Friday, December 29, 2017

வாழ்க்கைச் சுவடுகள்



மறைந்து போனவை:

உலர்ந்துளதோர் தரைநடந்த உள்ளங்கால் ஈரத்தில்
மலர்ந்தசில தடங்காய்ந்து மறைந்தழிந்து போவதுபோல்
சிலநிகழ்வுக ளடையாளம் சிந்தையிலும் நில்லாமல்
இலையாகிப் போனவைகள் ஏராளம் வாழ்விலுண்டு.

உள்ளத்தில் பதிந்தவை:

இளவயதில் தந்தையுடல் ஈமத்தீ சுட்டகாட்சி
அளவற்ற அன்பினளாம் அன்னையவள் மறைந்ததுக்கம்
பளபளத்த புதுவண்டி பாதையிலே பூட்டிவைத்தும்,
களவுக்குக் கொடுத்ததிவை காலமெலாம் துன்புறுத்தும்.

பத்திரிகை அச்சேறிப் பார்த்திட்ட முதற்கவிதை,
முத்திரை பதித்தவந்த முதற்சிறப்புச் சொற்பொழிவு,
புத்தகமாய் முதல்தொகுப்பு, புகுந்தநல மணவாழ்வு,
முத்தெனவே இருமகவு மிவைமகிழ்வின் அடையாளம்.

உடலிற் காண்பவை:

மருத்துவர் சிகிச்சைக்காய் மனமொப்பி உடல்கிழித்து,
பொருத்தியபின் புண்ணுலர்ந்து பொருக்குதிர்ந்த சிலவடுக்கள்.
வருத்துமம்மை நோய்பார்த்து வாய்த்திருந்த கொப்புளங்கள்,
நிறுத்தியது சென்றுவிட்ட நீங்காத தழும்புசில,

முன்னந்தலை வழுக்கையுடன் முடிமுழுதும் நரைத்தோற்றம்,
கண்களிலோ வெள்ளெழுத்துக் கண்ணாடி அணிந்தநிலை,
முன்னர்போல் நடமாட முடியாத மூட்டுவலி,
இன்னுமுள அத்தனையும் எடுத்தியம்ப இயலாது.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, 12.8.2017.

No comments: