Thursday, July 22, 2021
எப்படியும் ஆகத்தானே போகிறது?
Tuesday, July 20, 2021
எனக்கு அது உண்டு
Sunday, June 20, 2021
திருஉறை மார்ப!
பொருளே பெரிதாய்ப் புரிபா வமுடன்
புலனின் பநுகர் வதிலார் வமுளன்
அருளிச் செயலை வடவே தமதை
அறவே அறியா துளகீழ் நிலையன்
மனதா லுரையா லுளதே கமதால்
மதிமீ றியகா ரியமே புரியும்
எனதா யிரமா யிரமா னபிழை
எதுவா யினுமே இலையா யருள்வாய்
ஒருசக் கரமும் ஒலிசங் கதுவும்
உடையாய்! அழகே உருவா னவனே!
திருவே தனதாய் உறைமார் பினனே!
தொழுதேன் அடிசேர் கதிதந் தருளே!
Friday, April 30, 2021
நிழலும் மிதிக்கும் நிலை
உன்னதம்
போய்மறையும் உற்றதுணை விட்டகலும்
பின்னடைவு
கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி
அழலே
விதியென் றடங்கவும் வைக்கும்
நிழலும்
மிதிக்கும் நிலை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. Minnithazh 20.5.2019
Tuesday, April 20, 2021
எங்கும் நிறைந்தவன் தான்! (வினாவிடை)
வண்ணக் கலவையில்
தூரிகை தோய்த்திதை
வானில் வரைந்தவர் யார்?
மண்ணி லதன்நிழல்
நீரில் விழும்படி
மாண்புறச் செய்தது யார்?
\கண்ணைக் கவர்கிற
காட்சிகள் யாவிலும்
காணென நிற்பவன் தான்.
எண்ணத் துறைபவன்
எழில்வடி வானவன்
எங்கும் நிறைந்தவன் தான்.
மின்னிதழ் ஒன்றின்
படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.
10.9.2018.
Thursday, April 01, 2021
எக்காலத் தானும் இனிது
Sunday, January 24, 2021
துன்புற்று வாழ்தல் அரிது
காட்டிப்
பொருமையினைக் காரியங்கள் ஆற்றிடுவார்
போட்டி
தவிர்த்துப் பொருள்சேர்ப்பார். – ஈட்டியதில்
இன்புற்
றிரப்போர்க்கும் ஈந்துவப்பார் பாரிலவர்
துன்புற்று
வாழ்தல் அரிது.
ஈற்றடிக்கு எழுதியது. Tamiauthors.com Minnithazh 18.3.2019
Sunday, January 17, 2021
கைநிறையக் காசிருந்தக் கால்
கண்டபடி
கண்மேயும். காதிரண்டும் கேட்காது.
மண்டுதலைக்
கர்வம் மதியழிக்கும். – உண்டாகும்
பொய்யுறவும்
நட்பும் பொழுதழிக்கும். கீழோரின்
கைநிறையக்
காசிருந்தக் கால்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamil authors.com. Minnithazh 8.5.2019
Monday, December 28, 2020
புலியென்றும் தின்னுமோ புல்
வலிந்துசெயல்
கொள்ள வழங்குகிற லஞ்சம்
நலிந்திருந்தும்
நாடாதார் நல்லோர் – மலிந்து
கலிநின்றே
ஆடுமிக் காலத்தும் உண்டு.
புலியென்றும்
தின்னுமோ புல்?
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 29.4.2019
Sunday, December 27, 2020
புகழென்னும் போதைப் பொருள்
தலைக்கர்வம்
ஏற்றும். தகவற்றார் தாமே
விலைக்குப்
பெறுவிருதை வேண்டும். – அலைதல்
இகழ்வென்றும்
எண்ணா திரக்கவும் தூண்டும்.
புகழென்னும்
போதைப் பொருள்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. Minnithazh. 22.4.2019
Monday, December 14, 2020
கல்வி யழகே அழகு.
கற்றவரிற் பொய்யர்
கயவரொடு வீணரிவர்
பெற்றபொருட் பேரழகைப்
பேசுவதோ? – கற்றதெது?
