Monday, July 27, 2020

”ஆசை பற்றி அறையலுற்றேன்” --



    கம்பன் ஆசை என்னவாக இருந்திருக்கும்?

என்னவாகக் கம்பனாசை
    இருந்திருக்கும் மென்று காண
சொன்னசொல்லில் தோன்றிடாது
    சோர்வடைந்து நின்ற போது
சின்னதான மின்னலொன்று
    சிந்தைவந் தொளிர்ந்து போக
என்னதென்று கண்டுகொண்
    டெடுத்தியம்ப வந்து நின்றேன்.

(வேறு)

விருத்தப்பா எழுதுவதில் வித்தகராய் இத்தரையில்
இருக்கின்ற பிறவறிஞர் எல்லோரும் பாராட்டி
’விருத்தமெனும் ஒண்பாவி லுயர்கம்ப’ னெனும்படியாய்
கருத்தையது கவர்வகையில் கவிசெய்யும் ஆசையலா?

முந்தியுளோர் வடமொழிக்கு மூவர்செய் ராமகதை
தந்தபெரும் புகழ்கண்டு தரணியிலே அதற்கிணையாய்
செந்தமிழில் அதைத்தந்து சீரியதோர் செல்வத்தை
நந்தமிழுக் குளதாக்கி நலஞ்சிறக்கச் செய்வதுவா?

விற்கொண்ட கையற்கு வேதங்கள் வடமொழியின்
சொற்கொண்டே ஈதென்று சொலவியலாப் பரம்பொருளாய்
நிற்கின்ற ஒன்றுக்கு நிறைவிளக்கம் கண்டிங்கு
கற்கண்டுத் தமிழினிலே காட்டிவிடு மாசையிலா?

திருஉறையும் மார்பரிரு திருத்தாட்குச் செய்பணியாய்
இருவினையும் கடப்பதற்கே எழுந்தபெரும் ஆசைபற்றி
வருபக்தி மிகுகம்பன் வரதனவன் தான்விரும்பித்
தருசக்தி கொண்டறையத் தமிழ்வெள்ளம் பாய்ந்ததுவே.


பாரதி கலைக்கழகம். கம்பன் விழா. 12.7.2020. வலைவழி அரங்கம். தலைமைக் கவிதை.

Tuesday, July 21, 2020

விழியெனக் காப்போம் விழித்து



செந்நெற் பயிரிடையே சேரும் களையேபோல்
கன்னற் றமிழிலுமே காண்கின்றேன். – எண்ணி
மொழியே அழியுமுனர் முற்றும் களைந்து
விழியெனக் காப்போம் விழித்து.


       ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 28.1.2019      

செத்த பிணத்திற் கடை




சொத்து சுகமென்று சொல்லிக் கொளுமளவு
எத்தனை உண்டென்றே எண்ணுகிறார்  -  இத்தரையில்
புத்தியும் நற்குணமும் போதா. பொருளற்றார்
செத்த பிணத்திற் கடை

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 20.1.2019

Friday, June 26, 2020

அதிர வருவதோர் நோய்



       தொட்ட போதி லொட்டு மாம்நம்
            தொடர்ந்து கைக ழுவல்கள்
விட்ட போது தொற்றி நோயில்
     வீழ்ந்தி றக்க நேருமாம்
ஒட்டி வாயில் மூக்கி னோடு
     கட்டு மூடி இல்லையேல்
கெட்ட நேரம் வந்த தாகும்
     கேடு வந்து சேருமாம்.

முன்ன ராய றிந்து காக்க
      முயன்று செய்த வாறெலாம்
பின்ன ரேதும் பயனி லாது
      போன தின்று காண்கிறோம்.
இன்னும் வேக வேக மாக
      எண்ணி லாத வாகியே
சொன்ன வாறி லாது மாறி
     சூழ்ந்து நின்று கொல்லுதே!

கண்ட போது நன்ப ரோடு
     கைகு லுக்க லின்றியும்
கொண்ட மேலை பாணி மேனி
     தழுவ லென்ப தின்றியும்
முண்டி மோதிச் சென்றி டாது
     மூன்ற டிக்கி டைவெளி
கொண்டு நாமும் சென்று நின்று
     கூடி வாழ்தல் நன்மையே!

பாரதி கலைக்கழகம். அமரர் பேராசிரியர் நாகநந்தி நினைவரங்கம். வலைவழி அரங்கம். 20.6.2020.

Sunday, June 07, 2020

பாவும் திருமணமும் (சிலேடை)



சீருண் டடியுண்டு செய்த பொருள்தெரியும்
சேருந் தளையால் சிறப்புண்டு – காரிகையே
மாவின் கனிகாய் மரபுவழி உண்டதனால்
பாவும் திருமணந்தான் பார்.

