Friday, July 31, 2026

ப.கே. 76 மறைந்திடுமோ வீசும் மணம்

 உண்டகலந் தேய்க்க உடுத்த துணியலசக்

கொண்டுவழிந் தோடுங் கலங்கல்நீர் -- உண்டு

குறைந்திடுமோ வெண்மை கொடிமுல்லைக் கென்றும்

மறைந்திடுமோ வீசும் மணம்,

 

‘கொடிமுல்லைக் கென்றும்’ என்பது இடையணி விளக்கு. அதை முன்னுள்ள, ‘குறைந்திடுமோ வெண்மை’ என்பதோடும், பின்னுள்ள ‘மறைந்திடுமோ வீசும் மணம்’ என்பதோடும் தனித்தனியே கூட்டிப் படிக்க.


அக்டோபர் 2023 அமுதசுரபி இதழில் வெளியானது.

Tuesday, July 21, 2026

ப.கே. 75. வீறுகொண்ட பாரதியே வேர்

.

கள்ளுண்ணல் பொய்யுரைத்தல் கள்ளத் தனமிவற்றால்

எள்ளத் தகுநிலையை எய்தினோம் --- கொள்கையெலாம்

சேறுண்டு போனபினர் செய்முழக்கிற் கேதுபொருள்?

‘வீறுகொண்ட பாரதியே வேர்’

 

 .செப்டம்பர் 2023 அமுதசுரபி இதழில் வெளியானது.


Thursday, July 16, 2026

ப.கே. 74 சேட்டை சிறுவர் செயல் .

                       

கொண்டுவனம் சேர்த்ததுவும் கூன்முதுகில் முன்பொருநாள்

உண்டை விடுத்ததுவும் ஒன்றாமோ? --- எண்ணியொரு

கேட்டை விளைத்தல் கொடுமை. விளைவறியாச்

சேட்டை சிறுவர் செயல்.

 

ஈற்றடிக்கு எழுதியது

Saturday, July 04, 2026

ப.கே. 73. மனிதனாய் வாழ்வதே மாண்பு

 

நாய்க்குணமும் வஞ்ச நரிக்குறும்பும் கேடுமிகு

பேய்த்தனமும் இன்றேல் பிறர்பார்த்து  --  ‘வாய்த்த

சனியனிது’ என்றுரையார் சாபமிடார் இங்கு

மனிதனாய் வாழ்வதே மாண்பு

Saturday, June 27, 2026

திறமையின் திறவுகோல்

 

செய்முறை யறிந்தும் சேர்துணை இருந்தும்

கைமுதல் இருந்தும் காரியம் ஆகுமோ

எய்திய பயிற்சியும் இருந்துமென் பயனாம்

மெய்யுழைப் பதற்குள மிகுமனத் திடத்தொடு

எய்திய பிறவெலாம் இருந்திடிற் பயனுறும்

மெய்யினில் திறவுகோல் மிகுமனத் திடமே.


ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா

முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை-

_வெற்றியாளர்  தேர்வு பெற்றது.

Saturday, June 13, 2026

ப.கே. 72. வீட்டுக்கு வந்த விருந்து

 

  வாட்டமுடன் நிற்கும் வழியைப் பலகாலும்

நோட்டமிடும் வாரி வசைபொழியும் --- மாட்டிய

பூட்டு வரவேற்கும் போது வருந்துமே

வீட்டுக்கு வந்த விருந்து.

 

அமுதசுரபி அக்டோபர் 2022 இதழில்,ஈற்றடிக்கு எழுதியது. இரண்டாம் பரிசு பெற்றது.

ப.கே 71. வள்ளுவரை வாழ்த்தி வணங்கு

  

    வெள்ளைக் கலையோடு வேணியும்  வெண்ணீறும்

  உள்ளவுரு உள்ளத் துளதாகத் --- தெள்ளியதாய்

  விள்ளரிய வேத விழுப்பொருளைத் தந்ததிரு

  வள்ளுவரை வாழ்த்தி வணங்கு.


ஈற்றடிக்கு எழுதியது

Friday, May 15, 2026

ப. கே. 70. பாரதம் ஓங்கிடவே பாடு

 

ஈற்றடி; பாரதம் ஓங்கிடவே பாடு

 


பெற்ற புகழும் பெருவளமும் பண்பாடும்

உற்ற படியுரைக்க உள்ளாரார் --- மற்றதெது

நேரிதற் கில்லையதை நீயெழுது நம்நாடு

பாரதம் ஓங்கிடவே பாடு

ப.கே. 69. இளமையில் காதல் இனிது

 ஈற்றடி; இளமையில் காதல் இனிது

 

உண்ணுமுண வுக்கும் உடுக்கும் உடைக்குமே

எண்ணிச் செலவழித்தே ஏங்குபவர் --- எண்ணார்

வளமையொடு சுற்றமும் வாய்க்குமெனில் யார்க்கும்

இளமையில் காதல் இனிது.