நல்ல நெறியறிந்து
நிற்கை பிறழாதார்
கல்வி யழகே அழகு.
ஈற்றடிக்கு எழுதியது
Tamilauthors.com Minnithazh 8.4.2019
Friday, December 04, 2020
மானம் அழுங்க வரின்
மானம்
வருமானம் மண்ணில் இவையிரண்டில்
மானம்
பெரிதாய் மதித்திடுவார் – மேனிலையர்
காணப்
பலகோடி கைவரினும் வேண்டார்தம்
மானம்
அழுங்க வரின்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz 1.4.2019
Tuesday, November 10, 2020
அறவழியிலேயே அடைக
பிறர்போலப் பேரும்
பெருந்தனமும் வேண்டின்
அறவழியில் நின்றே
அடைக.
– பிறழாது
போனவழி நேர்மை
புகழ்சேர்க்கும்
அவ்வழியே
ஆனவரை செல்வ தறிவு.
Wednesday, October 21, 2020
இழந்தார் எனப்படுதல் இல்
உள்ள
இடமெரிய ஓரிரவில் கையூட்டுக்
கள்ளப்
பணங்கருகும் கண்முன்னே. – தள்ளி
இழந்ததனைத்
தாமென்றும் ஊரார்க் குரையார்
இழந்தா
ரெனப்படுதல் இல்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 11.3.2019
Sunday, October 18, 2020
மான முடையார் மதிப்பு
மான
அவமானம் மற்றுமுள்ள நன்னெறிகள்
பேணல்
மடமையெனப் பேசுகிறார். – காணுகிற
ஈன நிலையதனில்
எங்ஙனமே பெற்றிடுவார்
மான
முடையார் மதிப்பு?
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz 4.3.2019
Tuesday, September 29, 2020
புற்பனி பற்றுவிட் டாங்கு
பெற்றதெனச்
செல்வம் பெரிதளவிற் கொண்டவரைச்
சுற்றமெனத்
தாம்வந்து சூழ்ந்திருந்தார் – அற்றபினர்
பற்றில
ராய்விடுதற் பாரிற் பரிதியின்முன்
புற்பனி
பற்றுவிட் டாங்கு.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz. 11.2.2019
Friday, September 25, 2020
பாதமூலம் பற்றிலேன்…......
சங்கல்ப்பம் ஒன்றாலே
எதையும் செய்து
சாதிக்கும் வலிமையுளன் பரமன் என்பர்.
தங்கியவன் கையிருந்து
பணிகள் செய்யும்
திருவாழி தனையேவி னாலே போதும்
பொங்கிவரும் நீர்ச்சுனையில்
ஊர்ந்து செல்லும்
பூச்சியொரு முதலைபெரும் பகையாய் ஆமோ?
எங்கென்றோர் யானைகுரல்
கேட்டு வந்த
எளியவனின் திருப்பாதம் பற்ற வேண்டும்.
மெய்தீண்டித் திருமகளைத்
துயரில் உய்த்த
மிகக்கொடிய அபசாரம் கண்டு பொங்கி
எய்ததொரு அத்திரம்பின்
துரத்த ஓடி
எங்கேயும் துணைதனக்கா யானா ரின்றி
எய்தவனைச் சரணமென
வந்து வீழ்ந்தே
’எனைக்காக்க வேண்டு’மென்ற சயந்தன் அன்று
செய்தபிழை பொறுத்தவனை
வாழ வைத்த
செய்யதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.
தங்களையே தாம்காத்துக்
கொள்ளு கின்ற
தகவில்லாக் கற்றினங்கள் வாழ வேண்டிப்
பொங்குகின்ற பரிவோடு
தானே வந்து
புரிந்ததொரு ரக்ஷணத்தை மனதிற் கொண்டு
தங்கியிள்ள பாற்கடலும்
அரவி னணையும்
திருமகளின் உடனுறைவும் விட்டு நீங்கி
இங்குவந்து கானகத்தில்
கன்று மேய்த்த
எளியதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.
