Monday, June 22, 2009

இந்து மதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை


ஆயிர மாயிர மாண்டு களாய் - இங்கு
ஆதி மதமென வேர்ப ரந்து
பாயு நதிக்கரைப் பர்வத மீதிலும்
பள்ளம் சமவெளிப் பகுதி யெலாம்

ஆயிர மாயிர விழுதி றக்கி - ஓர்
ஆல மரமெனத் தழைத்தி ருந்து
காயும் பிறமத வெம்மை தடுத்திட
காலம் விரித்தநி ழற்கு டையே!

சாம யசுரென ருக்கெ னவும்- இன்னும்
சாற்று மதர்வண வேத மென்றும்
ஓமம் வளர்த்தலும் மந்தி ரங்கள்
ஓதி நிதம்செயும் பூசை களும்

நாமவை ஏற்றநற் கொள்கை வழிதனில்
நாலென வைந்தென வாகி டினும்
பூமியில் வாழ்கிற மக்க ளுக்கு - ஒரு
புண்ணிய நற்கதி நல்கி டுமே!

கோவில் குளமெனக் கட்டி வைத்து, - பல
கும்பிடு தெய்வங்கள் ஆக்கி வைத்து
ஓயும் வழியில்லா மன்த்த டக்கி- அங்கு
ஒன்றி இறைநிலைப் பேரொ ளியில்

தோயும் வகையினில் செய்ப யிற்சி - அதில்
துன்ப மொழித்திடும் நோக்க மொன்றே!
பாயு நதிகளோ வெவ்வே றவையிப்
பாரினில் சேரிடம் ஓர்க டலே!

பார்க்கு மிருவிழித் தோற்ற மெலாம் - பிழை
பாரி லிருக்கிற பொருள ணைத்தும்
கூர்த்த மதியுடைக் கொள்கையிற் சீரியர்
கூறிய தத்துவப் ப்ரம்ம மன்றோ?

சாற்றிய ப்ரம்மமும் உணர்ந்த வர்க்கு
சட்டென மாயையை நீக்கி டுமே!
வேற்றுமை தன்னிடைத் தோற்றி டினும்- பொருள்
வேறல்ல ஒன்றெனக் காட்டி டுமே!

வேதம் முதலுள மீமாம்ச சாத்திரம்
வேறுள வாகம நூல்க ளெலாம்
பேதங் களைப்பல பேசி டினும்- பெரும்
பேறென நாமவை பெற்ற செல்வம்.

மத்ஸ்யம் முதலிய பத்தவ தாரமும்
மாதவன் செய்த வையே.- அவன்
தத்துவ கீதையில் தர்ம நெறிமுறை
யுத்த களந்தனில் தந்த வனே!


காஞ்சீபுரம் இந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நவராத்திரி கவிக்கோவைப் போட்டியில் பரிசு பெற்றது. (அக். 1982)

Friday, June 19, 2009

விண்முட்ட ஏறும் விலை

முன்னர் சிவனார் முடிதேடி நான்முகனும்
அன்னம் உருக்கொண்டு ஆகாயம் சென்றதுபோல்
அண்ணல் முடிகாணும் ஆர்வந்தான் கொண்டுளதோ
விண்முட்ட ஏறும் விலை?


தினமணி கதிர்- வெண்பாப் போட்டி (1981)

ஆற்றல் உடைய(து) அரசு

உற்ற இடுக்கண் உணராது; ஓயாது
கற்ற நெறிமுறைகள் காத்திருக்கும்;- வெற்றிபெறக்
கூற்றெதிர் வந்தாலும் கொள்கையில் மாறாத
ஆற்றல் உடைய(து) அரசு.


இளந்தமிழன் -வெண்பாப் போட்டி (1973)

Monday, June 15, 2009

காசுக்கே விற்றுவிட்டோம் காண்

காசுக்கு வாங்கிக் கடன்பட்டும் தீபத்தை
வாசித்தோம் பின்னர் வழக்கம்போல்- தூசிதட்டி
வீசைக் கெடுப்பவன் வீதியிலே வந்தபோது
காசுக்கே விற்றுவிட்டோம் காண்


தீபம்- வெண்பாப் போட்டி- டிசம்பர் 1971

மாற்றம் வரவேண்டும்

வான மளக்கிற விஞ்ஞான
வளர்ச்சி யொருபுற மிருந்தாலும்
நாணம் இழந்து தெருவோரம்
நகர்ப் புறமெங்கும் நாற்றமுற
வீணர்கள் செய்யும் சிறுசெய்கை
வெட்கக் கேடென உணராரோ?
பேணும் உடல்நலம் பாதிக்கும்
பெரிதாய் மாற்றம் வரவேணும்.

