வுந் தேடி யோர்க்கிங் கில்லையென்று மாவ தாலும்
எண்ணிலாத துயரு ழந்தே ஈட்டிவைத்த தான செல்வம்
நன்றியற்ற செல்வ மென்று நவின்ற துண்மை யுண்மையே!


பாரதி கலைக்கழகம்- திருக்குறள் விழா. June 2009.