Thursday, May 17, 2012

எதைச் சொல்வேன்?

என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?
மென்பஞ்சுப் பாதங்கள் தரைந டந்தால்
மிகநோகும் என்றெண்ணித் தூக்கிக் கொள்வேன்.
என்கையிற் சுமந்துகொண் டிருக்கும் போது,
ஏதேனும் பிறர்பேசக் கேட்டாற் போதும்,
தன் மழலை கேட்பதற்கென் முகந்தி ருப்பும்.
தளிர்விரல்கள் பட்டவுடன் மெய்சி லிர்க்கும்.


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?


உண்ணுதற்கே அடம்பிடித்து ஓடி யோடி,
ஊட்டுகின்ற அம்மாவை அழவே வைப்பான்.
தின்னுமொரு மிட்டாயின் இனிப்புக் காகத்
திண்ணைக்குத் தேடிவரும் சிறுகு ழந்தை,
'இன்னொன்று தா'என்று முன்னே வந்து
இதழ்விரித்த தாமரையாய்க் கையை நீட்டும்.
கண்ணெதிரே கெஞ்சுகிற காட்சி கண்டால்
கல்நெஞ்சங் கூடவங்கு கரைந்தே போகும்!


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?

Wednesday, May 16, 2012

நெருப்பிலா உறக்கம் ?

உள்ளத்தில் மதவெறித்தீ மிகவ ளர்த்தே
ஒருபாவமும் அறியாதார் உயிர்ப றித்தல்;
பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பு தற்குப்
பதிலாகப் பணிமனைக்கு அனுப்பல்; மற்றும்
வெள்ளரிக்காய் சந்தையிலே விற்றல் போலே
விலைபேசும் மணவாழ்வும் நன்றா? சொல்வீர்!
நல்லவழி சமுதாயம் செல்ல இந்த
நானிலத்தோர் உணர்வுற்றே எழுதல் வேண்டும்.

களத்தடிக்கும் நெல்மணியிற் பதர்க ளுண்டு.
காற்றினிலே தூற்றியதை விலக்கி வைப்போம்.
மிளகினிலே மிளகேபோல் மண்ணு ருண்டை
மிகச்சரியாய்க் கலந்தவற்றைப் பிரித்தல் ஆமோ?
களங்கமிகு மனதுடையோர் மருந்திற் கூடக்
கலப்படத்தைச் செய்கின்றார் அறிந்தோ மில்லை.
உளமனிதப் போலிகளின் செயலால், வாழும்
உயிரழியும் கேடுணரா துறங்க லாமோ?

நெஞ்சத்தை இரும்பென்னல் தவறே ஆகும்.
நெடுந்தீயால் அதுநீராய் இளகிப் போகும்.
நெஞ்சத்தைக் கல்லெனலும் பிழையாய் ஆகும்.
நொருங்கியது தூளாகும் உடைக்கும் போது.
பிஞ்சான பெண்குழந்தை சிவந்த வாயைப்
பிதுக்கியதன் நாவினிலே நஞ்சை வைக்கும்
நெஞ்சத்துக் குவமையென எதைநான் சொல்ல?
நெருப்பினிலே உறங்குகிறோம் எழுவ தெந்நாள்?

ஆண்டுப் பிறப்பு

ஆடிக் கழித்த ஆண்டொன்றை - மனம்
அகலத் திறந்து பார்க்கின்றேன்.
தேடிப் பொருளைச் சேர்ப்பதற்குத்
தினமும் உழைத்த கதையுண்டு.
நாடிச் செய்த செயல்களிலே - சில
நல்லவை நிகழக் கண்டதுடன்
வாடித் துயரில் சிலசமயம்
வாழ்வை வெறுத்த நிலையுண்டு.


மண்ணில் ஒருவர் நிலைக்காக - இங்கு
மாறா தோடும் காலகதி
விண்ணிற் கதிரோன் தேரோட்டம்
விதித்த வழியில் விரைந்தேக,
பன்னிரு திங்கள் கழிந்துவிடில் - பாரில்
புதிதாய் ஆண்டு பிறந்துவிடும்.
எண்ணம் மட்டும் ஏதேதோ
எதிர்பார்ப் போடு வரவேற்கும்.


