Saturday, April 26, 2025

நாமம் சொல்ல நியதி இல்லை




ஏதும் நியதியிலை எம்பெருமான் நாமம்நாம்
ஓதும் பொழுதே உயர்தருணம் – பாதையிலே
கல்லிடறிக் காயமுறுங் காலம்மா வென்றொருசொல்
சொல்லச் சடங்குண்டோ சொல்.


நாமம் சொல்ல நியதி இல்லை என்கிற தலைப்பிலான முகநூல் கட்டுரைக்காக 7.4.2020 ல் எழுதியது

ப.கே 52 ஈடில்லை

 


எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்

கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா

பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே

ஈடிங் கிலையென்பேன் யான்

 

முதுபெருங் கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப் படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019

Wednesday, April 23, 2025

வாழ்க வாழ்க!

 


 

புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. மு. தருமராசன் அவர்களின் 80 ஆண்டு நிறைவு வாழ்த்துப்பா.

 

பெருமதிப்பிற் பணம்புழங்கிப்

      பெருகிவளர் வங்கியெனும்

திருமகளின் உறைவிடத்துத்

      தினம்சென்று பணியாற்றி

வருபொருளால் வாழ்வியற்றல்

      வாய்த்திருந்தார்! செந்தமிழ்த்தாய்

அருளுடைமை காண்வகையில்

      ஆற்றொழுக்காய் எழுதவல்லார்!

 

 

பணியிலுளோர் உரிமைக்காய்ப்

       பலதடவை குரல்கொடுத்த

துணிவுடைய தலைவரெனத்

       துலங்கியவர். பண்புமிக்கார்.

இணைபிரியாத் துணைவியொடு

       இருவருமாய் மனமுவந்து

அணுகுபவற் குதவிசெயும்

        அருமையான தம்பதியர்.

 

 

எதுவரையிற் கதிருளதோ

        எதுவரையில் மதியுளதோ

அதுவரையில் இறையருளால்

        அமையுமுடல் நலமுடனே

இதுவரையில் அடைந்தபுகழ்

        இனும்மிகுந்து வளர்வகையில்

புதுகைநகர்த் தருமராசன் -

        பானுமதி வாழ்கவாழ்க!

 

 

தருமராசன் 80 நிறைவு மலரில் வெளியானது.

Sunday, March 30, 2025

ப.கே. 51. அதுவளரும் முன்னர் அகற்று

மெலிதாக முன்பிருந்த முட்டைக் கருவே

வலிய முதலையென வாகும். -  நிலையாய்

இதுசிறிதென் றெண்ணா திடர்விளைக்கு மொன்றை

அதுவளரும் முன்னர் அகற்று.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.) 

ப.கே. 50. முன்னரே செய்ய முயல்

 

நாளையென் றொன்றில்லை நேற்றுக் கவலையுடன்

நாளையென்ற தின்றைய நாளைத்தான். -  நாளையெனில்

இன்னொருநாள் வேறென்ன? எண்ணியவை நல்லபடி

முன்னரே செய்ய முயல்.

ப.கே. 49 படிப்பதால் உண்டு பயன்

 

உண்டுபயன் என்றே உறுதியாய் நம்பாது

கொண்டதொரு சந்தேகம் கூடியதோ? – கொண்டு

வடித்தபா ஈறாக வாய்த்ததிதே உண்மை

படிப்பதால் உண்டு பயன்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 15.4.2019

Sunday, March 23, 2025

எல்லோர்க்கும் ‘நல்லி’

 

 

கல்விக் கொடையும் கலைவளர்ச்சிக்  காதரவும்

நல்கு தமிழ்வழங்கு  நாவலரைச் --- சொல்லற்குச்

சொல்லிலையே. எப்போதும் சோர்வறியா  தேயுழைக்கும்

நல்லிபுகழ் நாடறியும் நன்கு.

 

 

முன்னேறக் கற்போர் முயன்று படிப்பதற்குத்

தன்னே  ரிலாத தனிநூலாய் ---  மண்ணிலுளோர்

தாழ்வின்றி வென்றுயரத் தான்வாழ்ந்து காட்டுகிறார்

வாழ்வு நடத்தும் வழி

 

 

பட்டுக்  கிவரென்று பார்போற்ற நின்றாரை

எட்டியெடை போடல் இயலாதே.  ---  பட்டறிவால்

இட்ட பெயரறியா எல்லோர்க்கும் நல்லி’யாய்க்

கிட்ட இருக்கின்றார் காண்.

 

பட்டறிவு = அனுபவத்தால் ஏற்பட்டதும், பட்டு பற்றியதுமான அறிவு.

 

அன்புப் பாலம் நவம்பர் 2024  நல்லி சிறப்பிதழில் வெளியானது.

Thursday, March 20, 2025

பேச்சு சுதந்திரம் ஒன்றே பெரிது

 



ஓயா துழைத்தலும் உயர்பொரு ளீட்டலும்

தேயா துளபுகழ் தேடலு மின்றி

வேயா மாட விரிவெளி போலுள

வாயாற் பேசி வாழ்பொழு தழிப்பார்

 

--- வேறு சுதந்திரம் வேண்டிய தில்லை

 

இதமுடன் பேசல் இறங்கி அடங்கலாம்

அதிரப் பேசலே ஆண்மையென் றிருப்பார்

எதையும் பேச அவர்க்குள உரிமையில்

எதுவும் தடைவரில் ஏற்றிட மறுப்பார்

 

--- வேறு சுதந்திரம் வேண்டிய தில்லை

 

கசையா லடித்துக் காயப் படுத்தலாய்

வசைகள் மொழிந்து வாயாற் கிழிக்கும்

இசையா தோரை இழித்துப் பேசுமந்

நசைக்குத் தீனி நல்கு சுதந்திரம்.

 

--- வேறு சுதந்திரம் வேண்டிய தில்லை

Sunday, February 16, 2025

ப.கே. 48 பூவின்மேல் எத்தனை பூ

 

  

    

   பின்னற் றலைப்பூவும் பட்டுச்சிற் றாடையினிற்

   கண்ணைக் கவர்மலர்கள் காண்பவையும் – மின்னலெனத்

   தாவிவிளை யாடத் தரைவந்த தேவதையிப்

   பூவின்மேல் எத்தனை பூ

 

   ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com செப். 2020

ப.கே.47. வினைசெய்ய நாளும் விரும்பு.

 

    முன்னரே எண்ணி முடிக்கும் வழியறிந்து

    பின்னர் பெறுபயனும் பார்த்திடுவாய்   இன்னும்

    முனைந்து நெறிகளுக்குள் முற்றவும் நின்றே

    வினைசெய்ய நாளும் விரும்பு.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Aug.2020

Friday, January 31, 2025

நரகாசுரர்களை நைப்போம் நாமே

 


 

பொருளொடு பண்பும் போதையி லழிய

வருதுயர் மீண்டு வரும்வழி யறியா

மனிதரை மயக்கி மதியினை யழித்து

இனியிவர் பயனில ரெனும்படி யாக்கும்

அதுதரு துயரம் அளவிடற் கரியது.

மதுவெனு மரக்கனை மடித்திட வேண்டும்.

பிறப்பி னடியிற் பிரிவுக ளோதி

அறம்பிறழ் செய்கை அளவில தாகப்

பிறர்பகை வளர்க்கும் பேதமை வெல்லத்

திறம்பட முயன்றத் தீமையொ டின்னும்,

மேசைக் கடியில் கைகளை நீட்டி

ஓசையி லாதே உளபொருள் கொள்ளும்

பரவும் லஞ்சப் பழம்பே யுட்பட,

நரகினி லாழ்த்தும் நம்மிடர் விலக,

உரமுள நெஞ்சுட னுறுதியாய்

நரகா சுரர்களை நைப்போம் நாமே.


புதுச்சேரி, ஓசோன் பூம்பொழில் இலக்கிய அமைப்பு நடத்திய, ஆசிரியப்பாப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. 4.12.2022.


