Thursday, May 17, 2012

எதைச் சொல்வேன்?

என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?
மென்பஞ்சுப் பாதங்கள் தரைந டந்தால்
மிகநோகும் என்றெண்ணித் தூக்கிக் கொள்வேன்.
என்கையிற் சுமந்துகொண் டிருக்கும் போது,
ஏதேனும் பிறர்பேசக் கேட்டாற் போதும்,
தன் மழலை கேட்பதற்கென் முகந்தி ருப்பும்.
தளிர்விரல்கள் பட்டவுடன் மெய்சி லிர்க்கும்.


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?


உண்ணுதற்கே அடம்பிடித்து ஓடி யோடி,
ஊட்டுகின்ற அம்மாவை அழவே வைப்பான்.
தின்னுமொரு மிட்டாயின் இனிப்புக் காகத்
திண்ணைக்குத் தேடிவரும் சிறுகு ழந்தை,
'இன்னொன்று தா'என்று முன்னே வந்து
இதழ்விரித்த தாமரையாய்க் கையை நீட்டும்.
கண்ணெதிரே கெஞ்சுகிற காட்சி கண்டால்
கல்நெஞ்சங் கூடவங்கு கரைந்தே போகும்!


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?

Wednesday, May 16, 2012

நெருப்பிலா உறக்கம் ?

உள்ளத்தில் மதவெறித்தீ மிகவ ளர்த்தே
ஒருபாவமும் அறியாதார் உயிர்ப றித்தல்;
பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பு தற்குப்
பதிலாகப் பணிமனைக்கு அனுப்பல்; மற்றும்
வெள்ளரிக்காய் சந்தையிலே விற்றல் போலே
விலைபேசும் மணவாழ்வும் நன்றா? சொல்வீர்!
நல்லவழி சமுதாயம் செல்ல இந்த
நானிலத்தோர் உணர்வுற்றே எழுதல் வேண்டும்.

களத்தடிக்கும் நெல்மணியிற் பதர்க ளுண்டு.
காற்றினிலே தூற்றியதை விலக்கி வைப்போம்.
மிளகினிலே மிளகேபோல் மண்ணு ருண்டை
மிகச்சரியாய்க் கலந்தவற்றைப் பிரித்தல் ஆமோ?
களங்கமிகு மனதுடையோர் மருந்திற் கூடக்
கலப்படத்தைச் செய்கின்றார் அறிந்தோ மில்லை.
உளமனிதப் போலிகளின் செயலால், வாழும்
உயிரழியும் கேடுணரா துறங்க லாமோ?

நெஞ்சத்தை இரும்பென்னல் தவறே ஆகும்.
நெடுந்தீயால் அதுநீராய் இளகிப் போகும்.
நெஞ்சத்தைக் கல்லெனலும் பிழையாய் ஆகும்.
நொருங்கியது தூளாகும் உடைக்கும் போது.
பிஞ்சான பெண்குழந்தை சிவந்த வாயைப்
பிதுக்கியதன் நாவினிலே நஞ்சை வைக்கும்
நெஞ்சத்துக் குவமையென எதைநான் சொல்ல?
நெருப்பினிலே உறங்குகிறோம் எழுவ தெந்நாள்?

ஆண்டுப் பிறப்பு

ஆடிக் கழித்த ஆண்டொன்றை - மனம்
அகலத் திறந்து பார்க்கின்றேன்.
தேடிப் பொருளைச் சேர்ப்பதற்குத்
தினமும் உழைத்த கதையுண்டு.
நாடிச் செய்த செயல்களிலே - சில
நல்லவை நிகழக் கண்டதுடன்
வாடித் துயரில் சிலசமயம்
வாழ்வை வெறுத்த நிலையுண்டு.


மண்ணில் ஒருவர் நிலைக்காக - இங்கு
மாறா தோடும் காலகதி
விண்ணிற் கதிரோன் தேரோட்டம்
விதித்த வழியில் விரைந்தேக,
பன்னிரு திங்கள் கழிந்துவிடில் - பாரில்
புதிதாய் ஆண்டு பிறந்துவிடும்.
எண்ணம் மட்டும் ஏதேதோ
எதிர்பார்ப் போடு வரவேற்கும்.


ஆண்டு பிறக்கும் போதெல்லாம் -அதை
அழகுத் தமிழில் வரவேற்று
ஈண்டு கவிஞர் பலர்கூடி
எழுதிக் குவிப்பது ஏராளம்.
மாண்டு போகும் வழித்தடத்தில் - ஒரு
மைல்கல் தன்னைக் கடந்துள்ளோம்.
ஆண்டுப் பிறப்பில் வேறொன்றும்
அதிசய மில்லை என்பேன் நான்.

Friday, May 04, 2012

ஏழையா? பணக்காரனா?


தன்னையண்டி வந்த வர்க்குத்
தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்றே
தான் நுகர்த லில்லை யாயும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தும்
ஏதுமற்ற ஏழை யாக
மண்ணிலிங்கு வாழ்ந்து சாகும்
மாணிடர்க்கு என்ன பேரோ?

(குறள் வழிச் சிந்தனை)