ஆண்டு பிறக்கும் போதெல்லாம் -அதை
அழகுத் தமிழில் வரவேற்று
ஈண்டு கவிஞர் பலர்கூடி
எழுதிக் குவிப்பது ஏராளம்.
மாண்டு போகும் வழித்தடத்தில் - ஒரு
மைல்கல் தன்னைக் கடந்துள்ளோம்.
ஆண்டுப் பிறப்பில் வேறொன்றும்
அதிசய மில்லை என்பேன் நான்.

Friday, May 04, 2012

ஏழையா? பணக்காரனா?


தன்னையண்டி வந்த வர்க்குத்
தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்றே
தான் நுகர்த லில்லை யாயும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தும்
ஏதுமற்ற ஏழை யாக
மண்ணிலிங்கு வாழ்ந்து சாகும்
மாணிடர்க்கு என்ன பேரோ?

(குறள் வழிச் சிந்தனை)

Monday, August 01, 2011

பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ



கற்ற பொருளனைத்தும் காமுற்றார் கேட்டறிய
உற்ற வகையுரைக்க வொண்ணாதார் - கற்றையாய்ப்
பாத்திரத்தில் மேடையில் பார்வைக்கு வைத்திருக்கும்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009.

நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!


பிஞ்சுக் கரங்கொண்டு பின்னொளித்த வெண்ணையுடன்
அஞ்சி அழுங்கண்ணா! அன்னைமுன் - கெஞ்சுகிற
கொஞ்சும் விழியழகைக் கொண்டு மயக்கியென்
நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
- தமிழரின் மனித நேயம்- ஜுலை 2009

Tuesday, August 31, 2010

கம்பன் கவியழகு

செப்பிடு மென்மொழி சிந்திம யக்கிடு சுந்தரச் சொல்லழகும்
சொற்றொடர் யாவினும் சிந்தை கவர்ந்திடச் செய்யணி சேரழகும்
ஒப்புள தாவென ஓர்ந்து மொழிக்கடல் ஊடெவர் தேடிடினும்
இப்புவி மீதினில் இல்லையெ னத்தகும் இன்பொருள் தன்னழகும்
பற்பம மர்ந்தருள் பாரதி யாடிடப் பாடிய தோவெனவப்
பாதஜ திக்கிசை பக்குவ மாய்விழும் பாநடை நல்லழகும்
அற்புத மாய்ச்செறி காவிய மாக்கிடும் ஆற்றலிற் கம்பகவி!
இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிரே!


(எம்பார் அருளிய 'எம்பெருமானார் வடிவழகு' பாசுரத்தை அடியொற்றியது.)

சென்னை பாரதி கலைக்கழகக் கவியரங்கில் பாடியது.

Friday, July 09, 2010

கர்ம வீரர் காமராசர்

ஆற்றல் மிக்கவர். அரும்'பெருந் தலைவர்'.
அரசிய லுலகின் அதிசய மனிதர்.
பொய்த்திற னுடையோர் பொருள்புகழ் சேர்க்கச்
செய்செய லறிந்து சீறிய பெருமகன்.
ஊருக் கொன்றென ஒருநூ றாயிரம்
பாலர் கற்கப் பள்ளிகள் கண்டவர்.
இன்மையாற் பசியா லிடர்படு சிறார்க்கு
உண்ண மதிய உணவோ டுடையும்
இளநிலைக் கல்வியும் இலவச மென்றவர்.
மேலும் கற்க மேநிலைப் பள்ளிகள்,
மேன்மை நாடுற மிகப்பல கண்டவர்.
நீர்வீ ணாகி நெடுங்கடல் சேரா(து)
ஆறெலாம் அவர் வழி அணைகள் கண்டன.
நெடுவழிப் பயணப் பாலம் சாலைகள்
நீண்டநாள் தேவைகள் நிறைவுறச் செய்தவர்.
இல்லவள், குழந்தை இவைதனை விலங்கென
வீட்டுக் கடமைகள் விட்டுத் தன்னை
நாட்டுக் கெனவே நல்கிய பெருமகன்.
நாடிது நலம்பெற நினைத்துப்
பாடவர் பட்டது பகர்வது அரிதே!

மாமதுரைக் கவிஞர் பேரவை காமராசர் நூற்றாண்டு விழாக் கவியரங்கம்(செப் 2002).
அன்பு பாலம் (ஆகஸ்ட் 2009)

Sunday, June 27, 2010

வாழ்க தமிழ் மொழி

நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.


எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்(து)
அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!

மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!

வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?

பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது (27.12.09)

Sunday, March 14, 2010

மீண்டு நீ வருகவே!

ஆற்றல் மிக்கு அருந்திற லறிவொடு
போற்றவே வளரும் புதுயுக விளைஞ!
இணைய தளவழி இன்னு லாவரக்
கணினி ஞானம் கைவரப் பெற்றனை.
நூதன மாயுள மின்னனு வழியில்
சாதனங் கைக்கொடு சாதனை புரிவை.
கற்றவை யாயிர மாயினு மதன்வழி
நிற்றல் மறந்தனை நின்னிலை என்சொல?
சாதி நூறின் ஒற்றுமை விட்டுப்
பேதம் மட்டுமே பேசித் திரிவை!
பாரினில் ஆணொடு பெண்ணொரு சமமெனப்
பாரதி பாடிய வரிமறந் தனையே!
பேசு வணிகப் பெருவிலை மணமும்
பேசநாக் கூசும் பெண்சிசுக் கொலையும்,
குண்டு வீசும் கொலைவெறி மதமும்
சண்டை சாவு சச்சர வென்றிவை
வேண்டா தவற்றை விலக்கி
மீண்டுநீ வருவை மேதினி யாளவே!

பாரதி கலைக்கழகம், கவியமுதம் 57ம் ஆண்டுமலர் 2008

Thursday, October 29, 2009

வரலாறு பிறழாதா?

கம்பனன்று ஷூஅணிந்த காலாலே நடந்தானா?
கழுத்திறுக்கும் டைகட்டிக் காளமேகம் மகிழ்ந்தானா?
செம்பொன்செய் சிலம்பேந்திச் சீரடியாள் கண்ணகியும்
சுடிதார் உடுத்தித்தான் சூளுரைக்கச் சென்றாளா?
நம்மவர்கள் அவையெல்லாம் நாகரிக மென்றேற்று
நின்றபின்னால் வந்ததற்கு நேரான தமிழ்ச்சொல்லா?
வம்பெதற்கு நமக்கென்று வாய்மூடி இருந்தால்நம்
வளமான பண்பாட்டு வரலாறு பிறழாதா?

உலக மயமாதல் ஓயாது நிகழுகையில்
உள்ள மொழியிலெலாம் உருமாற்றம் இயல்பேதான்
வளங்கூட்டும் திசைச்சொல்லால் வளர்ச்சியுறும் தமிழென்றால்
வருகவென மாற்றத்தை வரவேற்க வேண்டுந்தான்.
உலகத்து விஞ்ஞானம் உயர்தமிழில் வேண்டுமெனில்
உளதான தமிழ்ச்சொற்கள் ஒருநாளும் போதாது.
பலபுதிய சொல்லாக்கம் பகர்தமிழில் வரவேண்டும்
பழுகுதமிழ்ப் பண்பாடும் பாராட்டப் படவேண்டும்.

பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் பாடியது(ஏப்ரல் '09).

Tuesday, October 27, 2009

மீனாக்ஷி நவமணி மாலை

1. கட்டளைக் கலித்துறை

விண்ணில் நிலவில் இருள்போக வீசும் ஒளிக்கதிரில்
மண்ணில் மலையில் கடல்நீரில் காற்றினில் மானிடரில்
சின்னப் புழுவில் எனவெங்கும் தானே செரிந்துறையும்
நின்னை அறியும் நெறிகாட்டும் மீனாக்ஷி நின்னருளே!

2. குறட்பா

அருளால் அரசாளும் அம்பாள் கருணை
பெருகியே பொங்கும் புனல்.

3. இன்னிசை வெண்பா

புனலாடல் ஓதலொடு பூசையிடல் இன்றேல்
மனதால் நினைக்க மகிழ்ந்தருளும் தாயாய்
மலைபோல் வருமெனினும் மாதவனின் தங்கை
இலையெனச் செய்வள் இடர்.

4. அறுசீர் விருத்தம்

இடரெல்லாம் நீங்க உன்றன்
இருபதம் பணிந்து நின்றேன்
சடையெனும் மகுடம் ஏறும்
சந்திரன் கங்கை யோடும்
விடையிலே அமர்ந்த தேவன்
வெற்பினன் மகிழ்ந்தே ஏற்ற
இடவுடற் பாதி சக்தி
இன்னருள் அடையப் பெற்றேன்.