கங்கையினும் ஒருபடிமேல்
புனிதம் கொண்ட
காவிரிபாய் பொழில்சூழ்ந்த பதிய ரங்கம்.
அங்குதொண்ட ரடிப்பொடியார்
களிக்கு மாறே
அரவணையிற் பள்ளிகொண்ட கிடக்கை காட்டி
“எங்ஙனம்நான் மறந்தினியும்
வாழ்வேன்” இங்கே
எனும்படியாய்த் தன்னழகால் அரங்கன் ஈர்க்க
“எங்கள்மால் இறைவனவன்
ஈசன்” என்றே
ஏற்றவருக் காட்செய்யும் இதயம் கொண்டார்.
“போதெல்லாம் போதுதனைக்
கொண்டே யுன்றன்
பொன்னடியிற் புனையுதலைச் செய்த தில்லை.
தீதில்லா தொழிமொழியில்
தினமு முன்றன்
திருக்குணங்கள் செப்புதலைச் செய்த தில்லை.
காதலினாற் பெருகுமன்பு
காணா நெஞ்சிற்
கடியனாகி நிற்கின்றேன் ஆத லாலே
ஏதிலன்நான் ஏன்பிறந்தேன்?
இருக்கின் றேனே!”
என்றவர்தன் தாழ்நிலையைச் சிந்திக் கின்றார்.
திருமாலுக் குகந்ததிருத்
தலம்பி றக்கும்
திருவெனக்கே அமையவிலை. அத்த லத்தில்
ஒருகாணி கைங்கர்ய
நிலமுண் டாயின்
உயர்பணிக்காய் அங்கேகும் நன்மை யுண்டு.
ஒருசிலரங் குறவினராய்
வாழ்ந்தி ருந்தால்
உரிமையுடன் அவர்காணச் செல்லக் கூடும்.
ஒருவருமே முகமறிந்தா
ரில்லை யாக
உயர்ந்ததிருத் தலத்தொடர்பே இல்லை என்றும்
”கற்றினங்கள் மேய்ப்பதற்காய்
நடந்த பாதம்,
களிறுற்ற இடர்நீக்க வந்த பாதம்,
உற்றவராய்க் காப்பாற்ற
ஒருவ ரின்றி
ஓடிவந்து குற்றவாளி சயந்தன் அன்று
பற்றுகதி இதுவென்றே
வீழ்ந்த பாதம்,
பரமமூர்த்தி உன்பாதந் தன்னை இன்னும்
பற்றிலனே அரங்கா”வென்
றரற்றி நின்ற
பாடல்களின் பொருள்கொஞ்சம் முயன்று சொன்னேன்.
தேவகான இன்னிசைச்
சங்கம், நன்மங்கலம். 30.12.2018.
Thursday, September 10, 2020
அல்லல் களைவ தறம்
வறுமையினால் நோயால்
வயதின் முதிர்வாற்
பெறுதுயரால் வாடும்
பிறர்க்கே – உறுதுணையாய்
இல்லை யெனாதே இயன்றவரை
யுதவி
அல்லல் களைவ தறம்
ஈற்றடிக்கு எழுதியது.
Tamilauthors.com Minnithazh 4.2.2019
Friday, September 04, 2020
வீர சுதந்திரம்
பிறந்தவ ரனைவரு
மென்றோ ஒருநாள்
இறந்தே யழிவ தியற்கை
யாதலின்,
ஊன உடலிதற் கூறே
வரினும்
பேணு முன்மையிற்
பிறழ்தலை யறியார்.
மானந் துறந்து மண்ணிதி
லின்பங்
காண முயன்று கயமையில்
வீழ்ந்தே
ஈனத் தொண்டை யியற்றி
யுயிர்தனைப்
பேணி வாழ்தல் பெரிதென
வெண்ணார்.
உண்மையின் மாறா
துறுதுயர் கருதா
வன்மையராகி வருபோர்
நிகழ்த்தி,
ஈனத்தொண்டிற் கிடமளி
யாது
மானம் பேணும் மாண்பத
னாலதை
'வீர சுதந்திர' மென்று
பாரதி போற்றிப்
பாடின னன்றோ?