Sunday, January 08, 2023

படித்ததும் கேட்டதும் 37

 


பெரிதாய் அனுபவம்முன் பெற்றிருப்பார் சூழற்குச்

சரியாய்த் தீர்வறிந்து செய்வார் -  அறியார்

எனும்நிலையில் தீர்வால் எழுதவறே எய்தும்

அனுபவமாய் ஆகிடுமே ஆங்கு.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Sunday, March 27, 2022

படித்ததும் கேட்டதும் – 36

 

வெற்றிக் கருகிருந்தும் வீணிதுவென் றேமுயற்சி

அற்றுக்கை விட்டோரிங் காயிரவர். – பற்றித்

தொடரும் முயற்சியெனில் தோல்வியிலை வெற்றி

அடையும் வழியே அது.

Friday, January 07, 2022

படித்ததும் கேட்டதும் – 35

 

 வங்கி இருப்புயர வாழ்தல் அறிவுடைமை

இங்குபயன் காணார் அறிவிலரே! -  எங்ஙனம்

தங்கிய திங்கிருக்கத் தாமிறந்து போவரேல்

அங்கவருக் காகும் அது?.

 

கருத்து; French proverb.

Sunday, January 02, 2022

படித்ததும் கேட்டதும் – 34

 


 

என்னிலுந் தாழ்ந்தவராய் யாருமிலை யென்பதுடன்

என்னி லுயர்ந்து மெவருமிலை -  மண்ணிதனில்

ஒப்பிலனா யுள்ளேன் உளபிறர்போல் நானுமென

எப்போது மெண்ணி யிரு.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)












 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Thursday, December 30, 2021

படித்ததும் கேட்டதும் - 33



வேறு தருந்தகுதி வாயார் அறிவுரைகள்

நூறு தரவருவார் நொந்தகல. – யாரும்

வருமுரைகள் வேண்டார் விரும்பாரோ வாய்ப்பின்

தருபவராய்த் தாமிருந்தால் தான்.


(கருத்து; Vikasa Mantras, VIHE Ramakrishna Math. Hyderabad)

Saturday, December 25, 2021

 

சிறுவர் உலகம்

 

குண்டுக் கோலி சுண்டிய டித்தலும்

     குத்திய பம்பரம் சுற்றிட வைத்தலும்

தண்டுக் கில்லி தட்டிய ளத்தலும்

     தாண்டலு மோடலும் தாவியே குதித்தலும்

நொண்டி யடித்தலும் நூல்பிடித் தாடலும்

     நின்று, சிறுவர் நிலையா யமர்ந்துகைக்

கொண்டசெல் பேசியைக் குணிந்துகண் பார்த்திரு

     கைவிர லழுத்தலே ஆட்டமென் றானதே!

     .

 

உடலதன் நலத்தோ டுளநலம் பேணிட

     உறுதுணை யானதென் றொன்றிலை யானதே!.

தொடுதிரைப் பேசியில் தொலையுருக் காட்சியில்

     தரமிலாத் தொடர்கள் வலைவிளை யாட்டுகள்

விடுபட முடியா தீர்ப்பினி லிவற்றினை

     விரும்புநம் சிறுவரை விலக்குத லெங்ஙனம்?

கெடுதலை யுணராக் கடையரின் செயல்களின்

     கொடுமையா லழியுது குழந்தைக ளுலகமே!

 

அழ. வள்ளியப்பா நினைவுக் கவியரங்கம். பாரதி கலைக்கழகம். 22.11.2020

Saturday, November 27, 2021

பெரியராய்க் கொள்வது கோள்

 


கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்

யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்

அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து

பெரியராய்க் கொள்வது கோள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019

புகழ்தலின் வைதலே நன்று

 

 

வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்

பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்

நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.

புகழ்தலின் வைதலே நன்று.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019