Thursday, October 03, 2024

படித்ததும் கேட்டதும் – 38

 


 

கூரிய பார்வை குறிப்போ டியங்குதிறன்

காரியத்திற் கண்ணிவற்றைக் கண்டறிவாய் --- நேரிழையே

உச்சியிற் கட்டடத்தில் உட்கார்ந்த காகமதை

மெச்சிப் பருந்தென்னல் மிகை.


“A person becomes great not by sitting on some high seat, but through higher qualities. A crow does not become eagle simply by sitting on the top of a palatial building”   -- Chanakya

Vikasa Mantras, VIHE Ramakrishna Math, Hyderabad 

Monday, September 23, 2024

 

யார் மகிழ்வெய்த ஆழ்கடல்

 

கார்மகிழ் வெய்திடக் காற்றலை வீசும் ககனவெளி

நீர்மகிழ்ந் தோடிட நீள்கரை கொண்ட நிலத்துவழி

நார்மகிழ் வெய்திட நறுமலர் ஈகிற நந்தவனம்

யார்மகிழ் வெய்த அழகிய மீனுள ஆழ்கடலே?

 

சந்தவசந்தத்தில் எழுதிய கட்டளைக்கலித்தறை 8.10.2018

Friday, July 05, 2024

நின்ற வாசல் நிலையினாளே!

 


(நிலைமண்டில நேரிசை ஆசிரியப்பா)

 

நெய்தல்

நிலம்; கடலும் கடல்சார்ந்த இடமும்.

மக்கள்; பரதவர், பரத்தியர்

ஒழுக்கம்; இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

மரம்; புன்னை, ஞாழல்

உயிரினம்; கடற்காகம், சுறா மற்றும் கடல் மீன்கள்.

 

 

 

புன்னை நிழலில் போக்கிய பொழுதுகள்

எண்ணி மகிழ எத்தனை யுண்டு.

ஒன்றும் மனதில் உளதிலை யாக

அன்று மாலை அவன்பிரி வுரைத்த,

ஒன்றே நின்றவள் உயிர்வதை செய்தது.

கன்னந் தொட்ட கைவிரல் பற்றி

அறுதினம் மட்டும் அலைமேற் செல்ல

உறுதி யுரைத்த தொருபொய் யெனவாய்,

அறுதின மிருமுறை யாயின பின்னும்

வருவது நிகழும் வாய்ப்பில தாக .....

காயும்  உணங்கலைக் காக முண்பதை

நேயன் நினைப்பில் நேரிழை காணாள்.

உணக்கிய மீனை ஊரில் விற்கையில்

கணக்கு மறந்து கைமுத லிழந்தாள்.

இன்று வருவன் இன்று வருவன்

என்றே தினமும் எதிர்பார்ப் பவளாய்க் .....

குழம்பி லயிரை குறையா திட்டுக்

கொழுமீன் பொரியல் கூடச் செய்து

வெண்சோ றாக்கி வைத்திருக் கின்றாள்

இன்றவன் வருகை நோக்கி

நின்ற வாசல் நிலையி னாளே!



உணங்கல்; -- உப்பிட்டுக் காயவைத்த மீன்

அயிரை, கொழுமீன் ஆகியவை மீன் வகைகள்.

 

 


Thursday, May 23, 2024

கொண்டவ னடைந்த குறுசினந் தீர...

  ( நிலை மண்டில நேரிசை ஆசிரியப்பா.)


மருதம்

இடம்; வயலும் வயல்சார்ந்த இடமும்.

மக்கள்; உழவர், உழத்தியர்

ஒழுக்கம்; ஊடலும் ஊடல் நிமித்தமும்

உயிரினம்; நாரை, அன்னம், நண்டு

 

 

கதிரெழு முன்னர் கடன்கள் முடித்து

பொதுவெளி வந்து போய்வரல் சுட்டும்

அவனது செயலி லன்றுள மாற்றம்

தவறுள தாகத் தானுணர்ந் தவனின்

அதிவிரை வறியா தவள்முகம் வினவ,

பதிலுரை யின்றிப் பணிமேற் சென்றனன்....

வாய்ச்சொல் மீறி வரம்பில தாகப்

போய்விடு மென்று புறமே திரும்பி,

முன்தின மிரவில் முகங்கொட மறுத்த,

தன்செயல் வருத்தத் தளர்ந்தா ளாகி,

நண்டி னிருப்பிடம் நாரை யிரண்டு

கண்ட களிப்பிற் கூடி நடந்து,

உண்டது கண்டு முவந்திள லாகக்

கொண்டவ னடைந்த குறுசின முறுத்த,

கரத்துள கலயங் கசியா தாக

வரப்பினில் நடந்து வழிமடை தாண்டினள்.....

