Thursday, June 19, 2025

ப.கே. 57 உடைத்தாராய் யாரிங் குளர்?

 

பொறுமையுடன் நம்பிக்கை போற்றி யிருத்தல்

வருபயனைக் காணும் வழியாம் – ஒருவர்

அடைகாத்த லாற்றாதே ஓடுடைத்துக் குஞ்சை

யுடைத்தாராய் யாரிங் குளர்?


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


ப.கே. 56. கனவு நனவாகும் காண்.

 

முயற்சி கவனம் முறையான திட்டம்

அயர்ச்சி யிலாதுழைக்கு மார்வம் – பயிற்சி

தனமுமுள தாயின் தவறாது வெற்றிக்

கனவு நனவாகும் காண்.

ப.கே. 55 உனக்கிருக்கு மென்றே உணர்

 

பொறாமை யகம்பாவம் பேராசை மூன்று

மிராத மனமுடையை ஆயின் – வராது

மனக்கலக்கம் வாழ்வில் மகிழ்வோ டமைதி

உனக்கிருக்கு மென்றே உணர்.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


ப.கே. 54. கல்லறையிலே கிடைக்கும் காண்.

முயன்றால் மனக்குழப்பம் முற்றா தமைதி

இயன்றவரை போராடி எய்தலாம். -  முயற்சியே

எள்ளளவு மின்றி எளிதிலது வேண்டுமெனில்

கல்லறையி லேகிடைக்கும் காண். 


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Saturday, May 24, 2025

மருந்து

                      மருந்தென்றேன் காபி மறக்காதைந் தெம்மல்     

                      அருந்தென்று தந்தாள் அவள்      

                     சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் டாக்டர்.

                      ரவீந்திரனின்   காபி வந்தனம்  கவிதைக்குப் 

                     பின்னூட்டமாய்   எழுதியது.    (25.11.2019)

 

                                       

      ம

 

 

Saturday, May 10, 2025

ப.கே 53. புத்தக வாசிப்பே பொன்

 

முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு

பத்தி அமையப் பதித்தவைகள்.  --- ஒத்தநகை.

மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்

புத்தக வாசிப்பே பொன்.

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.



Saturday, April 26, 2025

நாமம் சொல்ல நியதி இல்லை




ஏதும் நியதியிலை எம்பெருமான் நாமம்நாம்
ஓதும் பொழுதே உயர்தருணம் – பாதையிலே
கல்லிடறிக் காயமுறுங் காலம்மா வென்றொருசொல்
சொல்லச் சடங்குண்டோ சொல்.


நாமம் சொல்ல நியதி இல்லை என்கிற தலைப்பிலான முகநூல் கட்டுரைக்காக 7.4.2020 ல் எழுதியது

ப.கே 52 ஈடில்லை

 


எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்

கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா

பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே

ஈடிங் கிலையென்பேன் யான்

 

முதுபெருங் கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப் படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019

Wednesday, April 23, 2025

வாழ்க வாழ்க!

 


 

புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. மு. தருமராசன் அவர்களின் 80 ஆண்டு நிறைவு வாழ்த்துப்பா.

 

பெருமதிப்பிற் பணம்புழங்கிப்

      பெருகிவளர் வங்கியெனும்

திருமகளின் உறைவிடத்துத்

      தினம்சென்று பணியாற்றி

வருபொருளால் வாழ்வியற்றல்

      வாய்த்திருந்தார்! செந்தமிழ்த்தாய்

அருளுடைமை காண்வகையில்

      ஆற்றொழுக்காய் எழுதவல்லார்!

 

 

பணியிலுளோர் உரிமைக்காய்ப்

       பலதடவை குரல்கொடுத்த

துணிவுடைய தலைவரெனத்

       துலங்கியவர். பண்புமிக்கார்.

இணைபிரியாத் துணைவியொடு

       இருவருமாய் மனமுவந்து

அணுகுபவற் குதவிசெயும்

        அருமையான தம்பதியர்.

 

 

எதுவரையிற் கதிருளதோ

        எதுவரையில் மதியுளதோ

அதுவரையில் இறையருளால்

        அமையுமுடல் நலமுடனே

இதுவரையில் அடைந்தபுகழ்

        இனும்மிகுந்து வளர்வகையில்

புதுகைநகர்த் தருமராசன் -

        பானுமதி வாழ்கவாழ்க!

 

 

தருமராசன் 80 நிறைவு மலரில் வெளியானது.

Sunday, March 30, 2025

ப.கே. 51. அதுவளரும் முன்னர் அகற்று

மெலிதாக முன்பிருந்த முட்டைக் கருவே

வலிய முதலையென வாகும். -  நிலையாய்

இதுசிறிதென் றெண்ணா திடர்விளைக்கு மொன்றை

அதுவளரும் முன்னர் அகற்று.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.) 

ப.கே. 50. முன்னரே செய்ய முயல்

 

நாளையென் றொன்றில்லை நேற்றுக் கவலையுடன்

நாளையென்ற தின்றைய நாளைத்தான். -  நாளையெனில்

இன்னொருநாள் வேறென்ன? எண்ணியவை நல்லபடி

முன்னரே செய்ய முயல்.

ப.கே. 49 படிப்பதால் உண்டு பயன்

 

உண்டுபயன் என்றே உறுதியாய் நம்பாது

கொண்டதொரு சந்தேகம் கூடியதோ? – கொண்டு

வடித்தபா ஈறாக வாய்த்ததிதே உண்மை

படிப்பதால் உண்டு பயன்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 15.4.2019

Sunday, March 23, 2025

எல்லோர்க்கும் ‘நல்லி’

 

 

கல்விக் கொடையும் கலைவளர்ச்சிக்  காதரவும்

நல்கு தமிழ்வழங்கு  நாவலரைச் --- சொல்லற்குச்

சொல்லிலையே. எப்போதும் சோர்வறியா  தேயுழைக்கும்

நல்லிபுகழ் நாடறியும் நன்கு.

 

 

முன்னேறக் கற்போர் முயன்று படிப்பதற்குத்

தன்னே  ரிலாத தனிநூலாய் ---  மண்ணிலுளோர்

தாழ்வின்றி வென்றுயரத் தான்வாழ்ந்து காட்டுகிறார்

வாழ்வு நடத்தும் வழி

 

 

பட்டுக்  கிவரென்று பார்போற்ற நின்றாரை

எட்டியெடை போடல் இயலாதே.  ---  பட்டறிவால்

இட்ட பெயரறியா எல்லோர்க்கும் நல்லி’யாய்க்

கிட்ட இருக்கின்றார் காண்.

 

பட்டறிவு = அனுபவத்தால் ஏற்பட்டதும், பட்டு பற்றியதுமான அறிவு.

 

அன்புப் பாலம் நவம்பர் 2024  நல்லி சிறப்பிதழில் வெளியானது.