Thursday, October 02, 2025

ப. கே. 61. கம்பன் கவியழகைக் காண்.

 செந்தமிழில் ஏது சிறப்பென்று கேட்பாரேல்

வெந்தழியும் வீணர்நா வேறெதையும் நம்பாதே

செம்பொருள்சேர் வள்ளுவத்தைச் சிந்தா மணிநயத்தைக்

கம்பன் கவியழகைக் காண்.


 

 


ப. கே. 60. எண்ணிக் களிக்கின்றேன் யான்.

 தன்னை வணங்கித் தமிழ்நூல் எழுதுகையில்

அன்னையென நின்றே அருள்புரிவாள் தானொரு

கன்னியெனத் தோற்றம் கவிதைகளிற் காட்டுவதை

எண்ணிக் களிக்கின்றேன் யான்

 



ப. கே. 59. தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்

 

 

படித்துச் சுவைக்கப் பலப்பலவாய் நூல்கள்

வடித்துப் புகழ்வளர வாழ்தல் --- பிடித்த

தமிழாலே என்றால் தரமாமோ? நன்று

தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்

ப. கே. 58. கால விரயமே காண்

 


முன்னை இழப்பினின்று மீளாத் துயருறல்

தன்னில் பிறருயர்வைத் தாங்காமை -- நன்னெறிகள்

சீலம் நயவார்க்குச் சொல்லுதல் இம்மூன்றும்

கால விரயமே காண்.