மூன்றாம் வகுப்புத் தேர்வுக்கு
முழுத்தாள் கணினி மென்பொருளாம்
நான்காம் வகுப்பில் அசைன்மென்டாம்
நால்வர் செய்யும் ப்ராஜெக்டாம்
வேண்டும் கல்வி வளர்ச்சியெலாம்
வேண்டாம் என்போர் யாருமிலை.
காண்போர் மதிக்கும் பண்பாட்டைக்
கற்றுத் தருவது எங்கய்யா?


மனித நேயம் ஆக.2003

Thursday, June 11, 2009

மால் உகந்த மாலை


ஆல மரத்திலையின் - நடுவே
அன்று துயின்றபரன்
பால முகுந்தனென - வந்து
பாரை மயங்கவைத்தான்.
கோலக் கருவிழியும் - குழல்
கொஞ்சும் உதட்டொளியும்
நீல நிறத்தழகும் - கோதை
நெஞ்சில் வரைந்திருந்தாள்.

காலைக் கடமைகளில் - ஒன்றாய்க்
கதிர் வருவதன்முன்
சோலைச் செடிகொடியில் - மலர்கள்
சேரப் பறித்துவந்து
மாலன் அரங்கனுக்கு - நல்ல
மாலை தொடுத்துவரும்
ஆலய நற்பணியில் - தந்தை
ஆழ்ந்து மகிழ்ந்திருந்தார்.

பாடிச் சிரித்தபடி - தினமும்
பாவை நறுமலர்கள்
தேடித் தொடுத்ததனைத் - தன்னிரு
தோளில் மகிழ்ச்சியுடன்
சூடி அவனழகில் - தனது
சற்றுக் குறைந்திருக்க
ஆடி முகம்பார்த்துத் - திருத்தி
அழகு செய்துகொள்வாள்.

கோதை செயல்முழுதும் - ஒருநாள்
கண்டு துடித்தவராய்
"பேதை தவறிவிட்டாய் - பெரும்
பிழைநீ செய்துவிட்டாய்
பாதக மாகியதே" - என்றார்
பதறி நின்றுவிட்டாள்.
மாதவன் மார்பினுக்குப் - புதிதாய்
மாலை தொடுத்துவைத்தார்.

"காலை முறைதனிலே - சாற்ற,
கண்ணனின் தோளிணைகள்
மாலை மறுத்ததனால் - அதனை
மலரடி யிட்டுவைத்தோம்"
ஆலயம் சென்றவுடன் - செய்தி
அர்ச்சகர் வாயறிந்தார்.
மாலுக் கிழைத்தபிழை - எதுவும்
மனதிற் தோன்றவில்லை.

வாடி அமர்ந்தவர்க்கு - இரவில்
வந்த கனவினிலே
கோடிக் கதிரொளியின் - இடையே
கொண்டலின் வண்ணனவன்
"சூடிக் கொடுத்தவளின் - மாலை
சூடி மகிழ்ந்திருந்தேன்.
கோடி யுடுத்தவளைக் - கோவில்
கொண்டு தருக"வென்றான்.

கோதை மகிழ்ந்திருந்தாள் - தந்தை
கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
பாதை தனக்கதுவாய் - அன்றே
பாவை தெளிந்திருந்தாள்.
வேத முழக்கிடையே - நல்ல
வேள்விகள் தன்னிடையே
கோதை கரம்பிடித்து - அரங்கன்
கோவிலுள் சென்றுவிட்டான்.



மதுரைத் தென்றல் வீதியுலா-15 ஜனவரி 2001.

Monday, May 11, 2009

நாமேதும் செய்ததுண்டா?

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?

வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.

அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?


மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.

Sunday, May 03, 2009

மனிதரை மதிப்பிட...

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.

வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.

