Sunday, August 05, 2012

விடியல் வருமோ விரைந்து.

மண்ணைப் பிளந்து முளைத்து மரமாதல்
சின்ன விதையின் செயலன்றோ? - எண்ணி
முடியா தெனவே முயலா திருந்தால்
விடியல் வருமோ விரைந்து?


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

ஊழல் விலகுமே விட்டு

புற்று வளர்ந்து புரையோடிப் போனபினும்
கற்றோர் அமைதிக்குக் காரணமென்? - உற்றதொரு
சூழல் உளபோதே சோராது போரிட்டால்
ஊழல் விலகுமே விட்டு.

ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

கோடையிலே நல்ல குளிர்

முத்துவிளை தற்கும் முருங்கைமரம் காய்ப்பதற்கும்
ஒத்ததொரு காலமென உண்டன்றோ? - இத்தரையில்
ஓடையெலாம் வற்றி உலரும்போ தெங்குவரும்
கோடையிலே நல்ல குளிர்.


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை ஜூன் 2011.

மழலையின் சொல்லே மருந்து

அலைந்த களைப்பும் அலுவல் விளைத்த
தலைநோவும் தானே தணிந்து - இலையாம்
அழகு விழியசைய ஆசையுடன் கொஞ்சும்
மழலையின் சொல்லே மருந்து.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். நவ. 2010

பாரதி நெய்துவைத்த பா



தேசபக்தி ஊடாகத் தென்தமிழே பாவாக
ஆசுகவி யாந்தறியி லாக்கியது. - தேசுபொலி
பாரதத் தாய்பூணும் பைந்துகிலே ஆமாறு
பாரதி நெய்துவைத்த பா.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - செப். 2010

கண்ணீரால் வென்ற களம்



வெட்டுண்டா னில்லை. விழிவேலைக் கண்டன்றோ
கட்டுண்டு வீழ்ந்தான் கணவனவன். - பட்டுண்டு
பொன்னின் அணியுண்டு பூவைக்கு ஈதவள்தன்
கண்ணீரால் வென்ற களம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஆக. 2010

விழுதினால் தோன்றும் வியப்பு


பரந்த கடலும் பனிமலையும் கண்டு
விரிந்த விழிவியப்பை விஞ்சும். - பெரிது
பழுதிலாவிஞ் ஞானம் பயந்த கணினி
விழுதினால் தோன்றும் வியப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூலை 2010.

உழைப்பினால் கண்போம் உயர்வு


உண்டு முறங்கியும் வாழ்நாட் பொழுதழியின்
உண்டாகு மாமோ உயர்விங்கு? - நன்றாய்ப்
பிழைப்பொன்று மில்லாப் பெரும்பணிக ளாற்றும்
உழைப்பினால் கண்போம் உயர்வு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூன். 2010

இனிமையுடன் உண்போம் இனி


கூடியொரு நோன்பிருந்தோம் கோவிந் தனையாண்டாள்
பாடிய நன்னெறியே பற்றினோம். - தேடி
அணியணிவோம் நெய்யொழுக ஆக்கிய பாற்சோ(று)
இனிமையுடன் உண்போம் இனி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஏப். 2010

காலத்தே செய்தல் கடன்


வயதான பின்கல்வி வாய்த்தென்ன? செல்வம்
இயலாத போதீட்ட லேது? - சுயமாக
ஞாலத்து வாழ்வில் நலமுறவே நாமவற்றைக்
காலத்தே செய்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - மார்ச் 2010

சொர்க்கம் குடும்பமெனச் செப்பு


கண்டவர் விண்டுரையா, காணாதார் கற்பனையாய்
உண்டென் றுரைக்குமது உண்டாமோ? - கண்ணெதிரே
தர்க்கமிலா தேற்கும் தகவுடைய மண்ணுலகச்
சொர்க்கம் குடும்பமெனச் செப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - நவ. 2009

சோலை மலராய்ச் சிரி


என்னை நகைவேண்டின்  எங்கேநான் போவதுசொல்
உன்னிதழின் புன்னகைபோல் வேறுண்டோ? - பெண்ணேபொன்
மாலை விருப்பை மனத்தகற்றி எந்நாளும்
சோலை மலராய்ச் சிரி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - அக்.2009

கதராடை காமராசக் கோன்



தன்னலம் பாராது தாழ்நிலையில் வாழ்மக்கள்
இன்னல் களைந்த தெவரிங்கு? - அண்ணல்
அதிகாரத் தாலன்றி அன்பினால் வென்ற
கதராடை காமராசக் கோன்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். - ஆகஸ்ட் 2009