Tuesday, July 31, 2012

உழைக்கும் கரங்கள்


வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

ஆலை களில்பணி செய்திடுவோர் - பொருள்
    ஆயிரம் உண்டென வாக்குகிறார்
மேலைத் திசையுள்ள நாடுகளோ டிந்த
    மேதினி சந்தையை யாளுகிறார்.

சாலைகள் பாலங்கள் ஆலயங்கள் - எங்கும்
    சற்று மயராது கட்டுதலை
வேலை யென்றசிறு சொற்குறிக்கும் - அவர்
    மேனி வியர்வையில் நாடுயரும்.

ஓடு சாக்கடைநீர் தூரெடுத்தும் - பிறர்
    உண்டு கழித்தமலம் தாம் சுமந்தும்
ஆடி முடிந்துயிர் நீத்தவர் காட்டினில்
    அக்கினிக் கேகிடத் தோள்சுமந்தும்

வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

வாசல்: உழைப்பாளர் தினம்.   கவியரங்கம் மே 2009

Monday, July 30, 2012

வாழப் பழகுவோம் வா


இன்னிசையும் சித்திரமும் இன்னும் பிறகலையும்
எண்ணிற் பழகியதால் என்ன பயன்? - மண்ணிதனில்
ஆழவே கற்றிருந்தும் அன்பு நெறிமறந்தோம்
வாழப் பழகுவோம் வா.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். வெண்பூக்கள். ஏப்- 2009

வரிகளால் வேண்டும் வளம்


வரிப்பணத்தை வாரி வழங்கியிங்கு ஓட்டுப்
பறிக்கு மரசியல் பாழாம் - உரைப்பின்
விரிந்தநற் சாலையும் உட்கட் டமைப்பும்
வரிகளால் வேண்டும் வளம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம்-  வெண்பூக்கள். மார்ச் 2009.

சொல்லில் விளையும் சுகம்

பொருத்து மொலிபெருக்கி போதிய காற்றோட்டம்
வருத்தா இருக்கையும் வாய்ப்பின் - இருப்போர்க்கு
வெல்வகையிற் கேளாரும்வேட்ப மொழிபவரின்
சொல்லில் விளையும் சுகம்.

தமிழரின் மனிதநேயம்- வெண்பூக்கள்.
ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. டிச- 2008

Monday, July 02, 2012

சிறகை விரித்துச் சிகரம் தொடு.

மண்ணைப் பிளக்க விதைமலைத்தால் - ஒரு
      மரமாய்ப் பிறந்து வளராது.
மண்ணே அதற்குச் சிதையாகும் - அங்கு
      மரணம் ஒன்றே முடிவாகும்.

சன்னற் கம்பிக ளிடைவெளியில் - விரி
      செந்நிற வானம் தெரிகிறதே!
மின்னல் ஒருகணம் வாழ்ந்தாலும் - அதன்
      மேனி ஒளிக்கினை வேறிலையே.

தடைபல வந்துனைத் தடுத்தாலும் - உளம்
      தளரா துன்வழி சென்றிடுநீ!
தடைகளுக் கிடையில் விடையுண்டு. - இந்தத்
      தரணி யாளவும் வழியுண்டு.

மண்ணிற் சிறந்து தடம்பதித்த - உன்
     முன்னோர் பலரின் வரிசையிலே
பின்னே உனக்கொரு இடமுண்டு. - உன்
     பெயரும் சேர்ந்திட வழியுண்டு.

சிறகு விரித்து உயர எழுந்தால்   
     சிகரம் நெருங்கி விடும்.
சிந்தையி லாயிரம் துயரென வந்தவை
     சிதைந்து நொருங்கி விடும்.