( நிலை மண்டில நேரிசை ஆசிரியப்பா.)
மருதம்
இடம்; வயலும் வயல்சார்ந்த இடமும்.
மக்கள்; உழவர், உழத்தியர்
ஒழுக்கம்; ஊடலும் ஊடல் நிமித்தமும்
உயிரினம்; நாரை, அன்னம், நண்டு
கதிரெழு
முன்னர் கடன்கள் முடித்து
பொதுவெளி வந்து
போய்வரல் சுட்டும்
அவனது செயலி
லன்றுள மாற்றம்
தவறுள தாகத்
தானுணர்ந் தவனின்
அதிவிரை வறியா
தவள்முகம் வினவ,
பதிலுரை
யின்றிப் பணிமேற் சென்றனன்....
வாய்ச்சொல்
மீறி வரம்பில தாகப்
போய்விடு
மென்று புறமே திரும்பி,
முன்தின
மிரவில் முகங்கொட மறுத்த,
தன்செயல்
வருத்தத் தளர்ந்தா ளாகி,
நண்டி
னிருப்பிடம் நாரை யிரண்டு
கண்ட களிப்பிற்
கூடி நடந்து,
உண்டது கண்டு
முவந்திள லாகக்
கொண்டவ னடைந்த
குறுசின முறுத்த,
கரத்துள கலயங்
கசியா தாக
வரப்பினில்
நடந்து வழிமடை தாண்டினள்.....
உழவுப் பணியி
லுடற்சோர் வுற்று,
நிழல்மரஞ்
சேரும் நேரம். கொழுநன்
குற்றி யொட்டிய
புற்களைக் கையால்
பற்றிக்
களைந்து நிமிர,
நெற்றி துடைக்க
நீட்டினள் முந்தியே!
குற்றி -– வயலினிடையே
முன்பிருந்த மரத்தின் அடித் தூர்.
குற்றியடைந்த
புல் உழவர் உழுபடைக்கு ஒல்கா தாதலின், கைகளால் பற்றிக் களைந்தனன்.
முந்தி --
முன்றானை.
ஐந்திணை இருநூற்றைம்பது
நூலில் தொகுக்கப்பட்டு வெளியானது.
No comments:
Post a Comment