மரபுப் பாடலுக்கு:
சீருண்டு: மாச்சீர், விளச்சீர் என்று பலவகையாய்ச் சீர்கள் உண்டு.
அடியுண்டு: அளவடி, சிந்தடி, குறளடி, கழிலடி, கழிநெடிலடி என்று உண்டு.
செய்த பொருள் தெரியும்: செய்த பாடலின் பொருள் பாட்டில் வெளிப்படும்.
சேரும் தளையால் சிறப்புண்டு: சரியான தளைகள் அமைத்துப்பாடும் போது மரபுப்பாக்கள் சிறப்படைகின்றன.
மாவின் கனிகாய் உண்டு: தேமாங்காய், தேமாங்கனி போன்ற மூவசைச்சீர்கள் வருவதுண்டு.
மரபுவழி உண்டு: இப்படித்தான் இயற்றப்படவேண்டும் என்று இலக்கண மரபுகள் உண்டு.

காரிகையே!: தனிச்சொல். மகடூஉ முன்னிலை.

திருமணத்துக்கு:
சீருண்டு: சீர்வரிசைகள் உண்டு.
அடியுண்டு: திருமண நிகழ்வில் சப்தபதி என்று அக்னியைச் சுற்றி வலம் வரும் சடங்கு உண்டு.
செய்த பொருள் தெரியும்: தம்செல்வச்செழிப்பைப் பலரும் அறியும்படி ஆடம்பரமாக நிகழ்த்துவர்.
சேரும் தளையால் சிறப்புண்டு: மணமக்களிடையே சிறந்ததான புதிய பிணைப்பு உண்டாகிறது.
மாவின் கனிகாய் உண்டு: விருந்தில் மாங்கனியும், மாங்காயும் படைப்பதுண்டு.
மரபுவழி உண்டு: மூதாதையர்கள் செய்துவந்தபடி, எல்லாச் சடங்குகளையும் வழக்கம் மாறாதபடி செய்வர்.

      ஆக, மரபுக் கவிதையும் திருமணமும் ஒன்று என்றபடி. 

Friday, May 29, 2020

திருவருள் பெற்று இன்புறுவோம்.





’ஆ’தனை உருவைக் கொண்டு
    ’ஆ’வென்றே நினைக்கும் போது
வேதனை! உண்ணப் பெற்ற
     வெறும்வைக் கோலும் புல்லும்
போதிய பரிசென் றெண்ணும்.
     பொதுவினில் மனித ருக்கும்
ஊதுமூன் தான்’தான்’ என்றால்
     உணவுதான் பெரிதென் றாகும்

உடலையே ஆன்மா வாக
     எண்ணுமப் பிழையின் நீங்கி,
உடலிது வேறு உள்ளே
     உறைகிற ஆன்மா வேறாய்
திடமுடன் அறிந்து கண்ட
     தெளிவினில், உடலில் மற்றும்
தொடர்புள தான வற்றில்
     தொற்றுபற் றொழிய வேண்டும்.

தொற்றுபற் றொழியும் போது
     துயரெலாம் விலகிப் போகும்.
உற்றவன் பரமன் அவனின்
      உடைமைநாம் என்று ணர்ந்து,
முற்றவும் தாழ்ந்து நின்று
      முறைமையிற் பாதம் பற்றி,
நற்றவத் தொண்டு பூணும்
      நலமதை வேண்டு வோமே.


தேவகான இன்னிசைச் சங்கம், நன்மங்கலம். சென்னை. 2018

Tuesday, April 14, 2020

திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்



 திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்.

ராகம்: சஹானா                   தாளம்: ஆதி

இயற்றிவர் : அ. இராஜகோபாலன்
பாடியவர் : அரவிந்த் ரெங்கராஜன்





பல்லவி 

எனக்கிவை நீ அருள்வாய்! தாயே! தயாநிதியே! ...(எனக்கிவை)

அநு பல்லவி

தனக்கிணை இல்லாத புல்லையின் நாயகன்
தனித் துணை நீயே! தாமரை யாரணங்கே!


சரணம் 1

வேதப் பொருளுணரும் ஞானமில்லை. நிற்க
வேண்டிய நெறிமுறையைக் கற்றதில் நின்றதில்லை.
ஏது மிலாதார்க்கும் இரங்கிடுவாய். இந்த
ஏழையின் வேண்டலையும் ஏற்றிடுவாய் அம்மா. (எனக்கிவை..

சரணம் 2

உள்ளவரை மனதில் உறைந்திடுவாய்.- என்றும்
ஓதியுன் தாள்பணியும் உள்ளமும் நீ தருவாய்!
கள்ள மனக் கசடைக் களைந்திடுவாய் -இனி
கருப் புகாதபடி காத்திடுவாய் அம்மா! ...(எனக்கிவை)





பொருள்:

பல்லவி:

கருணைக் கடலாக இருக்கிற தாயே! (நான் வேண்டுகிற) இவைகளை எனக்குத் தந்தருள வேண்டும்.