5. கலி விருத்தம்

பெற்ற நம்பிற விப்பிணி நீங்கிட
உற்ற மெய்ப்பொருள் தானென வானவள்
பற்ற அங்கயற் கண்ணியின் தாளிணை
அற்று நீங்கிடும் ஆள்வினை யாவுமே.

6.அகவல்

யாவுமே தானாய் ஆகிய தோர்பொருள்
மேவு முலகினில் மிகுபுகழ் பாரத
மண்ணில் விளங்கும் மதுரைமா நகரில்
சென்னியில் பிறையைச் சூடிய சுந்தரன்
ஆலயக் கருவறை அர்ச்சையாய் நிற்கும்
கோலம் பக்தி கொண்டவர்க் கென்று
உருவொடு வந்தே உவந்து
அருகில் நின்று அருள்செயத் தானே!

7. நேரிசை வெண்பா

தானே தவமிருந்து அத்தகுதி பெற்றதுவோ
வானோரே சேரும் வழியறியார் - ஏனையர்க்கும்
மெய்வழி காட்டிடுமோ மேன்மையுறு மீனாக்ஷி
கையில் அமர்ந்த கிளி.

8. தரவு கொச்சகக் கலிப்பா

கிளியேந் தியகையும் கொவ்வை நிறவாயும்
ஒளிருந் திருமுகமும் வைரத் திருமுடியும்
மின்னேர் இடையினில் மேகலையும் தாளிணையும்
எந்நாளும் நெஞ்சில் இருத்தி வணங்குவனே.

9. எண்சீர் விருத்தம்

வணங்கமலர் கொண்டுவரு வோரும் மற்றும்
வாய்கொண்டு திருநாமம் சொல்வோ ரென்றும்
சனங்கலெலாம் உனைத்தேடி உள்ளே செல்ல
சிரித்தமுகத் தொடுவந்து கோவிற் சுற்றில்
கனகத்தா மரைக்குளத்தின் படியில் இங்கே
கவிதையிலே அழைக்கின்ற அன்பர் கூட்ட
மனக்கோயிற் குடிகொண்ட தாயே! அம்மா
மலைமகளே உன்னருளை வேண்டு கின்றேன்.

(மதுரை அருள்மிகு மீனாக்ஷி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரைக் கவியரங்கில் பாடியது. அக் - 2003)

Wednesday, September 09, 2009

பாரதி இன்று வந்தால்


(பாரதியாக மாறிப் பாடியது)



ஒளிரு கின்ற தீபமாக உயர்ந்து பார்க்க எண்ணினேன்
இளைய பார தத்தினாய் எங்கு சென்று வீழ்கிறாய்?
விளையு மென்று நாற்றுவிட்டு நட்டு வைத்த பயிரெலாம்
களைக ளாக முட்களாகக் காண நெஞ்சு நோகுதே!

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வ மென்று பாடினேன்.
திறமை யென்று ஏதுமில்லை தீமை யொன்றே காண்கிறேன்.
தேர்ந்த கல்வி ஞானமொன்றும் தேவை யில்லை என்கிறீர்!

சாதி சமய மென்றுநீங்கள் சண்டை வேண்டி நிற்பதேன்?
மோதல் தேடி அலைவதிங்கு மொத்த மக்கள் நோக்கமோ?
ஆதி வேதம் காட்டுகின்ற அன்பு என்று நீங்குமோ
நாதி யற்றுப் போகுமன்று நாடு கண்டு நோகுவீர்!

வங்க நீரின் மிகையினால் வறண்ட மைய மண்ணெலாம்
பொங்கு வளமை கான்பதென் போன ஜன்மக் கனவுதான்.
இங்கு நதிகள் இணைவது என்று நிகழ்வ தாகுமோ?
எங்க ளிளைய ராற்றலால் எய்த லரிது மாவதோ?

ஏழ்மை தாழ்மைப் பேயெலாம் எளிதிற் தீய்ந்து மாயவும்,
ஊழ லற்ற ஆட்சிதன்னில் ஊரும் நாடு முயரவும்,
ஆழ்ந்த ஞான மெய்திமக்கள் அன்பு கொண்டு வாழவும்,
தாழ்ந்து பாதம் வேண்டினேன். தருவ தாக நீயருள்.
.....ஓம் சக்தி!......


