Tuesday, April 14, 2020

திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்



 திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்.

ராகம்: சஹானா                   தாளம்: ஆதி

இயற்றிவர் : அ. இராஜகோபாலன்
பாடியவர் : அரவிந்த் ரெங்கராஜன்





பல்லவி 

எனக்கிவை நீ அருள்வாய்! தாயே! தயாநிதியே! ...(எனக்கிவை)

அநு பல்லவி

தனக்கிணை இல்லாத புல்லையின் நாயகன்
தனித் துணை நீயே! தாமரை யாரணங்கே!


சரணம் 1

வேதப் பொருளுணரும் ஞானமில்லை. நிற்க
வேண்டிய நெறிமுறையைக் கற்றதில் நின்றதில்லை.
ஏது மிலாதார்க்கும் இரங்கிடுவாய். இந்த
ஏழையின் வேண்டலையும் ஏற்றிடுவாய் அம்மா. (எனக்கிவை..

சரணம் 2

உள்ளவரை மனதில் உறைந்திடுவாய்.- என்றும்
ஓதியுன் தாள்பணியும் உள்ளமும் நீ தருவாய்!
கள்ள மனக் கசடைக் களைந்திடுவாய் -இனி
கருப் புகாதபடி காத்திடுவாய் அம்மா! ...(எனக்கிவை)





பொருள்:

பல்லவி:

கருணைக் கடலாக இருக்கிற தாயே! (நான் வேண்டுகிற) இவைகளை எனக்குத் தந்தருள வேண்டும்.

அனுபல்லவி:

தனக்கு ஒத்தவராக வேறொருவர் இல்லாத,(ஒப்பற்ற,) திருப்புல்லாணியின் நயகனான எம்பெருமான் ஆதிஜெகந்நாதனின் இனிய துணைவி நீ! தாமரை மலரின் மீது வீற்றிருப்பவளே!... 

சரணம்1

எனக்கு வேதங்களில் கூறப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றிய ஞானமில்லை. வாழும் நெறிமுறைகளைச் சொல்லும் சாஸ்திரங்களைக் கற்று, அதன்படி நடக்கவில்லை. எதுவுமே இன்றி மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்திலும் மனம் இரங்கி அருளக்கூடியவளான தாயே! என்னுடைய வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அம்மா!

சரணம் 2

என் வாழ்நாள் முடியும் வரை என் மனதில் நீ அகலாது வீற்றிருக்க வேண்டும். என்றும் உன் புகழ் பாடி, உன் திருவடிகளில் பணிகிற மனப் பக்குவத்தைத் தரவேண்டும். மறைந்து, நிலைத்திருக்ககூடிய கசடுகளைக் களைந்து, என் மனதைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். இனி, இன்னொரு பிறவி இல்லாதபடி (மீண்டும் பிறப்பதற்காகக் கருவினிற் சேராதபடி) காத்திடவேண்டும் தாயே!.


அ. இராஜகோபாலன்.

Friday, March 27, 2020

கொரோனா ஊரடங்கு



பரவியபின் துன்பப் படுவானேன்? தொற்று
பரவாமல் நீதடுக்கப் பார்.

வீட்டுக்குள் நீஇருந்தால் வைரஸ்தொற் றாததுவுன்
நாட்டுக்குச் செய்யும் நலம்.

தொற்றுமவ் வைரஸ் தொலைந்தொழிய வேண்டில்நீ
முற்றும் முடங்கி இரு.

Monday, March 09, 2020

என்ன சொல்ல வந்திருப்பாள்?



என்ன சொல்ல வந்திருப்பாள்
என்றே எண்ணிப் பார்க்கின்றேன்.
எண்ணம் முழுதும் அதுநின்றும் – இனும்
ஏதும் அறியும் நிலையில்லை.
          (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

என்னை அங்கே கண்டதுமே
எழுந்தி ருந்து வந்தேதன்
சின்னக் கையால் என்கையை – ஒரு
சேரப் பற்றி நின்றனளே!
              (என்ன சொல்ல வந்திருப்பாள்?….

