Thursday, October 29, 2015

எம் இளையோர் எழச்செய்தாய்


விண்ணேகு செயற்கைக்கோள் செலுத்துகின்ற வாகனங்கள்
எந்நாடும் கொளநினைக்கும் ஏவுகணைச் சாதனங்கள்
முன்னேறு விஞ்ஞான முயற்சிகளில் முதலிடமென்(று)
என் நாடு வளர்வதெலாம் உன்னாலே ஆனதையா!

ஏவுகணை விஞ்ஞானம் எங்களுக்கும் வேண்டுமென
தேவருனைக் கேட்டனரோ? தேர்ந்தங்கு சென்றனையோ!
ஆவலுடன் வல்லரசாய் ஆகும்நாள் பார்த்திருக்க
போவதற்கிவ் அவசரமேன் புண்ணியனே கட்டுரையே!

பன்னாட்டுக் கருத்தரங்கம் பலகண்ட பெருமகன் நீ!
என் நாட்டுத் தலைமகனாய் எங்கெங்கு சென்றாலும்
தென் நாட்டுத் தமிழ்முப்பால் தனிச்சிறப்பை எடுத்தியம்ப
உன்னாற்றான் முடிந்ததையா! இனிசெய்வார்  யாருளரோ?

கனவென்றால் உறங்குகையில் கண்பதல்ல. நினைத்தவைகள்
நனவாகும் நிலைகாணும்  நாள்வரையி லொருநாளும்
உனதுள்ளம் உறங்காது. ஓயாது செயலாற்றும்
எனுமுன்றன் உரையாலே எம்மிளையோர் எழச்செய்தாய்!

செய்தித்தாள் வீடுகளில் சேர்த்துவந்த நாள்தொடங்கி
எய்தியநின் புகழெல்லாம் எடுத்தியம்ப லாற்றாமல்
செய்தித்தாள் திணறியதே! செய்தியென வாயினையே!
எய்தபுகழ் நிலைநிறுத்தி எங்குற்றாய் இயம்பாயோ?


நம் உரத்தசிந்தனை. அப்துல் கலாம் நினைவு மலர். செப். 2015.

Wednesday, October 28, 2015

மாமன்

அன்னையவள் பிறந்ததான அருங்கோயிற் கருவறையில்
      அவளுக்குச் சோதரனாய்த் தோன்றினான்
பின்னொருநாள் மருகன் நான் பிறந்தபினர் மாமனெனும்
      பெருமையினைப் பெற்றவனாய் மாறினான்.
பொன்னணிகள் சீர்வரிசை புத்தாடை யவைபலவும்
      போதுமெனு மளவவனும் செய்து,தான்
துன்பமென வரும்போது துவளாமல் முன்வந்து
      தோள்தந்து உதவியெனைத் தாங்கினான்.

பாரதத்துச் சகுனிபோல பாகவதக் கம்சன்போல
      பாரினிலே மாமன்சில ருண்டுதான்.
நீரவரை மாமனென்று நினைத்தன்பு செய்வதற்கு
      நீதியொன்று மில்லையென்று சொல்லுவேன்!
பேரளவே உறவாகிப் பெற்றவளின் உடன்பிறந்து
      பேசமட்டும் மாமனென்றாற் போதுமா?
ஓரளவு கூடவன்போ டுறவாடு நெஞ்சமிலார்
      உண்மையிலே மாமனெனற் கூடுமோ?

இந்தியத்தாய் நாட்டிலுள்ள இளஞ்சிரார்க ளனைவருக்கும்
     எள்ளளவும் பந்தமற்ற போதிலும்
முந்தையநாள் பாரதத்தின் முதுதலைவர் நேருஎந்த
     முறையினிலே மாமனென்று ஆனவர்?
சொந்தமெனில் உடைமையெனச் சொல்லுகின்ற பொருளுண்டு
     சுகமுண்டு மகிழ்வுண்டு என்பரே!
விந்தையிது அன்பாலே விளைகின்ற உறவன்றி
     வேறேதும் இலையென்று சொல்வனே!

Thursday, October 01, 2015

காணிற் குவளை...


(தரவு கொச்சகக் கலிப்பா)

தண்ணீரி லேநின்று தழைத்துவளர் தாவரத்தின்
விண்பார்த்தே இதழ்விரித்து விளங்குகின்ற குவளைநிறம்
கண்பார்த்துக் களிக்கின்ற கருநீலம் அதைப்பெண்ணின்
கண்நேராய் உவமித்துக் கவிசெய்வர் புலவோர்கள்.

தெள்ளுதமிழ் நூல்களிலே தெவிட்டாத தொன்றான
வள்ளுவரின் முப்பால்நூல் வழங்குகின்ற காட்சியிது.
விள்ளரிய தலைமகளின் விழியழகைக் காணாதே
கள்ளொழுகு குவளைமலர் களிமிகுந்து நிற்கிறதாம்!

கண்ணில்லாக் குவளையது காணாது தானதனை
எண்ணித்தான் 'காணி'லெனும் எச்சத்தை இட்டுவைத்தார்.
கண்ணிருந்தவ் விழியழகைக் காணுமெனில் நாணுற்று
முன்னிருந்த படியன்றி முகங்கவிழு மென்றாரோ?

தண்ணீரில் நிற்பதொன்று தலைகவிழ்ந்தால் நாணத்தில்
தண்ணீரைத் தான் நோக்கும் தரைமண்ணை நோக்கிடுமோ?
வண்ணமலர் மணவோட்டம் வாய்மொழிதல் இயலாதால்
எண்ணமது என்னவென்று எண்ணியதில் தேர்ந்ததிது.

நீரிதனிற் பிறந்தேனே! நேர்ந்ததிது வினைப்பயனே!
பேரழகுக் கண்ணுடையாள் பிறந்ததுஅந் நிலமென்று
கார்நிறத்த பூ,நீரைக் காணவுமே தோன்றாது
போர்மனத்த தாகியதால் பொருமி'நிலம் பார்க்கு'மென்றார்!


காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.        (குறள்)

பாரதி கலைக்கழகம். 20-6-2015. பேரா.நாகநந்தி நினைவு, திருக்குறள் விழா