உழவுப் பணியி லுடற்சோர் வுற்று,

நிழல்மரஞ் சேரும் நேரம். கொழுநன்

குற்றி யொட்டிய புற்களைக் கையால்

பற்றிக் களைந்து நிமிர,

நெற்றி துடைக்க நீட்டினள் முந்தியே!

 

 

 

 

குற்றி -– வயலினிடையே முன்பிருந்த மரத்தின் அடித் தூர்.

குற்றியடைந்த புல் உழவர் உழுபடைக்கு ஒல்கா தாதலின், கைகளால் பற்றிக் களைந்தனன்.

முந்தி -- முன்றானை.

 

ஐந்திணை இருநூற்றைம்பது நூலில் தொகுக்கப்பட்டு வெளியானது.

Saturday, May 18, 2024

யாரிடத்துத் தாமுரைக்கப் போம்

 


 

    முறுக்கொடு சீடை முழுக்கரும்பும் முன்னர்

நொறுக்கிச் சுவைத்ததனால் நோவைப் – பொறுத்திடுவோம்

வேரின்றிக் கெட்டு விழும்பற்கள் தம்துயரை

யாரிடத்துத் தாமுரைக்கப் போம்.


 

சந்தவசந்தம் 1.7.2019 பல்வலி என்ற இலந்தையார் இழையில்.

 

Monday, May 13, 2024

கண்ணீரில் தோய்ந்த கதை.

 


 

காத லறங்காத்த கண்ணகி தன்துணையை

ஏதும் தவறிழையாள் ஏனிழந்தாள். --- மாதுகதை

மண்ணிலுளோர் கேட்டு மயங்கி மனமுருகிக்

கண்ணீரில் தோய்ந்த கதை.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com March 2020

கூட்டுக் குடும்பம்

 


 

வீட்டிற் குடிவருவோர் வேறெவரும் வேண்டாம்

கூட்டுக் குடும்பமெனிற் கூறென்றேன். --- கூட்டிவந்து

கூட்டே உணவென்று கொள்ளும் குடும்பத்தைக்

காட்டி நகைத்தானே காண்.

 

சந்தவசந்தம் 29.4.2019

ஆடித்தேர்

 


 

நோட்டட்டை குச்சிகள் நூல்கொண்டு தேர்செய்தான்

ஓட்டையிட்ட மூடி உருள்வதற்கு – ஓட்டினான்

ஆடியது ஆடியது அங்கங்கே சாய்ந்தது

ஆடித்தேர் என்றான் அவன்.

 

சந்தவசந்தம் 27.4.2019

Friday, May 10, 2024

வாழாதார்க் கில்லை வரம்

 

 பெறத்தக்க மூன்றில் பொருளொடு மின்பம்
 அறத்தின் வழியே அடைக. -- அறநெறியில், 
தாழாதார்க் குண்டு தகவுடைமை. அவ்வழியில் 
வாழாதார்க் கில்லை வரம்.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthers.com. Minnithazh, Feb. 2019

Sunday, January 08, 2023

படித்ததும் கேட்டதும் 37

 


பெரிதாய் அனுபவம்முன் பெற்றிருப்பார் சூழற்குச்

சரியாய்த் தீர்வறிந்து செய்வார் -  அறியார்

எனும்நிலையில் தீர்வால் எழுதவறே எய்தும்

அனுபவமாய் ஆகிடுமே ஆங்கு.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Sunday, March 27, 2022

படித்ததும் கேட்டதும் – 36

 

வெற்றிக் கருகிருந்தும் வீணிதுவென் றேமுயற்சி

அற்றுக்கை விட்டோரிங் காயிரவர். – பற்றித்

தொடரும் முயற்சியெனில் தோல்வியிலை வெற்றி

அடையும் வழியே அது.

Friday, January 07, 2022

படித்ததும் கேட்டதும் – 35

 

 வங்கி இருப்புயர வாழ்தல் அறிவுடைமை

இங்குபயன் காணார் அறிவிலரே! -  எங்ஙனம்

தங்கிய திங்கிருக்கத் தாமிறந்து போவரேல்

அங்கவருக் காகும் அது?.

 

கருத்து; French proverb.