அன்னை கண்டு வந்துடனே
அடித்த ழைத்துப் போய்விட்டாள்.
சின்னக் குழந்தை கண்கலங்கி – தன்
சிறுவாய் குழறிப் பின்போனாள்.
               (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அன்னை மறுத்த திண்பண்டம்
ஆசை அடக்க இயலாமல்
என்னக் கேட்டுப் பெறஎண்ணி – என்
எதிரே ஓடி வந்தனளோ?
                (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

குரங்கு கையால் தானாகக்
கொட்டு முழக்கும் சிறுபொம்மை
உறங்க ஓசை தடையென்றே – தந்தை
ஒளித்து வைத்த துயர் சொலவா?
                 (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அண்ணன் போலே தனக்குமொரு
ஆடை புதிதாய்க் கேட்டதனால்
’என்ன போட்டி இது’என்றே –அவள்
அண்ணன் அதட்டிப் போனதையா?
                   (என்ன சொல்ல வந்திருப்பாள்?….

Saturday, February 22, 2020

உறைந்துள்ளாள் என்றன் உளத்து





இல்லாள வந்தென் இதயத்தைச் சேர்த்தாண்ட
நல்லாள் பிரிந்தாளோ? நானுளனே! – வல்லாள்
மறைந்துள்ளாள் என்றும் மறக்கவிய லாதே
உறைந்துள்ளாள் என்றன் உளத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. Feb. 2020.

Friday, February 21, 2020

புல்லறிவு காட்டி விடும்



மெய்யாய்நூ லொன்றும் முறையாகக் கற்காமல்
பொய்யாய்ப் புலமையுளோன் போற்றோன்றல் – ஐயமற
நல்லறிஞர் கூட்டத்தில் நாவசைத்துப் பேசுகையில்
புல்லறிவு காட்டி விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 14.1.2019.

Friday, February 14, 2020

நிலையாது நீத்து விடும்



பாரிலுளோர் சுண்ணாம்பைப் பாறைக்கல் என்றாலும்
நீரிலது தானாக நீர்த்துவிடும். – தேரில்
கலையாதாய்த் தோன்றும் குணமுடையோர் கோபம்
நிலையாது நீத்து விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 7.1.2019.

Sunday, February 09, 2020

நீர்மே லெழுந்த நெருப்பு



புள்ளும் சிறகால் பயந்துதன் பார்ப்பணைத்துக்
கொள்ளு மெனப்புலவன் கூறியவவ் – வெள்ளத்தீ
சீர்மை மிகுநூறு செவ்வாம்பல் வாயவிழ
நீர்மே லெழுந்த நெருப்பு

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 3.12.2018

Wednesday, January 22, 2020

வானுயர ஓங்கும் வளம்


வானம் பொழிமழையை வாங்கி நிலஈரம்
பேணும் வழிதன்னைப் பின்பற்றில் – காணுகிற
ஈனநிலை மாறி இயற்கையெழில் கொஞ்சிடவே
வானுயர ஓங்கும் வளம்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 19.11.2018  

Wednesday, January 08, 2020

என்சொல்லும் என் நா இனி



'சொன்னபொய் வெல்வதனாற் சொன்னோன் திறமையுளோன்
இந்நாளில் மெய்யுரைப்போன் ஏமாளி. – சொன்னதிதை
இன்றுமுதல் கைக்கொள்வாய்' என்கின்றார். மெய்பொய்யில்
என்சொல்லு மென்நா இனி

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 12.11.2018

Tuesday, January 07, 2020

சொல்லில் வடித்த சுடர்



அறிவிலொளி சேர்க்கும் அருங்குறளும் கொள்கைச்
செறிவு படைத்த சிலம்பும் – அறிஞரெலாம்
கல்விக் கிவனென்ற கம்பனவன் காவியமும்
சொல்லில் வடித்த சுடர்.

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  5.11.2018

Wednesday, January 01, 2020

விழியிலார்க் கேது விளக்கு



பாசமி லார்க்கில்லை பற்றுறவு. நெஞ்சத்து
நேசம் மறந்தார்க்கு நட்பில்லை. - பேசும்
வழியிலார்க் கேனோ ஒலிபெருக்கி. பார்க்கும்
விழியிலார்க் கேது விளக்கு.
ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  29.10.2018.

Sunday, November 03, 2019

குற்றம் குற்றமே




உள்ளத்துள் நீவந் தென்றும்
   உரைந்திடு மிடமே இன்றிக்
கள்ளமே சேர விட்டுக்
   காடென வாக்கி வைத்தேன்.
தள்ளுதற் கரிய துன்பம்
   தவிர்த்திட வேண்டி மட்டும்
உள்ளஊர் கோயில் தேடி
   ஒவ்வொன்றாய் வந்து நின்றேன்.

