Sunday, September 06, 2009

ஒரு பெரும் செயல் செய்வோம்

வேத கால மாதியாக வேறு வேறு என்றுநூறு
சாதி கொண்ட மனிதரன்பிற் சேர்ந்து வாழ்ந்த தில்லையா?
போதி தந்த ஞானதீரன் புத்தன் வாழ்ந்த நாட்டினர்
மோதி வீழ்தல் மாற்றிமீண்டும் மனித நேயம் காணுவோம்

ஏழை வாழ்வு என்னவாகும் என்ற எண்ண மின்றியே
ஊழல் லஞ்சம் என்று,ஊரைக் கொள்ளை கொண்டு தின்கிற
பாழும் ஆசைப் பேய்க ளிங்கு பாதம் நாட்டி யாடுதே!
கோழை யென்ன நாமிருந்தால் கொன்று தீர்க்க லாகுமோ?

காதல் மதுவின் மீதுகொண்டு கற்ற கல்வி பண்பெலாம்
போதை கொண்டு போகவிட்டுப் பொருளும் போக நிற்பவர்
மீத முள்ள வாழ்விலேனும் மீண்டு வருதல் வேண்டிநாம்
ஏதும் செய்ய முயன்றிலோம். எங்கு நாடு போகுமோ?

மெள்ள மெள்ள நீர்மைமாறி மேனி வாடும் பூமியின்
வெள்ள மோடிச் சீரழிக்கும் வேறு மாநி லங்களில்
உள்ள நீரின் பாதைமாற்றி யோடு மாறு செய்யவே
உள்ள முள்ளோர் ரொன்றுசேர ஊரும் நாடு முயருமே!

காலை நேரம் வீதியோரம் காணும் மனித எச்சமும்
சாலை மீது வாகனங்கள் சீறி யோடும் சத்தமும்
ஆலை வீசு நச்சுவாயு அச்ச மென்று மொத்தமும்
நளை யேனும் மாறவேண்டும் நாம்மு னைந்து மாற்றுவோம்

தின்று தின்று தூங்கிநாளைத் தொலைத்து வாழ்த லுண்மையில்
பன்றி வாழும் வாழ்வென்று பகர்தல் கேட்ட தில்லையோ?
ஒன்றி லேனும் வென்றுகாட்ட உறுதி யோடு முயலுவோம்.
என்றும் பூமி மீதுமக்கள் ஏற்ற நின்று வாழுவோம்.

(பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு நடத்திய அமரர். கவிமாமணி நா.சீ.வ நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.)

2 comments:

Soundar said...

மந்த புத்தி மானி டர்கள் மண்ணை மாய்க்கும் தீங்கெலாம்
வெந்த புண்ணில் வேலைத் தைக்கும் வேத னைகள் செய்யவே
நொந்து போன மனத்த ராகி நோவு தீரப் பாடுமிச்
சந்த வண்ணம் குழைத்தெடுத்துத் தந்த வண்ணம் மேன்மையே

சௌந்தர்

A Rajagopalan said...

பாராட்டுக்கு மிக்க நன்றி

அ.ரா