Sunday, January 02, 2022

படித்ததும் கேட்டதும் – 34

 


 

என்னிலுந் தாழ்ந்தவராய் யாருமிலை யென்பதுடன்

என்னி லுயர்ந்து மெவருமிலை -  மண்ணிதனில்

ஒப்பிலனா யுள்ளேன் உளபிறர்போல் நானுமென

எப்போது மெண்ணி யிரு.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)












 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Thursday, December 30, 2021

படித்ததும் கேட்டதும் - 33



வேறு தருந்தகுதி வாயார் அறிவுரைகள்

நூறு தரவருவார் நொந்தகல. – யாரும்

வருமுரைகள் வேண்டார் விரும்பாரோ வாய்ப்பின்

தருபவராய்த் தாமிருந்தால் தான்.


(கருத்து; Vikasa Mantras, VIHE Ramakrishna Math. Hyderabad)

Saturday, December 25, 2021

 

சிறுவர் உலகம்

 

குண்டுக் கோலி சுண்டிய டித்தலும்

     குத்திய பம்பரம் சுற்றிட வைத்தலும்

தண்டுக் கில்லி தட்டிய ளத்தலும்

     தாண்டலு மோடலும் தாவியே குதித்தலும்

நொண்டி யடித்தலும் நூல்பிடித் தாடலும்

     நின்று, சிறுவர் நிலையா யமர்ந்துகைக்

கொண்டசெல் பேசியைக் குணிந்துகண் பார்த்திரு

     கைவிர லழுத்தலே ஆட்டமென் றானதே!

     .

 

உடலதன் நலத்தோ டுளநலம் பேணிட

     உறுதுணை யானதென் றொன்றிலை யானதே!.

தொடுதிரைப் பேசியில் தொலையுருக் காட்சியில்

     தரமிலாத் தொடர்கள் வலைவிளை யாட்டுகள்

விடுபட முடியா தீர்ப்பினி லிவற்றினை

     விரும்புநம் சிறுவரை விலக்குத லெங்ஙனம்?

கெடுதலை யுணராக் கடையரின் செயல்களின்

     கொடுமையா லழியுது குழந்தைக ளுலகமே!

 

அழ. வள்ளியப்பா நினைவுக் கவியரங்கம். பாரதி கலைக்கழகம். 22.11.2020

Saturday, November 27, 2021

பெரியராய்க் கொள்வது கோள்

 


கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்

யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்

அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து

பெரியராய்க் கொள்வது கோள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019

புகழ்தலின் வைதலே நன்று

 

 

வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்

பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்

நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.

புகழ்தலின் வைதலே நன்று.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019


Saturday, October 02, 2021

இன்னமும் முயலுகின்றேன்

 


ஒளியாம லுண்மையை உரைப்பதே நலமென்ற

          உறுதியைக் கொண்டு நின்றாய்

        உன்வாழ்வை நூல்செய்து உலகதை உணரவே

           உண்மையாய் எடுத்து வைத்தாய்!

ஒளிவொன் றிலாதபடி வாழ்வதை உண்மையாய்

          உன்னிடம் கற்ற பின்னர்

        உன்னளவு இலையெனினும் ஓரளவு முயல்கிறேன்

              உண்மையாய் வாழு கின்றேன்.

எளியரின் நிலைகண்  டிரங்கியே உடைதந்து

             இடையாடை யோடு நின்றாய்!

        இனியாரு மதுசெய்ய இயலாத தாகவென்

            இதயத்தி லுயர்ந்து நின்றாய்!

எளிமையைக் கொள்கையாய் ஏற்றிங்கு வாழ்பவர்கள்

          எத்தனை பேர்க ளுண்டு?

       என்னாலும் உன்போல இயலுமோ அதுவென்று

          இன்னமும் முயலு கின்றேன்.

 

 

Monday, September 27, 2021

செய்வர் செயற்பா லவை

 

ஆற்றினி லோடுநீ ரற்றுலர்ந்த போதிலும்

ஊற்றுநீர் ஆறுதவ லுண்டன்றோ? – போற்றுவகை

எய்துபொரு ளற்றபினு மெஞ்சியதில் நற்குணத்தார்

செய்வர் செயற்பா லவை.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ் ஜுலை 2019

Saturday, September 11, 2021

எண்ணும் பெருமை இவை

 


    அருமை யுடையசெயல் ஆற்றல்பொய் யாமை

    பெருமைத் தருக்கில்லாப் பேச்சு – பொருமையுடன்

    தன்னில் எளியோரைத் தாங்கு மருங்குணம்

    எண்ணும் பெருமை இவை.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 1.6.2019