எனக்கெது வேண்டு மென்றும்
    எப்போது தேவை யென்றும்
அனைத்தையும் அறிவா யென்றும்
     அறியா திருந்த தாலே
எனக்கிவை யருள்வா யென்றும்
    இன்னின்ன வேண்டு மென்றும்
உனக்குமுன் வேண்டி நின்றேன்.
    உரைத்திடில் அதுவும் குற்றம்.

முடியினை முழுது மீந்தேன்.
    முப்பது நாள்தொ டர்ந்து
படிகளில் மலையின் மீது
    பாதத்தால் ஏறிச் சென்றேன்.
அடிமுறை மட்டு மின்றி
    அங்கமே முழுதும் மண்ணில்
படும்படி வலங்கள் செய்து
    பக்தனென் றீர்க்கப் பார்த்தேன்.

கடவுளே! நூலோர் உன்னைக்
    கருணையின் வடிவென் றாரே!
அடியவர் நேர்ந்து கொண்டே
    அவயவம் வருந்தச் செய்யும்
படியவர் செய்வ தெல்லாம்
    பரம!உன் மகிழ்வுக் காமோ?
கொடியதே என்றன் சிந்தை
    குற்றமிது குற்ற மேதான்.


சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் சிற்றரங்கம். 9.2.2019 தலைமைக் கவிதை.

Friday, October 11, 2019

யார் வரைகின்றார் அழித்தழித்தே?



முந்தைய தொன்று மறுபடி தோன்றா முறையினிலே
சிந்தை கவரும் சிறப்புள கற்பனை சேர்வகையில்
விந்தை நிறங்களில் வானிதில் வந்து விதவிதமாய்
அந்திப் பொழுதினில் யார்வரை கின்றார் அழித்தழித்தே?

கட்டளைக் கலித்துறை. சந்தவசந்தப் புகைப்படத்துக்கு எழுதியது.

Sunday, October 06, 2019

வலிதே விதியின் வலி


போயுழைத்து வாங்கியவர் போகா மகிழுந்தில்
நாயமர்ந்து போவதனை நானறிவேன். – நோயில்
வலிய ஒருபக்க வாதப் படுக்கை
வலிதே விதியின் வலி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 22.10.2018

Tuesday, October 01, 2019

தீய மது தீமை தரும்



தென்னை இளநீரும் தேனும் பழரசமும்
என்று மருந்தி இதம்பெறலாம். – பின்னெதற்கு
நோயில் விழுந்துளம் நொந்துநாம் சாவதற்கா?
தீயமது தீமை தரும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 15.10.2018

Thursday, September 26, 2019

முறையோ இதுவே மொழி



மற்றோர்போல் தாமும் மகிழுந்தும் மாளிகையும்
பெற்றிங்கே வாழும் பெருமைசொலக் – கற்றோர்
கறைபடியக் கைநீட்டு கின்றாரே. தோழீ!
முறையோ இதுவே மொழி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 8.10.2018

Tuesday, September 24, 2019

நீட்டித்து நிற்கும் நிலைத்து



புகழும் பொருளும் பெறலரிதே. ஆயின்
புகழே பொருளிற் பெரிதாம். – மகிழ்வுறவே
ஈட்டும் பொருளழியும் எய்துபுகழ் வாழ்நாளை
நீட்டித்து நிற்கும் நிலைத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 2.10.2018

Monday, June 24, 2019

அதனாலே என்றும் அழிவு



குடலை அரிக்கும் குடியைக் கெடுக்கும்
நடத்தை தனைமாற்றும் நஞ்சாம் – உடலே
மதுபோதை யாலழியும் மற்றுள்ள தென்ன?
அதனாலே என்றும் அழிவு.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com minnithazh. 24.9.2018

Tuesday, April 30, 2019

மாயக் காரன்


மாயக் காரன் அவனொருவன் - இங்கு
மந்திர வடிவில் இருக்கின்றான்.
பாயும் மனதை ஈர்க்கின்றான்.
பற்பல வித்தைகள் புரிகின்றான்.

