Tuesday, November 20, 2012

நெருப்புடன் ஒரு நேர்முகம்

நெருப்புடன் ஒரு நேர்முகம்
நெருப்பினை யொருநாள் நேர்முகங்காண
விருப்புட னழைத்து விடைதரக் கேட்டேன்.

1. இருமனம் இணையும் திருமண நிகழ்வில்
ஒருமுது பார்ப்பான் உரைமறை நடுவில்
சேமம் செப்பச் செய்சடங் கதனில்
ஓமத் தீயென உருக்கொடு வந்தனை.
கண்ணகி கோவலன் கைத்தலம் பற்றி
உன்னைத் தொழுதே உடன்வலம் வந்தனர்.
எண்ணிலார் காட்சியை இருந்து
கண்டவர் நோன்பினைக் கவிகளே வியப்பதேன்?

அரசவை வாழ்வும் அத்தனை இன்பமும்
துறந்தவர் வியக்கும் திருமணக் காட்சியில்,
கனலெனும் கற்பினள் அந்தண ராக்கும்
மணவினை ஓம மாகிய
அனலினை வணங்கிய தற்புதந் தானே?


2. கோவலன் பிரிந்து குலந்தரு வான்பொருள்
யாவையும் தொலைந்தே இலம்பா டடைந்ததும்,
தீதறு கண்ணகி தன்துணை பிரிய
தாதவிழ் புரிகுழல் மாதவி சேர்ந்ததும்,
அறவோர்க் களித்தலும், அந்தண ரோம்பலும்
பிறவுள மனையறப் பெருங்கட னிழந்ததும்,
மனையறம் போற்றியோர் வாழ்வில்
வினைவிளை யாடிய வேளையி னாலா?

ஆடலாற் சேர்ந்தவர் அணங்கின் யாழிசைப்
பாடலாற் பிறிந்ததும் பழவினைப் பயனே!


3. கனிகை நீங்கிக் கண்ணகி சேர்ந்து
வணிக மியற்றி வாழ நினைத்து
எய்திய மதுரை எழில்மிகு வீதியில்
செய்தொழில் மிக்க சிலம்பினை விற்கப்
பொய்த்தொழிற் கொல்லன் புரிதீ வினையால்
இலக்கண முறைமையில் இருந்தோன்
கொலைப்பட நேர்ந்தது கொடுமை யன்றோ?

ஆம்.


 4. கண்ணகி காவியத்தில் உன்பங் கென்ன?

உன்னவன் நல்லவன் என்றொலித்த செங்கதிரும்
தென்னவன் கோன்முறை தீதென்ற வாதமும்
கண்ணகி மார்பில் கனன்று பெருநகர்
உண்டதும் தீயென் றுணர்.


5. தரிக்க முடியாத துயரென வருமெனில்
எரிக்க முயல்வது இயல்பென வாமோ?

'சொல்லினாற் சுடுவேன்' என்று
..சொன்னவள் கணவன் வெற்றி
வில்லுடை யாற்றற் கிழிவு
..விளைந்திடு மென்று விட்டாள்.
எல்லையுள் நின்று சீரி
..எரிதழல் மண்டச் செய்தாள்
நல்லது செய்தா ளென்று
..நவின்றிட லாமோ? சொல்நீ!


'நெருப்பெனுங் கற்பில் மிக்க
..நெறியினில் நின்ற தெய்வத்
துருவினைப் பிழைத்த நாளில்
..ஒருதுயர் நகருற் றழிய
எரித்திடும் ஏவ லொன்றால்
.. எனக்கிங்கு வேலை யுண்டு
பிரித்துநீ சொல்வாய் உன்னால்
..பிழைப்பவ ரெவருண் டெ'ன்றேன்

'மூத்தவர் குழந்தை யாவினம்
..முப்புரி யந்தணர் பத்தினி
பார்த்து நல்லரை விட்டுநீ
..பாயு மெரியழல் பரப்'பென
தீத்திற மழித்து மாநகர்
..திருத்தி நோயினை யொழித்தனள்.
ஆத்திரத் தினாலிது வாகுமா?
..அறிவி லாருரை கேட்பயோ?

'மீண்டு மொருநாள் சந்திப்போம்
மிகுந்த பலவும் சிந்திப்போம்'
என்று கூறி நேரமாயிற்றென்று நெருப்பு விடைபெற்றது.
நன்றி கூறி நானும் நகர்ந்தேன்.

பாரதி கலைக்கழகம்.  சிலப்பதிகார விழா.
தலைமைக் கவிதை.   - மே. 2010.

No comments: