Tuesday, August 31, 2010

கம்பன் கவியழகு

செப்பிடு மென்மொழி சிந்திம யக்கிடு சுந்தரச் சொல்லழகும்
சொற்றொடர் யாவினும் சிந்தை கவர்ந்திடச் செய்யணி சேரழகும்
ஒப்புள தாவென ஓர்ந்து மொழிக்கடல் ஊடெவர் தேடிடினும்
இப்புவி மீதினில் இல்லையெ னத்தகும் இன்பொருள் தன்னழகும்
பற்பம மர்ந்தருள் பாரதி யாடிடப் பாடிய தோவெனவப்
பாதஜ திக்கிசை பக்குவ மாய்விழும் பாநடை நல்லழகும்
அற்புத மாய்ச்செறி காவிய மாக்கிடும் ஆற்றலிற் கம்பகவி!
இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிர் இல்லையு னக்கெதிரே!


(எம்பார் அருளிய 'எம்பெருமானார் வடிவழகு' பாசுரத்தை அடியொற்றியது.)

சென்னை பாரதி கலைக்கழகக் கவியரங்கில் பாடியது.

Friday, July 09, 2010

கர்ம வீரர் காமராசர்

ஆற்றல் மிக்கவர். அரும்'பெருந் தலைவர்'.
அரசிய லுலகின் அதிசய மனிதர்.
பொய்த்திற னுடையோர் பொருள்புகழ் சேர்க்கச்
செய்செய லறிந்து சீறிய பெருமகன்.
ஊருக் கொன்றென ஒருநூ றாயிரம்
பாலர் கற்கப் பள்ளிகள் கண்டவர்.
இன்மையாற் பசியா லிடர்படு சிறார்க்கு
உண்ண மதிய உணவோ டுடையும்
இளநிலைக் கல்வியும் இலவச மென்றவர்.
மேலும் கற்க மேநிலைப் பள்ளிகள்,
மேன்மை நாடுற மிகப்பல கண்டவர்.
நீர்வீ ணாகி நெடுங்கடல் சேரா(து)
ஆறெலாம் அவர் வழி அணைகள் கண்டன.
நெடுவழிப் பயணப் பாலம் சாலைகள்
நீண்டநாள் தேவைகள் நிறைவுறச் செய்தவர்.
இல்லவள், குழந்தை இவைதனை விலங்கென
வீட்டுக் கடமைகள் விட்டுத் தன்னை
நாட்டுக் கெனவே நல்கிய பெருமகன்.
நாடிது நலம்பெற நினைத்துப்
பாடவர் பட்டது பகர்வது அரிதே!

மாமதுரைக் கவிஞர் பேரவை காமராசர் நூற்றாண்டு விழாக் கவியரங்கம்(செப் 2002).
அன்பு பாலம் (ஆகஸ்ட் 2009)

Sunday, June 27, 2010

வாழ்க தமிழ் மொழி

நெற்றித் திலகமென நீயணிந்த முப்பாலும்
பொற்பாதச் சிலம்பும் புனைமகுடம் கம்பன்செய்
சொற்கோலம் என்றமர்ந்த செந்தமிழே நின்னழகு
நிற்குமென் நெஞ்சில் நிலைத்து.


எண்ண மெல்லாம் என்னை யன்றி ஏது மற்ற நாளிவர்ந்(து)
அன்னை யென்று நின்றே என்னை யாத ரித்து மாற்றினை!
எண்ணி லாத நூல்க ளாயி லக்கி யங்கள் காட்டிநீயே
கன்னி யாக மாறி நின்று காத லின்ப மூட்டினை!

மேக வண்ணன் ஆதி நாதன் மண்ணி லன்று தித்துராம(ன்)
ஆக வந்த காதை சொன்ன கம்ப செல்வ முன்னதே!
சோக முற்று ராச மன்றில் சிலம்பு சூளு ரைத்துநீதி
தாக முற்றே ஊரெ ரித்த பெண்மை யுந்தன் பெண்மையே!

வேத நூல டக்க மிங்கும் வேண்டு மென்றி யற்றிவைத்து
ஓது கின்ற பாசு ரங்க ளோசை யின்ப முன்னதே!
சோதி மிக்க பாட லால்சு டர்ந்தொ ளிர்ந்த பாரதிக்கு,
யாது மாகி நின்ற சக்தி உன்னை யன்றி வேறுயார்?

பத்து எட்டு கீழ்க்க ணக்கு மென்ற மொத்த நூல்களோடு
சித்தர் மூலர் ஞான மென்று சேர்ந்த சொத்து மெத்தனை?
ஒத்த தென்றே ஒன்றி லாவு யர்வு கொண்டு நின்றனை
நித்த மாய்ச்சி றந்தி ருந்து வாழ்க வாழ்க வாழ்கவே!

சென்னை பாரதி கலைக்கழகம் 58ம் ஆண்டு விழாவில் பாடியது (27.12.09)

Sunday, March 14, 2010

மீண்டு நீ வருகவே!

ஆற்றல் மிக்கு அருந்திற லறிவொடு
போற்றவே வளரும் புதுயுக விளைஞ!
இணைய தளவழி இன்னு லாவரக்
கணினி ஞானம் கைவரப் பெற்றனை.
நூதன மாயுள மின்னனு வழியில்
சாதனங் கைக்கொடு சாதனை புரிவை.
கற்றவை யாயிர மாயினு மதன்வழி
நிற்றல் மறந்தனை நின்னிலை என்சொல?
சாதி நூறின் ஒற்றுமை விட்டுப்
பேதம் மட்டுமே பேசித் திரிவை!
பாரினில் ஆணொடு பெண்ணொரு சமமெனப்
பாரதி பாடிய வரிமறந் தனையே!
பேசு வணிகப் பெருவிலை மணமும்
பேசநாக் கூசும் பெண்சிசுக் கொலையும்,
குண்டு வீசும் கொலைவெறி மதமும்
சண்டை சாவு சச்சர வென்றிவை
வேண்டா தவற்றை விலக்கி
மீண்டுநீ வருவை மேதினி யாளவே!

பாரதி கலைக்கழகம், கவியமுதம் 57ம் ஆண்டுமலர் 2008