ஒற்றைச் சின்ன விதைக்குள்ளே - ஒரு
உருவிற் பெரிய ஆலமரம்
நிற்கை காட்டி மயக்குகிறான்.
நெஞ்சில் நின்றே இயக்குகிறான்.

முட்டைக் குள்ளே காணாது - குஞ்சை
மூடி வைத்துக் காட்டியவன்
முட்டை பறவைக் குள்வைத்து
மேலும் விந்தை புரிகின்றான்.

முட்டை பறவை இவற்றுள்ளே - இங்கு
முதலில் வந்தது எதுவென்றால்
கெட்டிக் காரன் செயலலவா
கேள்விக் கொன்றும் விடையில்லை.

எண்ணில் நேரம் மாறாமல் – உள
எதுவும் வழியில் விலகாமல்
விண்ணில் எத்தனை பந்துகளை
வீசிச் சுழலச் செய்துள்ளான்?

எண்ணப் பிடிக்குள்: வருகின்றான் – என
எண்ணும் போதே மறைகின்றான்
கண்ணைக் கட்டிய ஆட்டமிது
கைதொட வந்து நிற்பானோ?




சிவநேயப் பேரவை: வாழ்க வளமுடன் சிற்றரங்கம் நங்கைநல்லூர். தலைமைக் கவிதை. 8.12.2018.

Tuesday, April 16, 2019

உள்ளத்தில் தித்திக்கும் தேன்




கனியின் சுவையும் கரும்புதரு சாறும்
இனிதாகும் என்றே இருந்தேன். – இனிதில்லை
வள்ளுவத்தில் ஆழ்ந்து வளங்கண்டால் அத்தனையும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz 10.9.2018

Sunday, March 10, 2019

தென்றலே நீவந்து செப்பு






உள்ள மலரையெலாம் ஒவ்வொன்றாய் நீசென்று
மெள்ள முகர்ந்தபின் மீளுகிறாய் –  கள்ளமற
உன்றன் கணிப்பில் உயர்ந்தமணம் கொண்டதனைத்
தென்றலே நீவந்து செப்பு.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz. Sep. 2018

நாளும் முயன்றிடுவோம்



உன்றன் மொழியோர் உயர்மொழி என்றிடில்
ஒன்றும் பிழையில்லை. – அதன்
உயர்வை யுணர்ந்தே உவகை கொள்வதில்
ஒன்றும் தவறில்லை.

என்றன் மொழிதான் உலகிலு யர்ந்ததென்(று)
உரைப்பது சரியில்லை - இங்கே
ஏசிப் பிறமொழி பேசிடு நண்பரை
எள்ளுதல் முறையில்லை.

ஒன்றாய்த் தாய்மொழி உலகிலு ளோர்க்கொரு
உரிமையில் உளதாகும். – அந்த
ஒவ்வொரு மொழியிலும் உயர்படைப் பென்பவை
ஒருநூ றுளவாகும்.

நன்றாய்ப் பிறமொழி நூல்பல மாற்றி
நம்மொழி சேர்த்திடுவோம். – இன்னும்
நம்நூல் பலவும் பிறமொழி மாற்ற
நாளும் முயன்றிடுவோம்.

சர்வதேசத் தாய்மொழி தினம். பிப். 21. Tamilauthors.com.minnithaz.

Friday, January 04, 2019

சித்திரக் கவி: சங்கு பந்தம்




தமிழே! வடிவத்திற் சங்காகி வா!

நிகர்த்துளதா யின்னுமொன்று நல்லதாவ தில்லா
வகையுளைநீ வண்டமிழே! உன்றனையே உள்ளி
முடிதாழ்த்தி வேண்டுமென்பா முந்துற்றே தங்கு
வடிவத்திற் சங்கெனவே வந்து.




இன்னிசை வெண்பா.

மொத்த எழுத்து 73 ல் சந்தி எழுத்து
து, வ, உ, ற் ஆகிய 4 ஆக, 69 எழுத்தில் முடிந்தது.


சந்தவசந்தக் குழுமத்தில் எழுதியது.


Tuesday, November 27, 2018

சித்திரக் கவி: இரட்டை நாகபந்தம்.


                        உள்ளம் கொள்ளை போனது


உரலேறி நின்றே உறிநாடி உந்தி
விரலூடு வெண்ணெய் வழிய – உருவால்
களவாகு தென்றே கருதாது முந்தி
உளமேக லுண்டோ உவந்து.




