Friday, May 30, 2014

கோசல நாடுடை வள்ளல்



கையினில் படைக்கல மேதுமின்றிக்
...களந்தனில் முறியப் போட்டு
மெய்யெலாம் சரம்பொதி புண்களாகி
...மிகுதியாய்க் குருதி சோர
கையறு நிலையினில், தோல்விகண்டு
...கலங்கிய நெஞ்சத் தோடு
செய்செய லறிந்திடா ராவணன்றன்
...சிரமது தாழ நின்றான்.

போரறங் கருதிய ராமனும்போர்
...புரிந்திட இன்று போய்ப்பின்
வேறருங் கலமுட னிங்குமீண்டும்
...வருகநீ நாளை யென்று
கூறின னெனுமிடம் கம்பனேனோ
...கமுகினில் வாளை தாவும்
பாரினில் வளமிகு கோசலத்தைப்
...புரந்திடும் வள்ளல் என்றான்.

வீடணன் சரணென வந்துமுன்னர்
...வீழ்ந்ததும் நல்லி லங்கை
நாடதை அவர்க்கென ஈந்ததன்பின்
...நசையுடன் இன்றே தன்னை
நாடி'யுன் சரண்'எனில் ராவணர்க்கு
...நலமுற நல்க ராமன்
நாடொடு கொடையுளம் கொண்டதன்மை
...நயத்தொடு சொன்ன தன்றோ?


ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனன் இன்றுபோய்ப் போர்க்கு
நாளைவா வெனநல்கினன் நாகிளங் கமுகின்
வாளைதா வுறுகோசல நாடுடை வள்ளல்   -கம்பன்

காளை யிராவணன் கையறவிற் காற்றாது
நாளைவா போர்க்கென்று நல்கினதன் தாளையன்றே
சார்ந்துபொறை வேண்டினனேல் தாசரதி கோசலப்பேர்
ஆர்ந்தவள நாடரக்கற் காம்     -திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம். சென்னை. 22.7.2012.

Wednesday, May 07, 2014

தமிழுக்கு அமுதென்று பேர்



வீட்டுப் பொறுப்பெனும் பாரம் - கொஞ்சம்
விட்டு நலம்பெற வேண்டி,
பாட்டு தருஞ்சுவை நாடி - தமிழ்
பாடும் கவிபலர் கூடும்
கூட்டம் நடைபெறும் மன்றில் - நானும்
கொஞ்சம் தமிழமு துண்பேன்!
வேட்டு வெடித்திடும் வீட்டில் - எனினும்
வேறொன் றதற்கிணை யாமோ?

நேற்று நடந்ததோர் மன்றின் - நிகழ்வு
நெஞ்சி லலையிடும் போது
ஆற்றல் குறைந்தது மாறி - தேவர்
அமுது பருகிய தென்ன
ஊற்றுக் கிளம்பிடும் சக்தி - மேலும்
உணர்வு முயர்வுறு மாங்கே.
ஆற்றல் மிகுந்தமிழ் அமுதே! - அதிலோர்
ஐய மிலையெனச் சொல்வேன்.

(சென்னை,வாணுவம் பேட்டை,
 திருவள்ளுவர் இலக்கியமன்றத்தில் பாடியது.)