நம் உரத்த சிந்தனை. செப்.2006

Sunday, September 06, 2009

ஒரு பெரும் செயல் செய்வோம்

வேத கால மாதியாக வேறு வேறு என்றுநூறு
சாதி கொண்ட மனிதரன்பிற் சேர்ந்து வாழ்ந்த தில்லையா?
போதி தந்த ஞானதீரன் புத்தன் வாழ்ந்த நாட்டினர்
மோதி வீழ்தல் மாற்றிமீண்டும் மனித நேயம் காணுவோம்

ஏழை வாழ்வு என்னவாகும் என்ற எண்ண மின்றியே
ஊழல் லஞ்சம் என்று,ஊரைக் கொள்ளை கொண்டு தின்கிற
பாழும் ஆசைப் பேய்க ளிங்கு பாதம் நாட்டி யாடுதே!
கோழை யென்ன நாமிருந்தால் கொன்று தீர்க்க லாகுமோ?

காதல் மதுவின் மீதுகொண்டு கற்ற கல்வி பண்பெலாம்
போதை கொண்டு போகவிட்டுப் பொருளும் போக நிற்பவர்
மீத முள்ள வாழ்விலேனும் மீண்டு வருதல் வேண்டிநாம்
ஏதும் செய்ய முயன்றிலோம். எங்கு நாடு போகுமோ?

மெள்ள மெள்ள நீர்மைமாறி மேனி வாடும் பூமியின்
வெள்ள மோடிச் சீரழிக்கும் வேறு மாநி லங்களில்
உள்ள நீரின் பாதைமாற்றி யோடு மாறு செய்யவே
உள்ள முள்ளோர் ரொன்றுசேர ஊரும் நாடு முயருமே!

காலை நேரம் வீதியோரம் காணும் மனித எச்சமும்
சாலை மீது வாகனங்கள் சீறி யோடும் சத்தமும்
ஆலை வீசு நச்சுவாயு அச்ச மென்று மொத்தமும்
நளை யேனும் மாறவேண்டும் நாம்மு னைந்து மாற்றுவோம்

தின்று தின்று தூங்கிநாளைத் தொலைத்து வாழ்த லுண்மையில்
பன்றி வாழும் வாழ்வென்று பகர்தல் கேட்ட தில்லையோ?
ஒன்றி லேனும் வென்றுகாட்ட உறுதி யோடு முயலுவோம்.
என்றும் பூமி மீதுமக்கள் ஏற்ற நின்று வாழுவோம்.

(பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு நடத்திய அமரர். கவிமாமணி நா.சீ.வ நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.)

Tuesday, August 04, 2009

தமிழா தமிழ் வளர்க்க வா

கன்னடத்தை மற்றும் கவின்தெலுங்கின் சீர்தன்னை
மண்ணில் மலையாள மாண்பதனை- உன்னால்
அமிழ்தத் தமிழ்விஞ்சும் ஆற்றலுற வேண்டும்
தமிழா தமிழ்வளர்க்க வா.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஜனவரி 2001)

இறப்பென்றும் இல்லாத் தமிழ்

செம்பொருள்சேர் வள்ளுவமும் சிந்தா மணிநயமும்
கம்பன் கவியழகும் கண்டவர்கள், வாழ்த்தச்
சிறக்கும் வளம்பெருகிச் சீரோங்கி நிற்கும்
இறப்பென்று மில்லாத் தமிழ்.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஆகஸ்ட் 2000)

Monday, August 03, 2009

தன்னிகர் இல்லாத் தமிழ்

தன்னை வணங்கித் தமிழில்நூல் செய்வோர்க்கு
அன்னை யெனநின்றே யருள்செய்யும்- என்றுமிளங்
கன்னியெனத் தோற்றம் கவிதையினிற் காட்டிடுமென்
தன்னிக ரில்லாத் தமிழ்.


மதுரைத் தென்றல்: வெண்பாப் போட்டி-(டிசம்பர் 1999).

குறள் இலக்கணக் குறள்.

வெண்டளையிற் சீரேழும் வெண்பாவிற் போலீறும்
கொண்டு மலரும் குறள்.

'கவிதை' மாத இதழ். -குறள் வெண்பாப் போட்டி(ஜூன் 1989).