இருவிகற்ப நேரிசை வெண்பா.

நாகம் ஒவ்வொன்றிலும் 25. உடன்
இடையே தனிச்சொல் 4 ம்
சேர மொத்த எழுத்து (25x2) + 4 = 54.
7,14,20, சந்தி எழுத்து 3. ஆக 51 எழுத்தில் முடிந்தது.

சந்தவசந்தக் குழுமத்தில் எழுதியது.

Sunday, November 18, 2018

சித்திரக் கவி: மணி மாலை பந்தம்



                                                         மலராகிச் சேர:

ஈசனவன் பாதமதில்
நேசமொடு சேர்ந்திடுமோ
ராசையுளன் பூசையிடல்
வசமல ராவதற்கே.




வஞ்சித்துறை.
39 எழுத்துகள். மாலை இருபுறமும் (2 * 17) மணிகள்.
பதக்கம் 5 மணிகள், ஆக மொத்தம் 39.   சந்தி எழுத்து
ஒன்று,  ஆக,  38 எழுத்தில் முடிந்தது.

சந்த வசந்தம் மின் குழுமத்தில் எழுதியது

Friday, October 12, 2018

பாரதி சுராஜ் மறைவு.


  

குவியும் பொருளில் மனமின்றிக்
   கொள்கை வழியில் நின்றனையே!
செவியின் சுவையே பெரிதென்று
   செந்தமி ழமுதைப் பருகினையே!
கவிதை வரியில் நயங்கண்டுன்
   கண்கள் விரியும் புன்னகையாய்.
புவியில் அதைவிட வேறொன்று
   பெறுதற் குரிய விருதிலையே!

நங்கை நல்லூர் எனும்போதுன்
   ஞாபகம் வந்தெனை ஆட்கொள்ளும்.
பொங்கிப் பெருகும் உணர்வோடு
   புலமை மிகவே உடையோராய்
எங்கே யேனும் பாரதியை
   எவரோ ஒருவர் பேசிடினும்
தங்கள் நினைவே வந்துமனம்
   தவிக்கும் படியாய் ஆகிவிடும்.

நூறின் மேலாய் வாழ்கவென
   நூலோர் வாழ்த்தும் போதுனது
நூறின் நிறைவுத் திருநாளென்
   நினைவிற் றோன்றி மகிழ்வுதரும்.
ஆறே ழாண்டே உளதின்னும்
   அதற்குள் ஏனோ அவசரமாய்ப்
பாரின் நீங்கிப் போயினையே!
   பாதக மேதும் செய்தோமோ?

பாரதி கலைக் கழகம், பாரதி சுராஜ் இரங்கற் கூட்டம். வியாபாரிகள் சங்க மண்டபம், மூவரசன் பேட்டை. சென்னை. 25.8.2018


Wednesday, August 08, 2018

கலைஞர் மு. கருணாநிதி மறைவு




சூழு மொளிநீங்கிச் சூரியன் போய்மறையப்

பாழு மிருள்சூழப் பார்க்கின்றோம். - வாழும்

வரையிற் கலைஞ ரொளிர்ந்து மறைந்தார்

தரையிற் புகழொளிரத் தான்.





(கலைஞர் மு. கருணாநிதி மறைவு- 7.8.2018)

Monday, July 30, 2018

அவனுடைய அருளாலே…




கல்நெஞ்சத் தொருதனியன்
     கள்ளத்தைக் கைக்கொண்டோன்
நல்லதனை இதுவரையில்
      நாடாத மதியனெனை
வல்வினைகள் போயொழிய
      வாய்ப்பொன்றை நாடுவையேல்
எல்லையிலாப் பரம்பொருளை
      எண்ணத்தில் இருத்தென்றார்.

பொல்லாத புலனைந்தால்
       பொருந்தாத மனமலத்தால்
எல்லா அழுக்குக்கும்
       இடமாகித் தோல்போர்த்து
அல்லலுறும் பிறவியிதை
       அறுத்தெறிவாய் நீயென்று
சொல்லாலே வேண்டியவன்
       சுடரடிகள் தொழுகின்றேன்.

கரும்பாகித் தேனாகிக்
      கறந்தபுதுப் பாலாகி
விரும்புகிற பிறவாகி
      ஊறுகின்ற பேரின்பத்
திருவாகி என்றுமுளம்
       தெவிட்டாத படியான
உருவாகிச் சிந்தையிலே
       உறைந்துளையோ? தேடுகிறேன்.