அனுபல்லவி:

தனக்கு ஒத்தவராக வேறொருவர் இல்லாத,(ஒப்பற்ற,) திருப்புல்லாணியின் நயகனான எம்பெருமான் ஆதிஜெகந்நாதனின் இனிய துணைவி நீ! தாமரை மலரின் மீது வீற்றிருப்பவளே!... 

சரணம்1

எனக்கு வேதங்களில் கூறப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றிய ஞானமில்லை. வாழும் நெறிமுறைகளைச் சொல்லும் சாஸ்திரங்களைக் கற்று, அதன்படி நடக்கவில்லை. எதுவுமே இன்றி மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்திலும் மனம் இரங்கி அருளக்கூடியவளான தாயே! என்னுடைய வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அம்மா!

சரணம் 2

என் வாழ்நாள் முடியும் வரை என் மனதில் நீ அகலாது வீற்றிருக்க வேண்டும். என்றும் உன் புகழ் பாடி, உன் திருவடிகளில் பணிகிற மனப் பக்குவத்தைத் தரவேண்டும். மறைந்து, நிலைத்திருக்ககூடிய கசடுகளைக் களைந்து, என் மனதைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். இனி, இன்னொரு பிறவி இல்லாதபடி (மீண்டும் பிறப்பதற்காகக் கருவினிற் சேராதபடி) காத்திடவேண்டும் தாயே!.


அ. இராஜகோபாலன்.

Friday, March 27, 2020

கொரோனா ஊரடங்கு



பரவியபின் துன்பப் படுவானேன்? தொற்று
பரவாமல் நீதடுக்கப் பார்.

வீட்டுக்குள் நீஇருந்தால் வைரஸ்தொற் றாததுவுன்
நாட்டுக்குச் செய்யும் நலம்.

தொற்றுமவ் வைரஸ் தொலைந்தொழிய வேண்டில்நீ
முற்றும் முடங்கி இரு.

Monday, March 09, 2020

என்ன சொல்ல வந்திருப்பாள்?



என்ன சொல்ல வந்திருப்பாள்
என்றே எண்ணிப் பார்க்கின்றேன்.
எண்ணம் முழுதும் அதுநின்றும் – இனும்
ஏதும் அறியும் நிலையில்லை.
          (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

என்னை அங்கே கண்டதுமே
எழுந்தி ருந்து வந்தேதன்
சின்னக் கையால் என்கையை – ஒரு
சேரப் பற்றி நின்றனளே!
              (என்ன சொல்ல வந்திருப்பாள்?….

அன்னை கண்டு வந்துடனே
அடித்த ழைத்துப் போய்விட்டாள்.
சின்னக் குழந்தை கண்கலங்கி – தன்
சிறுவாய் குழறிப் பின்போனாள்.
               (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அன்னை மறுத்த திண்பண்டம்
ஆசை அடக்க இயலாமல்
என்னக் கேட்டுப் பெறஎண்ணி – என்
எதிரே ஓடி வந்தனளோ?
                (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

குரங்கு கையால் தானாகக்
கொட்டு முழக்கும் சிறுபொம்மை
உறங்க ஓசை தடையென்றே – தந்தை
ஒளித்து வைத்த துயர் சொலவா?
                 (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அண்ணன் போலே தனக்குமொரு
ஆடை புதிதாய்க் கேட்டதனால்
’என்ன போட்டி இது’என்றே –அவள்
அண்ணன் அதட்டிப் போனதையா?
                   (என்ன சொல்ல வந்திருப்பாள்?….

Saturday, February 22, 2020

உறைந்துள்ளாள் என்றன் உளத்து





இல்லாள வந்தென் இதயத்தைச் சேர்த்தாண்ட
நல்லாள் பிரிந்தாளோ? நானுளனே! – வல்லாள்
மறைந்துள்ளாள் என்றும் மறக்கவிய லாதே
உறைந்துள்ளாள் என்றன் உளத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. Feb. 2020.

Friday, February 21, 2020

புல்லறிவு காட்டி விடும்



மெய்யாய்நூ லொன்றும் முறையாகக் கற்காமல்
பொய்யாய்ப் புலமையுளோன் போற்றோன்றல் – ஐயமற
நல்லறிஞர் கூட்டத்தில் நாவசைத்துப் பேசுகையில்
புல்லறிவு காட்டி விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 14.1.2019.

Friday, February 14, 2020

நிலையாது நீத்து விடும்



பாரிலுளோர் சுண்ணாம்பைப் பாறைக்கல் என்றாலும்
நீரிலது தானாக நீர்த்துவிடும். – தேரில்
கலையாதாய்த் தோன்றும் குணமுடையோர் கோபம்
நிலையாது நீத்து விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 7.1.2019.