போலிகள்


வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும்
வண்டுசெயும் ரீங்காரம், மரங்கள் மீது
ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்,
ஓடைசெயும் சலசலப்பும் தென்ற லாக
வீசுகின்ற மென்காற்றில் மிதந்து காதில்
விழும்படியாய் இயற்கையவள் அருகே வந்து
பேசுகின்ற ரகசியங்கள் நகர வாழ்வின்
பேரிழப்பு இவையெதுவும் கிட்டா திங்கு!

அரைச்சுவரில் பசுமையுடன் புற்ப ரப்பு,
அழகான தென்னைமரம், ஆட்டுக் குட்டி,
விரைந்தோடும் நீரோடை, மேசை மீது
விரிப்பினிலே பூச்செடிகள், ஜன்னல் மூடும்
திரைத்துணியில் வான் நிலவு பறவைக் கூட்டம்
திகட்டாத இயற்கைதரும் காட்சி யின்பம்
வரைந்தவெறும் போலிகளில் மட்டும் கண்டு
வாழுகின்ற வாழ்க்கையிது நரகந் தானே!

கலைச்சுரங்கம் ஜனவரி 1997

Saturday, May 02, 2009

கடல் அலையே!


காலை இரவெனப் பாராது - இங்கு
கரைவரை வந்துபின் செல்லுகிறாய்
நீலநி றப்பெருங் கடலலையே!
நீயதன் காரணம் கூறுவையோ?

ஆழ்கடல் எல்லையைக் காத்திடலோ? - அன்றி
அடுத்த நிலந்தனில் முற்றுகையோ?
பாழ்நில மாந்தரைப் போல் முழங்கிப் - போர்ப்
பகைவெறி வுண்டெனக் காட்டுதியோ?

பாலர்கள் காலடி மண்நழுவ - அவர்
பாதம் நனைத்துநீ செல்லுகையில்
கோலமு கங்களில் நகைமலரும் - அந்தக்
கொள்ளை அழகினைக் காண்பதற்கோ?

ஆழ்கடற் செல்வங்கள் அத்தனையும் - வாரி
அள்ளிச் சென்றபெரும் பாதகரை
சூழ்கரை எங்கணும் தேடுதியோ? - நீ
சொல்லிடு வாயிங்கு சற்றுநின்றே!


மதுரைத் தென்றல் வீதியுலா:எட்டு. ஜூன் 2000

Tuesday, March 24, 2009

குறள் நெறிகள்

குத்தி வெட்டியும் குடைந்து தோண்டியும் குதறி மேனியில் குழிகள் செய்திடும் பித்த மானிடர் நிற்கை தாங்கிடும் பெற்றி கொண்டதிப் பூமியல்லவோ? புத்தி யின்றியே புல்லர் தருமிடர் பொறுமை கொண்டுநாம் புறக்க ணிப்பதை ஒத்த நன்னெறி ஒன்று வேறிலை உயர் குறளுரை உணர வேண்டுமே! தெருவி லெச்சிலைத் தேடி யோடியே தின்று வாழ்ந்திடும் நாயினும் நம் அறிவு நன்றியிற் குறைவு தானெனில் அதனை யேற்கவே வேண்டு மல்லவோ? வுருவி லழக்கெமக் குள்ள தென்பதால் வுய்வு வேண்டுத லில்லை யென்பமோ? பரிவு கொண்டதால் வள்ளுவன் இதைப் பாருளோர்க் கெலாம் பகர்ந்து போயினான். என்ன பயனிதாற் கிடைக்கு மென்றுநாம் எண்ணிச் செய்கிற காரி யங்களில் தன்னை வளர்ப்பதோர் நோக்க மொன்றினால் தாழ்ந்து போனவ ராவ தில்லையோ? மண்ணில் தோன்றிய மரங்க ளொப்பவும் மழை பொழிந்திடு மேக மொப்பவும் உண்ணு நீர்தரு நிலைக ளொப்பவும் உலக மானிடர் வாழ வேண்டுமே! பள்ளம் நோக்கியே பாயு நீரென பற்றினால் மனம் தீய நாடிடும் தள்ள வேண்டிய பொருளனைத் தையும் தான டைந்திடத் துன்பமே தரும். உள்ளம் செல்வழித் தீமை நீக்கியோர் உண்மை நன்மைபால் உய்ப்ப தறிவுதான் வள்ளு வன்குறள் தவிர வேறுநூல் வாழு நெறிகளைக் கூறி மிஞ்சுமோ? 'கவிதை' மாத இதழ் மே 1986

Wednesday, March 18, 2009

விடுதி

நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.

