Friday, October 30, 2026

பசுமையின் பரவசம்

 வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும் 

வண்டுகளின் ரீங்காரம் மரங்கள் மீது 

ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்         

 ஓடைகளின் சலசலப்பும் தென்ற லாக

வீசுகின்ற மென்காற்றில் வயலின் கதிர்கள்          

 விளைக்கின்ற அலையாட்டம் மகிழ்வின் எல்லை

பேசுதற்கு இயலாத பசுமை கொள்ளும்                  

 பரவசத்தின் அடையாளம் பார்த்து ளோமே.


முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை

8 வரி - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். 14.3.2025



Saturday, October 24, 2026

ப.கே. 81 . இன்றைக்குப் போதும் இது.

 கொஞ்சம் பொருளீட்டிக் கொண்டுவர வக்கில்லை

அஞ்சுவகை கேட்கவாய் அஞ்சாதோ  ---- எஞ்சியதாய்

நின்றதற்கு நீரூற்றி நேற்றுவைத்த சோறுளது

இன்றைக்குப் போதும் இது


ஈற்றடிக்கு எழுதி, அமுதசுரபி ஜூலை 2024 இதழ் வெண்பாப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

         


ப.கே.80 சொல்லுக்குள் தேடல் சுகம்.



குன்று குடையாகக் கொண்டதுவும் காளியன்மேல் 
நின்றுநடம் ஆடியதும் நேரிலையாய் --- என்றென்றும
உள்ளத்தை ஈர்க்கும் உறைபொருளை ஆழ்வார்வாய்ச் 
சொல்லுக்குள் தேடல் சுகம்

(ஆழ்வார் வாய்ச்சொல் --  நம்மாழ்வார்  திருவாய்மொழி)

ஈற்றடிக்கு எழுதி, அமுதசுரபி ஜூன் 2024 இதழ் வெண்பாப் போட்டியில் முதற் பரிசு பெற்றது.

Monday, October 19, 2026

உள்ளிருக்க வந்தாய் உவந்து

 

 

 

வெள்ளைக் கமலத்துன் வீற்றிருப் பென்நெஞ்சைக்           

கொள்ளைதான் கொண்டதெனக் கூறுவனோ --- மெள்ளநீ 

கள்ளங் களைந்தெனது கல்நெஞ்சே கோயிலாய்

                        உள்ளிருக்க வந்தாய் உவந்து.




Saturday, October 17, 2026

ப.கே. 79. காலத்தை வென்ற கணம்

சன்னல் வழியிறங்கிச் சேற்றில் குதித்தகணம்

மண்ணில் மறுபிறவி மாளாதே --- எண்ணிலதே

பாலத்தைப் போயிடித்த பேருந்தில் வீற்றிருந்து

காலத்தை வென்ற கணம்.


ஈற்றடிக்கு எழுதியது அமுதசுரபி ஏப்ரல் 2024 இதழில் வெளியானது