Sunday, February 09, 2020

நீர்மே லெழுந்த நெருப்பு



புள்ளும் சிறகால் பயந்துதன் பார்ப்பணைத்துக்
கொள்ளு மெனப்புலவன் கூறியவவ் – வெள்ளத்தீ
சீர்மை மிகுநூறு செவ்வாம்பல் வாயவிழ
நீர்மே லெழுந்த நெருப்பு

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 3.12.2018

Wednesday, January 22, 2020

வானுயர ஓங்கும் வளம்


வானம் பொழிமழையை வாங்கி நிலஈரம்
பேணும் வழிதன்னைப் பின்பற்றில் – காணுகிற
ஈனநிலை மாறி இயற்கையெழில் கொஞ்சிடவே
வானுயர ஓங்கும் வளம்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 19.11.2018  

Wednesday, January 08, 2020

என்சொல்லும் என் நா இனி



'சொன்னபொய் வெல்வதனாற் சொன்னோன் திறமையுளோன்
இந்நாளில் மெய்யுரைப்போன் ஏமாளி. – சொன்னதிதை
இன்றுமுதல் கைக்கொள்வாய்' என்கின்றார். மெய்பொய்யில்
என்சொல்லு மென்நா இனி

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 12.11.2018

Tuesday, January 07, 2020

சொல்லில் வடித்த சுடர்



அறிவிலொளி சேர்க்கும் அருங்குறளும் கொள்கைச்
செறிவு படைத்த சிலம்பும் – அறிஞரெலாம்
கல்விக் கிவனென்ற கம்பனவன் காவியமும்
சொல்லில் வடித்த சுடர்.

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  5.11.2018

Wednesday, January 01, 2020

விழியிலார்க் கேது விளக்கு



பாசமி லார்க்கில்லை பற்றுறவு. நெஞ்சத்து
நேசம் மறந்தார்க்கு நட்பில்லை. - பேசும்
வழியிலார்க் கேனோ ஒலிபெருக்கி. பார்க்கும்
விழியிலார்க் கேது விளக்கு.
ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  29.10.2018.

Sunday, November 03, 2019

குற்றம் குற்றமே




உள்ளத்துள் நீவந் தென்றும்
   உரைந்திடு மிடமே இன்றிக்
கள்ளமே சேர விட்டுக்
   காடென வாக்கி வைத்தேன்.
தள்ளுதற் கரிய துன்பம்
   தவிர்த்திட வேண்டி மட்டும்
உள்ளஊர் கோயில் தேடி
   ஒவ்வொன்றாய் வந்து நின்றேன்.

எனக்கெது வேண்டு மென்றும்
    எப்போது தேவை யென்றும்
அனைத்தையும் அறிவா யென்றும்
     அறியா திருந்த தாலே
எனக்கிவை யருள்வா யென்றும்
    இன்னின்ன வேண்டு மென்றும்
உனக்குமுன் வேண்டி நின்றேன்.
    உரைத்திடில் அதுவும் குற்றம்.

முடியினை முழுது மீந்தேன்.
    முப்பது நாள்தொ டர்ந்து
படிகளில் மலையின் மீது
    பாதத்தால் ஏறிச் சென்றேன்.
அடிமுறை மட்டு மின்றி
    அங்கமே முழுதும் மண்ணில்
படும்படி வலங்கள் செய்து
    பக்தனென் றீர்க்கப் பார்த்தேன்.

கடவுளே! நூலோர் உன்னைக்
    கருணையின் வடிவென் றாரே!
அடியவர் நேர்ந்து கொண்டே
    அவயவம் வருந்தச் செய்யும்
படியவர் செய்வ தெல்லாம்
    பரம!உன் மகிழ்வுக் காமோ?
கொடியதே என்றன் சிந்தை
    குற்றமிது குற்ற மேதான்.


சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் சிற்றரங்கம். 9.2.2019 தலைமைக் கவிதை.

Friday, October 11, 2019

யார் வரைகின்றார் அழித்தழித்தே?



முந்தைய தொன்று மறுபடி தோன்றா முறையினிலே
சிந்தை கவரும் சிறப்புள கற்பனை சேர்வகையில்
விந்தை நிறங்களில் வானிதில் வந்து விதவிதமாய்
அந்திப் பொழுதினில் யார்வரை கின்றார் அழித்தழித்தே?

கட்டளைக் கலித்துறை. சந்தவசந்தப் புகைப்படத்துக்கு எழுதியது.

Sunday, October 06, 2019

வலிதே விதியின் வலி


போயுழைத்து வாங்கியவர் போகா மகிழுந்தில்
நாயமர்ந்து போவதனை நானறிவேன். – நோயில்
வலிய ஒருபக்க வாதப் படுக்கை
வலிதே விதியின் வலி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 22.10.2018