Sunday, July 19, 2009

இந்து சமயத்தில் பொங்கலின் பெருமை

1. உத்தராயனமும் பொங்கல் திருநாளும்

பேரொளியின் பிறப்பிடமாய்க் கதிர்கள் வீசிப்
பெருநெருப்புக் கோளமெனத் தோற்று கின்ற
காரிருளை மாய்த்தொழிக்கும் கதிரோன் தேரின்
காலத்துச் சக்கரங்கள் சுழலும் போது
பாரிதனிற் பகலிரவு நாளென் றோடிப்
பலகோடி ஆண்டுகளாய்ப் பரிண மிக்கும்.
சூரியனின் காலகதி நொடிபி ழைப்பின்
சொல்லரிய மாற்றங்கள் கோடி நேரும்.

பகுத்தமைத்த ராசிகளில் தனுசு நீங்கிப்
பரிதியவன் தன்வழியே மகரந் தன்னில்
புகுநிலையில் தேவர்களுக் கிரவு நீங்கும்
பூமியிலே தைமாதம் பிறக்கு மென்று
வகுத்துரைத்த சான்றோர்கள் அயனம் மாறும்
உயர்வான உத்தரத்தின் தொடக்க நாளை
மிகுத்துரைத்துப் பொங்கலெனும் திருநா ளாக
மேன்மையுறக் கொண்டாட விதித்து வைத்தார்.

பாரதப்போர் பத்தாம்நாள் களத்தி லன்று
பாண்டவரை எதிர்கொண்ட கௌர வர்பால்
வீரத்துச் சிறந்திருந்தும் விதியின் வலியால்
வீடுமரை அருச்சுனனின் சரங்கள் சாய்க்க,
பேருலக நற்கதியை அடைய வேண்டிப்
பெருமைமிகு உத்தரத்தின் அயனந் தோன்றக்
கார்வண்ண நெடுமாலை மனத்தி ருத்திக்
காத்திருந்த சிறப்பறிவர் உலக மக்கள்.

வெகுநாளின் பழையபொருள் கழித்து, வீட்டை
வெள்ளையிலே அலங்கரித்துச் செம்ம ணோடு
புகுவாசல் நிலைதிருத்திக் கோல மிட்டு,
புத்தாடை இடையுடுத்திப் புளகம் மிக்கு,
மிகவிளைந்த புதுநெல்லின் அரிசி கொண்டு
மெல்லியலார் புதுப்பாலில் பொங்க லிட்டு,
சுகவாழ்வு பெறவேண்டிச் சுற்றம் சூழ
சூரியனை வழிபட்டுப் படையல் செய்வார்.

2. இந்திரனும் போகிப் பண்டிகையும்

செங்கமல லக்குமியின் நோக்கம் பெற்று
சிறப்புற்ற இந்திரனின் உலகந் தன்னில்
சங்கமென்றும் பதுமமென்றும் நிதியி ரண்டு,
சாத்திரங்கள் போற்றுகின்ற காம தேனு,
எங்குமிலாக் கல்பதரு, இச்சை தீர்க்கும்
எழில்மிக்க சிந்தாமனி ரத்தி னக்கல்
தங்கியிவை தருகின்ற இன்பந் துய்க்குந்
தன்மையினால் இந்திரனைப் 'போகி' என்றார்.

இந்துமதம் உலகத்தின் இயக்கத் துக்கே
இன்றியமை யாதனவாய்க் கருது கின்ற
அந்தரமும்,நிலமண்ணும், உலகு காக்கும்
அருங்காற்றும், குளிர்நீரும் மற்று முள்ள
செந்தீயாம் அழலுமெனப் பூத மைந்தின்
செயல்வகையைத் தேவர்களின் வேந்த னான
இந்திரனின் கட்டளையால் நிகழ்வ தென்று,
இயம்பிடுத லறியாதார் யாரு மில்லை.

மண்ணுலகி லறஞ்செழிக்க, உயிர்கள் வாழ,
மரஞ்செடிகள் தழைத்திருக்க, நாட்டி லெங்கும்
உண்ணுநீர் வளம்பெருகி வாய்க்கா லோடி,
உழுதவயல் நிலம்பாய்ந்து, உயர்ந்து நின்று
கண்கவரும் பயிர்விளைவைக் கதிர றுத்துக்
களிக்கின்ற உழவர்நிலை காண வேண்டின்
விண்நிறைந்த கருமுகிலா லாகும், அன்றி
வேறுவழி நானிலத்தில் இல்லை யன்றோ?

