கம்பனன்று ஷூஅணிந்த காலாலே நடந்தானா?
கழுத்திறுக்கும் டைகட்டிக் காளமேகம் மகிழ்ந்தானா?
செம்பொன்செய் சிலம்பேந்திச் சீரடியாள் கண்ணகியும்
சுடிதார் உடுத்தித்தான் சூளுரைக்கச் சென்றாளா?
நம்மவர்கள் அவையெல்லாம் நாகரிக மென்றேற்று
நின்றபின்னால் வந்ததற்கு நேரான தமிழ்ச்சொல்லா?
வம்பெதற்கு நமக்கென்று வாய்மூடி இருந்தால்நம்
வளமான பண்பாட்டு வரலாறு பிறழாதா?
உலக மயமாதல் ஓயாது நிகழுகையில்
உள்ள மொழியிலெலாம் உருமாற்றம் இயல்பேதான்
வளங்கூட்டும் திசைச்சொல்லால் வளர்ச்சியுறும் தமிழென்றால்
வருகவென மாற்றத்தை வரவேற்க வேண்டுந்தான்.
உலகத்து விஞ்ஞானம் உயர்தமிழில் வேண்டுமெனில்
உளதான தமிழ்ச்சொற்கள் ஒருநாளும் போதாது.
பலபுதிய சொல்லாக்கம் பகர்தமிழில் வரவேண்டும்
பழுகுதமிழ்ப் பண்பாடும் பாராட்டப் படவேண்டும்.
பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் பாடியது(ஏப்ரல் '09).
2 comments:
கலைச்சொற்கள் வேண்டும்தான்; காலத்துக் கேற்றபடி
. . கவனமாய்ச் சொல்லாக்கம் கருத்துடனே செய்திட்டால்
தலைசிறந்த எழுத்துக்கள் தண்டமிழில் வடிவமைத்துத்
. . தரமாகத் தந்திட்டால், தடைசொல்வார்க் கிடமேது?
வலைவீசி நற்கருத்தை வலைத்தளத்தே வழங்கிட்டால்
. . வருத்தமிலை; வரலாறும் பிறழாது; வண்டமிழும்
நிலையாகி நீணிலத்தே நித்தமும் வளர்ந்திடுமே
. . நெஞ்சங்கள் குளிர்ந்திடுமே; நினைத்தாலே இனிக்கிறதே!
சௌந்தர்
ஷூவை 'ஷூ' என்று சொல்லலாம். ஆனால் செருப்பை 'செப்பல்' என்று சொல்லத் தேவையில்லை.பிற மொழிச் சொற்களை மொழி பெயர்க்கும் முன் நம் மொழிச் சொற்களைப் பாதுகாப்பது அவசியம்.
Post a Comment