'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?

சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?

Monday, January 26, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு

பாரிதனைப் படைத்ததுநற் பரம்பொருளின் விளையாட்டு
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.

தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்

எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.

தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்

வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!

(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)

புதிய பட்டாசுகள்

இன்சாட் விட்டது அதிர்வேட்டு - அது
இல்லை யென்றானது புஸ்வானம்.
மின்வெட் டென்பது சரக்கட்டு - விலை
மேலே போகும் ராக்கெட்டு.

மின்னல் போலே ஒளிசிதறி - பின்
மேகம் போலதிற் புகை மூடும்
அன்னவை அரசியல் முழக்கங்கள் - அவை
அழகாய் எரியும் மத்தாப்பு.

ஆனை வெடியெனச் சொல்லுதற்கும் - ஒரு
ஆசிய விளையாட் டுண்டிங்கு.
போன வருடம் இல்லாத - பல
புதுவெடி கண்டோம் போதுமடா.

(முல்லைச்சரம். ஜனவரி 1983)

Sunday, January 25, 2009

முழு நிலவு

அதியுணவு கொண்டதனால் அவதி யுற்று
அன்றொருநாள் மேன்மாடத் தமர்ந்தி ருந்தேன்.
அதிகாலை செய்வதற்கு வேலை யுண்டு
அசதியினில் வுடல்சாய்த்தேன் உறக்கம் கொள்ள.
அதியழகி மதியரசி ஆடு கின்ற
அரங்கமென விண்வெளியை ஆக்கி வைத்து,
பதியிதனைப் பார்க்கிறவர் கூட மாக்கிப்
பார்த்திட்டேன் மனத்திரையில் நாட்டியத்தை.

ஆடிநின்ற அவள்தலையில் அணிந்திருந்த
அழகான மல்லிகைப்பூச் சரமும் ஆடி
மேடையிலே விரித்துவைத்த நீலப் பட்டில்
மின்னுகின்ற வெண்பூக்கள் வுதிர்த்த காட்சி
ஒடுகின்ற நதிநீரில் துரும்பு போல
ஒருநொடியில் மறைந்துவிடும் காட்சியாகி,
கோடிக்கைச் சூரியனால் கலைந்து போக
கோபத்தில் விழித்தபோது காலை நேரம்.

மண்ணரங்கில் நாட்டியங்கள் முடிந்த பின்பு
மனிவிளக்குத் தோரணங்கள் யாவும் நீங்கி
எண்ணிறந்த இனியகாட்சி இல்லை யாகி
ஏளனத்து வெற்றிடமாய் மாறிப் போகும்.
விண்ணரங்கில் மதியரசி ஆட்டம் கூட
விலக்கில்லை இதற்கென்றால் என்ன செய்ய?
கண்ணிரண்டும் திங்களொன்று காத்திருந்து
காட்சியிதை மறுபடியும் காண வேண்டும்.

(அமுதசுரபி. டிசம்பர் 1980)

காலைப் பொழுது

இளம்பரிதி முளைத்தெழவும்
இருளகன்று ஓடிவிடும். - குப்பைச்
சேவலது கூவலோடு
செகத்தினிலே நாள் பிறக்கும்.

வாசலிலே தூசகலும்;
வாளிமழை நீர்பொழியும்; - பெண்கள்
விரல்வழிவெண் பொடிவழிய
வீதியிலே பூமலரும்.

தினத்தாள் பறந்துவரும்;
தெருவோரம் மலம்சேரும். - நடுவீதிப்
பால்வண்டி ஒலிகேட்கப்
பாத்திரங்கள் காத்திருக்கும்.

ஆற்றின் கரைநிறையும்;
அழுக்காடை பாட்டிசைக்கும்; - பலரும்
தலையமிழ்த்தி நீராடத்
தண்ணீரே தாளமிடும்.

இல்லாளின் முனுமுனுப்பின்,
இனியமகன் தேவைகளின் - பின்னே
நாள்முழுதும் செய்வதற்கு
நம்கடமை காத்திருக்கும்.

(ஜன்னல். நவம்பர் 1977.)

