யான்தோய்ந்த தமிழ்நூல்கள் பலவற் றுள்ளும்
எனைக்கவர்ந்த நூலென்றால் புறநா நூறே!
தான்பெற்ற பிள்ளையெலாம் பயனே இன்றித்
தறுதலையா யாகாமல் உலகு போற்றும்
சான்றோராய் யாக்குவதைத் தந்தை தன்னைச்
சார்ந்ததொரு கடமையென அந்நூல் சொல்லும்.
சான்றோராய்க் கற்போரை ஆக்கும் நூல்கள்.
சரிநிகராய்த் தந்தையென வீட்டி லுள்ளார்..
வனவாசம் செலும்போது ராமன் கூட
உடன்பிரியா லக்குவனும் சென்ற தேபோல்
தணிக்கைக்கு வெளியூர்நான் செல்லும் போது
தரமுள்ள புத்தகமும் பயணங் கொள்ளும்.
மணிக்கணக்காய் உடனிருந்து பொழுது போக்கி
மகிழ்விக்கத் தம்பிகளாய் நூல்க ளுண்டு.
எனதகத்தில் தனியறையே அவர்கட் குண்டு.
எப்போதும் தம்பியரின் துணையு முண்டு.
வருகின்ற பேர்படிக்க வேண்டு மென்று
வாங்குகிற தினத்தாள்கள் வீட்டி லின்றிப்
பெரும்போது பக்கத்து வீட்டி லேயே
பகலினிலே கழிக்கின்ற அண்ண னாகும்.
பருவப்பெண் சிரிக்கின்ற அட்டை போட்டு
பலமாத வாரஇதழ் வருவ யெல்லாம்
உருவத்தை யலங்கரிக்க வகைவ கையாய்
உடையுடுத்தி நிற்கின்ற தங்கை யாகும்.
நன்னெறியைப் பக்திதனைப் புகட்டு கின்ற
நலமிக்க நூற்றொகுப்பா யொருத்தி யுண்டு.
தன்னுலகு சமயலறை என்றே கொண்டு
தாயென்ற பெயரோடு வாழு கின்றாள்.
இன்னுமுள பழையஇதி காச மெல்லாம்
இருக்கின்ற பாட்டியெனில் சரிதா னென்பாய்.
உன்னகத்து மிவர்போல உண்டு நன்ப!
உயர்ந்ததொரு நூலகமே வீட்டி லுண்டே!
மதுரை மாவட்ட மைய நூலகம். நூலக விழா.24.8.2003.
1 comment:
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
Post a Comment