Wednesday, March 18, 2009

விடுதி

நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.

'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?

சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?

2 comments:

Soundar said...

ஓரிருநாள் கொண்டதனால் தனதாம் என்றே
. . உரிமைதனைக் கொண்டாடும் வழக்கம் தன்னை
வேரோடு களைவதுதான் விவேகம் என்று
. . விளங்கிடவே சொன்னவிதம் மிகவும் நன்றே
சாரமுள்ள பொருளிதனைச் சாற்று மிந்தத்
. . தத்துவத்தை சடுதியிலே புரிய வைத்துச்
சீரியதாம் பாவடிவில் சித்த ரிக்கும்
. . செந்தமிழின் பாவலர்க்கு வணக்கம் கோடி

சௌந்தர்

A Rajagopalan said...

பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
அ.ரா