Friday, January 23, 2009

புதிய சுவர்











கொச்சைத்தமிழ் மொழிதனிலே விளம்ப ரங்கள்
கொலைசெய்யும் தரந்தாழ்ந்து தமிழ்தான் சாகும்.
'இச்சுவரில் ஒட்டாதீர் நோட்டீஸ்' ஸென்று
எச்சரிக்கை செய்திருக்கும் அதையும் மீறி
மிச்சயிடம் எதுவுமின்றி ஏணி யேறி
மேற்சுவரில் ஒட்டிவிடும் காகி தங்கள்
பச்சைசிவப் பென்றுபல நிறமுங் காட்டிப்
பரிதாப மாய்க்கிழிந்து பாதி தொங்கும்.

தாடிமயிர் வளர்வதற்குத் தைலம்; மேலும்
தலைமயிரின் நரை மறைக்கச் சாயம்; மற்றும்
கோடிவகைக் கட்சிகளின் மீட்டிங்; நாளும்
கொள்கைகளை விளக்குகின்ற கூட்ட நோட்டீஸ்;
பீடிபொடி சோப்வகைகள் பெயர்கள்; நாட்டில்
பகுத்தறிவுப் பெரியவர்கள் வுதிர்த்த சொற்கள்
வேடிக்கை இவையெல்லாம் இல்லை இங்கே
விரைந்திதனைக் காண்பதற்கு வாரீ ரின்றே!

(முல்லைச்சரம். பிப் 1975)

எங்கள் கிராமம்

ஓலையில் வேய்ந்த குடிசையுண்டு நல்ல 
ஓடையுண்டு சிறு சோலையுண்டு - அதி 
காலையிலும் கூடக் காதவழி செல்லக் 
காளைகள் பூட்டிய வண்டியுண்டு. 

 மாட்டிய கழுத்து மணியொலிக்க - 
நல்ல மாடுகள் வண்டியை இழுத்து வர
 ஓட்டி வருகிற சாரதி செய்கிற 
ஓரொரு சீழ்கை ஒலி கேட்கும். 

 வீடுகள் முன்னர் நீர் தெளித்து - நல்ல
 வெள்ளைப் பொடி வைத்துக் கோடிழுத்து
 பாடிய வாயுடன் பற்பல பென்டிர்கள் 
பக்குவமாய் இடும் கோலமுண்டு. 

கூடிய நெற்பயிர் தோள்சு மந்து - அவர் 
கொண்டு வந்து நல்ல பொங்கல் வைத்து 
தேடி வருகிற விருந்தினர் யாவரும் 
தினறும் வகையினில் உண்ண வைப்பார் 

 ஆலயக் கோபுரம் அருகிற் சிறுகுளம் 
அரசம ரத்தடிப் பிள்ளை யாரும் 
 மாலையில் ஓர்முறை யாவது வாவென 
மக்களை யழைக்கும் பூவ னமும் 

 வருகின்ற தென்றலின் இனிமையுடன் - அங்கு 
வளர்கின்ற தென்னையின் இள நீரும் 
தருகின்ற சுவையினிற் கால மெல்லாம் - அங்கு
 தனியாய்க் கழித்திடத் தோன்று மம்மா.

 (முல்லைச்சரம். நவம்பர் 1974)

மலர்ச் சிரிப்பு

என்னிடத்தே பொய்வேண்டாம்
எழில்சேர் மல்லிகையே
உன்னிதழிற் புன்னகையேன்
ஒளியா துரைப்பாயே!

அரைநாளில் வதங்கிவாடி
அழியப்போம் உன்னைப்போய்
தரைமாதர் தலயேற்றித்
தாங்குவதை நினைத்தாயோ?

தத்துவங்கள் அறியாய்நீ
தருமதுவை வுண்டிங்கு
சுத்துகின்ற சுரும்புகளின்
சுவைப்பேச்சுக் கேட்டனையோ?

தென்றலது தூண்டுதலால்
தெளிவாகப் பதில்மறுக்கும்
உன்றனது தலையசைப்பால்
உணர்த்துவது தானென்ன?

(அமுதசுரபி தீபாவளி மலர் 1973)

Friday, January 16, 2009

விநாயகர் துதி

வெற்றிபெறப் பெற்றோரை வேலன் வருமுன்னம்
சுற்றியபொற் பாதம் சுகந்தருமே - பற்றியவர்
வுற்ற துயர்போகும் வூழ்வினையும் போயொழியும்
கற்பக மூர்த்தியே காப்பு.