Sunday, January 11, 2026

ப.கே. 65. கவனி இதுவே கணக்கு


 

        இருபக்கம் கர்ணம் இவைமீ தெழுதப்

        பெறுசதுரம் மூன்றில், பரப்பில் --- பெரிது,

        தவறின்றி முன்னிரண்டும் தாம்சேர்ந்த தாகும்.

        கவனி இதுவே கணக்கு.


         ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  மார்ச். 2022

        ஒரு செங்கோண முக்கோணத்தில், கர்ணத்தின் மீது வரைந்த       சதுரத்தின் பரப்பு, மற்ற இரண்டு பக்கங்களின் மீது வரைந்த     சதுரங்களின் மொத்தப் பரப்புக்குச் சமம். 


 

       

ப.கே. 64. வருங்காலத் திற்கென்று வை

  

      வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்

      இயலாத தாவ தியல்பே --- முயன்றே

      அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து

      வருங்காலத் திற்கென்று வை.

 

      ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஆக. 2021

ப.கே. 63. வாயாற் சுடுவார் வடை

 

   காசில்லை கையினில் கஞ்சி குடிக்கவழி

   யோசிக்க வேண்டி யிருப்பவர். --- பேசிடிலோ

   பாயாக வான்சுருட்டிப் பைக்குள் திணித்திடுவார்

   வாயாற் சுடுவார் வடை.

 

   ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஜுன் 2021

ப.கே. 62 நெஞ்சகமே கோவில் நினை

  

 

   கஞ்சத்தாள் கேள்வன் கழலிணையைப் பக்தியுடன்

   தஞ்சமெனப் பற்றியவர் தம்முளத்தே – மஞ்சமென

   நஞ்சரவிற் கண்வளரும் நாரணனே வந்துறைவன்

   நெஞ்சகமே கோவில் நினை.

 

    கஞ்சத்தாள்:  தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி

    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020