Tuesday, September 29, 2020

புற்பனி பற்றுவிட் டாங்கு

 

  

 

பெற்றதெனச் செல்வம் பெரிதளவிற் கொண்டவரைச்

சுற்றமெனத் தாம்வந்து சூழ்ந்திருந்தார் – அற்றபினர்

பற்றில ராய்விடுதற் பாரிற் பரிதியின்முன்

புற்பனி பற்றுவிட் டாங்கு.


ஈற்றடிக்கு எழுதியது.  Tamilauthors.com Minnithaz. 11.2.2019

Friday, September 25, 2020

பாதமூலம் பற்றிலேன்…......

 


 

சங்கல்ப்பம் ஒன்றாலே எதையும் செய்து

    சாதிக்கும் வலிமையுளன் பரமன் என்பர்.

தங்கியவன் கையிருந்து பணிகள் செய்யும்

    திருவாழி தனையேவி னாலே போதும்

பொங்கிவரும் நீர்ச்சுனையில் ஊர்ந்து செல்லும்

    பூச்சியொரு முதலைபெரும் பகையாய் ஆமோ?

எங்கென்றோர் யானைகுரல் கேட்டு வந்த

    எளியவனின் திருப்பாதம் பற்ற வேண்டும்.

 

மெய்தீண்டித் திருமகளைத் துயரில் உய்த்த

    மிகக்கொடிய அபசாரம் கண்டு பொங்கி

எய்ததொரு அத்திரம்பின் துரத்த ஓடி

    எங்கேயும் துணைதனக்கா யானா ரின்றி

எய்தவனைச் சரணமென வந்து வீழ்ந்தே

    ’எனைக்காக்க வேண்டு’மென்ற சயந்தன் அன்று

செய்தபிழை பொறுத்தவனை வாழ வைத்த

    செய்யதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.

 

தங்களையே தாம்காத்துக் கொள்ளு கின்ற

    தகவில்லாக் கற்றினங்கள் வாழ வேண்டிப்

பொங்குகின்ற பரிவோடு தானே வந்து

    புரிந்ததொரு ரக்‌ஷணத்தை மனதிற் கொண்டு

தங்கியிள்ள பாற்கடலும் அரவி னணையும்

    திருமகளின் உடனுறைவும் விட்டு நீங்கி

இங்குவந்து கானகத்தில் கன்று மேய்த்த

    எளியதிருப் பாதங்கள் பற்ற வேண்டும்.

   

கங்கையினும் ஒருபடிமேல் புனிதம் கொண்ட

    காவிரிபாய் பொழில்சூழ்ந்த பதிய ரங்கம்.

அங்குதொண்ட ரடிப்பொடியார் களிக்கு மாறே

    அரவணையிற் பள்ளிகொண்ட கிடக்கை காட்டி

“எங்ஙனம்நான் மறந்தினியும் வாழ்வேன்” இங்கே

     எனும்படியாய்த் தன்னழகால் அரங்கன் ஈர்க்க

“எங்கள்மால் இறைவனவன் ஈசன்” என்றே

     ஏற்றவருக் காட்செய்யும் இதயம் கொண்டார். 

 

“போதெல்லாம் போதுதனைக் கொண்டே யுன்றன்

     பொன்னடியிற் புனையுதலைச் செய்த தில்லை.

தீதில்லா தொழிமொழியில் தினமு முன்றன்

     திருக்குணங்கள் செப்புதலைச் செய்த தில்லை.

காதலினாற் பெருகுமன்பு காணா நெஞ்சிற்

     கடியனாகி நிற்கின்றேன் ஆத லாலே

ஏதிலன்நான் ஏன்பிறந்தேன்? இருக்கின் றேனே!”

     என்றவர்தன் தாழ்நிலையைச் சிந்திக் கின்றார்.

 

திருமாலுக் குகந்ததிருத் தலம்பி றக்கும்

     திருவெனக்கே அமையவிலை. அத்த லத்தில்

ஒருகாணி கைங்கர்ய நிலமுண் டாயின்

     உயர்பணிக்காய் அங்கேகும் நன்மை யுண்டு.

ஒருசிலரங் குறவினராய் வாழ்ந்தி ருந்தால்

     உரிமையுடன் அவர்காணச் செல்லக் கூடும்.

ஒருவருமே முகமறிந்தா ரில்லை யாக

     உயர்ந்ததிருத் தலத்தொடர்பே இல்லை என்றும்

 

”கற்றினங்கள் மேய்ப்பதற்காய் நடந்த பாதம்,

     களிறுற்ற இடர்நீக்க வந்த பாதம்,

உற்றவராய்க் காப்பாற்ற ஒருவ ரின்றி

     ஓடிவந்து குற்றவாளி சயந்தன் அன்று

பற்றுகதி இதுவென்றே வீழ்ந்த பாதம்,

     பரமமூர்த்தி உன்பாதந் தன்னை இன்னும்

பற்றிலனே அரங்கா”வென் றரற்றி நின்ற

     பாடல்களின் பொருள்கொஞ்சம் முயன்று சொன்னேன்.

 

தேவகான இன்னிசைச் சங்கம், நன்மங்கலம். 30.12.2018.

Thursday, September 10, 2020

அல்லல் களைவ தறம்

 


 

வறுமையினால் நோயால் வயதின் முதிர்வாற்

பெறுதுயரால் வாடும் பிறர்க்கே – உறுதுணையாய்

இல்லை யெனாதே இயன்றவரை யுதவி

அல்லல் களைவ தறம்

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 4.2.2019

Friday, September 04, 2020

வீர சுதந்திரம்

 


 

பிறந்தவ ரனைவரு மென்றோ ஒருநாள்

இறந்தே யழிவ தியற்கை யாதலின்,

ஊன உடலிதற் கூறே வரினும்

பேணு முன்மையிற் பிறழ்தலை யறியார்.

மானந் துறந்து மண்ணிதி லின்பங்

காண முயன்று கயமையில் வீழ்ந்தே

ஈனத் தொண்டை யியற்றி யுயிர்தனைப்

பேணி வாழ்தல் பெரிதென வெண்ணார்.

உண்மையின் மாறா துறுதுயர் கருதா

வன்மையராகி வருபோர் நிகழ்த்தி,

ஈனத்தொண்டிற் கிடமளி யாது

மானம் பேணும் மாண்பத னாலதை

'வீர சுதந்திர' மென்று

பாரதி போற்றிப் பாடின னன்றோ?