Sunday, December 18, 2016

வாழ்வில் இன்பம்


வானில் உலவும் நிலவு - ஒரு
   வரையில் இழியும் அருவி
கானில் உறையும் மிருகம் - நெடுங்
   கடலில் ஓடும் அலைகள்

காணும் மரங்கள் அசைவில் - தென்றல்
   காற்று இசைக்கும் கீதம்
நாணற் கரைகள் இடையே - நீர்
   நடந்து செல்லும் ஓடை

தேனை நாடி மலரைத் - தினம்
   தேர்ந்த ருந்தும் வண்டு
வீணை நாத மாக - நன்கு
   விளங்கு சேயின் மழலை

மானின் விழியின் பார்வை - இன்னும்
   மயிலின் விரித்த தோகை
நாணம் சேரக் கவிழ்ந்த - ஒரு
   நங்கை முகத்தின் செம்மை

செவியில் வந்து தேனாய் - என்றும்
   சேரும் தமிழின் சீர்மை
கவிதை செய்த கம்பன் - அவன்
   கலையில் நிற்கும் அழகு

புவியில் எங்கும் இல்லா - நல்ல
   பொலிவு மிக்க சிற்பம்
கவிதை உணர்வு தூண்டும் - இவை
   கவிஞர் வாழ்வில் இன்பம்.


பாரதி கலைக் கழகம் & திருவள்ளுவர் மன்றம் 28.8 2016.. DAV பள்ளி வளாகம்
ஆதம்பாக்கம். சென்னை.

Monday, November 28, 2016

சிலம்பில் மாதவன்

( சிலப்பதிகாரச் சிந்தனைகள்)



வடவரையை மத்தாய் வைத்து
   வாசுகியைய்க் கயிறாய்க் கொண்டு
கடலன்று கடைந்த கையைக்
   கடைகயிறால் யசோதை கட்ட,
கடல்வண்ணன் கண்ணன் அங்கு
   கட்டுண்ட பெற்றி ஆய
மடமகளின் குறவைக் கூத்து
   மாதவனின் பெருமை சாற்றும்.


மூன்றடியால் உருவ ளர்ந்து
   மூவுலகு மளந்த சீரும்
கான்போந்து தம்பி யோடு
   கடல்கடந் திலங்கை வென்ற
வான்புகழும் மற்றும் கஞ்ச
   வஞ்சகனைக் கொன்ற தூஉம்
போன்றுவரு பிறவு மெல்லாம்
   பெருமானின் விளையாட் டன்றோ?


 கண்ணிரண்டு பெற்ற பயனக்
      கரியவனைக் காணல்; பெற்ற
  எண்ணரிய செவியி ரண்டும்
      எமக்கவனின் புகழைக் கேட்க;
  கொண்டதொரு நாவுங் கூடக்
      கௌரவர்பால் தூது சென்ற
  கண்ணனையே பாட வென்ற
      கருத்துரைகட் கீடே இல்லை.


செவிநுகர் கனியே யென்னச்
     சிலப்பதி காரந் தன்னைக்
  கவினுறு நூலாய்த் தந்த
     கவிஞராம் இளங்கோ கொண்ட
  புவியுள வரையில் நிற்கும்
     புண்ணியப் புகழைச் சொல்லிக்
  கவியவர் திருப்பா தங்கள்
     கரங்களால் வணங்கு கின்றேன்.


பாரதி கலைக் கழகம்.சிலப்பதிகார விழா.17.5.2009  
வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். சென்னை.


Friday, October 28, 2016

காதலெனும் பூந்தென்றற் காற்று


சோதனையாய் மாறிச்
சுற்றமெலாம் கைவிட்டு
ஆதரவைத் தேடுநிலை
ஆகிடுமேல் - மோதலொடு
வேதனையைத் தான் நல்கும்
வீசும் புயலாகும்
காதலெனும் பூந்தென்றற் காற்று. 

Tuesday, October 25, 2016

பற்றினால்....

பற்றினால் உறவு சேரும்.
   பகையுமே பெருகெ லாகும்.
பற்றினால் ஒழுக்க வாழ்வு,
   பண்புகள் மாறிப் போகும்.
பற்றினால் உடைமை சேரப்
   பற்றுதான் மீண்டும் பற்றும்.
பற்றினை ஒழித்த பின்னர்
   பாரினில் துன்ப மில்லை.


உடல்நலம் மிக்க வாழ்க்கை,
   உறவினர், மனைவி, மக்கள்,
கடலெனப்  பெரிய தான
   கட்டிடம், கார்கள், மாடு,
படர்கொடி மலரின் சோலை,
   பரந்துள வயல் நிலங்கள்
இடர்பல நல்கு கின்ற,
   இவைகளைத் தேடு கின்றோம்.


