Wednesday, September 21, 2016

சிலம்பின் ஒலி

செந்தமிழில் இளங்கோசெய் சிலம்பு தன்னைச்
   சீரடியின் அணியாகக் கருதி டாமல்
பிந்தையநாள் பாரதிதன் பாட லொன்றில்
   பெருமைமிகு தமிழ்நாடு படைத்த தான
சிந்தைகவர் மணியாரம் என்றே சொல்லிச்
   சிறந்ததொரு மார்பணியாய்க் காட்டி வைத்த
விந்தையினை மனதினிலே எண்ணி யெண்ணி
   வெகுவாக வியப்பினிலே ஆழ்ந்த துண்டு.


கண்ணகிதன் கொழுநனைத்தான் பிரியு முன்னர்
   காதல்மிகக் களித்திருந்த நாளி லெல்லாம்
பொன்னணிகள் மேனியினை அலங்க ரிக்கப்
   பூண்டவையாய்க் காற்சிலம்பும் இருந்த நாளில்
எண்ணத்தை உணர்வுகளைப் பகிரும் போது
   ஏதேனு மிடமாற்றம் நேரு மென்றால்
மென்னடையின் அதிர்வுகளில் ஒலிக்கக் கூசி
   மெல்லியதாய்க் கிண்கிணித்த சிலம்பு தாமே


கண்ணகியா லுடைபட்ட போது மன்னன்
   காதுகளின் பறைகிழிய ஒலித்த தென்னை?
'உன்னவளின் சிலம்புக்குள் முத்தென் றாயே!
    உள்ளவைபார் மாணிக்கப் பரல்க ளன்றோ?
முன்னோர்கள் வழிவாதம் ஆரா யாது
     முறையற்ற தீர்ப்பாலே நீதி கொன்றாய்'
மின்னுமணி தெறித்தவற்றுள் உதட்டில் தாக்கி
    மன்னனது தவறுணர்த்தி விழுந்த தொன்று.


விதிவசமாய்க் கோவலனோ கொல்லப் பட்டான்.
    வென்றுநின்ற கண்ணகியுந் தெய்வ மானாள்.
மதிபிறழ்ந்த செய்கையினால் செங்கோல் கோடி
    மன்னனுமே அவைதன்னி லுயிரை நீத்தான்.
இதையுலகுக் கொருநூலாய் வழங்க எண்ணி
   இளங்கோஅம் மணிகளையே எடுத்துக் கோத்து
புதிதான மணியாரம் தமிழ்த்தாய் மார்பில்
   பொலிவகையிற் சிலம்பெனவே ஆக்கி வைத்தார்.




பாரதி கலைக்கழகம், சிலப்பதிகாரவிழா. 28.5.2016
வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசம் பட்டு.




No comments: