முந்தைய தொன்று மறுபடி தோன்றா முறையினிலே
சிந்தை கவரும் சிறப்புள கற்பனை சேர்வகையில்
விந்தை நிறங்களில் வானிதில் வந்து விதவிதமாய்
அந்திப் பொழுதினில் யார்வரை கின்றார் அழித்தழித்தே?
கட்டளைக் கலித்துறை. சந்தவசந்தப் புகைப்படத்துக்கு எழுதியது.
மாயக் காரன் அவனொருவன் - இங்கு
மந்திர வடிவில் இருக்கின்றான். பாயும் மனதை ஈர்க்கின்றான். பற்பல வித்தைகள் புரிகின்றான். ஒற்றைச் சின்ன விதைக்குள்ளே - ஒரு உருவிற் பெரிய ஆலமரம் நிற்கை காட்டி மயக்குகிறான். நெஞ்சில் நின்றே இயக்குகிறான். முட்டைக் குள்ளே காணாது - குஞ்சை மூடி வைத்துக் காட்டியவன் முட்டை பறவைக் குள்வைத்து மேலும் விந்தை புரிகின்றான். முட்டை பறவை இவற்றுள்ளே - இங்கு முதலில் வந்தது எதுவென்றால் கெட்டிக் காரன் செயலலவா கேள்விக் கொன்றும் விடையில்லை. எண்ணில் நேரம் மாறாமல் – உள எதுவும் வழியில் விலகாமல் விண்ணில் எத்தனை பந்துகளை வீசிச் சுழலச் செய்துள்ளான்? எண்ணப் பிடிக்குள்: வருகின்றான் – என எண்ணும் போதே மறைகின்றான் கண்ணைக் கட்டிய ஆட்டமிது கைதொட வந்து நிற்பானோ? |