கங்குலெனில் ஒளிகாக்கும். உலகை என்றும்
கடுவெம்மை வறட்சியெனில் மழையே காக்கும்.
திங்களுக்கு மும்முறையும் மாரி பெய்து
தீங்கின்றி நாடெல்லாஞ் செழிக்க, வெள்ளை
வெங்களிற்று வேந்தனவன் விருப்பா லாகும்.
விளைநிலங்கள் சிறக்குமென நாட்டு மக்கள்
இங்கவற்கு மார்கழியின் இறுதி நாளில்
இயற்றுமொரு பூசையினால் மகிழச் செய்வார்.

3. மாதவனும் மாட்டுப் பொங்கலும்.

பாற்கடலில் பள்ளிகொண்ட பரமன் முன்பு
பாரதப்போர் நிகழுகைக்காய் மண்ணில் வந்து
தோற்றத்தில் ஆய்ச்சியரின் கோகு லத்தில்
துருதுருத்த குழந்தையென வளரு நாளில்
காற்சலங்கை சப்தமிட ஓடி வெண்ணெய்
களவாடி உண்டதெலாங் காட்டு கின்ற
ஏற்றமிகு ஆழ்வார்கள் பாசு ரங்கள்
எடுத்தியம்பும் லீலைகளில் ஒன்று காண்போம்.

காய்ச்சியபாற் பொங்கலொடு நெய்யுந் தேனும்
கற்கண்டுச் சுவைக்கனியும் பலப டைத்தே
ஆய்க்குலத்தார் மழைகருதிப் பூசை யிட்டார்.
அதனாலே இந்திரனுங் கர்வங் கொண்டான்.
வேய்ங்குழலோன் இந்திரனின் அகந்தை முற்ற
வேரறுத்துச் சீர்திருத்த எண்ணங் கொண்டு,
ஆய்க்குலத்தார் பெருவாழ்வு நிலைக்க வேண்டின்
ஆநிரைக்குப் பூசையிட ஆணை யிட்டான்.

தன்பெருமைச் சிறப்பழிந்த தேவர் வேந்தன்
தனக்குற்ற தாழ்ச்சியினாற் கோபங் கொண்டு
மண்மீது வாழுகின்ற மனிதர் மற்றும்
மரஞ்செடிகள் மிருகங்கள் உயிர்க ளெல்லாம்
துன்புறுமோர் நிலைகண்டு மகிழு தற்காய்த்
தொடர்மழையால் கோகுலத்தைத் துயரு ருத்த
விண்படிந்த கருமுகில்கள் முழங்கி மின்ன,
வீழ்வனவாய்ப் பெருமழையைத் தோன்றச் செய்தான்.

பிழைப்பதற்கு ஆயரெலா மொன்று கூடி
பெருமாயன் கண்ணனையே வேண்டி நிற்க,
தழைதருவி னொருமலையை நிலைபெ யர்த்துத்
தன்கரத்துப் பெருங்குடையாய் உயர்த்தி, வீழும்
மழைதடுத்து, உயிரினங்கள் அனைத்து மங்கே
மறைந்தொதுங்க இடமளித்துக் காத்த கண்ணன்
பிழையுணர்த்தி, இந்திரனின் கர்வம் நீக்கிப்
பெருமகிழ்வால் பூவுலகம் பொலியச் செய்தான்.

நீராட்டிப் பசுக்களுக்கு மஞ்சள் பூசி,
நெற்றியிலே குங்குமத்தாற் பொட்டு மிட்டு,
கூராக்கிக் கொம்புகளில் வர்ணம் பூசி,
குவிகின்ற பூணிட்டு, மாலை சூட்டி,
சீராக ஒலியெழுப்பும் மணிகள் கட்டிச்
சிங்காரம் பலசெய்து பொங்கல் வைத்து,
ஏராள மானவர்கள் கூடி யன்று
எடுத்திட்ட பூசையின்று மட்டுப் பொங்கல்.

4. காப்புக் கட்டுதல்

தோற்றத்தால் நோக்குகின்ற திசையால் மற்றும்
தன்னுடைய வாகனத்தா லுடையா லெல்லாம்
மாற்றங்கள் விளைவித்துப் பீட ழித்து
மன்னுலகில் பஞ்சத்தைத் தோற்று விக்கும்
ஏற்றமிலாத் தேவதையாம் சங்க ராந்தி
ஏறிட்டுத் தம்வீட்டை நோக்கா தேக
நாற்றமிலாப் பீளைமலர் வேம்பின் இலைகள்
நன்மைக்காய்க் கூரைகளிற் கட்டி வைப்பர்.