     பிப். 2025 இலக்கியச்சோலை இதழில் வெளியானது

Saturday, May 02, 2026

ப.கே. 68 புத்தாண்டில் காண்போம் பொலிவு

 

செயலாற்றச் சோம்பிச் சிலநல்ல வற்றை

முயன்றுகை விட்டதுண்டு முன்பு – இயலாதாய்

எத்தாலும் ஆகா தெனநின்  றவைமுடித்துப்

புத்தாண்டில் காண்போம் பொலிவு.

 

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.

Saturday, March 28, 2026

ப.கே. 67. சிக்கல்களைத் தவிர்க்கும் சிக்னல்

  சாலைகளின் சந்திப்பில் சங்கடங்கள் தீர்ப்பதற்கு

வேலைசெயும் சிக்னல் விளக்குப்போல் வாழ்விலுமே

துன்பம் தவிர்த்திடத் தோன்றும் அடையாளம்.

நின்று செயல்படலே நன்று


கவிஞர்கள் கலைக்கூடம் முகநூல் குழுமத்தில் தேர்வு பெற்றது.

Sunday, March 22, 2026

ப.கே. 66. நாகாக்க என்றும் நயந்து

 

 பொய்யால் புரட்டால் புறப்பேச்சால் புன்சொல்லால்

மெய்யாய் உளதெதுவும் மாறாதே --- செய்வானேன்?

நோகாக்க, சொல்லழுக்கால் நாக்கழுக, வேண்டுவதா?

நாகாக்க என்றும் நயந்து.

Wednesday, February 25, 2026

தொட்டுவிடும் தூரம்

 

 எட்டிட இயலா திதுவென நினைத்து

விட்டு வெற்றியைப் பெற்றவர் யாருளர்?

நடைபெறும் எனநீ  நம்புவை ஆயின்

தடைகளுக் கிடையிலும் விடைபல காண்பை.

முற்றவும் முயன்று முடிகிற வரையில்

பற்றித் தொடர்ந்திடில் தொட்டிடு தூரம்.

வெற்றியுன் வசமாய் விரைவினில் ஆகுமே.

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா. முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- 

காட்சிப் படத்துக்கு எழுதியது. 10.2,2025.



Sunday, January 11, 2026

ப.கே. 65. கவனி இதுவே கணக்கு


 

        இருபக்கம் கர்ணம் இவைமீ தெழுதப்

        பெறுசதுரம் மூன்றில், பரப்பில் --- பெரிது,

        தவறின்றி முன்னிரண்டும் தாம்சேர்ந்த தாகும்.

        கவனி இதுவே கணக்கு.


         ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  மார்ச். 2022

        ஒரு செங்கோண முக்கோணத்தில், கர்ணத்தின் மீது வரைந்த       சதுரத்தின் பரப்பு, மற்ற இரண்டு பக்கங்களின் மீது வரைந்த     சதுரங்களின் மொத்தப் பரப்புக்குச் சமம். 


 

       

ப.கே. 64. வருங்காலத் திற்கென்று வை

  

      வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்

      இயலாத தாவ தியல்பே --- முயன்றே

      அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து

      வருங்காலத் திற்கென்று வை.

 

      ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஆக. 2021

ப.கே. 63. வாயாற் சுடுவார் வடை

 

   காசில்லை கையினில் கஞ்சி குடிக்கவழி

   யோசிக்க வேண்டி யிருப்பவர். --- பேசிடிலோ

   பாயாக வான்சுருட்டிப் பைக்குள் திணித்திடுவார்

   வாயாற் சுடுவார் வடை.

 

   ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஜுன் 2021

ப.கே. 62 நெஞ்சகமே கோவில் நினை

  

 

   கஞ்சத்தாள் கேள்வன் கழலிணையைப் பக்தியுடன்

   தஞ்சமெனப் பற்றியவர் தம்முளத்தே – மஞ்சமென

   நஞ்சரவிற் கண்வளரும் நாரணனே வந்துறைவன்

   நெஞ்சகமே கோவில் நினை.

 

    கஞ்சத்தாள்:  தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி

    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020