பல்லவி உடையவர் திருவடி நினைமனமே – உன் உடனுறை துணையென அனுதினமே. .....
( உடையவர் ...
அனுபல்லவி தடையென உளபெரும் புலனுணும் போகம் விடைபெறும். இருவினை கடிதலும் ஆகும் ....(உடையவர்... . சரணம்:1 உடலெடுத் தெடுத்துயிர் உழலுத லின்றி வருதுயர்ப் பெருங்கட லலைகளைத் தாண்டி கடந்திடு புணையதில் கரையினிற் சேர்ந்து கடையரும் விடுதலை பெற லெளி தாகும். ...(உடையவர்... சரணம்:2 நரகினிற் புகும்நிலை தனக்கெனும் போதும் நலமிகு ரகசியம் குருஉரை மீறி பிறருயர் நிலைபெற, செவிபடச் சேர்த்தோன் பெருகருட் கருணையின் திருஉரு வான ... (உடையவர்... -- அ. இராஜகோபாலன் அன்புப் பாலம். ஏப். 2018. ------------------------------------------------------------------------ ராகம்: சாருகேசி தாளம்: ஆதி
பல்லவி
சிலைரூப நிலைமாறிக் குழலூதியே - கண்ணா செவியார ஒருகீதம் நீபாடுவாய்.... (சிலை ...) அனுபல்லவி தலைசேர்ந்த மயிற்பீலி அசைந்தாடவே -தங்கத் திருமேனி அலங்கார எழில்கூடியே ...(சிலை...) சரணம்: 1 துளைமீது விரலோடி விளையாடவும் -தோயும் விழிகோடி இடம்மாறி வலமாகவும் களையான இதழ்கூடிக் காற்றூதவும் - கலை கனிந்தூறு தேனாறு செவிபாயவும் .... (சிலை. .
சரணம்: 2
செயற்பால தீதென்றே அறியாதவர் -சேர்க்கும் செடியாய வினைதீர்க்கும் அருளாளனே! கயலாற்றின் பொழில்சூழ்ந்த கரைமேலதாய்க் - காணும்
எதிர்க்கோட்டை யுறைவேணு கோபாலனே!
அ. இராஜகோபாலன்.
---------------------------------------------------------------------- 3. திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்.
ராகம்: சஹானா தாளம்: ஆதி
பல்லவி எனக்கிவை நீ அருள்வாய்! தாயே! தயாநிதியே! ...(எனக்கிவை) அநு பல்லவி தனக்கிணை இல்லாத புல்லையின் நாயகன் தனித் துணை நீயே! தாமரை யாரணங்கே! சரணம் 1 வேதப் பொருளுணரும் ஞானமில்லை. நிற்க வேண்டிய நெறிமுறையைக் கற்றதில் நின்றதில்லை. ஏது மிலாதார்க்கும் இரங்கிடுவாய். இந்த ஏழையின் வேண்டலையும் ஏற்றிடுவாய் அம்மா. (எனக்கிவை.. சரணம் 2 உள்ளவரை மனதில் உறைந்திடுவாய்.- என்றும் ஓதியுன் தாள்பணியும் உள்ளமும் நீ தருவாய்! கள்ள மனக் கசடைக் களைந்திடுவாய் -இனி கருப் புகாதபடி காத்திடுவாய் அம்மா! ...(எனக்கிவை)
பொருள்:
பல்லவி:
கருணைக் கடலாக இருக்கிற தாயே! (நான் வேண்டுகிற) இவைகளை எனக்குத் தந்தருள வேண்டும். அனுபல்லவி: தனக்கு ஒத்தவராக வேறொருவர் இல்லாத,(ஒப்பற்ற,) திருப்புல்லாணியின் நயகனான எம்பெருமான் ஆதிஜெகந்நாதனின் இனிய துணைவி நீ! தாமரை மலரின் மீது வீற்றிருப்பவளே!... சரணம்1 எனக்கு வேதங்களில் கூறப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றிய ஞானமில்லை. வாழும் நெறிமுறைகளைச் சொல்லும் சாஸ்திரங்களைக் கற்று, அதன்படி நடக்கவில்லை. எதுவுமே இன்றி மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்திலும் மனம் இரங்கி அருளக்கூடியவளான தாயே! என்னுடைய வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அம்மா! சரணம் 2 என் வாழ்நாள் முடியும் வரை என் மனதில் நீ அகலாது வீற்றிருக்க வேண்டும். என்றும் உன் புகழ் பாடி, உன் திருவடிகளில் பணிகிற மனப் பக்குவத்தைத் தரவேண்டும். மறைந்து, நிலைத்திருக்ககூடிய கசடுகளைக் களைந்து, என் மனதைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். இனி, இன்னொரு பிறவி இல்லாதபடி (மீண்டும் பிறப்பதற்காகக் கருவினிற் சேராதபடி) காத்திடவேண்டும் தாயே!.