பொருள்களை உடைமை யாகப்
   பெருதலில் ஆசை யுற்று,
பொருள்களை அடையு தற்காய்ப்
   புரிகிற சாக சங்கள்
பொருள்களைத் தருவ தில்லை.
   பொருள்வழித் துன்பம் சேரப்
பொருள்நமை உடைமை கொண்டு
   போவதை உணரு வோமோ?

Wednesday, September 21, 2016

சிலம்பின் ஒலி

செந்தமிழில் இளங்கோசெய் சிலம்பு தன்னைச்
   சீரடியின் அணியாகக் கருதி டாமல்
பிந்தையநாள் பாரதிதன் பாட லொன்றில்
   பெருமைமிகு தமிழ்நாடு படைத்த தான
சிந்தைகவர் மணியாரம் என்றே சொல்லிச்
   சிறந்ததொரு மார்பணியாய்க் காட்டி வைத்த
விந்தையினை மனதினிலே எண்ணி யெண்ணி
   வெகுவாக வியப்பினிலே ஆழ்ந்த துண்டு.


கண்ணகிதன் கொழுநனைத்தான் பிரியு முன்னர்
   காதல்மிகக் களித்திருந்த நாளி லெல்லாம்
பொன்னணிகள் மேனியினை அலங்க ரிக்கப்
   பூண்டவையாய்க் காற்சிலம்பும் இருந்த நாளில்
எண்ணத்தை உணர்வுகளைப் பகிரும் போது
   ஏதேனு மிடமாற்றம் நேரு மென்றால்
மென்னடையின் அதிர்வுகளில் ஒலிக்கக் கூசி
   மெல்லியதாய்க் கிண்கிணித்த சிலம்பு தாமே


கண்ணகியா லுடைபட்ட போது மன்னன்
   காதுகளின் பறைகிழிய ஒலித்த தென்னை?
'உன்னவளின் சிலம்புக்குள் முத்தென் றாயே!
    உள்ளவைபார் மாணிக்கப் பரல்க ளன்றோ?
முன்னோர்கள் வழிவாதம் ஆரா யாது
     முறையற்ற தீர்ப்பாலே நீதி கொன்றாய்'
மின்னுமணி தெறித்தவற்றுள் உதட்டில் தாக்கி
    மன்னனது தவறுணர்த்தி விழுந்த தொன்று.


விதிவசமாய்க் கோவலனோ கொல்லப் பட்டான்.
    வென்றுநின்ற கண்ணகியுந் தெய்வ மானாள்.
மதிபிறழ்ந்த செய்கையினால் செங்கோல் கோடி
    மன்னனுமே அவைதன்னி லுயிரை நீத்தான்.
இதையுலகுக் கொருநூலாய் வழங்க எண்ணி
   இளங்கோஅம் மணிகளையே எடுத்துக் கோத்து
புதிதான மணியாரம் தமிழ்த்தாய் மார்பில்
   பொலிவகையிற் சிலம்பெனவே ஆக்கி வைத்தார்.




பாரதி கலைக்கழகம், சிலப்பதிகாரவிழா. 28.5.2016
வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசம் பட்டு.




Thursday, June 30, 2016

பூவாய் மலரும் புகழ்



படைப்பில் அரும்பிப்
பலரும் படிக்கக்
கிடைக்குமெனில் போதாகும். 
கண்டு - படைத்தவரை
நாவாற் புகழ்ந்து
நலஞ்சேர வாழ்த்துகையில்
பூவாய் மலரும் புகழ் 


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. தமிழரின் மனிதநேயம். ஜன. 2010.

Friday, June 03, 2016

காலின் கூலி


வறியவராய் நின்று வேறு
    வழியில்லா திரப்போர்க் கொன்று
பரிவுடனே வழங்கல் ஈகை.
    பிறவெல்லாம் அவற்றின் வேறாய்க்
குறியெதிர்ப்பை யுடைய வென்று
    குறளொன்று கூறக் கண்டோம்.
செறிவுடனவ் வீகை வகையிற்
    சிலபற்றி ஔவை சொன்னாள்.


தன்னையோர் வறிய ரண்டித்
   'தா'வென்று கேட்ப தற்கு
முன்கொண்டு தானே சென்று
    முடிந்தவரை வழங்கு மீகை
மண்ணிதனிற் புலவோர் போற்று
    மானிடரின் குணங்க ளுள்ளே
உன்னதமென் றுரைப்ப தான
    உயரிய'தா ளாண்மை' யாகும்.