அவனியிலே பிறந்துழல்வோர்
        அல்லலெலாம் நீக்குகின்ற
சிவனவனோ தேர்ந்தவரின்
        சிந்தையிலே வந்துநின்றான்.
புவனத்தே திருவாத
        புரியாரின் வழிகொண்டே
அவனுடைய அருளாலே
        அவன்தாளை வணங்குவனே!

சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். 10.2.2018.

Thursday, April 19, 2018

நூலகமே உன் அகம்


யான்தோய்ந்த தமிழ்நூல்கள் பலவற் றுள்ளும்
    எனைக்கவர்ந்த நூலென்றால் புறநா நூறே!
தான்பெற்ற பிள்ளையெலாம் பயனே இன்றித்
    தறுதலையா யாகாமல் உலகு போற்றும்
சான்றோராய் யாக்குவதைத் தந்தை தன்னைச்
    சார்ந்ததொரு கடமையென அந்நூல் சொல்லும்.
சான்றோராய்க் கற்போரை ஆக்கும் நூல்கள்.
    சரிநிகராய்த் தந்தையென வீட்டி லுள்ளார்..

வனவாசம் செலும்போது ராமன் கூட
    உடன்பிரியா லக்குவனும் சென்ற தேபோல்
தணிக்கைக்கு வெளியூர்நான் செல்லும் போது
    தரமுள்ள புத்தகமும் பயணங் கொள்ளும்.
மணிக்கணக்காய் உடனிருந்து பொழுது போக்கி
    மகிழ்விக்கத் தம்பிகளாய் நூல்க ளுண்டு.
எனதகத்தில் தனியறையே அவர்கட் குண்டு.
    எப்போதும் தம்பியரின் துணையு முண்டு.

வருகின்ற பேர்படிக்க வேண்டு மென்று
    வாங்குகிற தினத்தாள்கள் வீட்டி லின்றிப்
பெரும்போது பக்கத்து வீட்டி லேயே
    பகலினிலே கழிக்கின்ற அண்ண னாகும்.
பருவப்பெண் சிரிக்கின்ற அட்டை போட்டு
    பலமாத வாரஇதழ் வருவ யெல்லாம்
உருவத்தை யலங்கரிக்க வகைவ கையாய்
    உடையுடுத்தி நிற்கின்ற தங்கை யாகும்.

நன்னெறியைப் பக்திதனைப் புகட்டு கின்ற
    நலமிக்க நூற்றொகுப்பா யொருத்தி யுண்டு.
தன்னுலகு சமயலறை என்றே கொண்டு
    தாயென்ற பெயரோடு வாழு  கின்றாள்.
இன்னுமுள பழையஇதி காச மெல்லாம்
    இருக்கின்ற பாட்டியெனில் சரிதா னென்பாய்.
உன்னகத்து மிவர்போல உண்டு நன்ப!
    உயர்ந்ததொரு நூலகமே வீட்டி லுண்டே!

மதுரை மாவட்ட மைய நூலகம். நூலக விழா.24.8.2003.


Friday, March 23, 2018

கோவிந்தனைத் துதிப்பாய்



குன்றுக் குடைப்பிடித்த
கோவிந் தனையேநீ
என்றுந் துதித்தே இறைஞ்சிடுவாய்
– திண்ணமவன்
இன்னல் வருமுன்
இடையர் குலங்காத்த
தன்னொப்ப ரில்லா தவன்.

Sunday, February 18, 2018

உச்சியிலே வைப்பான் உனை



நச்சரவு தானணிந்தான் நங்கைக்குப் பாதியென
உச்சிமுதற் பாத முடலீந்தான் – அச்சிவனை
இச்சையுடன் போற்றியே என்றுந் துதிட்டால்
உச்சியிலே வைப்பான் உனை.

அச்சந் தவிர்க்க! அருள்வேண்டின் பாபங்கள்
மிச்சமின்றித் தாமழியும் மேன்மைவரும் – மெச்சுபுகழ்க்
கச்சியே காம்பரனோர் கற்பகமே போன்றருளி
உச்சியிலே வைப்பான் உனை.