Tuesday, December 31, 2024

படித்ததும் கேட்டதும் – 46

 

தன்னைப் பிறருயர்வாய்த் தான்நினைக்க வேண்டுமென

எண்ணிக் குறைமறைப்பார் எத்தனைபேர்? – உன்னுயரம்

நீயறிவை ஊரார் நினைப்பெண்ணல் தோன்றுமன  

நோயுளமை காட்டும் நிலை.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, December 13, 2024


 

   எங்குராம ராமவென்ற ஓதலோசை கேட்குமோ

      அங்குநீரு குத்தகண்க ளோடுகைகள் கூப்பியே

      தங்கியஞ்ச லிக்குமாஞ்ச நேயர்தீமை மாய்த்தமை

      தங்குநெஞ்சி னோர்கள்வாட நேருதுன்ப மில்லையே.

 

      

(ஆஞ்சநேயர் மீதான, ‘யத்ர யத்ர ரகுநாத      கீர்த்தனம்’ என்று  தொடங்கும் வடமொழி ஸ்லோகத்தின்  பொருளை உள்ளடக்கியது.)

Saturday, November 30, 2024

படித்ததும் கேட்டதும் --- 45

 

தோடகம்   

 

பொருளோ டுளசீர் இருநான் குளதாய்

   புளிமா வெனவே யுளவீ ரடியாய்

வருமோ ரெதுகை வளமோ னையதாய்

   வரைவார் புலவோர் அதுதோ டகமே.

 

முகநூல் சந்தவசந்தக் குழுமத்தில், தோடக சந்தம் பற்றிய, திரு. இலந்தை ராமசாமி அவர்களின் இழையில், அதன் இலக்கணத்தை அதே சந்தத்தில் எழுத முயன்றது.

படித்ததும் கேட்டதும் -- 44

 

வலிமை வனப்பு வளர்செல்வம் வாய்த்த

புலமையிவை நில்லாது போகும் --  உலகில்

உயிரிழந்தும் வாழ்வுதரும் ஒன்றப் புகழே

உயிரினும் மேலாம் உணர்.


ஈற்றடிக்கு எழுதியது.

Tamilauthors.com   July 2020

Sunday, November 24, 2024

படித்ததும் கேட்டதும் – 43


 சாதி மதமென்று சாற்றிப் பலநூறு

பேதங் களைக்கண்டு பேணுகிறோம் – போதும்

தலையாய தான தொருமனித நேயம்

கலையாது காத்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதியது.

 Tamilauthors.com Minnithazh. 7.1.2019



Friday, November 15, 2024

படித்ததும் கேட்டதும் – 42


 

காற்சட்டைப் பைகளிற் கைவிட்ட வாறேணி

சாற்றியதி லேறுவது சாத்தியமா? – தோற்றே

இழைப்பஞ்சி நின்றாரால் ஏதியலும்? இங்கே

உழைப்பின்றி வாரா துயர்வு.

 

ஈற்றுச்சீர் முற்றியலுகரத்திற்குக் காட்டு;

‘இனத்தியல்ப தாகும் அறிவு’ -குறள் 452 (சிற்றினம் சேராமை)


கருத்து; Vikasa Manthras , VIHE Ramakrishna Math, Hyderabad.

Friday, October 25, 2024

படித்ததும் கேட்டதும் – 41

 



 அங்கத்தில் மொய்த்தவா றஞ்சாச் சிறுபூச்சி

சிங்கத்தைச் சீற்றமுறச் செய்யுமே -  நங்காய்

சிறியவையென் றென்றுமுதா சீனப் படுத்தல்

அறிவுடைமை ஆகா தறி.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)

Wednesday, October 23, 2024

படித்ததும் கேட்டதும் - 4 0

 

 

 முகத்தில் அழுக்குளதை முன்வருவார் கண்டும்

அகத்துள் நகைகொண் டகல்வார். -  பகரார்

முகம்பார்க்கும் கண்ணாடி முன்னுளதே காட்டும்

நகைக்காது நன்று நமக்கு.



(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, October 18, 2024

படித்ததும் கேட்டதும் -39

 

   

தேடித் தமிழ்ப்பண்கள் தாளங் களையாய்ந்து

வாடுந் தமிழிசைக்கு வாழ்வளிக்க – நாடுவதார்?

கூடித் தமிழ்ப்பாடல் கர்நா டகஇசையில்

பாடி மகிழ்வோர் பலர்.

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com