(நிலைமண்டில நேரிசை ஆசிரியப்பா)
நெய்தல்
நிலம்; கடலும் கடல்சார்ந்த இடமும்.
மக்கள்; பரதவர், பரத்தியர்
ஒழுக்கம்; இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
மரம்; புன்னை, ஞாழல்
உயிரினம்; கடற்காகம், சுறா மற்றும் கடல் மீன்கள்.
புன்னை நிழலில் போக்கிய பொழுதுகள்
எண்ணி மகிழ எத்தனை யுண்டு.
ஒன்றும் மனதில் உளதிலை யாக
அன்று மாலை அவன்பிரி வுரைத்த,
ஒன்றே நின்றவள் உயிர்வதை செய்தது.
கன்னந் தொட்ட கைவிரல் பற்றி
அறுதினம் மட்டும் அலைமேற் செல்ல
உறுதி யுரைத்த தொருபொய் யெனவாய்,
அறுதின மிருமுறை யாயின பின்னும்
வருவது நிகழும் வாய்ப்பில தாக .....
காயும்
உணங்கலைக் காக முண்பதை
நேயன் நினைப்பில் நேரிழை காணாள்.
உணக்கிய மீனை ஊரில் விற்கையில்
கணக்கு மறந்து கைமுத லிழந்தாள்.
இன்று வருவன் இன்று வருவன்
என்றே தினமும் எதிர்பார்ப் பவளாய்க் .....
குழம்பி லயிரை குறையா திட்டுக்
கொழுமீன் பொரியல் கூடச் செய்து
வெண்சோ றாக்கி வைத்திருக் கின்றாள்
இன்றவன் வருகை நோக்கி
நின்ற வாசல் நிலையி னாளே!
உணங்கல்; -- உப்பிட்டுக் காயவைத்த மீன்
அயிரை, கொழுமீன் ஆகியவை மீன் வகைகள்.
No comments:
Post a Comment