அ. இராஜகோபாலன்.
------------------------------------------------------------------------------- காரியசித்தி ஆஞ்சநேயர் ராகம்: மாயாமாளவகெளளை தாளம்: ஆதி பல்லவி. காரிய சித்தி கைவருமே – மாருதியே! உமது பதமலர் தொழுவோர்க்கு…. (காரிய சித்தி…) அநுபல்லவி. நேரும் இடர் அழிய நெஞ்சு பலம் அடைய நேர்ந்த செயல் எதுவும் நினைந்த வகைமுடியும்….. (காரிய சித்தி…) சரணம் 1. வாரிதி தாண்டி நீ வான்வழி லங்கையில் சீதையைக் கண்டு அவள் தலைமணி கொண்டனை. பாதகர் நகரினைப் பாயெரி உய்த்தபின் ‘பார்த்தனன்’ என்ற உன் பதமலர் பணியக் …… (காரிய சித்தி….) சரணம் 2. வேருடன் மருந்துள மலையினைப் பறித்து வீழ்ந்தவர் எழும்படி விரைந்து கொணர்ந்தாய். ஆரியர் இளவலின் ஆருயிர் காத்த உன் நேர் இலையாய் உள நின்னடி பணியக்…….. (காரிய சித்தி….) பொருள்: செய்கிற காரியங்களில் வெற்றி கைகூடிவரும். மாருதியே! உமது திருவடிகளைத் தொழுபவர்களுக்கு, செய்கிற காரியங்களில் வெற்றி கைகூடிவரும். காரியங்களைச் செய்கிறபோது இடையில் ஏற்படும் கஷ்டங்கள் தாமாகவே விலகிப் போகும். நெஞ்சில் பயம் நீங்கி தைரியம் உண்டாகும். எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களும் நினைத்தபடியே நடந்து முடியும்படி எப்போதும் காரியங்களில் வெற்றி கைகூடிவரும். அலைகளோடு கூடிய பெரிய கடலை வானத்தில் பறந்து, தாண்டி இலங்கையை அடந்து சீதையைக் கண்டு, அவளிடத்தில் சூடாமணியைப் பெற்றாய். தீமையே வடிவான அரக்கருடைய நகரைத் தீயிட்டு அழித்துவிட்டுப் பின்னர், ராமனிடம் வந்து ’கண்டேன் சீதையை’ என்ற உன்னுடைய திருவடிகளைத் தொழுவோர்க்கு, செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி கைகூடிவரும். போர்க்களத்தில் மயங்கி விழுந்தவர்கள் உயிர்பெற்று எழும்படி, உயர்ந்த பச்சிலைகள் பலவற்றைத் தன்னிடத்தே கொண்ட, சஞ்ஜீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்தவன் நீ! தான் திரும்பி வருவதாகக் குறித்துச்சென்ற காலம் தவறிவிட்டதென்று, அக்னிப்ரவேசம் செய்து உயிர்விடக் கருதிய பரதனுக்கு, ராமன் வந்துகொண்டிருக்கிற செய்தியைத் தெரிவித்து பரதனது, உயிரைக் காத்த, நிகரானவராக, வேறெவரும் இல்லாதவராகிய உமது திருவடிகளைத் தொழுபவர்க்கு, செய்கிற காரியங்களில் வெற்றி கைகூடிவரும். அ. இராஜகோபாலன். |
இசைப் பாடல்கள்
Subscribe to:
Posts (Atom)
1 comment:
Hi thatha i am mithra... love all ur songs...������
Post a Comment