குச்சி லுரைந்தாலும் கொண்டதொழில் உண்டவரின்
எச்சில் துடைப்பதுதான் என்றாலும் – நிச்சயமாய்
மெச்சியே காம்பரனின் மேன்மைகளை நெஞ்சிருத்த
உச்சியிலே வைப்பான் உனை.


சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் சிற்றரங்கம்.6.1.2018 கவியரங்கம். 

Monday, January 22, 2018

’செந்தமிழ் நாடெனும் போதினிலே

’செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
   தேன்வந்து பாயுது காதினிலே’
சுந்தரமாய்த் தமிழ்ச் சொற்களிலே – சுவை
   சொட்டிடப் பாரதி பாடிவைத்தான்
மந்திரம் போன்றநல் வார்த்தைகள் – அவை
   மக்கள் எழுச்சியைத் தூண்டினவே!
முந்தைய நாள்நிலை இன்றிலையே – அது
   முற்றிலும் வேறென வாயுளதே!

சொந்தமாய் ஆயிரம் பேர்களின் – பேரினில்
   சொத்துக் குவித்திடும் நோக்கமுடன்
வந்தவர் தேர்தலில் நின்றிடினும் – அவர்
   வென்றிட வாக்கினை நாமளிப்போம்.
முந்தைய நாளினில் வந்தவரால் – நாடு
   முன்னிலை எய்திய துண்மையன்றோ?
சிந்தையில் ஆயிரம் பொய்யுடையோர் – இங்கு
   செய்யும் அரசினில் நன்மையுண்டோ?

செந்தமிழ் வாழ்ந்திட வந்தமென்றார் – வந்து
   சேர்ந்தவர் தம்வளம் தான்வளர்த்தார்.
முந்தைய நாளுள நீர்நிலைகள் – இங்கு  
   முற்றும் அழிந்திட விட்டுவிட்டார்.
இந்தநன் நாடிது கல்வியினில் – முன்பு
   இருந்த நிலையினிற் தாழ்ந்ததன்பின்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இனி
   தேன்வந்து காதினில் பாய்ந்திடுமோ?


தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம். பாரதி விழா. 3.12.2017

Friday, December 29, 2017

வாழ்க்கைச் சுவடுகள்

(தரவு கொச்சகக் கலிப்பா)


மறைந்து போனவை:

உலர்ந்துளதோர் தரைநடந்த உள்ளங்கால் ஈரத்தில்
மலர்ந்தசில தடங்காய்ந்து மறைந்தழிந்து போவதுபோல்
சிலநிகழ்வுக ளடையாளம் சிந்தையிலும் நில்லாமல்
இலையாகிப் போனவைகள் ஏராளம் வாழ்விலுண்டு.

உள்ளத்தில் பதிந்தவை:

இளவயதில் தந்தையுடல் ஈமத்தீ சுட்டகாட்சி
அளவற்ற அன்பினளாம் அன்னையவள் மறைந்ததுக்கம்
பளபளத்த புதுவண்டி பாதையிலே பூட்டிவைத்தும்,
களவுக்குக் கொடுத்ததிவை காலமெலாம் துன்புறுத்தும்.

பத்திரிகை அச்சேறிப் பார்த்திட்ட முதற்கவிதை,
முத்திரை பதித்தவந்த முதற்சிறப்புச் சொற்பொழிவு,
புத்தகமாய் முதல்தொகுப்பு, புகுந்தநல மணவாழ்வு,
முத்தெனவே இருமகவு மிவைமகிழ்வின் அடையாளம்.

உடலிற் காண்பவை:

மருத்துவர் சிகிச்சைக்காய் மனமொப்பி உடல்கிழித்து,
பொருத்தியபின் புண்ணுலர்ந்து பொருக்குதிர்ந்த சிலவடுக்கள்.
வருத்துமம்மை நோய்பார்த்து வாய்த்திருந்த கொப்புளங்கள்,
நிறுத்தியது சென்றுவிட்ட நீங்காத தழும்புசில,

முன்னந்தலை வழுக்கையுடன் முடிமுழுதும் நரைத்தோற்றம்,
கண்களிலோ வெள்ளெழுத்துக் கண்ணாடி அணிந்தநிலை,
முன்னர்போல் நடமாட முடியாத மூட்டுவலி,
இன்னுமுள அத்தனையும் எடுத்தியம்ப இயலாது.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, 12.8.2017.