Thursday, June 11, 2009

மால் உகந்த மாலை


ஆல மரத்திலையின் - நடுவே
அன்று துயின்றபரன்
பால முகுந்தனென - வந்து
பாரை மயங்கவைத்தான்.
கோலக் கருவிழியும் - குழல்
கொஞ்சும் உதட்டொளியும்
நீல நிறத்தழகும் - கோதை
நெஞ்சில் வரைந்திருந்தாள்.

காலைக் கடமைகளில் - ஒன்றாய்க்
கதிர் வருவதன்முன்
சோலைச் செடிகொடியில் - மலர்கள்
சேரப் பறித்துவந்து
மாலன் அரங்கனுக்கு - நல்ல
மாலை தொடுத்துவரும்
ஆலய நற்பணியில் - தந்தை
ஆழ்ந்து மகிழ்ந்திருந்தார்.

பாடிச் சிரித்தபடி - தினமும்
பாவை நறுமலர்கள்
தேடித் தொடுத்ததனைத் - தன்னிரு
தோளில் மகிழ்ச்சியுடன்
சூடி அவனழகில் - தனது
சற்றுக் குறைந்திருக்க
ஆடி முகம்பார்த்துத் - திருத்தி
அழகு செய்துகொள்வாள்.

கோதை செயல்முழுதும் - ஒருநாள்
கண்டு துடித்தவராய்
"பேதை தவறிவிட்டாய் - பெரும்
பிழைநீ செய்துவிட்டாய்
பாதக மாகியதே" - என்றார்
பதறி நின்றுவிட்டாள்.
மாதவன் மார்பினுக்குப் - புதிதாய்
மாலை தொடுத்துவைத்தார்.

"காலை முறைதனிலே - சாற்ற,
கண்ணனின் தோளிணைகள்
மாலை மறுத்ததனால் - அதனை
மலரடி யிட்டுவைத்தோம்"
ஆலயம் சென்றவுடன் - செய்தி
அர்ச்சகர் வாயறிந்தார்.
மாலுக் கிழைத்தபிழை - எதுவும்
மனதிற் தோன்றவில்லை.

வாடி அமர்ந்தவர்க்கு - இரவில்
வந்த கனவினிலே
கோடிக் கதிரொளியின் - இடையே
கொண்டலின் வண்ணனவன்
"சூடிக் கொடுத்தவளின் - மாலை
சூடி மகிழ்ந்திருந்தேன்.
கோடி யுடுத்தவளைக் - கோவில்
கொண்டு தருக"வென்றான்.

கோதை மகிழ்ந்திருந்தாள் - தந்தை
கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
பாதை தனக்கதுவாய் - அன்றே
பாவை தெளிந்திருந்தாள்.
வேத முழக்கிடையே - நல்ல
வேள்விகள் தன்னிடையே
கோதை கரம்பிடித்து - அரங்கன்
கோவிலுள் சென்றுவிட்டான்.



மதுரைத் தென்றல் வீதியுலா-15 ஜனவரி 2001.

1 comment:

Thiruppullani Raguveeradayal said...

அன்பின் அ.ரா.
எல்லாப் பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஆஹா! இத்தனை நாள் இவையெல்லாம் இடுவதற்கு தாமதம் ஏனோ?
திருப்புல்லாணி திருதிரு