5. வாழ்த்து

உண்டான மதநூல்கள் உரைப்ப தெல்லாம்
உணராத பலருண்டு இந்த நாட்டில்.
பண்டிகையாய்க் கொண்டாடும் பொங்கல் நாளைப்
பற்றியொரு தனியியக்கம் உண்மை மாற்றிக்
கண்டபடி பேசிவரு மிந்த நாளில்
கவிமன்றம் முன்வந்து போட்டி வைத்துத்
தொண்டாற்றும் செயலறிவேன். இறையை நானுந்
துதிக்கின்றேன் உமக்கருள வேண்டு மென்றே!


(காஞ்சிபுரம் இந்து தமிழ்க்கவிஞர் மன்றம்- 1984- பொங்கல் திருநாள் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது.)

கலவையில் நடந்த விழாவில்,காஞ்சி ஆசார்ய சுவாமிகள் மூவரையும் ஒன்றாகத் தரிசித்துப் பாடிய வெண்பா.

தோற்றத்தைக் காண்போர் துயர்விலகும், ஆசிபெறின்
கூற்றை விலக்கிடவுங் கூடுமருள் நோக்கொன்றே
கோள்சாரம் மாற்றிக் குறை தீர்க்கும். அம்மூவர்
தாள்பணியு மெந்தன் தலை.

Monday, June 22, 2009

இந்து மதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை


ஆயிர மாயிர மாண்டு களாய் - இங்கு
ஆதி மதமென வேர்ப ரந்து
பாயு நதிக்கரைப் பர்வத மீதிலும்
பள்ளம் சமவெளிப் பகுதி யெலாம்

ஆயிர மாயிர விழுதி றக்கி - ஓர்
ஆல மரமெனத் தழைத்தி ருந்து
காயும் பிறமத வெம்மை தடுத்திட
காலம் விரித்தநி ழற்கு டையே!

சாம யசுரென ருக்கெ னவும்- இன்னும்
சாற்று மதர்வண வேத மென்றும்
ஓமம் வளர்த்தலும் மந்தி ரங்கள்
ஓதி நிதம்செயும் பூசை களும்

நாமவை ஏற்றநற் கொள்கை வழிதனில்
நாலென வைந்தென வாகி டினும்
பூமியில் வாழ்கிற மக்க ளுக்கு - ஒரு
புண்ணிய நற்கதி நல்கி டுமே!

கோவில் குளமெனக் கட்டி வைத்து, - பல
கும்பிடு தெய்வங்கள் ஆக்கி வைத்து
ஓயும் வழியில்லா மன்த்த டக்கி- அங்கு
ஒன்றி இறைநிலைப் பேரொ ளியில்

தோயும் வகையினில் செய்ப யிற்சி - அதில்
துன்ப மொழித்திடும் நோக்க மொன்றே!
பாயு நதிகளோ வெவ்வே றவையிப்
பாரினில் சேரிடம் ஓர்க டலே!

பார்க்கு மிருவிழித் தோற்ற மெலாம் - பிழை
பாரி லிருக்கிற பொருள ணைத்தும்
கூர்த்த மதியுடைக் கொள்கையிற் சீரியர்
கூறிய தத்துவப் ப்ரம்ம மன்றோ?

சாற்றிய ப்ரம்மமும் உணர்ந்த வர்க்கு
சட்டென மாயையை நீக்கி டுமே!
வேற்றுமை தன்னிடைத் தோற்றி டினும்- பொருள்
வேறல்ல ஒன்றெனக் காட்டி டுமே!

வேதம் முதலுள மீமாம்ச சாத்திரம்
வேறுள வாகம நூல்க ளெலாம்
பேதங் களைப்பல பேசி டினும்- பெரும்
பேறென நாமவை பெற்ற செல்வம்.

மத்ஸ்யம் முதலிய பத்தவ தாரமும்
மாதவன் செய்த வையே.- அவன்
தத்துவ கீதையில் தர்ம நெறிமுறை
யுத்த களந்தனில் தந்த வனே!


காஞ்சீபுரம் இந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நவராத்திரி கவிக்கோவைப் போட்டியில் பரிசு பெற்றது. (அக். 1982)