முன்வினையால் வறுமை தன்னில்
   மூழ்கியதோர் ஏழை தானே
தன்னிடத்தே அண்டி வந்து
   தாழ்நிலையைக் கூறி வேண்ட,
அன்புடனே இரங்கி நெஞ்சம்
   அவர்துயரைக் களைதற் காகத்
தன்னிடத்து நிறைந்த செல்வம்
   தனைக்கொண்டே ஈதல் 'வண்மை'.


'இன்றில்லை நாளை' யென்றும்
    'இன்னொருநாள் வாநீ' யென்றும்
'பன்முறையு மலையச் செய்து
    பாதங்கள் நோக விட்டு
என்றேனு மொருநாள் ஈதற்
    கேதுபெய' ரென்று கேட்டால்
நன்றில்லா ஈகை அஃது
    நடந்து வந்த 'காலின் கூலி'.



தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கா லீவது வண்மை. அடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமேல் அவன்குடி
எச்ச மிறுமே லிறு.       - ஔவையார்


பாரதி கலைக் கழகம், வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்,
மூவரசம் பட்டு. 23.4.2016

Friday, April 29, 2016

எதிராசர் புகழ் பாடுவோம்



சித்திரை ஆதிரை நாளதி லாதி
   சேஷனிங் கோரவ தாரம் செய்தார்.
இத்தனை புண்ணியம் மண்ணிது செய்ததோ
   என்ன உடையவர் வந்து தித்தார்.

வேறுள வாகம வாதியர் தோற்றிட
   வென்று புகழ்பல தேக்கி வைத்தார்.
ஆறு சமயமென் றான செடியினை
   அற்றிட வேறுடன் போக்கி வைத்தார்.

பொங்கும் பரிவுடன் மாறனு ரைதமிழ்
   போற்றும் வழியினை ஆக்கி வைத்தார்.
எங்கள் அரங்கனின் செல்வ முழுமையும்
   ஏற்ற வகையினில் மாற்றி வைத்தார்.

ஓதி அவருரை ஊன்றிய றிந்திங்கு
   உய்யும் வழியினைத் தேடி டுவோம்.
ஏது துயரினி என்று மகிழ்ந்தெதி
   ராசரவர் புகழ் பாடி டுவோம்.


அன்புப் பாலம்  ஏப். 2018.

Thursday, April 28, 2016

மூன்றெழுத்து மந்திரம்- அம்மா



தனைப்போலே வேறொருத்தி இல்லை யாகத்
   தன்குலத்தைக் காப்பதற்காய் வந்து தோன்றி
மனைவாழ்வில் உற்றதுயர் பலவுந் தாங்கி
   மாதரசி என்றபெயர் நிறுத்திப் போனாள்.
நினைவெல்லாம் தானேயாய் வீற்றி ருந்து
   நிதமுமெனை வழிகாட்டி நடத்துந் தெய்வம்
எனைப்பெற்றாள் திருப்பெயரை என்று மோதி
   எஞ்சியநாள் ஆயுளைநான் கழித்து வாழ்வேன்.


எட்டியெனை நில்லென்று சொன்ன தில்லை
   எப்படிநான் அவளன்பை மொழியக் கூடும்?
பட்டினியாய்த் தான்கிடந்த நாளில் கூட,
   பசித்திருக்கும் படியென்னை விட்ட தில்லை.
மட்டில்லா மகிழ்சியுடன் எனைப் புரந்த
   மாதவளோ தெய்வமென வாகிப் போனாள்.
விட்டுவிடா தவள்பெயரை நினைவில் வைத்து
   வீழ்கின்ற நாள்வரையில் போற்றி செய்வேன்.


எந்தவொரு துயர்வரினும் கலங்கி டாது
   என்தாயின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு
மந்திரமாய் அவள்பெயரின் மூன்றெ ழுத்தை
   மனதிற்குள் உச்சரித்து வேண்டி நிற்பேன்.
வந்ததுயர் சுவடின்றி நீங்கிப் போகும்.
   வார்த்தைகளிற் சொல்லுதற்கே இயல வில்லை.
அந்தமென வாழ்வில்வரும் நாள்வ ரைக்கும்
   அவள்பாதம் துணையெனவே வாழ்ந்தி ருப்பேன்.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம். வாணுவம் பேட்டை. சென்னை. 9.4.2016

Saturday, March 26, 2016

வெற்றி வசப்படும்



விண்ணில் செயற்கைக் கோள்செலுத்தி - அதை
    விரலால் இயக்கி வென்றோமால்
மண்ணில் இமயச் சிகரமெலாம்  - இனி
    மனிதர் இலக்காய் நின்றிடுமோ?

உயரம் எதுவும் பெரிதில்லை - நீ
    ஒவ்வொரு படியாய் மேலேறு
பெயரும் புகழும் உனைத்தேடி - நிச்சயம்
    பின்னால் வரும்நீ முன்னேறு.

அமையும் இதுவெனும் நம்பிக்கை - அது
     அடையும் இலக்கை எளிதாக்கும்.
சுமையாய் இதுவரை எண்ணியதை - இலை
     சுலபந் தானெனத் தெளிவாக்கும்.

உன்னால் முடியும் எனநம்பு - அது
     ஒவ்வொரு முறையும் நிசமாகும்.
முன்னால் முயன்றது நிறைவாயின்
     முடிவில் வெற்றியுன் வசமாகும்.  


பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு. கவிஞாயிறு தாராபாரதி விழா, வாழ்க வளமுடன் சிற்றரங்கம்
நங்கநல்லூர். 27.2.2016

Tuesday, March 08, 2016

நாட்டு நலம் காப்போம் நயந்து


வாட்டுவிலை வாசி
 வளர்லஞ்ச ஊழலொடு
கேட்டுத் திகைக்கும்
 கொலைவெறியும்
 -  ஓட்டிடுவோம்
ஓட்டைத் தவறா(து)
உயர்குணத்தோர்க் கேயீந்து
நாட்டுநலம் காப்போம்
நயந்து.

ஓட்டு: வாக்கு.

தமிழரின் மனிதநேயம், மே 2009.  ஈற்றடிக்கு எழுதியது.

Sunday, February 28, 2016

நட்புச் சிறகுகள்



நட்பெனுஞ் சிறகு கொண்டு
   நாடெல்லாம் பறக்க லாகும்.
எட்டிட இயலா தென்று
   ஏதுமே இல்லை யாகும் !

மும்பையில் டில்லி மற்றும்
   மூலையில் முடுக்கி லெல்லாம்
நம்பியொரு வேலை சொல்லின்
   நடத்தியே முடிப்போ ருண்டு.

கையினிற் செலவு செய்யக்
   காசில்லாப் போது வந்து
பையொடு பணத்தைத் தந்து
   பார்த்துளம் மகிழ்வோ ருண்டு.

துன்பத்தில் உழலும் போது
   தோள்தந்து பாதி தீர்ப்பார்.
இன்பத்தில் பங்கு கொண்டே
   இரட்டிப்பாய் ஆக்கி வைப்பார்.

அச்சமே இல்லை. செய்ய
   அரியது மேது மில்லை.
இச்சக முழுதும்  என்போல்
   எவருளர் நண்ப ரோடு? 

Wednesday, February 17, 2016

பயனென்ன?



சாத்திரமும் சூத்திரமும்
சார்ந்தபல நூலறிவும்
பாத்திறமும் கொண்டு
பயனென்ன? - காத்திருந்து
ஏத்தபடி கேட்போர்க்
கெடுத்தியம்ப லாற்றாதார்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ!

நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009. 'பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ'!என்ற

 ஈற்றடிக்கு எழுதிய வெண்பா (2).

Monday, January 18, 2016

நல்ல பழக்கங்கள்

(சிறுவர் பாடல்)


நல்ல பழக்கம் பலவுண்டு - அதில்
    நாலைந் திங்கே சொல்லுகிறேன்.
வல்ல நீயவை கைக்கொண்டு - உன்
    வாழ்வில் நிச்சயம் வெல்லுவையே!

உண்டதன் பின்னர் நிச்சயமாய் - உடன்
    உன்கை கழுவுதல் அவசியமே.
உண்ணும் முன்னரும் கைகழுவு - அது
    ஒவ்வொரு முறையும் அவசியமே!

ஈயும் எறும்பும் மொய்க்கின்ற - எந்த
    இனிப்புப் பண்டமும் நாடாதே.
வாயில் எச்சில் வரவைக்கும் - அதை
     வாங்கித் தின்ன ஓடாதே!

பாயில் உன்னைப் படுக்கவைக்கும் - வரும்
    பலவகைச் சுரமுன்னை வாட்டிவிடும்.
நோயில் லாத வாழ்வுக்கு - வேறு
      நேரிலை என்றே காட்டிவிடும்!

காட்டு மிருகக் கதைகளெலாம் - சொல்லும்
    கருத்தை மனதில் இருத்திக்கொள்
பாட்டி கதையென இகழாதே! - அதில்
    பாடம் உண்டுனைத் திருத்திக்கொள்!

சரியாய்த் தமிழைப் பேசுதற்கு - நீ
    சிறிது முயன்றால் கற்றிடுவாய்.
பெரியோர் சொற்படி நடந்திடுவாய். -  நல்ல
    பேரும் புகழும் பெற்றிடுவாய்!

பாரதி கலைக்கழகம். அழ.வள்ளியப்பா பாடலரங்கம். லக்குமிஅம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. குரோம்பேட்டை. 28.11.2015.